மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 4 நவம்பர், 2010கிராமத்து நினைவுகள் : தீபாவளியும் பட்டாசும்..!
சின்ன வயசுல பண்டிகைகள் என்றாலே சந்தோஷமான தினம்தான். அதிலும் கிராமத்து மண்ணில் பிறந்த எங்களுக்கோ ஒவ்வொரு பண்டிகையும் சந்தோஷத்தை விதைத்துச் செல்லும் என்று சொல்லத் தேவையில்லை.

தீபாவளி... ஒரு மாதத்திற்கு முன்னரே தித்திக்க ஆரம்பித்து விடும். பொட்டு வெடி, ரோல் கேப்பில் ஆரம்பித்து சீனி வெடி, லெச்சுமி வெடி எல்லாம் ஒரு மாதத்திற்கு முன்னரே வெடிக்க ஆரம்பித்து விடும். புதுத்துணி எடுத்து தைக்க கொடுத்துவிட்டு அதை வாங்கும் நாளை ஆவலுடன் எண்ணத் தொடங்கிவிடுவோம்.

தீபாவளிக்கு முதல் நாள் இரவே சங்கு சக்கரம் புஸ்வானம் எல்லாம் பூக்களைத்தூவும். இரவு தூக்கமும் வராது. இரவு முழித்து பலகாரங்கள் செய்யும் அம்மாவுக்கு உதவியாக இருக்கிறேன் என்று தூங்கமல் காத்திருக்கச் செய்யும் விடியலில் வர இருக்கும் தீபாவளி.

விடியற்காலை ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் வைத்துக் கொண்டு 'இன்னிக்கு கிழக்க சூலம் அதனால இப்படி உட்காரு' என்று அப்பா ஒவ்வொருவராக கூப்பிட்டு உட்கார வைத்து தலையில் நல்லெண்ணெய்யை மூன்று முறை வைத்து 'நற நற' என்று தேய்த்து விடுவார். சிறு வயதில் உடலெல்லாம் எண்ணெயில் குளித்தது போல் ஊற்றித் தேய்த்து விடுவார். கொஞ்சம் வளர்ந்தது ஒத்துக்க மாட்டாது என்ற கதையுடன் சிறிது எண்ணையை மட்டும் தலையில் வைத்துக் கொள்வதுடன் சரி.

நல்ல மழை பெய்து கண்மாயில் தண்ணீர் இருந்தால் இடுப்பில் துண்டுடன் கண்ணுக்குள் வழியும் எண்ணெயை துடைத்தபடி கையில் புலி மார்க் சீயக்காயுடன் (பின்னாளில் நாகரீக வளர்ச்சியால் புலி மார்க் மீரா சீயக்காய், கிளினிக் பிளஸ் ஷாம்பு என்று மாறியது) கண்மாய் நோக்கி அண்ணன், தம்பி, அத்தை பையன், சித்தப்பா பையன் என கூட்டமாக சென்று குளித்து வருவோம்.

வீட்டிற்கு வந்ததும் மஞ்சள் வைத்து சாமி முன் வைக்கப்பட்டிருக்கும் துணிகளை அப்பா எடுத்துக் கொடுக்க, அதை அணிந்து அந்த சந்தோஷத்தையும் துணிகளை மற்றவர் பார்வைக்கு வைக்கும் பொருட்டு கொள்ளிக்கட்டையை எடுத்துக் கொண்டு ஒரு சீனிச்சரத்தை வீட்டு வாசலில் பற்றவைத்து அது வெடிக்கும் சப்தத்தில் எல்லோரையும் பார்க்க வைப்போம்.

பின்னர் பலகாரங்கள் சாப்பிட்டு விட்டு அனைவரும் கோவிலில் வந்து அமர்ந்து வெடி போடவும் போடுவதை வேடிக்கை பார்க்கவும் ஆரம்பிப்போம். அரட்டைக் கச்சேரிகளுடன் சந்தோஷமாக நகரும் நாளில் மதிய வேளையில் நாட்டுக் கோழி சூப்பும் வறுவலும் வயிற்றை நிரப்பும். சிறிது நேர உறக்கம். பின்னர் மீண்டும் வெடி வைக்க வந்து விடுவோம்.

அணுகுண்டு வைப்பதில்தான் சுகம் அதிகம்... கொட்டாச்சிக்குள் வெடியை வைத்து அதன் திரியை ஓட்டை வழியாக வெளியே எடுத்து லேசாக் முனையை கிள்ளி பற்ற வைத்தால் வெடிக்கும் போது கொட்டாச்சி சில்லுச்சில்லாகி பறக்கும் பாருங்கள்... வாவ்... என்ன சந்தோஷம். சில நேரம் யாருடைய வீட்டுக்குள்ளாவது விழுகும்... அப்ப விழும் திட்டை கண்டு கொள்ளாமல் அடுத்த வெடியை வைப்பதில் தீவிரமாக இருப்போம்.

இதில் அதிகம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் நாம வெடி வைக்கும்போது அருகில் மாட்டுச்சாணி இருக்கிறதா என்று... ஏன் என்றால் நாம் வெடி வைத்துக் கொண்டிருக்கும் போது நமக்கே தெரியாமல் யாராவது ஒருவன் சாணி மேல் வெடியை வைத்து விடுவான். அது வெடித்து சிதறும் போது தரையில் இருந்த சாணி நம்ம உடம்பில் இருக்கும்.

ராக்கெட்டெல்லாம் பாட்டில் துணையுடன் சர்.. சர் என்று பறக்கும். செட்டிநாட்டு பாலிடெக்னிக்ல வேலை பார்த்த எங்க ஊருக்காரரு ஒருத்தரோட பசங்கதான் அதிகமா வெடிப்போடுவாங்க... அதைப் பாக்கிறதுக்காக அவங்க வீட்டுக்கிட்டயே போயி இருப்போம். அப்புறம் வயசாக ஆக அவங்க வீட்டுல குறைஞ்சாச்சு.... மத்தவங்க அதிகமா போட ஆரம்பிச்சாங்க.

நாங்க எங்க ஐத்தான் (பெரியக்கா வீட்டுக்காரர்) வரவைதான் அதிகம் எதிர்பார்ப்போம். ஏனென்றால் அவர்தான் பெரிய பெரிய பாக்ஸில் வெடி கொண்டு வருவார். நிறைய வெடிகள் இருக்கும். சந்தோஷமாக வெடிப்போம். தீபாவளி அன்றோ அல்லது மறுநாளோ வெடித்த வெடிகளின் காகிதங்களை பொறக்கி குவித்து தீவைப்போம். இது வருட வருடம் நடக்கும்.

அந்த சந்தோஷ நாட்கள் வயதாக ஆக குறைய ஆரம்பித்தன. வெடியில் நாட்டம் குறைந்தது. புதுச்சட்டையுடன் வெடி வைக்க வருவதும் கோவிலிலும் வேப்ப மரத்தடியிலும் அன்று ஒரு நாள் அனைவரும் அமர்ந்து சந்தோஷமாக கழித்த தினங்களை எல்லாம் காலத்தின் வளர்ச்சியில் தொலைக்காட்சி தின்றுவிட்டது.

அன்று கிராமத்து தீபாவளியும் பட்டாசும் கொடுத்த ஆத்மார்த்த சந்தோஷத்தை தற்போதைய சூழலும் நகர வாழ்க்கையும் கொடுக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை.
எல்லாருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

ஆனந்தமாகவும் சந்தோஷமாகவும் கொண்டாடுங்க... குழந்தைங்களை எண்ணச்சட்டி பக்கமும் வெடிப்பக்கமும் விடாம கொண்டாடுங்க...


-'பரிவை' சே.குமார்.

19 கருத்துகள்:

 1. நினைவுகள் அருமை!
  தங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் என் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. இனிமையான நினைவுகள்.

  தீபாவளி வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 4. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 5. தீபாவளி வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 6. இளமை நினைவுகள் அருமை. உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் தீப் திருநாள் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 7. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 8. குமார் தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 9. தங்களுக்கும், நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் என் இதயங்கனிந்த திபாவளி நல்வாழ்த்துக்கள்....

  பதிலளிநீக்கு
 10. நினைவுகள் சூப்பர், குமார்.

  பதிலளிநீக்கு
 11. //சந்தோஷமாக கழித்த தினங்களை எல்லாம் காலத்தின் வளர்ச்சியில் தொலைக்காட்சி தின்றுவிட்டது.

  //

  எவ்வளவு உண்மை.

  பதிலளிநீக்கு
 12. வாங்க எஸ்.கே...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.


  வாங்க தமிழ் உதயம்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  வாங்க ராமலெஷ்மி மேடம்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 13. வாங்க சங்கவி...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  வாங்க ஜோதிஜி...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.


  வாங்க நிலாமதி...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 14. வாங்க வானம்பாடிகள் ஐயா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  வாங்க கலாநேசன்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.


  வாங்க சரவணன்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 15. வாங்க வெறும்பய அண்ணா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  வாங்க வானதி...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.


  வாங்க ஸ்ரீஅகிலா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 16. (ஹ்ம்ம்.. ரொம்ப லேட்-ட்டா வந்தாச்சு.. சரி சமாளிப்போம்..)

  அடுத்த வருஷ தீபாவளிக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் குமார் :-))

  பதிலளிநீக்கு
 17. அன்பு தோழா, நல்ல நினைவுகளை பகிர்ந்துள்ளீர்கள். மிக்க நன்றி. உலவு வழங்கும் பதிவுப் போட்டி என ஒரு விளம்பரம் பார்த்தேன். விபரம் தர முடியுமா நண்பா... ( rameshrajanish@gmail.com )

  பதிலளிநீக்கு
 18. வாங்க ஆனந்தி...
  லேட்டா வந்தாலும் மறக்காம வாழ்த்துச் சொன்னதற்கு ரொம்ப நன்றிங்க.
  உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.


  வாங்க தமிழ்க்காதலன்...
  உங்கள் தொடர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
  உலவு பதிவுப் போட்டி குறித்து உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புகிறேன் நண்பா.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...