மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 28 அக்டோபர், 2014

நண்பேன்டா : பிரான்சிஸ்


ண்பேன்டா வரிசையில் இன்று பூக்கும் நண்பன் கல்லூரியில் எங்களுடன் படித்த பிரான்சிஸ். கல்லூரிக்கு அருகில் வீடு... மதியம் எங்களுடன் சாப்பிடும் கொடுப்பினை எல்லாம் இவனுக்கு இல்லை... எங்கள் நட்பு வட்டத்தில் அந்தச் சந்தோஷத்தை இழந்த ஒரே நண்பன் இவன். பின்னே பல வகையான சாப்பாடுல்ல சாப்பிடுவோம்... கடைசிப் பிரிவேளை முடிந்ததும் வீட்டுக்குச் சாப்பிட வேகமாக சைக்கிளில் கிளம்பிவிடுவான். ஒரு சில நாள் வலுக்கட்டாயமாக எங்களது சாப்பாட்டை பகிர்ந்து சாப்பிடலாம் என்று சொல்லி இருக்க வைப்போம். பெரும்பாலும் வீட்டுக்குப் போவதற்குத்தான் நினைப்பான். காரணம் வீட்டில் மூத்த பையனாக இருந்தாலும் அப்பா, அம்மா இருவருமே இவனிடம் அதிகம் பாசம் காட்டுவதில்லை. எதற்கெடுத்தாலும் கேள்விக் கனைகள்தான். அதற்காகவே பயந்து சரியான நேரத்துக்குச் சென்று விடுவான்.

ஆரம்பத்தில் முதல் பெஞ்ச் முக்கியஸ்தர்களான முத்தரசு பாண்டியன் மற்றும் ராமகிருஷ்ணனுடன் அமர்ந்திருந்ததால் அவர்களுடன் மட்டுமே பேசுவான். இரண்டாவது வரிசை நாயகர்களான  அண்ணாத்துரை, சேவியர் மற்றும் என்னுடன் எப்போதாவது பேசுவான். ஒரு சின்னச் சிரிப்புத்தான் எல்லாத்துக்கும் பதிலாக வரும். பனிரெண்டாம் வகுப்பு வரை பெங்களூரில் சித்தி வீட்டில் இருந்து படித்தவன். ஆங்கில அறிவு அதிகம். தமிழ் பேசுவது கூட இழுத்தாற்போலத்தான் இருக்கும். நல்லாப் படிப்பான். 

முதல் வருடம் முடிவதற்குள் நம்ம கூட்டணியில் முக்கிய நபரானான். அரட்டை அடிப்பது என்றால் இவனுக்கு அவ்வளவு சந்தோஷம். இரண்டாம் வருடத்தில் எங்கள் ஆட்டம் பாட்டத்துக்கு அளவே இல்லை. முதல்வருக்கே ஏப்ரல் மாத  முதல் நாளில் உஜாலா சொட்டு நீலம் அடித்த மிகச் சிறந்த மாணவர்கள்தான் நாங்கள். அதைத் துணிந்து செயலாற்றியவன் ஆதி என்றாலும் மூளையாக இருந்தவன் நம்மாளுதான். தீபாவளி வெடி வைக்கணுமா மதியம் சாப்பிட்டு வரும் போது கையில் ஊதுபத்தி வாங்கி வருவான்.

இரண்டாம் ஆண்டின் இறுதியில் எங்கள் குழுவின் அதிரடி ஆட்டத்தில் முக்கியமானது சூசைரத்தினம் பாட்டுப் பாட, மேஜையில் தாளம் போட்டு அமர்க்களம் படுத்தும் நிகழ்வுதான். எங்கள் வகுப்பறை வாசலில்தான் குடி தண்ணீர் வைத்திருப்பார்கள். அதைக் குடிக்க வரும் மாணவிகள் எங்கள் பாடகரின் பாட்டுக்கும் எங்களின் தாளத்துக்கும் ரசிகையாகி விட, எங்களுக்கும் நல்லா பொழுது போச்சு. இவனும் சாப்பிட்டு கை கழுவுவானோ இல்லையோ கல்லூரிக்கு வந்து விடுவான். எதோ ஒரு பொண்ணை சரியாக கணித்து வைத்திருப்பான். 'பங்காளி இன்னும் அந்தப்புள்ளையக் காணோம்... இன்னைக்கு வரலையோ?' என்று மெதுவாக கேட்பான். 'தெரியலையே வேணுமின்னா... அதோ அந்த பச்சைத் தாவணி அந்த வகுப்பு புள்ளதான். அதுக்கிட்ட  போயி கேட்டுட்டு வாரியா?' என்று ராம்கி திருப்பிக் கேட்டதும் 'டேய் பாருங்கடா... நானாச்சும் அந்தப்புள்ளையத்தான் பாக்குறேன்... இவன் அதோட கிளாஸ்மெட்டையெல்லாம் பாக்குறான்டா...  கேட்டா ரொம்ப நல்லவன்னு சொல்லுவாய்ங்க...' என்று நக்கலாகச் சொல்லி விட்டு பேசாமல் அமர்ந்து விடுவான்.

இரண்டாண்டு சந்தோஷங்கள் எல்லாம் மூன்றாம் ஆண்டின் ஆரம்பத்தில் உருக்குலைந்தது. காரணம் கல்லூரி ஒரு பத்து நாள் விடுமுறைக்குப் பின்னர் திறக்கப்பட்டபோது இவன் வரவில்லை. இரண்டு நாட்களுக்கும் மேலாக வரவில்லை என்றதும் எப்பவும இவனோட வீட்டுக்குப் போகும் ராம்கியைப் போய் பார்த்துவிட்டு வரச்சொன்னோம். 'அவனுக்கு உடம்புக்கு முடியலையாம்... பெங்களூர்ல இருக்கானாம். அடுத்த வாரம் வருவானாம்' என்று சொன்னான். என்னாச்சு... ஏதாச்சு என்பது தெரியாமல் ஒரு வாரம் கழிய, முத்தரசும் ராம்கியும் ஒரு நாள் மிகப்பெரிய குண்டைத்தூக்கிப் போட்டார்கள். எங்க எல்லாருக்கும் இதயமே நின்று விட்டது.

'பிரான்சிஸ் வீட்லதான் இருக்கான்.... பைத்தியமாயிட்டானாம்... என்ன என்னவோ பேசுறான்... நெத்தியில விபூதி, குங்குமம் எல்லாம் வச்சிக்கிட்டு அவனா பேசிக்கிட்டு சிரிக்கிறான்... எங்களைத் தெரியல...' என்று சொல்லவும் எல்லோரும் அவனோட வீட்டுக்குப் போனோம். அங்கு அவன் திண்ணையில் உக்காந்திருந்தான். நெற்றியில் கலர்கலராய் குங்குமம்... எங்களைப் பார்த்ததும் அதே சிரிப்பு... பின்னர் என்னென்னவோ பேசினான். அவங்க அம்மா, அப்பா எல்லாரும் ஒரே அழுகை. அப்பாவோ 'இப்பத்தான் கூட்டியாந்தோம்... இங்க வந்ததும் ரொம்பப் பண்ணுறான் பாருங்க... குங்குமத்தை எல்லாம் நெத்தியில வச்சிக்கிட்டு... படிக்கிற பய மாதிரியா இருக்கான்... பேசாம் பெங்களூர்ல கொண்டு போயி வச்சிப் பாக்கலாம்ன்னு பார்க்கிறேன்' என்றார். எங்களுக்கு  என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஒன்றும் பேசாமல் கிளம்பி வந்து விட்டோம்.

எங்கள் பேராசிரியரிடம் விவரம் சொல்லி அவனை எங்களுடன் வகுப்பறையில் வைத்துக் கொள்ள அனுமதி கேட்டோம். அவரோ முடியாத பையன்... நீங்க அவனோட ஒத்துப் போயிடுவீங்க... பொண்ணுங்க இருக்காங்களே என்று யோசித்தார். கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையுமில்லையா... எங்க பேராசிரியரோ எங்களுக்குத் தங்கம்... மனம் இறங்க மாட்டாரா என்ன.... அதுவும் நல்லாப் படிக்கிற பசங்கன்னு எங்க மேல எப்பவும் அவருக்கு தனி அன்பு உண்டு. நீண்ட யோசனைக்குப் பின்னர் ஒத்துக் கொண்டார். அவங்க வீட்டில் பேசி ஆறாவது செமஸ்டருக்குள் பழைய பிரான்சிஸா மாறிடுவான் என்று சொல்லி வகுப்பறைக்கு கூட்டி வந்தோம்.

தினமும் ராம்கி தன்னோட சைக்கிளில் அவனைக் கூட்டி வருவான். வகுப்பில் ஆசிரியர் பாடம் எடுக்கும் போது இவன் எதாவது பேசிக் கொண்டிருப்பான் அல்லது எதாவது கிறுக்கிக் கொண்டிருப்பான். அவனுக்கு அருகில் இருந்த ராம்கி கையைப் பிடித்து அமுக்கி அமுக்கி அடக்குவான். நாங்கள் எப்பவும் போல் அவனுக்கு முன்னால் எங்க ஆட்டங்களைத் தொடர்ந்தோம். மதிய வேளைகளில் பாட்டுக் கச்சேரி தொடர்ந்து நடந்தது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் எங்கள் வகுப்பறையே அவனை குணமாக்குவதற்கு ஒத்துழைப்புக் கொடுத்தது. எந்தப் பெண்ணும் பச்சாதாபத்துடனோ... பயத்துடனோ பார்க்கவில்லை.

மாதங்கள் கரைய அவனிடம் கொஞ்சம் கொஞ்சமாக உளறலும் கிறுக்கலும் குறைந்து அமைதியாக இருக்க ஆரம்பித்தான். ஆறாவது செமஸ்டர் எழுதும் முன்னர் ஆள் முன்பிருந்த பிரான்சிஸ் ஆனான். எப்பவும் போல் ஜாலியாக இருக்க ஆரம்பித்தான்... பேச ஆரம்பித்தான்... ஐந்தாவது செமஸ்டரையும் ஆறாவதில் எழுதி முதல் வகுப்பில் தேறினான். 'நான் அப்படியே போயிருப்பேன்.. நீங்கதான்டா என்னைய மறுபடியும் நடமாட விட்டிருக்கீங்க'ன்னு எப்பவும் புலம்புவான். கல்லூரி முடிந்த கையோடு பெங்களூருக்கு அனுப்பப்பட்டான். பின்னர் யாருடனும் தொடர்பில் இல்லை.

சில வருடங்களுக்குப் பிறகு எங்களது கணிப்பொறி மையத்துக்கு யாரோ சொல்லி என்னைத் தேடி வந்தான். வந்ததும் பங்காளி என என்னைக் கட்டிக் கொண்டான். 'எப்படிடா இருக்கே? என்றவன் பழைய பிரான்சிஸாக இல்லாமல் ஆளே மாறியிருந்தான்.  'என்னடா... எங்க இருக்கே... ஆளே மாறிட்டே' என்றதும் 'வாழ்க்கையே மாறிப்போச்சுடா... எவ்வளவு சந்தோஷமா இருந்தோம்... எல்லாம் போச்சு... உங்களோட இருந்த அந்த மூணு வருசந்தாண்டா என்னோட வாழ்க்கையில சந்தோஷமான காலம்... அது திரும்பி வருமாடா' என்றான். 'ஏன்டா... என்னாச்சுடா... ?' என்றதும் 'எங்க வீட்டைப் பத்தித்தான் தெரியுமே? விடு... பாக்ஸ்புரோ சொல்லித்தாரியா... கொஞ்ச நாள் இங்க இருப்பேன்... தினமும் வாறேன்...' என்றான். சரிடா என்றதும் ரொம்ப நேரம் கல்லூரியில் பார்த்த பிரான்சிஸாக சிரித்து பேசினான். ப்சங்க பொண்ணுங்க என எல்லோரையும் விசாரித்தான். 

ஒரு வாரம்தான் வந்திருப்பான். ஒரு நாள் வந்தவன் 'இன்னைக்கு பெங்களூர் போறேன்' என்றான். 'என்னடா கொஞ்ச நாள் இருப்பேன்னு சொன்னே... அதுக்குள்ள எதுக்கு...' என்றேன். 'உனக்குத்தான் எங்க வீட்டைப் பத்தித் தெரியுமே... இங்க எனக்குச் சரிவராது... அங்கதான் என்னோட லைப்புன்னு ஆயிப்போச்சு... சரி விடு... அந்த மூணு வருசத்தை நினைத்து இன்னும் முப்பது வருசம் ஓட்டிடுவேன்... வாழ்க்கை மாறிடுச்சுடா... சந்தோஷம் எல்லாம் காற்றில் கரைந்துருச்சு... வாறேன்டா... ஞாபகத்துல வச்சிக்கோ' என்று சொல்லிக் கிளம்பினான். அதன் பின்னான நாட்களின் அவன் குறித்து எந்தத் தகவலும் எங்க நட்பு வட்டத்தில் இல்லை.

இன்றைய பொழுதில் பெங்களூரில் ஏதோ ஒரு இடத்தில் அன்பான மனைவி, அழகான குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருப்பான் என்று நம்புகிறேன். எங்கிருந்தாலும் அவன் வாழ்க்கையின் ஆரம்ப காலங்களில் கிடைக்காத சந்தோஷம் இறை அருளால் மனைவி மக்கள் வழியாகக் கிடைக்கட்டும்.

நண்பா நீ எங்கிருந்தாலும் நல்லாயிருப்பேடா....

-நண்பேன்டா தொடரும்
-'பரிவை' சே.குமார்.

11 எண்ணங்கள்:

Yarlpavanan சொன்னது…

நண்பன் கதை கூறி
பள்ளி வாழ்வு பகிர்ந்து
காலம் கடக்க வரும்
உளமாற்றம் உண்மை நட்பு சொல்லும்
சிறந்த பதிவு!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

நட்பின் ஆழத்தை உணர்த்தும் அருமையான பதிவு.
நான் விரும்பிப் படிக்கும் பதிவுகளில் நண்பேன்டா வும் ஒன்று. கண்கலங்க வைத்து விட்டீர்கள்.

வலைசரத்தில் என்னை அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

எப்படிப்பட்ட ஒரு நட்பு! மன நிலை பிறழ்ந்த நண்பனை உங்கள் நட்பு வட்டம் இயல்பு நிலைக்குக் கொண்டுவந்தது மிகவும் பாராட்டிற்குரியது! இன்றைய நண்பேண்டா மிகவும் அருமையான ஒருபதிவு! உங்கள் நண்பர் எங்கிருந்தாலும் சிறப்பாக வாழவும், உங்களை மீண்டும் தொடர்புகொள்ளவும் எங்கள் பிரார்த்தனைகள்! உலகம் சிறியதுதான்! தொடர்பு கொள்வார்!

”தளிர் சுரேஷ்” சொன்னது…

நட்பின் சிறப்பை உணர்த்தும் நல்லதொரு பதிவு! வாழ்த்துக்கள்!

ஸ்ரீராம். சொன்னது…

நெகிழ்வு.

வருண் சொன்னது…

என்ன காரணம்னு தெரியவில்லை. (அறிவியல் நிச்சயம் விளக்க்கத்தான் செய்யும்) ஒரு சிலருக்கு இப்படி மனநிலை பாதிக்கப்ப்ட்டுவிடுகிறது. இதில் ஆண் பெண் என்ற பேதம் இல்லை.

ஒரு சிலர் இதிலிருந்து குறைந்த நாளில் வெளியே வந்து விடுகிறார்கள். ஒரு சிலர் வருவதில்லை. ஒரு சிலர் நல்லாகி, மறுபடியும் மனநிலை பாதிக்கப் பட்டுவிடுகிறார்கள்.

பயம், ஏமாற்றம் போன்றவைகள்தான் காரணம். கடவுள் பக்தி, தெய்வ நம்பிக்கை போன்றவை ஒரு சிலருக்கு இதுபோல் ஆகாமல் உதவுகிறது என்பதை மறுக்க முடியாது. தெய்வ நம்பிக்கை உள்ளவர்களும் ஒரு சிலர் இப்படி பாதிக்கப் படுறாங்க..இறைவன் கைவிட்டுவிடுவதும் உண்டு..:)

எனக்குத் தெரிய சிலர் இதுபோல் இருக்காங்க..பெற்றவர்கள்தான் பாவம். இதையெல்லாம் சமாளிக்க அவர்களுக்கு வழி தெரிவதில்லை! சமீபத்தில் மனநிலை மௌத்துவத்தில் அவர்களுக்கு தன்னை மறக்கும் மருந்தை (ட்ரக்ஸ்)கொடுத்து எந்நேரமும் சந்தோஷத்தில் ஆழ்த்தி அல்லது தூங்க வைத்து சமாளிக்கிறார்கள்..

நம் வாழ்வில் நல்லா புத்தி சுவாதீனம் உள்ள நண்பனையே ஒரு விசயத்தைச் சொல்லி திருத்துவது கஷ்டம். மனநிலை சரி இல்லாமல் போச்சுனா கேக்கவே வேண்டாம்!

தனிமரம் சொன்னது…

மனசு நெருடுகின்றது நட்பினை படித்து.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மனதைத் தொட்ட நட்பு......

ஊமைக்கனவுகள் சொன்னது…

கதவடைத்துக் கடந்த நட்பின் வாசல்களில் இன்னும் தட்டிக்கொண்டிருக்கும் நண்பர்களின் ஞாபகங்களை மனக்கண்முன் கொண்டு வந்து நிறுத்திவிட்டது அய்யா உங்கள் பதிவு.
எழுத்தின் வெற்றிக்கு வேறென்ன வேண்டும்?
நன்றி.

கார்த்திக் சரவணன் சொன்னது…

பழைய நினைவுகள் இனிமையானவை....

கோமதி அரசு சொன்னது…

நட்பு பதிவு மனம் நெகிழ வைத்து விட்டது குமார்.
அடிக்கடி ஊர்களுக்கு போய் விடுவதால் விட்டு போன பதிவுகளை வந்து படிக்கிறேன்.

நட்பு வாழ்க!