மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 23 மார்ச், 2013பக்... பக்... பய அனுபவம் - தொடர்பதிவு


வாழ்க்கையில் சந்தித்த பய அனுபவத்தைப் பற்றி பகிர்ந்து கொள்ளும்படி ஆசியா அக்கா அவர்கள் தொடர் பதிவுக்கு அழைத்து நாட்களாகிவிட்டது... இனிமேலும் எழுதாமல் இருந்தால் அக்கா கோவமாயிடுவாங்க. அதனால பய அனுபவம் பற்றி கொஞ்சம் பேசலாம்.

பய அனுபவத்துல நிறைய சரக்கு இருக்குங்க... எதை சொல்வது எதை விடுவது... சரி கட்டுரையின் நீளம் கூடாமல் பகிரலாம்.எட்டாவது வரைக்கும் ஒரு நடுநிலைப்பள்ளியில்தான் படிப்பு... மழை வருவது போல் இருந்தால் கிராமத்துப் பிள்ளைங்க எல்லாம் போங்க என்று விரட்டி விடுவார்கள். அதனால் நாலாவது படிக்கும் போது மரக்குரங்கு விளையாண்ட ஒருத்தன் மரத்தில் இருந்து குதிக்கும் போது நம்ம மேல விழுந்து கை ஒடிந்து அம்மாவின் திட்டுக்குப் பயந்து வீட்டுக்கு வந்து கை வலியோடு ரென்டு உதையும் வாங்கியது தவிர... வேறெந்தப் பய அனுபவமும் வரவில்லை..

ஒன்பதாவது வேறு பள்ளி... வேறு சூழல்... நாங்கள் படித்த பள்ளியில் இருந்து மற்ற பள்ளிகளுக்குப் போனால் முதல் வருடம் தேர்ச்சி பெறுவது என்பது ஒரு சிலருக்குத்தான் மணி மகுடம் பலருக்கு காவடிதான்... அப்படியிருக்கும் போது மதிப்பெண்களை பள்ளியில் தலைமையாசிரியர் வந்து வாசித்து வீட்டுக்கும் லெட்டர் அனுப்பி... போச்சு இந்த வருடம் நாமளும் காவடிதான் என்று நினைத்து தோல்வியை தோல்வி அடையச் செய்தது ஒரு புறம் இருந்தாலும் இரவு 7 மணிக்கு தேவகோட்டையில் டியூசன் முடித்து சைக்கிளில் எங்க ஊருக்குப் பயணிக்க வேண்டும்... 

அப்போது பாதி தூரம் வரை ரோடு இருக்காது... (இப்போது தேவகோட்டையில் இருந்து தார்ச்சாலை) விளக்கு வெளிச்சமும் இருக்காது... ஊருக்குள் இருக்கும் விளக்குகளும் எப்போதாவதுதான் எரியும்... பாதி தூரத்துக்கு மேல் அதாவது எங்க ஊர் பஞ்சாயத்து எல்லைக்குள் சரளை ரோடு இருக்கும். ரோடில்லாத பகுதியில் மாட்டு வண்டி ஓட்டிய சாலையில்தான் போக வேண்டும்.... எல்லா பக்கமும் ஆவாரஞ்செடிதான்...

அமாவாசை இருட்டாக இருந்தாலும் சைக்கிள் மட்டும் சும்மா எங்க பள்ளம் இருக்கு... எங்க மேடு இருக்குன்னு சரியான பாதையில் செல்லும்... இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் பகலில் செயின் அடிக்கடி கழண்டாலும் இரவில் அப்படி எதுவும் ஆகாது... அப்படியே ஆகி மாட்டமுடியாமல் போனால் அப்புறம்.... ஐயையோ.... அப்புறம் வேர்த்து... விறுவிறுத்து.... சரி கதைக்கு வருவோம்... 

சுடுகாட்டை கடக்கும் போது எதாவது ஒரு சாமி பாடல் சத்தமாக வரும்.... அப்படித்தான் ஒருநாள் இரவு எட்டுமணிக்கு மேல இருக்கும்... ஊர்ல அம்மன் கோவில்ல காப்புக் கட்டியிருந்தாங்க... தேவகோட்டையில் இருந்து போனால் சத்திரத்தார் ஊரணி என்ற இடத்துல ஒரு மேட்டில் இறங்க வேண்டும்... அந்தப் பகுதியில் அப்போது நரிக்குறவர்கள் இருந்தார்கள்... நல்ல இருட்டு வேற... பயம் கவ்விய மனசு வேற... படபடன்னு அடிக்க.... வேர்வையில் தெப்பலாய்... வேகமாக சைக்கிளை மிதித்துப் போனேன்... 

அந்த சறுக்கல்ல இறங்கி வலது பக்கமாக திருப்பினேன்... பயபுள்ள எதுவோ இருட்டுக்குள்ள பாதையில நின்னிருக்கும் போல லேசாத் தட்டிவிட அது கீழ விழுந்து கத்த ஆரம்பிக்க.... நிக்கலையே... நின்னா சட்டினிதாண்டியின்னு நெனச்சிக்கிட்டு வேகமாக மிதிக்க ஆரம்பிச்சேன்... கூ...கூ...ன்னு கத்திக்கிட்டு கல...புல... கல.. புலன்னு பேசிக்கிட்டு கூடிட்டாய்ங்க... நாந்திரும்பவே இல்லை.... வேகமாக மிதிச்சா.... திடீர்ன்னு லைட்டு வெளிச்சம் நம்ம மேல விழுகுது... ஆத்தாடி கொன்னுபுட்டாங்களேன்னு வேகமா ஓட்டுனா... முயல் பிடிக்கிற லைட்டை தலையில் கட்டிக்கிட்டு நாலஞ்சு பேரு இருட்டுக்குள்ள தப...தபன்னு ஓடியாராய்ங்க... பிடிபட்டா தொலஞ்சேடா குமாருன்னு சொல்லிக்கிட்டு.... சாமிகளை வேண்டிக்கிட்டு ஓட்டினா.... விடாம வெரட்டி வாறாய்ங்க.... கொஞ்சத் தூரத்துக்கு அவங்கனால அப்புறம் ஓட முடியலை.... நானும் வேகமாக வீட்டுக்குப் போயி சேர்ந்துட்டேன்... ஊரில் சாமி கரகம் எடுத்து வந்து கோவிலில் வைத்து சாமி கும்பிட தயாராகிக் கொண்டிருந்தார்கள். 

என்னோட கோலத்தைப் பார்த்த எங்கம்மா, பயந்தோளிப் பயலே எதுக்கு இப்படி பேயரஞ்சமாதிரி வந்திருக்கேன்னு திட்ட... எனக்குத்தானே தெரியும்... உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வந்து சேர்ந்ததுன்னு நினைச்சுக்கிட்டு கொஞ்ச நேரம் வீட்டில உக்காந்துட்டேன்... அப்புறம் பயலுக டேய் வெளியில வாடான்னு கூப்பிட (இப்படியா கூப்பிட்டாய்ங்க....) அடைக்கோழி மாதிரி உள்ள இருக்காம வெளிய வான்னு அன்பா கூப்பிட்டாய்ங்க... 

வெளிய வந்து அரட்டைக் கச்சேரியில ஆஜரானா... மொசப்புடிக்கிற மாதிரி குமாரை தேடிக்கிட்டு வந்துட்டாய்ங்க... சாமி இப்ப ஒரு ஆளு சைக்கிள்ல வந்துச்சுல்லன்னு விசாரிக்க ஆரம்பிச்சுட்டாய்ங்க... போச்சுடா சனி சம்மணம் போட்டு உக்காந்திருக்குடான்னு நெனச்சுக்கிட்டு மெதுவா வேப்ப மரத்துக்குப் பின்னால பொயிட்டேன்.... அப்படி யாரும் வரலைன்னு பயலுக சொல்லிட்டாய்ங்க... சரி நாளைக்கு ராத்திரி வரும் போது பாத்துக்கிறோம்ன்னு சொல்லிட்டுப் பொயிட்டாய்ங்க.... 

அடுத்த நாள் காலையில போகும் போது பயமா இருந்துச்சு எங்க மோப்பம் புடிச்சிருவாய்களோன்னு... ஒரு நரிக்குறவர் என் முகத்தை உற்றுப் பார்க்க ஆஹா.... கண்டுபிடிச்சுட்டானோன்னு வடிவேல் மாதிரி நானும் பார்க்க, ராத்திரி புள்ள மேல சைக்கிள்ல மோதிப்புட்டாங்க சாமி ஆருன்னு தெரியல... இந்தப் போறவங்கதான்னு சொல்ல... ஐய்யையோ ரொம்ப அடியோன்னு கேட்டுட்டு மெதுவா ஜகா வாங்கிட்டு அதுக்கு அப்புறம் ஒரு வாரத்துக்கு மேல் இரவுப் பயணத்தை ரத்து செய்து டியூசனை காலையில் மாற்றியாச்சு... 

சுற்றுலா செல்லும் போது கேரளாவில் டாடா சுமோவோடு பள்ளத்தாக்கில் விழ இருந்த இன்னொரு பய அனுபவம் இருக்கு... யாராவது மீண்டும் எழுதச் சொன்னால் எழுதலாம்..

அப்புறம் ஒண்ணு சொல்ல மறந்துட்டேன்.... கல்லூரி படிக்கும் போது பேராசான் பழனி இராகுலதாசன் இல்லத்தில் நண்பர், நண்பிகள் என எல்லாருமாய் பேசி மகிழ்ந்து அங்கயே சாப்பிட்டு அப்புறம் அக்கா வீட்டுக்குப் பொயிட்டு இரவு 10,11 மணிக்கெல்லாம் போக ஆரம்பிச்சாச்சு பயமில்லாமல்....

தொடர நினைக்கும் பயந்த அனுபவஸ்தர்கள் எல்லாரும் தொடரலாம்...

-'பரிவை' சே.குமார்

7 கருத்துகள்:

 1. அதுக்காக இப்படி பேய் படத்தைப் போட்டு பயமுறுத்தக்கூடாது,இன்னிக்கு தூக்கம் வராது எனக்கு...

  பதிலளிநீக்கு
 2. ஆஹா ! அழைப்பை ஏற்று தொடரை எழுதியமைக்கு நன்றி.மனோ அக்கா ஆரம்பித்த தொடர்..நரிகுறவர் கையில் மாட்டியிருந்தீங்க சகோ,அப்புறம் டப்பாங்குத்து தான்..நல்ல சுவாரசியமானப் பகிர்வு.

  பதிலளிநீக்கு
 3. பயம் என்னை தொற்றிக்கொள்ளுமோ என பயமா இருக்கு.. நல்ல அனுபவ பகிர்வு . வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. சுவாரஸ்யமான அனுபவம்தான்! நன்றி!

  பதிலளிநீக்கு
 5. நீங்க பயந்திங்களோ இல்லையோ எங்களை பயமுறுத்துறுதுன்னு முடிவு பண்ணிட்டிங்க போலிருக்கு.. இப்படியா பேய்ய் படத்த போடுவிங்க?

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...