மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 7 அக்டோபர், 2014நண்பேன்டா : சாமி (அ) லட்சுமிகுமார்


ண்பேன்டா பதிவில் மறக்க நினைக்காத நட்புக்களைப் பற்றி கொஞ்சமாய் பதிந்து வைக்க ஆரம்பித்து இதுவரை பல நண்பர்களைப் பற்றி இங்கு பகிர்ந்து வைத்திருக்கிறேன். அந்த வகையில் இன்று எனது மதிப்பிற்குரிய நண்பர் லட்சுமிகுமார் அவர்களைப் பற்றி கொஞ்சம் மலரும் நினைவுகள்.

புதுக்கோட்டைக்காரரான இவரை எனக்கு இறைவன் அறிமுகப்படுத்தியது எம்.சி.ஏ.யில்தான். தலையில் முன்பக்கம் எல்லாம் முடியை மழித்து சின்னதாக ஒரு குடுமி, நெற்றியில் அழகாகப் போடப்பட்ட நாமம், வேஷ்டி, சட்டை என எங்களில் வித்தியாசமாய் அறிமுகமானவர்.  வகுப்பில் எனக்கு வரிசை எண் 499, இவருக்கு 500. முதலில் எனக்குப் பின்னால் அமர்ந்திருந்தார். சில நாட்களில் சிநேகமாய் சிரிக்க ஆரம்பித்தவர் பின்னர் எங்களுடன் சகஜமாகப் பழக ஆரம்பித்தார். நாங்கள் இவரை சாமி என்றுதான் அழைப்போம்.

ஆச்சாரமான ஐயர் குடும்பமாக இருந்தாலும் எங்களுடன் நட்பு பாராட்டியதில் அவருக்கு இணையாக யாரையும் சொல்ல முடியாது. அந்தளவுக்கு மிகச் சிறந்த நண்பர். வெளியில் தண்ணீர் கூட அருந்த மாட்டார். அவ்வளவு ஆச்சாரம்... இவர் எம்.ஏ.யில் டபுள் டிகிரி வாங்கி வைத்து விட்டு சமஸ்கிருதத்தில் டாக்டர் பட்டமும் வாங்கி வைத்துவிட்டு மனுசன் எங்களுடன் எம்.சி.ஏ. படிக்க வந்திருந்தார். 'ஏஞ்சாமி உங்களுக்கு இந்த வேலை... பேசாம பாக்குற வேலையைப் பாத்துக்கிட்டு இருக்காம...' என்று சொன்னால் 'இல்ல குமார் சார்... சும்மா படிக்கலாம்ன்னு தோணுச்சு... அதான் வந்துட்டேன்...' என்று ஜாலியாகப் பதில் சொல்வார். இன்றும் அவருக்கு எம்.சி.ஏ., படித்ததால் எந்தப் பலனும் இல்லை.

எல்லோரிடமும் நன்றாகப் பழகினாலும் என்னுடன் மட்டும் அதிக நெருக்கம். என்னைப் பார்க்க தேவகோட்டைக்கு சில முறை வந்தார். அப்போதெல்லாம் இளநீர் மட்டுமே ஆகாரமாய்... சில நாட்கள் ஏதோ காரணங்களால் நான் கல்லூரிக்கு வர வேண்டாம் என்று நினைத்துக் கொண்டிருப்பேன்... அதிகாலையில் புதுக்கோட்டையில் இருந்து போன் வரும் 'குமார் சார் இன்னைக்கு நீங்க வாறீங்களா?' என்று கேட்பார். 'வரவேண்டாம்ன்னு பார்க்கிறேன் சார்' என்று சொன்னதும் 'நீங்க வரலைன்னா நானும் போகலை' என்று சொல்லி போனை வைத்துவிடுவார். இப்படி நான் விடுமுறை என்றால் அவரும் அவர் விடுமுறை என்றால் நானும் வகுப்பிற்கு மட்டம் போடுவது தொடர்ந்தது.

மூன்றாம் ஆண்டில் புராஜெக்ட் முடிக்க அவரின் வீட்டில் தங்கி முடித்து எப்படிக் கொண்டு போய் கொடுத்தோம் என்பதை டொமினிக் பற்றிய பகிர்விலேயே சொல்லியிருந்தேன். ஆனால் டொமினிக் போனபோது நடந்ததைச் சொன்னேனே தவிர நாங்க இருவரும் போனபோது நடந்ததை இந்தப் பதிவில் சொல்கிறேன் என்று சொல்லியிருந்தேன். அதை இங்கு பார்க்கலாம்.

நாங்கள் இருவரும் புராஜெக்ட் கொடுக்கப் போனபோது அங்கிருந்த எங்க மாலதி மேடம் எங்கள் இருவரையும் பார்த்ததும் 'வாங்க சார்... இப்பத்தான் நல்ல நேரமோ?' என்று கேட்டு விட்டு பக்கத்தில் இருந்த குற்றாலம் சாரிடம் 'சார் உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? இவுக ரெண்டு பேருல ஒருத்தர் வரலைன்னா இன்னொருத்தர் வரமாட்டாங்க... திக் பிரண்ட்ஸ்' என்று சொல்லிச் சிரித்தார். 'அப்படியா? அதான் இப்பவும் ஒண்ணா வந்திருக்கீங்களோ... இதுக்கு முன்னாடி வந்தவரும் உங்க கூட்டணிதானே... அவரை மட்டும் முன்னாடி அனுப்பி வச்சிட்டீங்க' என்று கேட்டுவிட்டு புராஜெக்ட் நோட்டை வாங்கிக் கொண்டு 'எங்க சிடி?' என்றார். இருவரும் சிடியைக் கொடுக்கவும் 'இதுல புரோக்கிராம் இருக்கா... இல்லை எம்டி சிடியா?' என்று கேட்டார். 'இருக்கு சார்' என்றோம் இருவரும் ஒரே நேரத்தில்... உடனே மாலதி மேடம் சிரித்து விட்டு 'சார் செக் பண்ணிப் பாத்துடுங்க..' என்று சொல்லிவிட்டு 'ஆட்டம் போட்டாலும் நல்லா படிப்பாங்க' என்று சர்டிபிகேட் கொடுத்தார். குற்றாலம் சாரோ 'என்ன சிடியப் போட்டுப் பாத்துடலாமா?' என்று மறுபடியும் கேட்டார். பின்னர் என்ன நினைத்தாரோ 'சரி போங்க' என்று சொல்லிவிட வெளியில் வந்த எங்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை. காரணம் நாங்க கொடுத்தது அப்போதுதான் வாங்கி வந்த எம்டி சிடி.

கல்லூரி முடிந்த பின்னரும் எங்கள் நட்பு தொடர்ந்து.. அவர் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் ஓலைச்சுவடிகளைப் படித்து நூலாக்கும் முயற்சியில் இருந்தபோது எங்களைக் கூட்டிச் செல்கிறேன் என்று சொன்னார். ஆனால் ஏனோ எங்களுக்கு அந்தக் கொடுப்பினை இல்லை. அப்போது திருவாரூரில் சமஸ்கிருத ஆசிரியராக பணி ஆற்றினார்.

அவரது குடும்பம் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு அருகில் குடியிருப்பு வளாகத்தில் வீடு வாங்கி அங்கு போனபோது நானும் முருகனும் சென்று தங்கியிருந்து சாமி தரிசனம் செய்தோம். அதன் பின் அவர் தேவகோட்டைக்கு சில முறை வந்தார். அவரின் திருமணத்துக்கு டொமினிக், கருப்பையாவுடன் நானும் என் மனைவியும் சென்று வந்தோம். குழந்தைகளோடு இங்க வந்து தங்கியிருந்து போகணும் என்று சொன்னார். ஆனால் அதற்கான நேரம் இன்னும் அமையவில்லை.

தற்போது திருச்சியில் ஒரு கல்லூரியில் பணியாற்றுவதாகச் சொன்னார். எப்போதும் போனில் பேசுவதுண்டு. எம்.சி.ஏ. புரவிசனல் சர்டிபிகேட்டை வைத்துதான் இங்கு வேலைக்குச் சேர்ந்தேன். பட்டயச் சான்றிதழ் வாங்காமலே இருந்தது. இந்த முறை போனபோது பாரதிதாசன் பல்கலைக் கழகம் போயும் சில காரணங்களால் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க முடியாமல் போனது உடனே இவருக்கு தொடர்பு கொண்டேன். டிடி எடுத்து சர்டிபிகேட் ஜெராக்ஸ் எடுத்து அனுப்பி வையுங்க நம்ம நண்பர் ஒருத்தர் இருக்கார் வாங்கிடலாம் உங்களுக்கு செய்யாமலா? என்று சொன்னவர் சொன்ன மாதிரி நண்பரிடம் சொல்லி பதினைந்து நாளில் எனக்கு சர்டிபிகேட் கிடைக்கச் செய்தார். இதில் என்ன ஒரு விஷயம் என்றால் அந்த நண்பரோ அவரில்லாம் கொடுக்க முடியாது என்று சொல்ல 'நான்தான் அவர்... அவர்தான் நான் போதுமா? எனக்குன்னே வச்சுக்கங்க' என்று அவர் சொன்ன வார்த்தைதான் உடனே வீடு தேடி சர்டிபிகேட்டை வரவைத்தது. இரண்டு மூன்று முறை மனைவிக்குப் போன் பண்ணி 'அண்ணி சர்டிபிகேட் வந்துருச்சா? என்று கேட்டுக் கொண்டே இருந்திருக்கிறார். 

தொடரும் எங்கள் நட்பும் என்று தொடர வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கிறேன்... இப்படியான நட்புக்களால்தான் உறவுகள் செய்யும் துரோகங்களை மறந்து வாழ முடிகிறது. எனக்கு கிடைத்த நட்புக்கள் எல்லாமே முத்துக்கள்தான் என்பதில் துளியும் சந்தேகமில்லை... இந்த உறவுகள் இப்படியே என்றும் தொடரட்டும்...

-நண்பேன்டா தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

8 கருத்துகள்:

 1. நட்பைப் பற்றிய நல்லதோர் பதிவு.

  பதிலளிநீக்கு
 2. நல்ல நண்பர்கள் அமைவதும் பெரிய வரம் தான் சார், நல்லதொரு நட்பை அறிமுகம் செய்த்மைக்கு நன்றிகள் சார்...

  பதிலளிநீக்கு
 3. நண்பன் நன்றாய் அமைந்தால் அனைத்தும் நன்றாய் அமையும் என்ற சொலவடை உண்டு! உங்கள் நண்பர்களை பற்றி படிக்கையில் அது நிஜமே என்று எண்ணத்தோன்றுகிறது! நல்லதொரு பகிர்வு! நன்றி!

  பதிலளிநீக்கு
 4. அருமையான நட்பு! பதிவும் அப்படியே! வாசிக்கும் போது எங்களைப் புல்லரிக்க வைத்துவிட்ட தங்களின் இந்த உண்மையான நட்பு என்றும் தொடர இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

  பதிலளிநீக்கு
 5. நல்ல நட்பை எங்களுக்கு அறிமுகபடுதியமைக்கு நன்றி குமார் நட்புக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 6. நல்ல நட்பு என்றும் தொடரும். வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 7. #எம்டி சிடி#
  நான் என்ன நினைத்தேன் என்றால் ,நீங்கள் இரண்டு பேரும் ஒரே பிராஜெக்டைகாபி செய்து கொடுத்து இருப்பீர்கள் என்று !)
  த ம 3

  பதிலளிநீக்கு
 8. நட்புக்கு ஈடு இணை ஏது?
  வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...