மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 29 டிசம்பர், 2022

சினிமா : காரி (தமிழ் - 2022)

 காரி-

சல்லிக்கட்டை மையப்படுத்தி எடுத்திருப்பார்கள் என்று நினைத்துப் பார்த்தால் என்னென்னமோ கதைகள் பேசி இறுதியில் காரி மாட்டைக் களத்தில் இறக்கி விடுறாங்க... அம்புட்டுத்தான்.

இயக்குநர் சசிகுமாரை நாம் மீண்டும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் போது அவர் நாயகனாகவே தொடர்ந்து படங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்... நாயகனாக வெல்கிறாரா என்றால் ராமராஜனைப் போல் கிராமத்து நாயகனாக மக்கள் முன் நிற்கும் போது அவர் தோற்கவில்லை என்பதுடன் தோற்ப்பதில்லை என்றும் சொல்லலாம். இதிலும் சேதுவாக அடித்து ஆடியிருக்கிறார்.


கதையின் களம் இராமநாதபுர மாவட்டம் என்பதால் அந்தப் பேச்சு வழக்கில் வசனங்கள் சிறப்பாக இருக்கின்றன. கிராமங்களில் காலங்காலமாக இரு ஊருக்குப் பொதுவானதொரு கோவிலில் பிரச்சினைகள் என்பது இருப்பது வாடிக்கைதான். எங்கள் ஊர் கம்மாய்க்குள் இருக்கும் அய்யனாருக்கு எருதுகட்டு எல்லாம் நடந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்... எனக்குத் தெரிய எதுவும் நிகழவில்லை. சில முதல் மரியாதைப் பிரச்சினைகளால் கோவில் எடுத்துக் கட்டாமலே கிடக்கிறது. நாம் செய்யலாமே என்றால் அது அந்த ஊருக்கும் பொதுவான கோவில் என்ற பதிலே முன்நிற்கிறது. அய்யனார் கோவிலுக்குப் போகமுடியாத அளவுக்கு வேலிக்கருவைகள் சூழ்ந்து விட, அழகிய கற்கோவிலானான அதை என் மகன் போன்ற சிறுவர்கள் பார்க்கும் வாய்ப்புக்கிட்டுமா என்பது தெரியாது. அய்யனாருக்கான சிதறு காய் உடைக்கும் கல் கம்மாய்கரைக்கு வந்து இப்போது அரைகிலோ மீட்டருக்கு அங்கிட்டு இருக்கும் எங்க கருப்பர் கோவிலுக்குப் பின்னால் இருக்கும் கல் என்றாகிவிட்டது. 

அப்படித்தான் காரியூர் மற்றும் சிவனேந்தல் கிராமங்களுக்குப் பொதுவான கருப்பர்கோவில் இரு ஊர்ப்பிரச்சினையால் பூட்டிக் கிடக்கிறது. பராமரிப்பு இல்லாத கோவிலுக்குள் நெருஞ்சி முள் மண்டிக்கிடக்கிறது. ஊருக்கு வரும் பிரச்சினைகளைக் களைய கருப்பர் கோவிலுக்குத் திருவிழா நடத்தலாமென முடிவு செய்து இராமநாதபுரம் சமஸ்தானம் முன்பு பேசும்போது கோவில் நிர்வாகம் எங்களுக்கு வேண்டுமெனச் சிவனேந்தல் கேட்க, பிரச்சினை பெரிதாகும் போது சல்லிக்கட்டு நடத்தி அதில் வெற்றி பெறும் கிராமத்துக்கே நிர்வாகம் பார்க்கும் உரிமை என்று முடிவாகி, கையெழுத்தும் ஆகிறது.

ஒரு வருமானம் உள்ள கோவில் நிர்வாகத்துக்கு அடித்துக் கொண்டாலும் ஏற்புடையதாக இருக்கும். இது வறண்ட ஒரு கிராமத்தில், வைகை பாயும் - எங்கய்யா அது மதுரையைத் தாண்டி வந்துச்சு - கடைசி ஊரில், அதுவும் முள் மண்டிய ஆற்றுக்குள் கழிவுகளைக் கொட்ட - எங்க தேவகோட்டை விருசுழி ஆற்றுக்குள்ளதான் அம்புட்டுக் கழிவையும் கொட்டுறானுங்க - நினைக்கும் அரசாங்கத்துக்கு  எதிராகப் போராட்டம் வேறு நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சிறுகிராமத்துக் கோவில் நிர்வாகத்தைப் பார்த்து என்னய்யா பண்ணப்போறானுங்க, இருந்தாலும் மாலைமரியாதை, உரிமை என்பவற்றையெல்லாம் இன்னமும் கிராமங்கள் சுமந்து கொண்டுதான் இருக்கின்றன என்பதும் உண்மை.

ஒரு கிராமம் பதினெட்டு வகை - கலர் - மாடுகளை ஏற்பாடு செய்ய வேண்டும், இன்னொரு கிராமம் மாடு பிடிக்கும் பதினெட்டுக் குடும்பங்களை முன்னிறுத்த வேண்டும். ஒரு பக்கம் காரி மாடு கிடைப்பதில் சிக்கல் இன்னொரு பக்கம் நகரத்தில பந்தயக்குதிரைகளைக் கட்டிக் காத்துக்கொண்டு ஊர்ப்பக்கமே வராத ஒரு குடும்பத்தைக் கொண்டு வருவதில் சிக்கல், இதற்கிடையே நாட்டு மாடுகளின் உயிரணுவை எடுத்து வெளிநாட்டுக்கு அனுப்புவதுடன் அந்த மாடுகளைச் சமைத்து பெரும் வெளிநாட்டு முதலாளிகளுக்கு விருந்து வைக்கும் கார்ப்பரேட் முதலாளியின் கையில் சிக்கும் நாயகியின் காரி மாடு, அதற்குப் பின் எல்லாரும் ஒரிடத்தில் குவியும் சல்லிக்கட்டு என நகரும் கதையில் சல்லிக்கட்டு நடந்ததா..? காரி என்னானது..? கார்ப்பரேட் முதலாளி என்னானான்...? கோவில் நிர்வாகம் என்னானது..? குப்பை கொட்ட அரசாங்கம் அந்த ஊரைத் தேர்ந்தெடுத்ததில் இருந்து பின்வாங்கியதா..? என இத்தனை கேள்விக்கான பதிலையும் சொல்லி முடிவதே காரி.

அளவாத் தைத்த சட்டை எப்பவுமோ அழகுதான்... அப்படித்தான் இதுமாதிரி கதாபாத்திரங்களுக்கு சசிக்குமார் அளவெடுத்துத் தைத்த அழகு சட்டைதான், குதிரை பாராமரிப்பு மற்றும் பந்தய ஓட்டியாக இருப்பவர் கிராமத்திற்கு வந்து அந்த மக்களுக்காகப் போராடுவதுடன் சல்லிக்கட்டிலும் ஜொலிப்பதை காதல், சோகம், வேதனை என எல்லாம் கலந்து கட்டி அடித்து ஆடியிருக்கிறார்.கிராமத்து நாயகியாக, காரியை வளர்ப்பவளாக வரும் பார்வதி அருண் தமிழுக்குப் புதுவரவு என்றாலும் கிராமத்துப் பெண்ணுக்கே உரிய துடுக்கோடு நடித்திருப்பது அருமை. அதிலும் காரியை விற்றுவிட்டு வரும் அப்பனிடம் 'அது என்னைத் தேடுமே..?' என அழுமிடத்தில் பார்ப்பவர்களையும் சேர்ந்து அழ வைக்கும் நடிப்பு, நல்ல படங்கள் கிடைத்தால் தமிழில் ஒரு சுற்று வரலாம்.

சசிகுமாரின் அப்பாவாக, சமூகப்போராளியாக, குதிரைகள் பராமரிப்பாளராக வரும் ஆடுகளம் நரேன் கொஞ்ச நேரமே வந்தாலும் தனது கதாபாத்திரத்தைச் சிறப்பாக செய்திருக்கிறார். அதுவும் போட்டியில் வேண்டுமென்றே தோற்றுவிட்டு வரும் மகனிடம் 'அந்தக் குதிரையின் நம்பிக்கையைக் கொன்னுட்டியேடா...' எனப் பதறுமிடம் சிறப்பு.

சசிகுமாரின் தோழியாக வரும் அம்மு அபிராமி இல்லையென்றாலும் படத்துக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை, கார்ப்பரேட் வில்லனாய் வரும் ஜே.டி.சக்கரவர்த்தி, அவரின் மனைவியாக வரும் சம்யுக்தா ஆகியோர் பெரிய அளவில் வில்லத்தனம் செய்துவிடவில்லை. நாயகியின் அப்பாவாக வரும் பாலாஜி சக்திவேல், கிராமத்துத் தலைவர் நாகிநீடு, அப்பப்ப நகைச்சுவைத் தோரணம் கட்டும் ரெடின்கிங்க்ஸ்லி மற்றும் ராம்குமார் (சிவாஜியின் மகன்), பிரேம்,  நமோ நாராயணா, அருண்மொழித்தேவன் ஆகியோர் தங்கள் பாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

திருவிழா நடத்தினால் பிரச்சினை தீரும் என்பது கிராம மக்களின் நம்பிக்கை என்றாலும் அதை வைத்து எப்படிப் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என முடிவெடுக்க ஒரு படித்த மூளை தேவைப்படுவதால்தான் சசிகுமாரை நகரத்தில் இருந்து கிராமத்துக்கு இறக்கியிருக்கிறார் இயக்குநர். இங்கே சசிகுமாரை வரவைத்தது அவர்கள் கும்பிடும் கருப்பன் என்றாலும் அவர் அங்கு வரவேண்டும் என்பதற்காக சிறுபிள்ளையை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றான் உயிர் நண்பன் எனக் காட்டுவதெல்லாம் அம்மு அபிராமி எப்படித் தேவையில்லையோ அப்படித்தான் இதுவும் தேவையில்லை. குதிரையின் மரணத்தைத் தொடர்ந்த அப்பாவின் மரணத்தால் பாதிக்கப்பட்ட ஒருவன் மனமாற்றத்துக்காகத் தன் ஊரார் விரும்பி அழைத்ததின் பேரில் வருவதாய்க்கூட காட்டியிருக்கலாம்.

இமானின் இசையில் பாடல்களைவிட பின்னணி சல்லிக்கட்டுக்காளையாய் துள்ளுகிறது. படம் தொய்வில்லாமல் போகிறது என்றாலும் ஏகப்பட்ட பிரச்சினைகளை அள்ளிப் போட்டு அதற்கான தீர்வுக்காக ஓடும் போது எதையுமே அழுத்தமாகச் சொல்லாமல் போனது இயக்குநர் ஹேமந்த் சறுக்கிய இடமாய் மாறிவிட்டது என்றாலும் சல்லிக்கட்டை கையில் எடுத்த முயற்சிக்கும், சல்லிக்கட்டுக் காட்சிகளைப் பரபரப்பாகப் படமாக்கிய விதத்துக்கும் பாராட்டலாம்.

கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவும் சிவானந்தீஸ்வரனின் படத்தொகுப்பும் படத்துக்குப் பெரும்பலம்.


பிரின்ஸ் பிக்சர்ஸ்க்காக எஸ்.லெட்சுமணன் குமார் இப்படத்தைத் தயாரித்திருக்கிறார்.

படத்தில் நிறைய லாஜிக் ஓட்டைகள் இருக்கத்தான் செய்கிறது. நாயகியை முதன்முதலில் பார்க்கும் இடத்தில் அவர் முள்ளுக்குள் சிலுவையில் அறையப்பட்ட ஏசு நாதரைப் போல் நிற்கும் இடத்தில் எல்லாம் பரிதாபத்தைவிட எப்புடிய்யா நண்டு பிடிக்கப் போனவ சிலுவையில் தன்னை அறைஞ்சிக்கிட்டான்னுதான் சிரிப்பு வந்துச்சு. அதேபோல் கிராமத்துக்குள் வில்லனின் வருகையும் பயத்தைக் கொடுப்பதற்குப் பதில் பரிதாபப்படத்தான் வைத்தது.

மொத்தத்தில் காரி இன்னும் வேகமாகச் சீறியிருக்கலாம் என்றாலும் ஒருமுறை பார்க்கலாம்.

-பரிவை சே.குமார்.

4 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

புதிய படமா, பழைய படமா..  தெரியவில்லை.  OTT யில் கிடைத்தால் பார்த்து விடுவேன்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

விரிவான விமர்சனம்!!!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அவசியம் பார்க்கிறோம்...

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நல்ல விமர்சனம். உங்க ஊர்ப்பக்கம் இல்லையா?

வாய்ப்பு கிடைத்தால் பார்க்கிறேன், குமார்

கீதா