மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 18 அக்டோபர், 2014

தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 4)

முந்தைய பகுதிகள் : பகுதி-1     பகுதி-2     பகுதி-3

மூன்றாவது பகுதியின் கடைசியில்...

"ஆமா ரெண்டு மயங்க சம்பாரிக்கயில வீட்டுக்கு வந்த மாப்ளக்கிட்ட கேட்டாத்தான் நல்லாயிருக்கும்... நாளைக்கி நெல்லவிச்சதும் அவளுகளுக்கா கொடுக்க விடுவாய்ங்க..."

"சரி... சரி... தருவாய்ங்க... விடு... இப்ப சோத்தப் போடு..." என்று சொல்லவும் 'ஆமா சீமையில இல்லாத பிள்ளகள பெத்துப்பிட்டாக... மாசா மாசம் நோட்டு நோட்டா அனுப்பிட்டுத்தான் மறுவேல பாக்குறாய்ங்க... அட ஏஞ் சும்மா... ஒவ்வொரு தடவயும் கேட்டுக்கேட்டு வாங்கணும்..' என்று முணங்கியபடி அவருக்கு சாப்பாடு போட்டுவிட்டு தானும் போட்டுக்கொண்டு அமர்ந்தாள்.

இனி...

"என்னங்க... என்னங்க... அட எந்திரிங்க... விடிஞ்சி வெள்ளக்கோழி கூவிருச்சி.. எந்திரிங்கன்னா..." ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த கந்தசாமியைத் தட்டி எழுப்பினாள் காளியம்மாள்.

"கொஞ்ச நேரம் ஒறங்கவிடேன்..." என்றபடி திரும்பிப் படுத்துக்கொண்டார்.

"அட நல்லாத்தேன்... மழயில்லாம வெட்டரிச்சாப்ல இருக்கு... அம்புட்டுப் பேரும் வயப்பக்கம் பொயிட்டாக.. அம்புட்டுப் பேரும் பரபரப்பா திரியிறானுங்க... இப்பத்தான் நீங்க  இன்னந் தூங்குறிய..."

"என்னக்காச்சும் கருக்கல்ல எந்திரிக்காம இருந்திருக்கேனா... இன்னைக்கி என்னவோ உடம்பெல்லாம் ஒரே வழி... சத்த உறங்குறேனே..."

"அட எந்திரிங்க... சும்மா...  மழயில என்ன வெட்டி முறிச்சீக... எந்திரிச்சி வாயக்கொப்புளுச்சிட்டு காபித்தண்ணிய குடிச்சிட்டு வாங்க... மாடுகள பாக்கச் சகிக்கல... குளிப்பாட்டிட்டு வரலாம்...."

"ம்..." என்றவர் இனி பாட்டுக் கேட்க முடியாது என்பதால் எழுந்து வாளியில் இருந்த தண்ணீரில் முகம் கழுவி வாய் கொப்பளித்தார். 'இவ கண்ணுல தூக்கமே வராதுங்கிறதுக்காக தூங்குறவனையும் தூங்க விடமாட்டா.. ரெண்டு பேரு வேலையத்துப் போயி வயப்பக்கம் போயிருப்பானுங்க... ஊரே போயிருச்சின்னு கத விடுவா... இதை காலங்காத்தால சொல்லி வாங்கிக் கட்டிகாம இருக்கதே நல்லது" என்று முணங்கியபடி துண்டால் முகத்தைத் துடைத்தவரிடம் 'என்ன மொணங்குறீங்க?" என்றபடி காபியைக் கொடுக்க கட்டிலில் அமர்ந்து ஒரு வாய் உறிஞ்சி "இந்தக் காபிக்கு மட்டந்தான் நாராயணவிலாஸ் காபியெல்லாம்..." என்றார்.

"ஆமா வாய்க்குள்ள திட்டிப்புட்டு இப்ப நல்லவுக மாதிரி பேசுறியளாக்கும்" என்று காளியம்மா கேட்கவும் "ஏலா...சின்னவனுக்கிட்ட பேசணும்ன்னு சொன்னே... கூப்பிட்டுப் பாக்கவா?" என பேச்சை மாற்றினார்.

"ம்... கொஞ்ச நேரமாகட்டும்... எந்திரிச்சிட்டாங்களோ இல்லயோ..."

"வேலக்கி போறவுக... புள்ளக வேற பள்ளிக்கொடத்துக்குப் போகணுமில்ல... எந்திரிச்சிருப்பாங்க... அடிச்சித் பாத்துட்டு மாட்டை அவுத்துக்கிட்டுப் போனா குளிப்பாட்டிட்டு வரலாம்..."

"சரி கூப்பிட்டுப் பாருங்க... எடுத்தடோடனே காசுன்னு கேக்காதீக... புள்ளகுட்டி எல்லாம் எப்படியிருக்குன்னு விசாரிச்சிட்டு... கடைசியில கேளுங்க...."

"அடிப்போத்தா நீ வேற... நா எப்ப அவனுககிட்ட காசுன்னு கேட்டிருக்கேன். இப்ப கேக்க வேண்டிய நெல... வெவசாயத்துக்குத்தானே கேக்கப்போறோம்... கொடுத்தா கொடுக்கிறானுக இல்லேன்னா எவனுக்கிட்டயாவது வாங்கி ஒரத்தைப் போட்டுட்டுப் போறேன்.... அதுக்காக இம்புட்டு தூரம் வெளய வச்சி விட்டுட்டாப் போப்போறேன்...." என்றபடி எழுந்து போனை நோக்கிச் சென்றவர் போனுக்கு அருகில் இருந்த சிறிய நோட்டில் சின்ன மகன் குமரேசனின் நம்பரைப் பார்த்து போனில் ஒவ்வொன்றாக அழுத்த ஆரம்பித்தார்.

"சாப்பிட்டு சீக்கிரம் எந்திரிடி... வேன் வந்திரும்... அவனப்பாரு வச்ச இட்லிய சாப்பிட்டுட்டு எந்திரிச்சிட்டான்... நீ இன்னும் ரெண்டு இட்லிய அணில் கொறிக்கிற மாதிரி கொறிக்கிறே..." கத்திக் கொண்டே டிரஸ் மாத்திக் கொண்டிருந்தாள் அபிநயா. அப்போது போன் அடிக்க, "அம்மா அப்பாட்டு மொபைலுக்கு யாரோ போன் பண்ணுறாங்க..." கத்தினான் முகேஷ்.

"எடுத்து யார்ன்னு கேளுடா.... உங்கப்பால்லாம் எதுக்குத்தான் மொபைல் வாங்கி வச்சிருக்காரோ... வீட்டுக்கு வந்துட்டா அதை தேடுறதே இல்லை..." 

"அலோ யாரு பேசுறீங்க...?"

"டேய் வடுவா.... யாருன்னா கேக்குறே... நீ யாருடா... எங்கப்பன் வெள்ளச்சாமிதானே...?"

"போங்கய்யா... இருங்க அம்மாக்கிட்ட கொடுக்கிறேன்..." 

"யாருடா...?"

"ஐயா..."

"சிவராமய்யாவா... பேச வேண்டியதுதானே...?" என்றவளிடம் "இல்ல இது நம்ம வேலங்குடி ஐயா..." என்றபடி போனைக் கொடுத்தான்.

"நல்லாயிருக்கீகளான்னு கேட்காம என்ன பழக்கம் இது... எல்லாம் சொல்லித்தரணும்" திட்டியபடி "அலோ" என்றாள்.

"ஆத்தா... நா மாமா பேசுறேன்..."

"சொல்லுங்க மாமா... இல்ல இந்த நேரத்துக்கு அப்பா பேசுவாக அதான் அவரான்னு கேட்டேன்..."

"அவரு தெனங் கூப்பிடுவாரு... இங்க வயவேலைக்கு கருக்கல்ல போனா ஆத்துப் பூத்துப் போயி வந்து அக்கடான்னு படுக்கும் போது எங்கனத்தா போன் பண்றது... நீங்க எல்லாருமே வாரம் ஒரு தடவையின்னு மொற வச்சிருக்கீக... ம்...."

"இல்ல மாமா நானே ரெண்டு நாளா பேசணும்ன்னு நினைக்கிறேன்... ஸ்கூல வேலை அதிகம் அதான் முடியல... இவரு சுத்தமா சொன்னதை மறக்கிற ஆளு... நைட்டு லேட்டாத்தான் வருவாரு... அப்ப கேட்டா மறந்துட்டேன்னு சொல்வாரு... எப்படி மாமா இருக்கீக... அத்தை எப்படியிருக்காங்க...?"

"எங்களுக்கு என்னாம்மா நல்லாயிருக்கோம்... ஆமா அங்கன எல்லாரும் சும்மா இருக்கீகளா..?"

"எல்லாரும் நல்லாயிருக்கோம் மாமா... வயலெல்லாம் தண்ணி நெறைஞ்சி கிடக்கா மாமா... பயிரெல்லாம் எப்படியிருக்கு... அழுகிப் போயிருமோ?"

"தண்ணி வெட்டி வடிச்சிடலாம்... கெழக்குப்பக்கந்தான் வேந்தங்கம்மாத்தண்ணிக்குள்ள கொஞ்ச செய்யிக கெடக்கு... அது தண்ணி எறங்குறதைப் பொறுத்துத்தான்... ஆனா பயிரெல்லாம் தண்ணிக்கி மேல நிக்கிறதால அழுக வாய்ப்பில்லை... இந்த வருசம் ஒரு வளத்தியா வளந்திருக்குத்தா... ஆமா தம்பி எங்க?"

"முடிவெட்டிக்கப் போறேன்னு போனார்... இன்னும் வரலை... ஏம்மாமா அவருக்கிட்ட எதாவது சொல்லணுமா?"

"அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா... சும்மாதான் கேட்டேன்... வந்தா பேசச் சொல்லும்மா...." வார்த்தைகளை மென்று விழுங்கினார்.

"மாமா... சும்மா சொல்லுங்க... என்ன பண விஷயமா?" என்று நேரடியாகக் கேட்க கந்தசாமிக்கு என்னமோ போல் ஆகிவிட்டது. மருமக்களிடம் பணம் என்று இதுவரை கேட்டதில்லை என்பதால் அவருக்கு சங்கோஜமாக இருந்தது.

-வேரும் விழுதுகளும் தொடரும்...
-'பரிவை' சே.குமார்.

10 எண்ணங்கள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

//மருமக்களிடம் பணம் என்று இதுவரை கேட்டதில்லை என்பதால் அவருக்கு சங்கோஜமாக இருந்தது.///
சங்கடம்தான் நண்பரே
கதை அருமையாகச் செல்கிறது
தொடர்கிறேன் நண்பரே

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

tha ma 2

Yarlpavanan சொன்னது…

கதை நகர்வு நன்று
படிக்க தூண்டும் பதிவு
தொடருங்கள்

J.Jeyaseelan சொன்னது…

மறுமகளிடம் பணம் கேட்பது சங்கோஜம் தான் சார்.. நன்றாக போகிறது தொடருங்கள்...

கோமதி அரசு சொன்னது…

இந்தக் காபிக்கு மட்டந்தான் நாராயணவிலாஸ் காபியெல்லாம்..."//

இப்படியும் பாராட்ட தெரியுதுதே!
அதுவே பெரிய விஷ்யம்.

"நல்லாயிருக்கீகளான்னு கேட்காம என்ன பழக்கம் இது... எல்லாம் சொல்லித்தரணும்" திட்டியபடி "அலோ" என்றாள்.//

உண்மை. நாம்தான் சொல்லி தரனும்.
கதை மிக அருமையாக இருக்கிறது.

துரை செல்வராஜூ சொன்னது…

அந்த காலத்து மனுஷன் அல்லவா!.. அதுதான்!..

”தளிர் சுரேஷ்” சொன்னது…

சிறப்பாக செல்கிறது! தொடர்கிறேன்! நன்றி!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

மருமக்களிடம் பணம் என்று இதுவரை கேட்டதில்லை என்பதால் அவருக்கு சங்கோஜமாக இருந்தது.// உண்மைதானே! மருமக்களிடம் கேட்பது.....ம்ம்ம் ரொம்பவே தன் மானம் அங்கு அவதியுறும்!
அருமையாக எழுதுகின்றீர்கள் தொடர்கின்ரோம்!

UmayalGayathri சொன்னது…

நிதர்சனமாய் கதை செல்கிறது..

Unknown சொன்னது…

#வயலெல்லாம் தண்ணி நெறைஞ்சி கிடக்கா மாமா... பயிரெல்லாம் எப்படியிருக்கு... அழுகிப் போயிருமோ?"#
மருமகளுக்கு இவ்வளவு அக்கறையாவது இருக்கே !
த ம 3