பிக்பாஸ் நாட்டாமை டாஸ்க் முதல்ல் நாள் 'ஆமை' வேகத்தில்தான் பயணித்தது... நேற்றைய பகுதியிலாவது சூடு பிடித்ததா என்றால் நல்லாவே சூடு பிடித்தது... நாட்டாமை டாஸ்கில் சூடு இல்லை என்றாலும் மனிதர்களுக்கு நல்லாவே சூடு பிடித்தது.
நிகழ்ச்சியில் என்ன நிகழ்ந்தது என்பதைவிட மனிதர்களின் மனநிலை மாற்றம் ஏன்..? எதனால்..? என்றுதான் இந்தப் பகுதியைப் பார்க்க வேண்டும். பதினைந்து மனிதர்கள் ஒரு வீட்டுக்குள் அடைந்து கிடப்பதில் உளவியல் சிக்கல் இருக்கத்தான் செய்யும். பாசம், நேசம், கோபம், துக்கம், அழுகை, ஆர்ப்பாட்டம் என்பதெல்லாம் மாறிமாறித்தான் நிகழ்கிறது என்றாலும் ஒருவரை மட்டுமே கட்டம் கட்டுதலும் அதன் விளைவாக ஒரு கட்டத்தில் அவர் வெடித்தலும் அடிக்கடி நிகழத்தான் செய்கிறது.
நாட்டாமையாக சேரன் இப்படித்தான் இருக்க வேண்டுமென பிக்பாஸ் சொன்னபடி செய்தாலும் அவரின் முக அமைப்புக்கு சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து கதை நாயகன்தான் சரியாக இருக்கும்... நாட்டாமையெல்லாம் ஒத்தே வராது என்றாலும் நாய் வேசம் போட்டால் குரைத்துத்தான் ஆக வேண்டும் என்ற கோட்பாட்டின்படி உண்மையாக விளையாடுகிறேன் என சில இடங்களில் நிஜ முகத்தையும் காட்டிவிடுகிறார்.
இது இயற்கையாய் எல்லாருக்குமே ஏற்ப்படுவதுதான். ஒரு இயக்குநராய், கதையாசிரியனாய் அவருக்கு உரிய திரைக்கதையை மிகச் சரியாக எழுதியதுடன் அதில் ஒவ்வொருவரும் இப்படித்தான் நடிக்க வேண்டும் என்றும் நினைக்கிறார். அந்த நினைப்பும் அவருக்கு மரியாதை கொடுக்க மாட்டோமென இருக்கும் நபர்களுமே அவருக்கு மிகப்பெரிய பிரச்சினையாய்...
கத்திப் பேச வேண்டும் என்பதில் தன்னுடைய அணி, எதிரணி என்றில்லாமல் எல்லாரிடமும் சரிசமமாகவே நடக்க முயற்சிக்கிறார். அதுவே அவருடைய அணியினாரால் அவர் கட்டம் கட்டப்படுவதற்கான காரணியாக அமைகிறது. இந்த வீட்டுக்குள் வயதுக்கு மரியாதை என்பதையெல்லாம் எதிர்பார்த்தல் என்பது நாய் வாயில் இருக்கும் தேங்காய்க்குக் காத்திருப்பது போலாகும் என்பதைத் சேரன் புரிந்து கொள்ள வேண்டும்.
கவினும் சாண்டியும் 'வ.வா.ச' செயலாளர் பதவிக்கு முயற்சிக்க வேண்டும் என்பது டாஸ்க்... ஆனால் இருவரும் எதற்கு முயற்சிக்கிறார்கள்..? கவினைப் பொறுத்தவரை லாஸ்லியாவுடனும் சாக்சியுடனும் மீண்டும் ஒரு காதல் கதைக்கான பயணத்துக்கு முன்னுரை எழுதவே இந்த வாரம் தேவைப்படுகிறது. அதேபோல் சாண்டியைப் பொறுத்தவரை அடுத்தவரை கேலி செய்து தன்னை முன்னிறுத்தும் பணியில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்.
கிராமத்துக் கதைக்களம் என்பதால் கிராமத்துப் பாடலுடன் தொடங்கிய நாளில் எப்பவும் போல் எல்லாரும் குத்தாட்டம்... என்னைக்கும் இல்லாத திருநாளா சரவணன் ஆட்டம் போட்டார். எப்பவும் வேலை பாக்காம இருந்துட்டு ஒருநாள் தீவிரமா வேலை பார்த்தால் 'ஆத்தாடி... இன்னைக்கு மழை கொட்டப்போகுது போ'ன்னு ஊர்ல சொல்லுவாங்க... அப்படித்தான் சரவணன் ஆடியதும் இன்னைக்கு என்னமோ நடக்கப் போகுதுன்னு தோணுச்சு. அதுவும் சிறப்பாகவே நடந்துச்சு.
லாஸ்லியா ஒரு பக்கமும் மீரா ஒரு பக்கமும் கோலம் போட, கவின் லாஸ்லியாவோட வறுத்துக்கிட்டே மீராவை 'உன்னைய மாதிரித்தான் உன் கோலமும் இருக்கு'ன்னு கிண்டிக்கிட்டு இருந்தான். அதுக்கு அப்புறம் சாண்டி மீரா எழுதிய 'வருக வருக'வை 'வாந்தி வாந்தி'யின்னு மாத்திட்டார். இந்தப் பிரச்சினை பஞ்சாயத்துக்குப் போக, பெண்களிடம் மன்னிப்புக் கேட்கச் சொன்னதும் நான் பிரச்சினை பண்ணின மீராக்கிட்டதான் மன்னிப்புக் கேட்பேன் என்றார் சாண்டி.
அந்தப் பஞ்சாயத்து ஒரு பக்கம் நடக்கும் போதே லாஸ்லியா நாட்டாமையின் சொம்பைத் தூக்கி மறைத்து வைக்க, சேரன் களவாணி நீதான்னு லாஸ்லியாவைப் பிடித்து செம்பு கிடைக்கும் வரை கட்டி வைப்பேன்னு சொல்லி, ஜாலியாக சேலையை வைத்துக் கட்டி வைத்ததில் ஆரம்பித்த சிறு பிரச்சினை... மெல்ல விஸ்வரூபமெடுத்து... சூறைக்காற்றாய் சுற்றி அடித்தது.
தன்னை டாஸ்கிற்காக ஜாலிக்காக கட்டிப் போட்டிருக்கிறார் சேரப்பா என்பதால் லாஸ்லியாவுக்கு அதிலொன்றும் வருத்தமில்லை... கவின்தான் ரொம்ப வருந்தினான்... சேரனுடன் மோதவும் செய்தான்... லாஸ்லியா மறைத்த சொம்பை முகன் எடுத்து வர, தண்டனை விலக்கப்பட்டாலும் பிரச்சினையின் முள் காலில்தான் இருந்தது... மகளாக நினைத்தாலும் விளையாட்டு என்ற போது லாஸ்லியாவுக்கென தனி முகமெல்லாம் காட்டாத சேரன் இனி உனக்கும் எனக்கும் ஒண்ணுமேயில்லை என்று சொன்னது தான் சுற்றத்தாரிடம் பட்ட வேதனையினால் வந்த வார்த்தைதான்... அது விளையாட்டுக்கானதாய் இல்லை.
கவினைப் பொறுத்தவரை விளையாட்டுக்கு எனச் சொல்லி இரண்டு பேரை காதலிக்க வைத்து காலை வாரியவன்... சேரனை எப்போதுமே வெறுப்பாய்ப் பார்க்கும் கூட்டத்தில் ஒருவன்... லாஸ், சாக்சியை மட்டுமே சுற்றிக் கொண்டு விளையாட்டைப் பற்றிச் சிந்திக்காதவன்... மெல்ல மெல்லக் கொல்லும் விஷம் இவன்... நம்பிச் சுற்றுவோரெல்லாம் இவனால் கடிபடுவது உறுதி.
மீராவைப் பொறுத்தவரை வேலை பார்க்க மாட்டேன்... ஒழுங்கா விளையாட மாட்டேன்... ஆனா சண்டை போட்டு ஊரைக் கூட்டுவேன்... நீ என்ன பேசுறேன்னு எனக்குத் தேவையில்லை.... ஆனா நான் என்ன பேசுறேன்னோ அதை நீ கேட்கணும் என்ற மனநிலைக்குச் சொந்தக்காரி... பாத்ரூம் போனப்போ விடமாட்டேன்னு சொன்னதுக்காக புலம்ப, சரி விடு கழுதையை... உன்னைப் பேல விடலையில்ல... நீ திங்க விடாதே... டாஸ்க் கொடுன்னு சித்தப்பு கூர் தீட்ட, நாந்தான் டாஸ்க் கொடுப்பேன் என மீரா துள்ள, மது களம் இறங்கிடுச்சு. சரவணன் ரொம்பச் சாதாரணமாக அந்தப்புள்ளைய பீ பேல விடலைன்னு கோபம் எனப் பேசியதை அந்தச் சூழலி யாரும் கவனிக்காததால் 'அய்யே.. இந்தாளு கிராமத்தான்' அப்படின்னு கஞ்சாக் கருப்பைச் சொன்னது போல் சொல்லவில்லை.
மீராவுக்கும் மதுவுக்கும் வாய்க்கால் தகராறு முத்தி நாந்தான் நாட்டாமை... 'நான் சொல்றேன் டாஸ்க்.... நீ சாப்பிடு ரஸ்க்'குன்னு சேரன் குழுவுக்கு மீரா சாப்பாடு போடுது... இதுதான் உனக்கு டாஸ்க் என 'முத்தம் கொடு... முட்டை தின்னு'ன்னு சொல்லி முத்தம் வாங்கி சாப்பிட விட, எனக்கும் பசிக்கிது... நானும் முத்தம் என சித்தப்பு அடிச்சாரு பாரு ஒரு அடி... செம டைமிங்க்.
இந்தச் சூழலில் செந்திலாய் இருக்கியே வடிவேலாய் எப்ப மாறுவேன்னு எவனோ போன்ல கேட்டுத் தொலைச்சதுக்காக, சந்திரமுகியாகவே மாற முனைப்போடு இருக்கும் ரேஷமா நானும் திங்கனும் எனக்கு வேணும் டாஸ்க்குன்னு நிக்க, பிரச்சினை வெடிக்கும்ன்னு தெரியாம மது ஒரு டாஸ்க் கொடுக்கிறார். ரேஷ்மாவும் களத்துல இருக்கேன்னு காட்ட அதைத் தூக்கிக்கிட்டு தன்னைத் திட்டிய சேரனுக்கிட்ட போகுது... சொன்னுச்சா சொல்லலையான்னு பாக்க பின்னால போகுது லாஸ்லியா.
தேமேன்னு உக்கார்ந்திருந்த சேரனுக்கிட்ட போயி 'இன்னைக்குச் செத்தா நாளைக்குப் பாலு... இங்க இருக்க ஆளுங்களுல்ல நீதான் பூல்(FOOL)' அப்படின்னு சொல்லிட்டு வர... தமிழில் வார்த்தை உச்சரிப்பு என்பது ரொம்ப முக்கியம்... நடிகைகள் தமிழ் பேசுறதுங்கிற கொலைதான்... அப்படி ரேஷ்மா சொன்னது 'ஃபூலு'... இதன் அர்த்தம் கோட்டுக்கு வெளியேயும் உள்ளேயும் வேறுவேறாக இருக்கலாம்.. அதை கேட்பவர் எடுக்கும் விதத்தில் இருக்கு...
சேரன் முகத்தில் ஈயாடலை... நேரே உள்ளே வந்து ரேஷ்மாக்கிட்ட ஏன் அப்படிச் சொன்னேன்னு கேட்டதும்... அப்படித்தான் சொல்வேன் இப்ப என்ன... நீ மட்டும் கத்துறே... என்பதாய்ப் பேச, இது டாஸ்க்கும்மா... உங்களை எப்படி நடிக்கச் சொலியிருக்காங்களோ அப்படித்தான் என்னையும் நடிக்கச் சொல்லியிருக்காங்க என எதார்த்தத்தை எடுத்துச் சொல்லியும் ரேஷ்மா அடங்கலை... மற்றவர்களும் அடக்கலை... சேரன் தன் நிலை இறங்கி பலமுறை மன்னிப்புக் கேட்டார். மன்னிப்புக் கேட்பதைவிட அதை ஏற்றுக் கொள்ளுதல் என்பது உயர்வானது ஆனால் ரேஷ்மா அதைச் செய்யவில்லை.
தன் மீது தவறெனில் சிறியவர் பெரியவர் என்றில்லாமல் மன்னிப்புக் கேட்கும் இந்தக் குணவார்ப்பு சேரனிடம் அதிகமாகவே இருப்பது சிறப்பு. நாம் விரும்பும் இயக்குநர் இப்படியான சூழலில் தவித்து நிற்பதைக் காண வருத்தமே மேலிட்டது. கேமரா முன்னால் சேரனின் புலம்பலும் தனியான புலம்பலும் பார்க்க பரிதாபமாக இருந்தது. நாலு தேசிய விருது வாங்கிய மனுசன்... நாயைவிடக் கேவலமாய்ப் பார்க்கபடுதல் வலி... ப்ளீஸ் கமல் சார்... தயவு செய்து சேரனை இந்த வாரம் வெளியில் கொண்டு வாருங்கள். தன் மானத்துடன் தளராத மனதுடன் நல்ல படங்களை இயக்கட்டும்.
அடுத்த ஆட்டம் மதுவுக்கானதாக அமைந்தது... பாத்ரூம் போக டாஸ்க்.... மாரியம்மா... மாரியம்மா பாட்டுக்கு ஆடணும்... முகத்தில் லிப்ஸ்டிக்கால் கோலம் வேறு சாக்சி கை வண்ணத்தில்... ஆடச் சொன்னவன் கவின்... ஆட்டுவித்தவன் சாண்டி... எரியுது விடுங்கடான்னு சொல்லியும் நல்லா ஆடுன்னு நிக்கிறார் சாண்டி... கவின் என்னும் விஷமும் கமுக்கமாய்ச் சிரிக்கிறது. ஒரு கட்டத்தில் மது மாரியம்மாவாய் இல்லாமல் பத்ரகாளியாக மாறினார்.
காளியான பின் சாண்டியையும் கவினையும் வச்சிச் செஞ்சிட்டார்... தன் ஆத்திரங்களை எல்லாம் அள்ளிக் கொட்டிட்டார்... உடம்பு முடியலைன்னு சொன்ன பொண்ணைப் படுத்தியெடுத்தல் என்பது மோசமான செயல்... சாண்டியிடம் சரவணன் சொல்லியதையும் மது உடம்பு முடியலை என்று சொன்னதையும் வைத்துப் பார்க்கும் போது மதுவுக்கு பெண்களுக்கு உரிய உபாதை என்றுதான் தோன்றுகிறது.... அப்படியெனில் அதை அங்கிருக்கும் ஆண்கள் அறிந்திருந்தார்களோ இல்லையோ பெண்கள் கண்டிப்பாக அறிந்திருப்பர். அப்படியிருந்தும் யாரும் அவ்வளவாகப் பேசலை என்பதே வருத்தமான விஷயம்... சாக்சி தன் செயலுக்கு மன்னிப்புக் கேட்டார்... லாஸ்லியா அணைத்துக் கொண்டார்... அவ்வளவே.
அந்த நாட்களின் வலி, வேதனை, படபடப்பு என எல்லாமுமாய் ஒரு பெண்ணை ஆட்கொண்டிருக்கும்... எது சொன்னாலும் அவர்களுக்கு அப்போது கோபமும் ஆற்றாமையுமே ஏற்ப்படும். அப்படியான நிலையில் அவர் பாத்ரூம் போக வேண்டிய அவசிய சூழலில் ஜாலியான டாஸ்க் என்றில்லாமல் ஏதோ பழி வாங்கலுக்கான நிகழ்வாய்... ஆடச் சொன்னதும்... அதுவும் சாமி மீது தீராத காதல் கொண்டவரை அப்போதைய நிலையில் சாமிப் பாடலுக்கு ஆடச் சொன்னது என எல்லாமாய்ச் சேர்ந்து வெடித்து வானவேடிக்கை நிகழ்த்தி விட்டார். மது 'காளி'யானதில் சாண்டி 'காலி'யானார்.
ஒருவரைக் கேலி செய்து அதன் மூலம் தன் இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளுதல் தமிழ்ச் சினிமாவில் நகைச்சுவை என்ற பாணியில் ஆண்டாண்டு காலமாய்த் தொடரும் இழிசெயல்தான்... இதைப் பார்த்துச் சிரித்தே பழக்கப்பட்ட நாம் சாண்டி மற்றவர்களைக் கிண்டல் செய்து தன் இடத்தைச் சரியாக தக்க வைக்க எடுத்த முயற்சிகளையும் நாமெல்லாம் ரசித்து சாண்டிதான் பிக்பாஸ்-3யைத் தாங்க வந்த கடவுள்ன்னும் வடிவேலுன்னும் சொன்னோம். அவர் செய்யும் சின்னச் சின்ன விஷயங்கள் எல்லாம் அவரை மேலே கொண்டு சென்ற போது அதனால் பலரின் மனசு குமைந்து கொண்டிருந்ததை அறியாமல் கைதட்டிக் கொண்டிருந்தோம். மது எல்லாத்தையும் புட்டுப்புட்டு வைத்துவிட்டார்.
தன்னைக் குட்டை என்று கேலி பேசியது முதல் வைத்யாவை வைத்துச் செய்தது வரை அள்ளிக் கொட்டினார். அடுத்தவங்களைக் கேலி செய்யும் நாம் நம்மை அடுத்தவர் கேலி செய்யும் போது ஏற்றுக் கொள்ளும் மனநிலை கொண்டிருக்க வேண்டும் என்பது மதுவின் வைர வரிகள்... நிச்சயம் ஏற்றுக் கொள்ள வேண்டிய வரிகள். அதன் பின் சாண்டி மன்னிக்கப்பட்டார் என்றாலும் மதுவின் மனவேதனை வெடித்துச் சரிந்ததில் சற்றே வடிந்திருக்கலாம்... ஆனால் கண்டிப்பாக மோகனுக்கு நிம்மதியான் உறக்கத்தைக் கொடுத்த இரவாய் அமைந்திருக்கும்.
இதற்கிடையில் 'எல்லாரும் ஆடுறாங்க சாமியாட்டம் நானெதுக்கு இருக்கணும் மாமியாட்டம்'ன்னு சாக்சி தன் பங்குக்குக்கு மது பிரச்சினையின் போது 'மதுவை அமைதியா இருக்க விடுங்க'ன்னு சேரன் சொன்னதும் 'எங்கயோ போற மாரியாத்தா... இந்தாளு மேல வந்து ஏறாத்தா'ன்னு சேரனைப் பார்த்து ஒரு கத்து... என்ன சொல்றதுன்னு தெரியாம... சொல்ல மறந்த கதையில பிரமிட் நடராஜன் செருப்பால் அடித்து விரட்டுமிடத்தில் நிற்பது போல் பரிதாமாக நின்றார்.
உண்மையில் மனசு வலித்தது சேரனுக்காக... ஒரு மனிதனை வாழ்க்கைப் போராட்டம் எங்கெல்லாம் கொண்டு போய் நிறுத்துகிறது பாருங்கள்... யாரிடமெல்லாம் கேவலப்பட்டு நிற்கச் சொல்கிறது... இதில் பணக்காரன் ஏழை என்பதெல்லாம் இல்லை... இந்த வலிகளைச் சுமந்தவர்களுக்கு இதன் வேதனை புரியும். எல்லாருமே அவரவர் வாழ்க்கையில் பணத்துக்கான பரிதாப நிலையில் இப்படித்தான் கேவலப்பட்டு நிற்கிறோம்.
மதுவிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு வந்தபின் அவ உன்னையை கெட்டவனாக் காட்டவே இப்படிப் பண்ணிட்டான்னு கவின் என்னும் விஷம் மெல்லக் கக்க ஆரம்பித்தது. மது மனதில் உள்ளதை அள்ளிக் கொட்டியதை இவர்கள் எல்லாம் நடிப்பு எனக் காட்சிப் படுத்துகிறார்கள். நடிக்க முடியாமல் தவிக்கும் சேரனை, ரொம்பப் பண்ணுறாருன்னு ஆளாளுக்குத் திட்டுகிறார்கள்... இதுதான் நிஜம்.. அங்கு யாருமே உண்மையான மனிதர்களாய் இல்லை... எல்லாருமே நடிக்கிறார்கள்... அவ்வப்போது சுயரூபமும் வெளிப்படத்தான் செய்கிறது.
மீரா, சரவணன் எல்லாம் பேசிக்கிட்டு இருக்கும் போது ஆறாம் அறிவு அது இதுன்னு மீரா உரை ஆத்துச்சு... அப்ப சரவணனின் முழி போன போக்கு இருக்கே.... ரசிக்க வைத்தது. முத்தாய்ப்பாய் நீ வரும்போதே கோனார் நோட்ஸோட வந்திருக்கலாம் என்றது சிறப்பு.
இந்தப் பெண்களுக்கெல்லாம் பின் கொசுவம் வைத்து சேலை கட்டிவிட்ட புண்ணியவான்/வதிகள் யாருன்னு தெரியலை... நாட்டுக்கட்டு சேலையில் ஊரில் ஆயாக்களையும் அப்பத்தாக்களையும் அம்மாக்களையும் அத்தைகளையும் பார்த்துவிட்டு இவர்களைப் பார்க்கும் போது. அந்தச் சேலைக்குரிய மரியாதையைக் கெடுப்பதாகவே தெரிகிறது... அவர்கள் பாதம் தெரிய பின் கொசுவம் வைத்துக் கட்டி அழகாக இருந்தார்கள்... இவர்கள் முழங்கால் வரை தெரிய வைத்து கவர்ச்சியாய் இருக்கிறார்கள். அதுவும் கொசுவத்தின் அழகை தூக்கிச் சாப்பிடும் முதுகழகைக் காட்டியபடி வலம் வருகிறார்கள்... கேமாராக் கண்கள் அதன் பின்னே அலைகின்றன... எல்லா முதுகும் திரையை அலங்கரிக்கிறது. கண்டென்ட் இல்லைன்னா என்ன அதுதான் களமாட முதுகு இருக்கிறதே எனச் சொல்லாமல் சொல்கிறது காமிராக் கண்கள்... அகண்ட பார்வை.
அடுத்த வார நாமினேசனில் சேரனும்... மதுவும் இருப்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது.
நேற்று சித்தப்பு செவ்வாழைக்கான நாள் போலும்.... அப்பப்ப கவுண்டர் அடித்து விட்டுக் கொண்டேயிருந்தார்.
சாண்டியின் செயல்கள் தவறு என்பதை சொல்லாமல் பலர் இருக்க, மது விளக்கேற்றினார்.
கண்டிப்பாகச் சேரன் இரவில் அழுதிருக்கக் கூடும்... அழுதிருப்பார்.
பிக்பாஸ் டாஸ்க்கை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாய்ச் சொன்னார். இன்று மாற்றங்களுடன் வந்தால் நல்லது.
பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.
1 எண்ணங்கள்:
// தன்மானத்துடன் தளராத மனதுடன் நல்ல படங்களை இயக்கட்டும்... //
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்...
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்...
கருத்துரையிடுக