மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 29 மார்ச், 2013கிளியே... கிளியே... கிளியக்கா..!


சென்னை நகரின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த (எக்ஸ்பிரஸ் அவென்யூ எதிரில்) பாரதி சாலையிலிருக்கும் ஒரு வீட்டின் மொட்டை மாடி. அந்த வழியே நடந்து போகின்றவர்களின் கண்களும் வாகனங்களில் பறப்பவர்களின் கண்களும் ஒரு விநாடி அந்த வீட்டின் மொட்டை மாடியை ஆச்சரியத்துடன் பார்த்துப் பரவசமாகின்றன. அவர்கள் அங்கே காணும் காட்சி... கூட்டம் கூட்டமாக பச்சைக் கிளிகளின் கும்மாளம்தான்!

சற்று அருகே சென்று ஊன்றிப் பார்த்தால் மதில்சுவரின் மேல் அணில்களும் புறாக்களும் காகங்களும் கூட காணப்படுகின்றன. வாகனங்கள் எழுப்பும் "ஹாரன்' ஒலிகளால் பயந்துபோய் பறப்பதும் மீண்டும் அங்கே அமர்வதுமாய் இருக்கின்றன கிளிகள். அந்தப் பகுதியில் நடப்பவர்களில் பலர் தங்களின் செல்போனின் மூலம் படம் பிடிக்கின்றனர். சிலர் கற்களை எடுத்துவீச, அவர்களை மேலிருந்து ஒரு குரல் அன்போடு.... ஆனால் கண்டிப்பாக தடுத்து நிறுத்தி அறிவுரை கூறுகின்றது. அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர், கேமரா மெக்கானிக் சி.சேகர். கடந்த 36 ஆண்டுகளாக கைவிடப்பட்ட கேமராக்களுக்கு புனர்வாழ்வு அளிக்கக்கூடிய மிகச் சிறந்த மெக்கானிக் சேகர். புகைப்படத் துறையில் இவரைத் தெரியாதவர்களே கிடையாது.
`
கடந்த இரண்டு ஆண்டுகளாக மாலை 4 முதல் 6-30 மணிவரை இவர் யாரையும் சந்திப்பதில்லை. எந்த வேலையையும் பார்ப்பதில்லை. இவரின் தினசரி இரண்டரை மணிநேரப் பொழுது இந்தப் பறவைகளுடன்தான் கழிகிறது.

இது குறித்து அவரிடம் பேசியபோது...

""கோடைக்காலத்தில் மனிதர்களுக்கு நாவறண்டு போவதைப் போல பறவைகளுக்கும் தண்ணீர் தாகம் எடுக்கும். அவை யாரிடம் போய் தண்ணீர் கேட்கும்? இந்த யோசனை எனக்கு இருந்ததால், வாளியில் தண்ணீர் கொண்டுவைப்பதை நான் பல ஆண்டுகளாகச் செய்துவந்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒருநாள், வீட்டிற்குள் கேமரா சர்வீஸ் செய்துகொண்டிருக்கும் போது என்னையும் அறியாமல் என் கண்கள் மதில் சுவரின் மேல் பார்த்தபோது, அவை உணவுக்கு ஏங்குவதை அறிய முடிந்தது. அன்றிலிருந்து கிளிகளுக்கு ஏற்ற தானியங்களைப் கொடுப்பதென்று முடிவுசெய்தேன். இதற்கென்றே பாரிமுனை, கோழிமார்க்கெட் பகுதிக்குச் சென்று தினை, நவதானியங்கள், பொட்டுகடலை, அரிசி போன்றவற்றை வாங்கி வந்து நாளுக்கு ஒன்றாக ஊறவைத்துப் போடுவேன்.

நாள் ஒன்றுக்கு இரண்டு கிலோ முதல் எட்டு கிலோ வரை தானியங்கள் செலவாகும். ஒரே தானியத்தை தினமும் போடுவதை விட நாளுக்கு ஒரு தானியம் போடுவதை வழக்கமாகக் கொண்டேன். இதனால் பச்சைக் கிளிகள், அணில்கள், காகங்கள், புறாக்கள் எனப் பல உயிரினங்களும் பசியாறுகின்றன. அதைப் பார்க்கும் போது நமக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு ஈடு இணையே இல்லை. இதனால் அந்த நேரத்தில் யாரையும் நான் சந்திப்பதைத் தவிர்க்கிறேன். என்னைப் பார்க்க வருபவர்களின் சத்தத்தால் அந்தப் பறவைகளின் அமைதி குலைகிறது. அதனால் என்னுடைய வாடிக்கையாளர்களைக் கூட அந்த நேரத்தில் வரவேண்டாம் என்று சொல்லிவிடுகிறேன்.

தினம் சிலமணிநேரங்களை அந்தப் பறவைகளுக்காகச் செலவிடுவதில் என்னுடைய வருவாய் கணிசமாகக் குறையும்தான்; ஆனால் மன நிம்மதி கூடும்!'' என்கிறார் பறவைகளுக்கு படியளிக்கும் கேமரா மெக்கானிக் சேகர்.

நன்றி : தினமணி
-'பரிவை' சே.குமார்

2 கருத்துகள்:

  1. அருமையான மனிதர், எனது வாழ்த்துகளையும் சொல்லுங்க குமார்...!

    பதிலளிநீக்கு
  2. கேமரா மெக்கானிக் சேகர் வாழ்க!
    தினம் என் வீட்டு மொட்டைமாடியில் நான் வைக்கும் சாதம், த்ண்ணீருக்கு வரும் பறவைகளின் வரவு மனதுக்கு இதம் அளிக்கும். அதை அனுபவித்தவர்களுக்கே அதன் அருமை தெரியும்.

    பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...