மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 21 டிசம்பர், 2022

மனசு பேசுகிறது : பரிவை படைப்புகள்

ரிவை-

எனக்கு எப்போதுமே எங்க ஊர்ப்பாசம் ரொம்ப அதிகம். இன்று வாழ்வின் நிமித்தம் வெளிநாட்டு வாழ்க்கை என்றாலும் ஊருக்குப் போகும் அந்த ஒரு மாதத்தில் தினமும் காலை அல்லது மாலை எங்க ஊருக்குப் போய் வீட்டில் இருக்கும் மரம், செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சி விட்டு அங்கிருப்பவர்களுடன் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு வருவதுண்டு. அந்தக் காற்றைச் சுவாசித்தாலே மனசுக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைத்தது போல் அத்தனை மகிழ்வாய் இருக்கும். இன்று பல மாற்றங்களை - குறிப்பாக விவசாயம் இழந்து, நாங்க நீந்தி விளையாண்ட கண்மாய் குளிக்க முடியாத அளவுக்கு மாற்றம் - அடைந்திருந்தாலும் நாம் ஓடித்திரிந்த அந்த ஊர் இன்னமும் மனசுக்குள் அப்படியேதான் இருக்கிறது.

ஒரு சிலரிடம் நீங்க எந்த ஊர் எனக் கேட்டால் தேவகோட்டை என்பதுடன் நிறுத்திக் கொள்வதுண்டு. தேவகோட்டையா இல்ல அதுக்குப் பக்கமா என்று அழுத்திக் கேட்டால்... அடுத்த பதிலாய் வடக்கே ரெண்டு கிலோ மீட்டர் என்பார்கள். இந்த ஊரா என நாம் ஒரு பேரைச் சொல்லிக் கேட்டதும் அதுக்குப் பக்கத்துல என்ற பதில் வரும்... நாம் விடாமல் இன்னும் அழுத்தினால் மட்டுமே பிறந்த ஊர் பெயரைச் சொல்லுவார்கள். தனது ஊர்ப் பெயரைச் சொல்வதற்கு ஏன் இவர்களுக்கு இத்தனை கஷ்டம்... எனத் தோன்றும். நானெல்லாம் முதல்ல எங்க ஊர்ப் பெயரைச் சொல்லி, அது எங்க இருக்கு என்றால் கண்டதேவி அல்லது தேவகோட்டையைச் சொல்லி விளக்குவதைத்தான் விரும்புவேன், ஒரு சிலரிடம் தவிர பெரும்பாலானோரிடம் அப்படித்தான் சொல்வேன்.



படிக்கும் போது பத்திரிக்கைகளில் வந்த கதை, கவிதைகள் எல்லாமே சே.குமார் என்ற பெயரில்தான் வந்திருக்கின்றன. ஒரு சில பத்திரிக்கைகளில் ஊர்ப்பெயரும் வருவதுண்டு. திருமணத்துக்குப் பின் நித்யாகுமார் என்ற பெயரில் ஒரு சில கதைகள் வந்ததுண்டு. கல்லூரியில் 'மனசு' கையெழுத்துப் பிரதி நடத்தியபோது ஆளுக்கொரு புனைப்பெயரில் எழுதினோம், அது கல்லூரியோடு காலாவதி ஆகிவிட்டது. அபுதாபி வந்தபின் 'பரிவை' சே.குமார் என்ற பெயர் எழுத்துக்கென நிலையானதாகிவிட்டது. அடைப்புக்குள் இட்ட பரிவையை அதிலிருந்து வெளியே கொண்டு வந்தது தசரதன்தான். 'எதிர்சேவை' வெளியான போது இப்படியே எழுதுங்கண்ணே என்று சொன்னார்.
பரிவை என்ற பெயரை எங்க ஊர்க்கார மச்சான் ஒருவர் - இப்போது உயிருடன் இல்லை - எப்போது அவர் பெயரை எழுதினாலும் அதன் கீழே எழுதுவதுண்டு. அப்போதெல்லாம் இவர் ஏன் பெயரைச் சுருக்கி எழுதுகிறார் என்று தோன்றும், ஒருமுறை கேட்டபோது சும்மாதான் எழுதினேன்... ஆமா இது அழகா இருக்குல்ல... அதான் அப்படியே எழுதிப் பழகிட்டேன் எனச் சிரித்தார். இந்தச் சுருக்கதையே நான் என் பெயருக்கு முன் கொண்டு வந்தபோதுதான் அந்த அழகு எனக்குத் தெரிந்தது. சமீபத்தில் முதல்முறை சந்தித்த ஒருவரிடம் குமார் என அறிமுகம் செய்துகொண்டபோது பரிவைதானே நீங்க எனக் கேட்டார். ஆமாம் பரிவை எனக்கொரு அடையாளமும் ஆகிப் போனது.
புதிய சிறுகதைத் தொகுப்புக்கு 'பரிவை படைப்புகள்' என்ற பெயர் தாங்கிய அட்டைப் படத்தை மார்கழி-1ம் தேதி, எங்கள் ஊர் மாரியம்மன் கோவிலில் எங்கள் வீட்டின் உபயமாக திருப்பள்ளியெழுச்சி - நான் இங்கே தூங்கத்தில் - சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த வேளையில், அந்த அதிகாலையில் தசரதன் அனுப்பித் தந்த போது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. இப்படியொரு தலைப்புத் தாங்கி எனது புத்தகம் வரும் என்று கனவில் கூட நினைக்கவில்லை. நினைப்பதெல்லாம் நடப்பதில்லை என்றாலும் நினைக்காதது நடக்கும்தானே... அதுதான் எனக்கு நிகழ்ந்தது.
இந்த முறை நான் அனுப்பிக் கொடுத்த கதைகளில் பெரும்பாலானவை கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையைப் பேசுவதாய் அமைந்ததால் இப்படி ஒரு பெயரை அவர் முடிவு செய்திருக்கலாம். எது எப்படியோ பரிவையை முன் அட்டையில் நிறுத்தி வைத்து அழகு பார்த்திருக்கிறது கலக்கல் ட்ரீம்ஸ். உண்மையைச் சொன்னால் அட்டையில் என் படத்தைப் பார்த்ததும் 'இதெல்லாம் எதுக்குய்யா...' என வெட்கமே முன் நின்றது என்றாலும் 'நல்லாயிருக்கு... இதுவே இருக்கட்டும்' என்ற வார்த்தை என் பேராசான் வீட்டில் இருந்து வந்தபோது அந்த வெட்கம் புன்னகையாக மாறியது.
பரிவை என்பதை கல்லூரிக் காலத்தில் இருந்து மனசுக்குள் தூக்கிச் சுமந்தாலும் இங்கு வந்து வலைப்பூவில் எழுத ஆரம்பித்த 2009-ல் இருந்துதான் என் பெயருக்கு முன் போட ஆரம்பித்தேன். அதன் பின் வலைப்பூவில், இணைய இதழ்களில் என எதில் எழுதினாலும் பரிவையை முன் சேர்த்தே என் பெயரை எழுதினேன்.
நினைவு தெரிந்ததில் இருந்தே 'சே.குமார்' எனத்தான் எழுதி வந்தேன், தமிழ் மீதான ஆர்வம் என்றெல்லாம் பொய் சொல்ல விரும்பவில்லை ஏன்னா கதை எழுத ஆரம்பித்ததே கல்லூரியின் முதலாமாண்டு இறுதியில்தான்... என்ன காரணமோ தெரியவில்லை. மற்றவர்கள் எழுதுவது போல் S.குமார் என எழுதுவதைவிட சே.குமார் என எழுதுவதையே விரும்பினேன். பழனி ஐயா மட்டும் எப்போதும் எஸ்.குமார் எனத்தான் எழுதுவார்கள். இந்த முறை கொடுத்த புத்தகத்தில் கூட அப்படித்தான் எழுதிக் கொடுத்தார்கள்.
எங்கள் ஊர்ப் பெயரான 'பரியன் வயல்'தான் பரிவை என்ற அடைமொழியாய் என் பெயருக்கு முன்னே. அதே பெயர் எனது நாலாவது புத்தகத்துக்குத் தலைப்பாய் அமைந்ததெல்லாம் வரம் என்றுதான் சொல்ல வேண்டும்.
வீட்டில், நட்பில், இணையத்தில் எல்லாம் குமார், பரிவை என்ற பெயர்தான் அழைப்புப் பெயர் என்றாலும் எங்கள் அமீரக எழுத்தாளர்கள் வாசகர்கள் குழுமத்தில் மட்டும் நான் 'நித்யா குமார்' ஒரு சிலருக்கு 'நித்யா'.
ஆமா எனக்குப் பல பேர் இருக்கு... :)
பரிவையின் கதைகளை என்னால் முடிந்தவரை எழுதிக் கொண்டேயிருப்பேன்.
-பரிவை சே.குமார்.

3 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை... அருமை குமார்...

ஸ்ரீராம். சொன்னது…

ஆம். பரிவை குமார் என்றால்தான்ஸ் சட்டென தெரிகிறது!

துரை செல்வராஜூ சொன்னது…

பரிவையின் கதைகள் தொடரட்டும்...

எத்தனையோ நாட்களுக்குப் பின் இங்கே...

வாழ்க.. வாழ்க...