மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 3 அக்டோபர், 2014கிராமத்து நினைவுகள் : டீசல் மோட்டாரும் பாரின் சோப்பும்

கிராமத்து நினைவுகள் என்றாலே அதில் அதிகம் லயிக்க வைக்கும் நினைவாக வருவது விவசாயக் காலம்தான்... ஊரைச் சுற்றிலும் உள்ள வயல்கள் எல்லாம் பச்சைப் பசேல் என்று காட்சியளிக்க, வாய்க்காலில் பாய்ந்தோடும் நீரும், அதிலே கொஞ்சி விளையாடும் அருகம்புல்லும் முள்ளிப் பூவுமாக அத்தனை அழகாகக் காட்சியளிக்கும் காலம் விவசாயக் காலம்தான்... மண்வெட்டி சுமந்த மனிதர்கள் வரப்புக்களில் திரிய வீசும் காற்றுக் கூட சுகமானதாய் இருக்கும்.

லேசான மழை ஆரம்பிக்கும் போதே கொழுஞ்சி மற்றும் கருவைச்செடி பிடுங்குவதில் இருந்தே வயல் வேலை ஆரம்பித்துவிடும். இப்போ விவசாயம் பற்றியோ கதிர் அறுப்பு பற்றியோ பார்க்கப் போவதில்லை. கண்மாய் நீரும் அதைப் பாய்ச்சுவது பற்றி நினைவலைகளைத்தான் மீட்கப் போகிறேன். ஏனென்றால் விவசாயம் குறித்து கிராமத்து நினைவுகளில் ஏற்கனவே பகிர்ந்தாச்சு.

கண்மாயில் தண்ணீர் நிரம்பும் போது கண்மாய்க்குள் இருக்கும் சின்ன முட்டு பெரிய முட்டு என்ற இரண்டு மேடான பகுதிகளை வைத்து விளைச்சல் எப்படி இருக்கும் என்பதைக் கணித்து விடுவார்கள்.  மழை பொய்த்து சின்ன முட்டு மட்டுமே முழ்கி இருந்தால் தண்ணி இழுபறியாகத்தான் வரும். கடையில் ஒரு தண்ணி ரெண்டு தண்ணிப் பாடு வரும்ப்பா... இடையில ஒரு மழை பேஞ்சா நல்லாயிருக்கும் என்று சொல்வார்கள். அதே சமயம் பெரிய முட்டு நிறைந்தால் விவசாயத்துக்கு தண்ணிப் பிரச்சினை வராதுப்பா என்பார்கள். அதிலும் குறிப்பாக எங்கள் கண்மாய்க்குள் கரையை ஒட்டி இருக்கும் முனியய்யா கோவிலைச் சுற்றி நீர் வந்து விட்டால் விவசாயத்துக்குப் போக தண்ணி கெடக்கும்ப்பா என்று சொல்வார்கள்.

ஆரம்பத்தில் மடை திறந்து தண்ணீர் பாய்ச்சுவார்கள். பின்னர் தண்ணீர் ஏறிப் பாயாது என்பதால் எறவா மரம் (இறவை மரம்) கட்டி இறைத்துத் தண்ணீர் பாய்ச்சுவார்கள். ஒன்றிலிருந்து 110 வரை பாடலாகப் பாடுவார்கள். அதை ஒரு மாத்து எண்பார்கள் ஒரு வரிக்கு இரண்டு மரம் ஊற்றுவார்கள். கடைசி நேரத்தில் தண்ணீர் இறைப்பது போல் வந்தால் ஆயில் மோட்டார் கொண்டு வந்து மணிக்கு இவ்வளவு என பணம் வாங்கிக் கொண்டு வயலுக்குத் தண்ணீர் விடுவார்கள்.

எப்பவும் கம்மாயில் மணிக்கணக்கில் நீந்திக் கிடக்கும் எங்களுக்கு கண்மாய்க் குளியல் அலுப்பதே இல்லை. காலையில் பள்ளி செல்லும் முன்னர் ஒரு குழுவாக கண்மாய்க்குச் சென்று ஆட்டம் போட்டு குளித்து வருவதில் எல்லோருக்கும் அலாதிப் பிரியம். அதிலும் மாட்டைக் கொண்டு போய் நீச்சிக் குளியாட்டி முனியய்யா கோவில் குங்குமம் எடுத்து அழகாக அதன் நெற்றி, திமில், வயிறு, தொடைப்பகுதி, கால், வால் என எல்லாப் பக்கமும் வைத்து நாமும் குளித்து வரும்போது கிடைக்கும் சந்தோஷத்துக்கு அளவே இல்லை.

இப்பத்தான் நம்ம தலைப்புக்கே வாறோம்... அப்படி மோட்டாரில் தண்ணீர் அடிக்கும் போது குழாய் வழியாக சீறிப்பாயும் தண்ணீரில் குளிக்க யாருக்குத்தான் ஆசை இருக்காது. அப்படித்தன் ஒரு நாள் ஊரில் மோட்டார் வைத்து தண்ணீர் எடுத்தார்கள். வாங்கடா மோட்டாரில் குளித்து விட்டு வரலாம் என்று கிளம்ப நானும் குதூகலமாக கிளம்பினேன். ஊரில் இருந்து அண்ணன் கொடுத்து விட்ட பாரின் சோப்பை அம்மாவிடம் சண்டை போட்டு வாங்கி பேப்பரைப் பிரித்து மோந்து பார்த்து சோப்பு டப்பாவில் வைத்து எடுத்துச் சென்றேன்.

'அடேய்... இது ஊருச் சோப்புடா அங்க எதுக்கு கொண்டு போறே... அடிபைப்புல குளிக்கும் போது போடலாம்... இப்ப பழைய சோப்பை எடுத்துக்கிட்டு போடான்னு' அப்போதே அம்மா கத்தினார். ஆனால் நாம யாரு அதெல்லாம் சட்டை செய்யவே இல்லை.தம்பி கூட உனக்கு எதுக்கு இந்த வேலை... பழைய சோப்பு போட மாட்டீகளோன்னு கொஞ்சமாக ஏத்திவிட்டான். இருந்தும் நாம பாரின் சோப்பு போட்டு குளிச்சா சும்மா மனமா இருக்குமுல்லன்னு தைரியமா புடிச்ச முயலுக்கு மூணுகால்தான்னு கெட்டியா நின்னு  'போம்மா... அங்கிட்டு...' என்று கத்திவிட்டு போயாச்சு. 

வேகமாக வருகிற தண்ணீரில் இறங்கி தலையை நனைத்ததும் குற்றால அருவித் தண்ணி தலையில விழுந்த மாதிரி தலையெல்லாம் சும்மா பஞ்சாய்ப் பறக்க, தண்ணிக்கு வெளியே வந்து சோப்பை எடுத்துப் போட்டுட்டு டப்பாவுல வச்சிட்டுப் போயிருக்கலாம். ஆனா தண்ணியில குளிக்கிற சந்தோஷத்துலயும் எல்லோரும் ஆட்டம் போடுறாங்களேங்கிற மிதப்புலயும் குளிச்சிக்கிட்டே சோப்பை எடுத்தா தண்ணி விழுகிற வேகத்துல கையில இருந்து நழுவி கீழ விழுந்திருச்சு. 

அய்யோ அம்மா கொல்லப் போறாங்களேன்னு கீழ உக்காந்து தேடுனா எங்க கிடைக்கிறது தண்ணீர் விழுந்த வேகத்தில் மடை வழியாக வெளியாகி வாய்க்காலில் ஒடி வயலுக்குப் போய் கொண்டிருக்கிறது. எல்லாப் பக்கமும் தேடி கண்டு பிடிக்க முடியவில்லை. இன்னைக்கு வீட்டுல நமக்கு செமப் பூஜை இருக்குன்னு வீட்டுக்குப் போக யோசிச்சு மெதுவாப் போனேன்.

என்னைப் பார்த்ததும் 'என்னடா பம்மிப் பம்மி வாறே?' என்று அம்மா கேட்டார். 'ஒண்ணுமில்லையே' என சோப்பு டப்பாவை ஜன்னலில் வைக்க, 'என்னப்பா ஆசை தீர தேய்ச்சுக் குளிச்சிட்டியா?' என்று கேட்க பதில் சொல்லாமல் உள்ளே நுழைந்தேன். 'குளிச்சானா... அதை தொலச்சிட்டான்' நம்ம தம்பி நல்ல வேலை பார்த்தான். 'என்னது போச்சா... அவன் வாங்கிக் கொடுத்து விட்டு ஒரு நா ஒரு பொழுது போட்டுக் குளிக்கல... அந்தப் புள்ள (அக்கா) கேட்டதுக்கு கூட நா கொடுக்கலை... எருமை... எருமை... போகும் போதே சொன்னேனே கேட்டியா...' என்று திட்ட ஆரம்பித்தார்.

சரி திட்டத்தானே செய்கிறார் என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் தவறு... விழுந்துச்சு பாருங்க அடி... உங்க அடி எங்க அடி இல்லை... கையில என்ன கெடசசாலும் அது நம்மளை முத்தம் கொஞ்ச ஆரம்பித்தது. விளக்குமாறெல்லாம் வெளக்கமா பேசிச்சி... அப்புறம் அக்காதான் ஏதோ மனசு வந்து 'அம்மா விடும்மா... தொலச்சிட்டு வந்துட்டான் இனி என்ன பண்றது... அடிச்சி வரப்போகுதா... ' என்று அவரை சமாதானமாக்கி என்னை சாப்பிடச் சொல்லி பள்ளிக்கு அனுப்பினார்.

அதன் பிறகு ஊர்ச் சோப்பாவது ஒண்ணாவது சோப்பு போடாமலே ஆட்டம் போட்டுட்டு வந்துடுறது... எதுக்கு வம்புன்னு அம்மாக்கிட்ட ஊர்ச் சோப்பு இருந்தாக்கூட கேக்குறதில்லை. எங்க வீட்டைப் பொறுத்தவரை அப்பா அடிக்க மாட்டார். மேலும் எங்களுடன் அவர் பெரும்பாலும் இருப்பதில்லை. வேலையின் காரணமாக வெளியூரில்தான் இருப்பார். எங்களை வளர்த்து படிக்க வைக்க அலைந்து திரிந்தது எல்லாம் எங்க அம்மாதான். எங்க அம்மாவின் அதட்டலுக்கு எல்லோருக்குமே ஒரு ஆட்டம் கொடுக்கும். 

நானும் தம்பியும் கூட அம்மாவின் அடியில் இருந்து தப்பி விடுவோம். ஆனா அண்ணன்களும் அக்காக்களும் வாங்காத அடியா... பெரிய அண்ணன் வேலைக்குப் போன பிறகு பண்டிகை நாட்களில் ஊருக்கு வந்தால் யார் வீட்டுக்காவது பேசிக்கொண்டிருக்க போய் விடுவார். வீட்டுக்கு வர லேட்டானால் எங்கடா அவன்? இப்ப அங்க போயி பேசணுமான்னு கேட்டு 'டேய் கண்ணா' அப்படின்னு குரல் கொடுத்தா 'இந்தா வந்துட்டேம்மா' அப்படின்னு அடுத்த செகெண்ட் வீட்டுல இருப்பார். அம்புட்டுப் பயம் அம்மாவுக்கு.... இருந்தாலும் அம்மாவின் பாசத்துக்கு நிகர் ஏது..? 

இப்போ போன் அடித்ததும் 'யாருப்பா... குமாரா... அவனுக (சின்ன அண்ணன், தம்பி) பேசுறது நல்லாக் கேக்குது நீ பேசுறது ஒழுங்காக் கேக்காது... நல்லாயிருக்கியா... சாப்பிட்டியா' என்று அந்த வாஞ்சையான குரலைக் கேட்டதும் சோப்பைத் தொலைத்து.., மாட்டை விட்டு விட்டு தேடி,.. அக்கா தம்பியுடன் சண்டை போட்டு.., மாடு குளிப்பாட்ட முடியாதுன்னு சொல்லி... நெல் அவிக்க குதிருக்குள் எறங்கி நெல் அள்ள மறுத்து,.. நெல் அவிக்க முள் அள்ள மறுத்து,.. நெல் அரைக்கப் போக மறுத்து... இப்படி நிறைய விஷயங்களுக்கெல்லாம் வாங்கிய அடிகள்  மறந்து போகத்தானே செய்கிறது.

ம்... சொல்ல மறந்துட்டேனே... மார்கழி மாதக் குளிரில் அல்லது மழை சோவெனப் போயும் போது கண்மாய்க்குள் இறங்கிக் குளித்துப் பார்த்திருக்கிறீர்களா? மேலே ஜில்லென்றும் அடியில் இளம் சூட்டோடும் இருக்கும் தண்ணீரில் குளிப்பதே ஒரு அலாதி சுகம்தான்... இப்போதெல்லாம் கண்மாயில் நிறையும் தண்ணீரில் பாசி பிடித்துக் கொள்ள அதில் குளிப்பதே ஊரில் இருப்பர்களுக்கே அரிதாகி விட்டது, மேலும் விவசாயம் இல்லாததால் மோட்டார் வைக்கும் நிலையும் இல்லை... என்னைப் போல் சோப்பைத் தொலைக்க அப்படி ஒரு பயலுக கூட்டமும் இல்லை... எல்லாம் மாறிவிட்டது... நானும் இப்போ எல்லாத்தையும் இழந்து விட்டேன்... பசுமை இழந்த எங்கள் ஊர் வயல்களைப் போல.... 

கிராமத்து நினைவுகள் தொடரும்
-'பரிவை' சே.குமார்.

11 கருத்துகள்:

 1. இனிமையான நினைவுகளை அழகாகக் பதிவு செய்திருக்கிறீர்கள். எப்போது நினைத்தாலும் மகிழ்ச்சி தருபவை அவை
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. என் அனுபவம்.........டீசல் மோட்டாரும் ஷாம்பு பாக்கெட்டும் (அப்போதுதான் அறிமுகம்)

  பதிலளிநீக்கு

 3. சின்ன முட்டு-பெரிய முட்டு - இப்படி எல்லாம் இருக்கா!

  கண்மாயில் குளித்ததில்லை. ஆனால் மோட்டார் பம்பில் குளித்திருக்கிறேன். மதுரை அருகே சக்குடி என்ற கிராமத்தில்!

  பதிலளிநீக்கு

 4. கிராமத்திற்க்கே போனது போன்ற உணர்வு அருமை நண்பரே,,,

  பதிலளிநீக்கு
 5. பெரிய கேணி ஒன்றில் குதித்து,நீச்சல் தெரியாமல் நான் போராட நண்பன் உடனே என் தலைமுடியைப் பிடித்து இழுத்து காப்பாற்றிய சம்பவத்தை நினைவுக்கு கொண்டு வந்தது உங்கள் பதிவு !
  த ம 4

  பதிலளிநீக்கு
 6. கிராமத்து நினைவுகள். சிறு வயதில் அம்மாவின் கிராமத்தில் இப்படி பம்பு செட் குளியல் அனுபவ்முண்டு..... அருமையான அனுபவம் அது....

  பதிலளிநீக்கு
 7. கிராமத்து நினைவுகள் ஒரு தனி அழகு
  சிறந்த பதிவு
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 8. மனதில் பசுமையான நினைவுகள் அப்பிக்கொண்டன அண்ணா!

  பதிலளிநீக்கு
 9. மார்கழி மாதக் குளிரில் அல்லது மழை சோவெனப் போயும் போது கண்மாய்க்குள் இறங்கிக் குளித்துப் பார்த்திருக்கிறீர்களா? மேலே ஜில்லென்றும் அடியில் இளம் சூட்டோடும் இருக்கும் தண்ணீரில் குளிப்பதே ஒரு அலாதி சுகம்தான்...//

  என்னய்யா இப்படி ஒரேபோடா கிராமத்து நினைவுகளை போட்டுத் தாக்கிட்டீங்களே! இதெல்லாம் இல்லாமலா......எங்கள் இருவருக்குமே நீங்கள் சொல்லியிருக்கும் அனுபவங்கள் நிறைய உண்டு. அழகிய விவரணம்

  பதிலளிநீக்கு
 10. நினைவலைகள் என்றுமே இனிமையானவை
  அருமை
  தம +1

  பதிலளிநீக்கு
 11. பஸ்ஸில், ரயிலில் போகும் போது குழந்தைகள் , பெரியவர்கள் எல்லாம் மோட்டார் தண்ணீரில் ஆனந்தமாய் குதித்து விளையாடி குளிப்பதை பார்த்து இருக்கிறேன்.

  இளமைக்கால நினைவுகள் அருமை.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...