மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 17 அக்டோபர், 2014வட்டார வழக்கில் பேசுவது தவறா?

நாம் அனைவரும் தமிழ் பேசுகிறோம் என்றாலும் மாவட்டத்துக்கு மாவட்டம் நமது பேச்சு வழக்கில் மாற்றம் இருக்கும். ஒருவர் பேசுவதை வைத்தே அவர் எந்த மாவட்டத்துக்காரர் என்பதை சுலபமாகக் கண்டு பிடித்து விடலாம். இன்றைய காலகட்டத்தில் வட்டார வழக்கு என்பது கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து பொதுத் தமிழ் ஆக்கிரமிக்க ஆரம்பித்து விட்டது என்பதே உண்மை.

வட்டார வழக்கில் பேசுவதை விஜய் தொலைக்காட்சியின் நீயா நானாவில் கோபிநாத் கையில் எடுத்து ஒரு அருமையான விவாதத்தை நடத்தியிருக்கிறார். சில தினங்களுக்கு முன்னர் அழகிய தமிழில் பேசியதற்கு வாழ்த்துக்கள் என வீரலெட்சுமி என்ற பெண்ணின் பேச்சில் இருந்து சிலவற்றை வீடியோவாக முகநூலில் நண்பர்கள் பகிர்ந்திருந்தார்கள். பார்த்ததும் அந்தப் பேச்சு அப்படியே இழுக்க முழுப் பகுதியையும் தேடி எடுத்துப் பார்த்தேன்.

வட்டார வழக்கில் பேசுபவர்கள் மற்றும் பேசாதவர்கள் என இரண்டு பிரிவுகளின் இடையே விவாதம் இதில் வட்டார வழக்கில் பேசுவதை கேவலமாகவும் எதோ ஒரு கொலை பாதகச் செயலாகவும் நினைப்பது வட்டார வழக்கில் பேசாதவர்கள் பேச்சிலேயே தெரிந்தது. நாம் வேலை பார்க்கும் சூழலில் வட்டாரத் தமிழ் பேசினால் அவர்களுக்கு புரிதலில் சிரமம் இருக்கும் என்றால் பொதுவான தமிழில் பேசத்தான் வேண்டும். நான் வட்டார வழக்குத்தான் பேசுவேன் என்ற அடமெல்லாம் பண்ண வேண்டியதில்லைதான். ஆனால் இவர்கள் வீட்டில் கூட வட்டார வழக்கு பேசக்கூடாது என்று சொன்னார்கள். வட்டார வழக்கு என்பது ஏதோ அந்நிய மொழி என்பது போல் இருந்தது இவர்களின் விவாதம்.

வட்டார வழக்கு எனக்கு வேண்டாம் என கணவனும், வட்டார வழக்கு வேண்டும் என மனைவியும் பேச வந்திருந்தார்கள். இதில் மனைவி வட்டார வழக்கில் பேசுவது தனக்கு மானக்கேடு போலவும் இந்த வார்த்தையை இப்படித்தான் பேச வேண்டும் என வகுப்பெடுப்பது போலவும் பேசிய கணவனின் ஆணாதிக்க உணர்வு அப்பட்டமாகத் தெரிந்தது. ஆசிரியையாக வேலை பார்க்கும் மனைவியோ சிலவற்றை ஏற்பது போலப் பேசினாலும் எனக்கு அதுதான் பேச வருகிறது என்றும் ஒரு முறை செமினார் சென்ற போது அங்கிருந்த ஆசிரியர்களை அக்கோவ் என்று கூப்பிட அனைவருக்கும் அது மிகப் பிடித்திருந்தது என்றும் சொன்னார். ஆனால் கணவருக்கு அது வேப்பங்காயாகத்தான் இருந்தது. பொதுவெளியில் இவ்வளவு பேசும் இந்த மனிதன் வீட்டில் அந்த மனுசியை என்ன பாடு படுத்துவான்.

அடுத்து என்னைக் கவர்ந்தவர் ஆறாவயல் பெரியய்யா என்ற பெரியவர், நம்ம பக்கத்துக்காரர்... நாங்க சொல்ற ஆத்தா, பெருகுவோம், கொட்டகை, காவனம் என எல்லாத்தையும் பற்றி விவரமாகப் பேசினார். அம்மா என்பது (மக்களின் முதல்வர் அம்மா இல்லைங்கோ) இடையில் வந்த சொல்தான்.... புராணங்களிலும் சங்க இலக்கியங்களிலும் ஆயி, ஆத்தா, தாய் என்றுதான் இருக்கிறது என்றும் சொன்னார். இதை எதிரணியில் ஒரு பெரியவர் ஆமோதித்தார்.

முன்னர் ஒரு முறை நீயா நானாவில் மாடர்ன் பெண்களையும் கிராமத்துப் பெண்களையும் வைத்து நடத்திய ஒரு நிகழ்ச்சியில் சும்மா வட்டார வழக்கில் கலந்து கட்டி ஆடிய வைரமுத்து என்ற கோட்டையூர் (சிவகங்கை மாவட்டம்) பெண்ணை ஞாபகப்படுத்திய பட்டுக்கோட்டை வீரலெட்சுமி, 'அக்கா மனசாட்சியோடு பேசுக்கா' என்று சும்மா பட்டையக் கிளப்பிருச்சு... அதோட பேச்சு வழக்கு அதுக்கு சரளமா வருது... 

நான் இப்படித்தான்... என்னை எதுக்கு நான் மாத்திக்கணும், ஏதோ ஒரு மொழிய கத்துக்கிற நீ நான் பேசுற தமிழ் புரியலைன்னா அர்த்தம் கேளு சொல்லித்தாறேன் அதைக் கத்துக்க என்று வெள்ளந்தியாகப் பேசினார். வெண்டிக்காய், சோறு, காக்காய் இப்படித்தான் பேசுவேன் என்றார். சோற்றுக்கு இப்ப என்ன சொல்றாங்க என கோபிநாத் கேட்க, சாதமாம் சார், அதிலும் ஒயிட் ரைஸ், அது வெள்ளையாத்தானே இருக்கு அப்புறம் என்ன ஒயிட்டு என்று சொல்லி கைதட்டலை அள்ளினார். காகம் பிடிக்கிறாய்ன்னு சொல்றதில்லையே காக்காய் பிடிக்கிறேன்னுதானே சொல்றேன் என்ற விவாதங்களில் எல்லாம் சும்மா புகுந்து விளையாடி பரிசையும் தட்டிச் சென்றார்.

நானெல்லாம் கிராமத்தான்தான்... நமக்கு பொதுத் தமிழில் எல்லாம் பேச வராது. நம்ம பக்கத்துப் பேச்சுத்தான் இப்போதும்... அப்படிப் பேசுவதில் கிடைக்கும் சந்தோஷம் ஒரு வட்டத்துக்குள் வார்த்தைகளை வைத்துப் பேசுவதில் கிடைப்பதில்லை. இப்போதும் யார் போன் செய்தாலும் சும்மா இருக்கிகளான்னுதான் வருதே தவிர நல்லாயிருக்கீகளான்னு வரலை. அதேபோல எனது எழுத்திலும் வட்டார வழக்குக்குத்தான் முக்கியத்துவம் இருக்கும்... எழுதும்போது அப்படித்தான் வருது. ஒருமுறை ஒரு நண்பர் கூட உங்க கதைகளில் வரும் வார்த்தைகள் வட்டார வழக்கில் வருது அதை மாற்றி எழுதுங்கன்னு சொன்னார். எனக்கென்னவோ நம்ம மண்ணின் மக்களை கதை மாந்தராக்கும் போது கோவணத்துடன் உழுபவன் கோட்டுப் போட்டவன் போல் பேசினால் நல்லாவா இருக்கும் என நினைத்து சிரிப்பையே பதிலாக்கிவிட்டேன். எனவே வட்டார வழக்கில் பேசியவர்களின் பேச்சுத்தான் நமக்கு ரொம்பப் பிடித்தது.

நீங்களும் கேட்டுப் பாருங்கள்... வட்டார வழக்கில் இருக்கும் ஒருவித ஈர்ப்பு பொதுவான தமிழில் இல்லை என்பதை உணருவீர்கள்.

இணைப்பு  : http://www.youtube.com/watch?v=Y9j3C4x-y7c
-'பரிவை' சே.குமார்.

17 கருத்துகள்:

 1. அடிப்படையில் நான் தஞ்சாவூர்ப் பக்கம் என்றாலும், மதுரையில் அதிக காலம் வசித்தவன். இப்போது சென்னையில். என் பேச்சில் எந்த வட்டார வழக்கும் இருக்காது! என் நண்பனொருவன் இருக்கிறான். அவன் பேசும்போதே மதுரைக் காரன் என்று கண்டு பிடித்து விடலாம்!

  பதிலளிநீக்கு
 2. நியாயமான எண்ணங்கள்..
  வாழ்க நலம்!..

  பதிலளிநீக்கு
 3. வட்டார வழக்கில் பேசுவதும் சுகம், கேட்பதும் சுகம் அதில் ஒரு விதமான பிடிப்பு ஏற்படும். நம்ம மக்கள் என்கிற உணர்வு தானாகவே வந்து விடும். மனதுக்குமொரு ஆறுதல் இருக்கும். ஒரு வார்த்தையை எப்படி வேறு வேறு இடத்தில் சொல்கிறார்கள் என தமிழின் நிறைய வார்த்தைகளையும் அறிந்து கொள்ள முடியும். பக்கத்து ஊர் நண்பரே.நன்றி.

  பதிலளிநீக்கு
 4. நல்ல பதிவு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு

 5. வட்டார வழக்கில் பேசுவது தவறா?
  இதில் தவறேதும் இல்லை.
  படைப்பு என்பது
  இயல்பு வாழ்வைப் படம் பிடித்து
  வெளிப்படுத்துவதே!
  அப்படியாயின்
  கதைப்புலம் அமைந்த ஊர்ப் பேச்சு வழக்கு
  இயல்பாகவே வந்தமையும் - அதனை
  மாற்ற எண்ணினால் சுவையிருக்காது!

  பதிலளிநீக்கு
 6. மக்கள் இடம்பெயரத் தொடங்கிய பின்னர் பல்வேறு வட்டார வழக்குகள் ஒன்றோடு ஒன்று கலந்து வருகின்றன. ஆனால் ஒரு குறிபிட்ட வட்டார வழக்கை அது சார்ந்த இடத்துக்கு வெளியே பேசுவது சரியல்ல, காரணம் கேட்போருக்கு அது புரியவே புரியாது. அதே போல வட்டார வழக்குகளில் எழுதும் போது கொச்சையாக எழுதவும் கூடாது, வட்டார வழக்குகளில் எண்ணற்ற சொற்கள் இடம்பெற்றுள்ளன, அவற்றை இணைத்து பொதுத் தமிழில் எழுதலாம், பேசலாம். உதா. நான் சென்னையில் பிறந்து வளர்ந்தவன். எனது பெற்றோர்கள் சிவகங்கையில் வாழ்ந்தவர்கள், அவர்களது பெற்றோர்கள் இலங்கையில் வாழ்ந்தவர்கள், அதே போல நான் சென்னையில் வசித்த பகுதியில் பலரும் திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாடு, மதுரையைச் சேர்ந்தோர் ஆகையால் எனது பேச்சில் எல்லா வட்டாரங்களில் வழக்குச் சொற்களும் கலந்து வரும். சில சமயம் மலையாளச் சொற்கள் ஒன்றிரண்டைக் கூட இணைத்துப் பேசுவேன். மலையாளமும் ஒருவகையில் தமிழின் வட்டார மொழி போன்றதே.

  இவ்வாறான கலவைகள் இன்று மாநகரங்களில் காணப்படுகின்றன. ஒரே மொழி, ஒத்த மொழி, சொல்லோசை பாதிக்காத பிற மொழிச் சொற்களை கலந்து பேசுவதில் தவறில்லை. வட்டார வழக்கை அப்படியே கைவிட்டு விட்டு எதோ ஒரு பொது மொழியை ஏற்பதும் பிழை, அதனால் வட்டார வழக்குகளில் காணப்படும் தனித்துவம், சொற்கள், பழஞ்சொல்கள், அறிவுத் தகவல்கள் எல்லாம் அழிந்து போய்விடும். ஒரு மொழியை ஆவணம் செய்து புத்தகங்களில், குறுந்தகடுகளில், இணையத்தில் பதிவதால் மொழி வாழாது. அந்த மொழியை பேச வேண்டும், முன்னோர் உண்டாக்கிய சொற்களையும், வழிமுறைகளையும் பின்பற்றி பேச வேண்டும். இன்று வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் குடியேறது வீட்டுப் பிள்ளைகளுக்கு தமிழ் சுத்தமாக வருவதில்லை. பெருநகரங்களிலேயே கூட தமிழ் வாசிக்கவும், எழுதவும் பலரும் இடறுகின்றனர். பலரும் கூட ஆங்கிலத்தைக் கலக்காமல் தமிழில் ஒரு நாள் கூட பேசுவார்களா என்பது ஐயமே.

  தமிழர்களாகிய நாம் வாரத்தில் ஒரு நாளாவது ஆங்கிலம் கலக்காமல் பள்ளி, கல்லூரிகள் போன்றவற்றில் தமிழ் பேச முயலலாம். பெற்றோர்கள் கூட தமது வட்டார வழக்கு மொழிச் சொற்களை வீடுகளில் பேசுவதன் மூலம் அச் சொல் அழியாமல் காக்கப்படும்.

  பதிலளிநீக்கு
 7. வட்டார வழக்கினில் பேசுவதும் கேட்பதுவும் சுகமே

  பதிலளிநீக்கு
 8. எங்கள் ஊர் திருநெல்வேலி, அப்பா ஊர் ஊராக மாற்றல் ஆகி போனதால் எனக்கு வட்டார பேச்சுகள் அவ்வளவாக வராது. என் உறவினர்கள் ஊரிலிருந்து வரும் போது என் அம்மா பேசும் போது வியந்து போய் பார்ப்போம் நாங்கள் எல்லோரும்.
  அதில் இழையோடும் பாசமும் நேசமும் வேறு பேச்சில் வராது தான்.
  காணொளியை கேட்டுவிட்டு பின்பு வருகிறேன் .

  பதிலளிநீக்கு
 9. நான் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி.எங்க ஊர் பக்கம் குழம்பு என்று சொல்ல மாட்டார்கள்.ஆணம் என்பார்கள்.ஆண ம் என்பது தமிழ் வார்த்தை.வட்டார வழக்கில் பேசுவதை கேவலமாக நினைக்கும் மனிதர்களும் இருக்கிறார்களே?

  பதிலளிநீக்கு
 10. வட்டார வழக்கில் பேசுவதில் என்ன தவறு. நமது பேச்சு அடுத்தவர்களை புண்படுத்தாத வரை எந்த வழக்கில் பேசினாலும் தவறில்லை!

  காணொளி - ஒன்றரை மணி நேரம் எடுக்கும் போல! :) பிறிதொரு சமயத்தில் காண்கிறேன்.

  பதிலளிநீக்கு
 11. நல்ல பதிவு. சுவாரசியமான காணொளி.

  பதிலளிநீக்கு
 12. வணக்கம்
  அண்ணா.
  உண்மைதான் அந்த பேச்சுக்கு ஒரு வித்தியாசம் உள்ளது... ஒரு வித இரசனைத்தான்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 13. வட்டார வழக்கில் பேசுவதில் தவறில்லை! சிறப்பான பகிர்வு! நன்றி!

  பதிலளிநீக்கு
 14. அழகான நல்ல ஒரு பதிவுப் பகிர்வு! வட்டாரவழக்கில் பேசுவதில் தவறு ஏதும் இல்லை! பார்க்கப்போனால் அதில் ஒரு சுகம் உண்டு. நீங்கள் சொல்லியிருப்பது போல் வேண்டிய இடத்தில் மட்டும் பொதுவான தமிழ் வார்த்தைகளில் பேசலாம்....

  எங்கள் பேச்சில்,திருநெல்வேலி, நாகர்கோவில், மதுரை கேரளா/பாலக்காடு, தமிழ் + மலையாளம் வார்த்தைகள் கலந்து கட்டி வரும்.

  காணொளி சிறிதுதான் பார்க்க முடிந்தது....நெட் பிரச்சினைதான்...பார்க்கின்றோம்....

  பதிலளிநீக்கு
 15. வட்டார வழக்கு என்பது இயல்பு...
  பொதுத்தமிழில் பேசுவது ஏற்பை வேண்டி செய்யும் ஒன்றுதான். நெருங்கி பழகிவிட்டால் நாம் வட்டார வழக்கில்தானே பேசுவோம் !
  ஒரு அறிவியல் செய்தி...

  பதிலளிநீக்கு
 16. வட்டார வழக்குகளில் பல அருமையான தமிழ் சொற்களும் வாழ்ந்து வருகின்றன. அழகான பகிர்தலுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...