மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 26 மார்ச், 2013

குடும்பத்தை ஒதுக்கி வையுங்கள்: கருணாநிதிக்கு அன்பழகன் கோரிக்கை




நேற்று கூடிய திமுக செயற்குழுக் கூட்டம் வெறும் ஒன்றரை மணி நேரம் மட்டுமே நடந்தது. அதில் திமுக தலைவர் கருணாநிதி எதுவும் பேசவில்லை. தொண்டை வலி என்ற காரணம் கூறப்பட்டது.

கூட்டத்தில் பேசிய பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன், தனது பேச்சை, கழகத்தின் நிரந்தரத் தலைவர் கலைஞர் அவர்களே, பொறுமை காக்கும் பொருளாளர் மு.க.ஸ்டாலின் அவர்களே என்று தொடங்கி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். 

குறைந்த நேரம் மட்டுமே பேசிய அவர் கூறுகையில், பொதுவாக எதிரிக்கு எதிரி நண்பன் என்பதற்காக சில நேரங்களில் பொறுத்து போக வேண்டிய நிலை ஏற்படுகிறது. நல்லவன் என்பதற்காகவோ, நண்பன் என்பதற்காகவோ உறவு கொள்வதில்லை. ஒரு முறை கலைஞரும், நானும் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தோம். 

அப்போது, வீரபாண்டி ஆறுமுகம் மிகவும் கோபமாக உள்ளே வந்தார். என்ன நடக்கிறது இங்கே? என்று தொடங்கிய அவர், கனிமொழியிடம் சிபிஐ விசாரணை செய்து கொண்டு இருக்கிறார்கள். நாம் கீழே உட்கார்ந்து கொண்டிருக்கிறோம். மேலே தயாளு அம்மாவிடம் விசாரணை செய்கிறார்கள். இவ்வளவு துணிச்சலையும் யார் கொடுத்தது?. மத்தியில் ஆட்சி என்றால் நாமும் சேர்ந்துதானே ஆட்சி. இனியும் கூட்டணியில் இருக்க வேண்டுமா?. வெளியே வந்துவிடுவோம். தேர்தலையும் தனியாக சந்திப்போம். இந்த அவமானத்தை தாங்கியது போதும் என்று கூறியபடியே கண் கலங்கிவிட்டார். 

சில்லறை வணிகத்தில் அந்நியநாட்டு முதலீடு என்பது நாம் எதிர்க்கும் ஒரு கொள்கை என்றாலும், ஆட்சி கவிழ்ந்து விடக்கூடாதே என்ற ஒரே நோக்கத்திற்காக மத்திய அரசுக்கு நாம் ஆதரவு தந்தோம். ஆட்சி கவிழ்ந்து மதவாத பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காகத்தான் மனம் வருந்தி ஓட்டு போட்டோமே தவிர சில்லறை வணிகத்தில் அந்நிய நாட்டு முதலீட்டுக்கு ஆதரவாக அல்ல. 

இப்படி பல சம்பவங்களில் நமக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் முரண்பாடு இருந்தாலும், ஆட்சி கவிழ்ந்து விடக்கூடாதே என்பதற்காக ஆதரவு தெரிவித்து வந்தோம். ஆனால், இப்போது இலங்கை தமிழர் பிரச்சனை என்பது நமது உயிரோடு கலந்தது. 

1956ம் ஆண்டு முதல் இலங்கை தமிழர் பிரச்சனைக்காக திமுக குரல் கொடுத்து வருகிறது. நமது போராட்டத்தின் உச்சக்கட்டம் அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ததுதான். இலங்கை தமிழர் பிரச்சனைக்காகத்தான் கலைஞரும், நானும், மற்றவர்களும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தோம். பதவி பெரிதல்ல. ஆனால், அந்த பதவியை ராஜினாமா செய்வது சாதாரண விஷயம் அல்ல. 

இலங்கை தமிழர் பிரச்சனைக்காக இருமுறை ஆட்சியையே இழந்து இருக்கிறோம். இங்கே கலைஞர் உடலும், மனமும் உடைந்து அமர்ந்திருக்கிறார். உள்ளத்தால் நொந்து உட்கார்ந்து இருக்கிறார். அவரால் பேச முடியவில்லை. 

எனக்கும் இருமலும், சளியும் இருக்கிறது. ஆனால் உங்களை எல்லாம் பார்த்த உடன் எல்லாவற்றையும் மறந்து பேசுகிறேன். 

நான் கலைஞரிடம் கூறுவது, அண்ணன் என்ன... தம்பி என்ன... மாமன் என்ன... மச்சான் என்ன... எவராக இருந்தாலும் ஒதுக்கி விடுங்கள். உங்களோடு லட்சோப லட்ச கழக தொண்டர்கள் இருக்கிறார்கள் என்று பேசியுள்ளார் அன்பழகன். 

இதன்மூலம் கட்சியைக் காப்பாற்ற குடும்பத்தை ஒதுக்கி வையுங்கள் என்ற கருத்தையே அன்பழகன் முன் வைத்ததாகக் கருதப்படுகிறது.

நன்றி : தமிழ் இணையப் பத்திரிக்கை
-'பரிவை' சே.குமார்

3 எண்ணங்கள்:

bandhu சொன்னது…

// பதவி பெரிதல்ல. ஆனால், அந்த பதவியை ராஜினாமா செய்வது சாதாரண விஷயம் அல்ல. //
என்னய்யா சொல்ல வரீங்க?

மனோ சாமிநாதன் சொன்னது…

புதிய செய்தியாக இருக்கிறது. இன்னும் நான் பேப்பரில் படிக்கவில்லை இந்த செய்தியை. அத‌ற்குள் சூடாக தந்து விட்டீர்கள்!

சிங்கம் சொன்னது…

இதெல்லாம் ...... காதில் ஊதிய சங்குதான்....