மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 11 நவம்பர், 2010நண்பேன்டா...

நெருக்கமாக... பாதியாக... பார்த்துப் பழகிய... பயணங்களில் வாய்த்த பக்கத்து இருக்கை நட்புக்கள் என நம்முடைய நட்புத்தான் எத்தனை ரகம்... மனதில் பூத்த நட்புக்கள் எல்லாம் மனசுக்குள் இறங்கி செல்லத்தான் செய்கின்றன நினைவுகளில்...

நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் எனக்கு நட்பாய் இருந்தவர்கள் பலர் கல்லூரிக் காலத்தில் கரைந்து போனார்கள். புதிய நட்புக்கள் உதயமாயின... மூன்றாண்டுகளில் எத்தனையோ நட்புக்கள் எனக்குள் பதியமிடப்பட்டாலும் வெளியில் வரும்போது சில நட்புக்கள் மட்டுமே முளை விட்டிருந்தன.

எங்கள் வகுப்பில் மொத்தம் இருபது மாணவர்கள் பதினோரு மாணவிகள் எல்லாரும் முதல் மூன்று மாதங்கள் நட்பாய்த்தான் இருந்தோம். அதன்பின் மாணவர் அணியில் ஐந்து ஐந்தாய் இரண்டு பிரிவுகள் உதயமாகி அடிதடிகளில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தன. மிஞ்சிய பத்துப் பேரில் நானும் ஒருவன். நாங்கள் பத்துபேரும் நகமும் சதையுமாக இருந்தோம். ஒன்றாக கல்லூரி செல்வது... ஒன்றாக சாப்பிடுவது என்று இருந்தோம்... ஏனோ தெரியவில்லை கல்லூரி படிப்பிற்குப் பிறகும் தொடர்ந்த எங்கள் நட்புக்கள் இன்னும் மனசுக்குள் பூத்திருந்தாலும் சந்திப்புக்களும் பேச்சுக்களும் குறைந்து நாளாகிவிட்டன என்பதே உண்மை.

இன்றும் தேவகோட்டை கல்லூரிப் பக்கம் போகும்போது அந்த மரத்தடி அரட்டைகள் மனதை நனைக்கத்தான் செய்கிறது. இந்த நண்பர் வட்டத்தில் குறிப்பிடத்தக்கவன் ஆதிரெத்தினம், திருவாடானையில் இருந்து வந்த நண்பர்கள் வட்டத்தில் மிகவும் அன்னியோனமானவன். பெரும்பாலான நாட்கள் என் வயிற்றை நிரப்பியது அவன் கொண்டு வரும் சாதம்தான். எங்களுக்காகவே பெரிய டிபனில் கொண்டுவருவான். எங்கள் சாதத்தை அவன் சாப்பிடுவான். நல்லா கவிதை எழுதுவான். நாங்கள் நடத்திய 'மனசு' கையெழுத்துப் பிரதியில் ஆதவன் என்ற பெயரில் அவன் எழுதிய கவிதைகள் எனக்கு இன்னும் ஞாபகத்தில் இருக்கின்றன.

கலாட்டாவுக்கு பெயர் போன நண்பன். போலீஸ் விசிலை வைத்துக் கொண்டு மதியவேளைகளில் அவன் செய்யும் ரகளைக்கு அளவேயில்லை. இன்றும் திருவாடானையில் அய்யப்பன் கோவிலில்தான் இருக்கிறான். அவனுக்கு குழந்தை பிறந்தப்போ தேவகோட்டையில் வைத்துப் பார்த்தது. தொடர்பு எல்லைக்கு உள்ளே இருந்தாலும் தொடர்புக்கான எண் இல்லை. ஒவ்வொரு முறை செல்லும் போதும் திருவாடனை சென்று ஆதி, திருநாவை சந்திக்க மனசு நினைக்கும் ஏனோ தட்டிக்கொண்டே போய்விடும்.

எங்களது துறையின் செயலராக இருந்தவன் நாச்சாங்குளம் ராமகிருஷ்ணன். இவனது வீட்டில நாள் கணக்காக தங்கியிருந்திருக்கிறோம். இவனது குடும்பத்தினர் வெள்ளந்தி மனிதர்கள். இவனுக்கு கல்லூரி முடியப் போகும்போது எங்களுடன் படித்த தோழியுடன் காதல் வந்தது. ஏனோ தெரியவில்லை சில மாதங்கள்கூட நீடிக்கவில்லை. இவனை செயலராக்கியதில் மட்டுமே எங்கள் சூரத்தனம் இருக்கும். மற்றவற்றில் நாங்கள் தலையிடுவதில்லை.

செயலர் தேர்தல் என்றதும் அஞ்சு குழு ரெண்டும் தனித்தனியே எங்களிடம் வந்து ஆதரவு கேட்டது. அப்பதான் யோசித்தோம். அவங்க அஞ்சு, நாம பத்து... நாம யாருக்கு சப்போர்ட் பண்றோமோ அவங்க ஜெயிப்பாங்க... அத ஏன் நம்மள்ள ஒருத்தன் நிக்கக்கூடாது என்று நாங்கள் முடிவெடுத்து இவனை நிறுத்தினோம். தோழியரின் ஆதரவும் எங்களுக்கே... அஞ்சு குழுக்களும் சரி நாம நின்னா ஜெயிக்க முடியாது என்று எங்களை ஆதரிப்பதென முடிவெடுத்ததால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவன். இப்போது நினைவில் நின்றாலும் நிஜத்தில் நாங்கள் சந்தித்து காலங்கள் ஆகிவிட்டன.

அண்ணாத்துரை... எனக்கும் இவனுக்குமான நெருக்கம் சற்றேவித்தியாசமானது.. ஏனோ அப்படி ஒரு நெருக்கம்... பரமக்குடி ரோட்டில் சிலுக்குவார்பட்டியில் இருந்து தாயமங்கலம் போகும் ரோட்டில் இருக்கும் ஒரு கிராமத்தில் இருந்து வந்து அறை எடுத்து தங்கியவன் எனக்குள் ஐக்கியமாகிவிட்டான். அவன் என் வீட்டிலும் விடுமுறைகளில் நான் அவன் வீட்டிலும் தங்கிய நாட்கள் அதிகம். உறவுகள் விரிந்து அக்கா வீடுகள் வரை சென்றது. அவனது தந்தை விளையும் பொருட்களை எடுத்துக் கொண்டு எங்கள் வீட்டிற்கு வருவதும் என் தந்தை அவன் இல்லம் போய் வருவதும் தொடர்ந்தது. அவனது திருமணத்தில் பார்த்தது... பின்னர் போனில் சில காலம் வரை தொடர்பில் இருந்தோம்... அதன்பிறகு அதுவும் குறைந்து மனங்களில் மட்டுமே வாழ்கிறோம். கண்டிப்பாக எனக்குள் இருக்கும் அவனின் நினைவுகளைவிட அதிகமாய் அவன் இதயத்தை நான் ஆக்கிரமித்திருப்பேன். அண்ணாத்துரையுடன் இருந்த சேவியர், சிவகங்கையில் வழக்கறிஞராக இருக்கும் எனது ஒரே மாப்பிள்ளை உருவாட்டி நவனீதன் எல்லாரும் என் மனதுக்குள் ஓவியமாய் இருக்கிறார்கள்.

இன்னும் சொல்லப் போனால் எங்கள் நட்பில் தேவகோட்டையில் வழக்கறிஞராக இருக்கும் முத்தரசு பாண்டியனை மட்டுமே நான் ஊருக்குச் செல்லும் போது சந்தித்து வருகிறேன். ராம்நகர் பிரான்ஸிஸை அவன் மனைவியுடன் ஒருமுறை பார்த்தேன், இப்போ அவன் பெங்களூரில் இருப்பதாக கேள்விபபட்டேன். காளையார் கோவில் பச்சைமுத்து முன்பு அங்கு மெடிக்கல்ஸ் வைத்திருந்தான். இப்போ எங்கிருக்கிறான் என்று தெரியவில்லை.

கல்லூரி முடியும் காலத்தில் அவர்களெல்லாம் பக்கம் பக்கமாக வரைந்த ஆட்டோகிராப் டைரியை எடுத்து வாசிக்கும் போது என் சுவாசத்தில் இவர்களது வாசம் வீசினாலும் மனசுக்குள் மறுகும் நினைவுகளால் கண்களில் கண்ணீரின் ஊர்வலம் வருவதை தடுக்கவும் முடியவில்லை... தவிர்க்கவும் முடியவில்லை...

இவர்கள் மட்டுமல்ல இன்னும் எத்தனையோ நண்பர்கள் கல்லூரி வாசத்தில்... என்னுடன் பத்திரிக்கை நடத்திய இயற்பியல்துறை நண்பர்கள் இளையராஜா, அம்பேத்கார், பிரபாகர், கனிமொழி, சுபஸ்ரீ உள்பட இன்னும் நிறைய நண்பர்கள் மனதில் வாழ்கிறார்கள்.

இது தவிர ஐவர் குழுவில் இருந்த நண்பர்களில் என்னுடன் ஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரிவரை இணைந்தே படித்த சிவபாலமூர்த்தியும் எனது ஆட்டோகிராப் நோட்டில் பரிட்சையில் பேப்பரை காட்ட மறுத்த கோவத்தில் ' நண்பா... நீதி நேர்மை என்று இருந்தால் நடுத்தெருவில்தான் நிற்பாய்' என்று எழுதிக் கொடுத்த ராசுவும் பசுமையாய்...

இவர்களெல்லாம் தவிர்த்து தனித்து என்னுள்ளே ஆக்கிரமித்து இருந்தவன்... என் நண்பன் என்பதைவிட என்னில் பாதியாய் வாழ்ந்தவன்... என்னவன் ஒருவன் இருக்கிறான்... இருந்தான்... அவனைப் பற்றி சொல்ல நிறைய இருக்கிறது எனவே தனிப்பதிவில் பார்ப்போம்.

சரி விஷயத்துக்கு வருவோம்... என் வலை நட்புக்களே தேவகோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார நட்புக்கள் எனது நண்பர்களை பார்க்க நேர்ந்தால் என் வலையில் அவர்களை கால் பதிக்கச் செய்யுங்கள். மனசுக்குள் மறுகும் நட்பை மீண்டும் மழைக்கால காளானாய் மட்டுமல்லாமல் ஆல விருட்சமாய் வளர்க்க முயல்கிறேன்... செய்வீர்களா?

பாசங்களுடன்...
-'பரிவை' சே.குமார்.

31 கருத்துகள்:

 1. நண்பா... நீதி நேர்மை என்று இருந்தால் நடுத்தெருவில்தான் நிற்பாய்'

  குமார் இந்த நண்பர் எப்படியிருக்கிறார்?

  பதிலளிநீக்கு
 2. ஹாய் நான் தான் first

  நண்பேண்டா

  குமார் நானும் உங்கள் நண்பர்களில் ஒருவனாய்

  பதிலளிநீக்கு
 3. நல்லதொரு நினைவுகள். நிச்சயம் நண்பர்கள் வருவார்கள்.

  பதிலளிநீக்கு
 4. மனசுக்குள் மறுகும் நட்பை மீண்டும் மழைக்கால காளானாய் மட்டுமல்லாமல் ஆல விருட்சமாய் வளர்க்க முயல்கிறேன்...

  ...Thats so sweet! Best wishes! :-)

  பதிலளிநீக்கு
 5. வாங்க ஜோதிஜி...
  எங்கள் ஊருக்கு அருகில்தான் அவன் இருந்தான். சில வருடங்களாக பார்க்கவில்லை... 5வது செமஸ்டரில் என்னிடம் பேப்பரைக்கொடு என்றான்... நான் மறுக்க ... அந்தப் பாதிப்பில் இப்படி ஒரு ஆட்டோகிராப்... என் நண்பர்கள் கோவப்பட்டார்கள். அந்தப்பக்கத்தை கிழித்து வீசு என்றார்கள்... நாம் எழுதுவதுபோல்தான் அவன் மனதில்பட்டதை எழுதியிருக்கிறார் என்று மறுத்துவிட்டேன், இப்படி அவன் எழுதியதால்தான் நெஞ்சில் இருக்கிறான் போல...எங்கிருந்தாலும் ரொம்ப நல்லா இருப்பான்... இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 6. வாங்க சரவணன்...
  கண்டிப்பா நீங்களெல்லாம் என் நண்பர்கள்தான். பள்ளி நட்பாகவோ கல்லூரி நட்பாகவோ இல்லாமல் வாழும் காலம் வரை உங்கள் நட்பு தொடர வேண்டும் என்பதே என் எண்ணம்.

  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 7. வாங்க ராதாகிருஷ்ணன் சார்...
  உங்கள் கூற்று பலிக்கட்டும். இதன் மூலம் ஒருவன் வந்தாலும் எனக்கு சந்தோஷமே...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 8. நட்பின் பகிர்வு அருமை..! தங்களது நட்புவட்டத்தைப்பற்றி மேலும் அறிய ஆவல்.,!

  பதிலளிநீக்கு
 9. நினைவுகள் எப்பொதும் இதமானவையே...

  பதிலளிநீக்கு
 10. தங்கள் நல்ல எண்ணம் பலிக்கட்டும்

  பதிலளிநீக்கு
 11. கல்லூரி நட்புகள் என்றும் சோலைவனமாய் நெஞ்சினில்.. நல்ல பகிர்வு குமார்

  பதிலளிநீக்கு
 12. ஹ்ம்ம்.. எனக்கு இந்த பாட்டு தான் நினைவுக்கு வருது..!

  "பசுமை நிறைந்த நினைவுகளே..
  பாடித் திரிந்த பறவைகளே..
  பழகிக் களித்த தோழர்களே..
  பறந்து செல்கின்றோம்..!!"

  நல்லா இருக்குங்க.. :-)

  உங்க நண்பர்கள் உங்களுடன் மீண்டும் இணைய வாழ்த்துக்கள்..!

  பதிலளிநீக்கு
 13. நட்பென்பது அற்புதமான அனுபவம்தான்!

  பதிலளிநீக்கு
 14. நண்பர்களுடன் மீண்டும் இணைய வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 15. ஆரம்பத்தில் இருந்தே கவனிக்கிறேன் குமார். நீங்கள் "நட்புக்கு" அதிக முக்கியத்துவம் தருகிறீர்கள். இந்த மனம் எனக்கு பிடித்தது. உங்களின் எழுத்துகள், மற்றும் நீங்கள் பேசும் நடை.... இவற்றை வைத்து நீங்கள் எப்படி பட்டவர் என யூகித்து வைத்திருந்தேன். அதை நிரூபிக்கும் பதிவை இப்போது இட்டிருக்கிறீர்கள். மிக்க நன்றி. தொடருங்கள்... இந்த நட்பையும்.

  பதிலளிநீக்கு
 16. நண்பேண்டா...

  நட்பை பற்றியான ஓர் அழகான பதிவு...

  பதிலளிநீக்கு
 17. நீங்கள் சொன்னதை என்னால் செய்ய முடியவில்லை... என் பங்குக்கு ஓட்டுக்களை மட்டும் போட்டுவிட்டு செல்கிறேன்...

  பதிலளிநீக்கு
 18. கல்லூரி நட்புக்கள் இதமானவை.
  நல்ல பகிர்வு.

  பதிலளிநீக்கு
 19. வாங்க பிரவின் குமார்...
  உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


  வாங்க ம.தி.சுதா...
  உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 20. வாங்க மோகன் குமார்...
  உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


  வாங்க எல்.கே...
  உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 21. வாங்க ஆனந்தி...
  உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


  வாங்க வானம்பாடிகள் ஐயா...
  உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 22. வாங்க எஸ்.கே...
  உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க மேனகாக்கா...
  உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 23. வாங்க தமிழ்க்காதலன்...
  உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க சங்கவி...
  உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 24. வாங்க வெறும்பய...
  உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க பிரபாகரன்...
  உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க அம்பிகா...
  உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 25. கல்லூரி நட்பை நினைத்து தளம்பும் உங்களை நினைக்கவே உயர்ந்து நிற்கிறீர்கள் குமார்.நிச்சயம் நணபர்களைக் காண்பீர்கள் !

  பதிலளிநீக்கு
 26. நன்றாக எழுதியிருக்கிறீர்கள் குமார். நட்பைப் போற்றுவோம்.

  பதிலளிநீக்கு
 27. கல்லூரி வாழ்க்கை எப்போதும் சுகம் தான். உங்கள் நண்பர்களை சந்திக்க வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 28. வாங்க ஹேமா...

  வாங்க சரவணக்குமார்...

  வாங்க வானதி...

  உங்கள் அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 29. கல்விக் கால நட்புக்கள்;
  அவை பசுமையான இனிமை நினைவுகள்!

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...