மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 21 டிசம்பர், 2022

சினிமா : அம்மு ( தெலுங்கு - 2022)

ம்மு-

கணவனின் சைக்கோத்தனமான கொடுமைகளை எதிர்க்கொள்ளும் பெண் அந்த வலிகளை உள்ளுக்குள்ளேயே வைத்துத் தவித்து, அதை வலிமையாக எதிர்கொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது அதை எப்படிப் பயன்படுத்தி அவனைப் பலி வாங்குகிறாள் என்பதே படத்தின் கதை.
பொன்னியின் செல்வனுக்குப் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம் என எல்லாப் பக்கமும் ஐஸ்வர்யா லெட்சுமிதான் தெரிகிறார். இதில் திருமணத்துக்குப் பின் மகிழ்வாக வாழப் போகிறோம் என்ற கனவோடு வந்து கட்டியவனால் துன்புறுத்தலுக்கு ஆளாகி, அவனை பலி வாங்கும் பெண்ணாக மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.
அவன் படுத்தும் பாடுகளை யாரிடம் சொல்வது எனத் தவித்து அம்மாவிடம் சொல்லும்போது அவள் கேட்கும் முதல் வார்த்தையே 'நீ என்ன செய்தே..?' என்பதுதான். அதன் பின் 'என்னை உங்கப்பா என்னையும் அடித்தார்' என்று சொல்லிவிட்டு எங்கம்மாக்கிட்ட சொன்னபோது ஆம்பளைங்க அடிக்கிறதும் பெண்கள் வாங்கிக் கொள்வதும் காலகாலமாக நடப்பதுதான். இதையெல்லாம் பொறுத்துக் கொண்டுதான் வாழவேண்டும் என அறிவுரை சொன்னதை மகளிடம் சொல்கிறாள்.
கணவன் அடிக்கத்தான் செய்வான், அதை மனைவி வாங்கிக்கொண்டு அவனுக்கான எல்லாவற்றையும் செய்தபடி வாழப்பழகிக் கொள்ள வேண்டும் என்ற பழமைவாதத்தை மகளிடம் திணிக்கிறாள் என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

போலீஸ் ஆபீசராக வரும் நாயகன் (நவீன் சந்த்ரா) மனைவியைக் கொடுமைப்படுத்துவதாகட்டும் காவல் நிலையத்தில் கைதியை அடிப்பதிலாகட்டும் மனைவி தன்னை மீறிப் போகிறாள் எனும் போது அவளைத் தன் கட்டுக்குள் கொண்டு வருவதிலாகட்டும் இறுதியில் இனி மீளமுடியாது என்ற நிலையில் கெஞ்சுவதிலாகட்டும் மிகச் சிறப்பாக நடித்து ஐஸ்வர்யாவுக்கு மட்டுமல்ல நமக்கும் பயத்தைக் கொடுக்கும் சைக்கோவாகத்தான் தெரிகிறார்.
பாபி சிம்ஹாவை தமிழ் சினிமா கொடுக்கும் கதாபாத்திரங்கள் இந்த ஆளு நடிச்ச படமா அந்தப் பக்கமே போகக்கூடாதுன்னு ஆக்கி வச்சிருந்தாலும் இதில் பாதிக்கு மேல் வந்து படத்தையே தன் பக்கம் இழுத்து விடும் கதாபாத்திரம். காவல் நிலையத்தில் இருந்து பரோலில் வந்து தன்னை வெறுக்கும் தங்கையிடம் நேசத்தைக் காட்ட முயல்வதுடன் தங்கை போல் ஒருத்தி படும் அவஸ்தையில் இருந்து அவளை மீட்க அவளுடன் இணைந்து நடத்தும் நாடகமாகட்டும் மிகச் சிறப்பு.
இது அமேசான் பிரைம் வீடியோவின் முதல் படைப்பு. சாருகேஷ் சேகர் கதை எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ், கல்யாண் சுப்பிரமணியம், கார்த்திகேயன் சந்தானம் ஆகியோர் இயக்கியிருக்கிறார்கள்.
அபூர்வா அணிலின் ஒளிப்பதிவும், ராதா ஸ்ரீதரின் எடிட்டிங்கும், பரத் சங்கரின் இசையும் படத்துக்குப் பக்க பலம்.
இதுபோல் அடிமை வாழ்வு, அடக்குமுறைக்கு உள்ளாகுதல் என மனசுக்குள் புழுங்கிக் கிடக்கும் பெண்களுக்காக எடுக்கப்பட்ட படம் என்றாலும் ஆண்கள் கண்டிப்பாக பார்த்துத் திருந்த வேண்டிய படம்.
ஒரு முறை பார்க்கலாம். தமிழில் இருக்கிறது.
-பரிவை சே.குமார்

1 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அமேசான் பிரைம் என்றால் பார்த்து விட வேண்டியது தான்...