மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 23 டிசம்பர், 2022

சினிமா : குமாரி ( மலையாளம் - 2022)

குமாரி-

தன் குடும்பத்தாரின் விருப்பத்தின் பேரில் சாபம் பெற்ற தம்புரான் குடும்பத்து மருமகளாகிறாள் தாய், தந்தையை இழந்து தன் அண்ணனுடன் மாமா வீட்டில் வாழும் குமாரி. அவள் திருமணாகிப் போகும் போதே ஒரு கிழவி அந்த ஊரில் அடியெடுத்து வைக்காதே என்று சொல்லிச் செல்கிறாள். அதேபோல் அவளின் அண்ணன்காரனுக்கும் தங்கைக்கு இப்படியொரு இடத்தில் மணம் முடிப்பது பிடிக்கவில்லை என்றாலும் விதியின்படியே நிகழ்வு என்பதாய் அவளின் பயணம் தொடர்கிறது.
இல்லிமலைச் சாத்தானுக்கு இஷ்டப்பட்ட மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் தங்களுக்குச் சொந்தமான குளத்தில் இறங்கியதற்காக பதினைந்து தலைமுறைக்கு முன்னால் அந்தக் குடும்பத்தைச் சார்ந்த தம்புரான் ஒருவர் அடித்துக் கொள்கிறார். அதனால் அந்தக் குடும்பம் சாபத்துக்கு உள்ளாவதுடன் அந்தத் தம்புரானின் உடம்பில் மாற்றங்கள் வந்து சாவே வராமல் கிடந்து அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார். அதிலிருந்து மீள வேண்டுமென்றால் அந்தக் குடும்பத்து முதல் ஆண் வாரிசைத் - ஒன்றா இரண்டா என்ற கணக்கெல்லாம் இல்லை - தனக்குப் பலியாகக் கொடுக்க வேண்டும் எனக் கேட்க, அதன்படி பலிகளும் தொடர்கின்றன. பலிக்கான வயது என்பதெல்லாம் நிர்ணயிக்கப்படவில்லை என்பதை எழுபது வயதில் ஒருவர் இறப்பதை வைத்து நாம் புரிந்து கொள்ளலாம்.



குமாரி வாக்கப்பட்டு வரும் வீட்டில் அவளது கணவனுக்கு அண்ணன் ஒருவன் இருக்கிறான். அவனுக்கு வெளியில் தொடுப்பும் இருக்கிறது. இதுவரை குழந்தை இல்லை. குமாரியின் கணவனோ மனநலம் குன்றியவனைப் போல் இருக்கிறான், சிரிப்பற்ற முகமும் , வெருண்டு விழிக்கும் கண்களுமாய் இருக்கிறான். ஏன் இப்படி இருக்கிறாய் என்ற குமாரியின் கேள்விக்கு என்னை வீட்டில் அப்படியே வளர்த்து விட்டார்கள் என்று சொல்கிறான்.
அந்த வீட்டிலும் அதையொட்டி இருக்கும் கோவிலும் அதற்குப் பின்னே இருக்கும் காட்டுப்பாதையும் ஏதோ ஒன்றை தனக்கு உணர்த்திக் கொண்டிருப்பதை உணரும் குமாரி, அதன் பின்னே ஒளிந்து கிடக்கும் மர்மம் என்ன என அறிந்து கொள்ள முயற்சிக்கிறாள் குமாரி. அந்த நேரத்தில் அவள் கர்ப்பமாகிறாள்.... அவளின் கர்ப்பத்தைக் கொழுந்தன் விரும்பவில்லை.... அதற்கு நரபலி கொடுக்க வேண்டுமே என்ற நல்ல எண்ணமெல்லாம் இல்லை, குழந்தை பிறந்தால் தனக்கு வரவேண்டிய தம்புரான் பதவியும் மக்களின் மரியாதையும் இல்லாமல் போய்விடுமே என்ற எண்ணம்தான்.
கணவனோ பிறக்கப் போகும் ஆண் குழந்தை தன்னை இந்தக் குடும்பத்தின் தம்புரானாக மாற்றப் போகிறான், இதுவரை அடிமை போல் வளர்க்கப்பட்ட தான் இனி இந்த வீட்டின், ஊரின் எஜமானன் என்ற எண்ணத்தோடு பிறக்க இருக்கும் குழந்தையை எதிர் நோக்கிக் காத்திருக்கிறான்.
இல்லிமலைச் சாத்தானின் மக்களான அந்தக் காட்டுவாசி மக்களுக்கு குமாரியின் மீது அவள் வயிற்றில் இருக்கும் கருவின் மீதும் அதீத நேசம் இருப்பதால் அக்குழந்தை தங்களை ரட்சிக்க வரும் தெய்வமென நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்தக் குழந்தை பி|றந்ததும் என்ன நடந்தது..? யாரோட எண்ணம் ஈடேறியது என்பதை எல்லாம் படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
இடைவேளை வரை அமுக்குணி போலச் சுற்றி வரும் குமாரியின் கணவன் அதற்குப் பின் நானே தம்புரான் என்பதாய் வலம் வரும்போது மிகவும் குரூரமான மனிதனாக மாற, வயிற்றில் குழந்தையுடன் தினம் தினம் பயத்தோடு வலியை அனுபவிக்கும் குமாரி அந்தப் பயத்தை இறுதிக் காட்சி வரை மிகச் சிறப்பாக முகத்தில் காட்டியிருக்கிறார்.



இது ஒரு புராணக் கற்பனைப் படம் என்பதால் ஒளிப்பதிவும் (ஆப்ரஹாம் ஜோசப்) இசையும் (ஜேக்ஸ் பிஜோய்) படத்தொகுப்பும் (ஸ்ரீஜித் சாரங்) படத்தை வேறோரு தளத்துக்குக் கொண்டு சென்று நம்மையும் ஈர்க்கிறது.
இந்தப் படத்தில் குமாரியாக ஐஸ்வர்யா லெட்சுமி அவர் கணவனாக, இளைய தம்புரான ஷைனி டாம் சாக்கோவும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ராகுல் மாதவ், சிவாஜித் பத்மநாபன், ஸ்வாசிகா, சுரபி லட்சுமி,ஸ்படிகம் ஜார்ஜ்,தன்வி ராம், சாந்தகுமாரி, ஸ்ருதி மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
த பிரஷ் லைம் சோடாஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தின் கதைய நிர்மல் சகாதேவ் மற்றும் ஃபசல் ஹமீத் இருவரும் இணைந்து எழுதியிருக்க, நிர்மல் சகாதேவ் இயக்கியிருக்கிறார்.
படம் நகர்ந்து செல்லும் கதைகளத்துக்கு இறுதிக்காட்சி என்பது யானைக்குச் சோளப்ப்பொறி போட்டது போல்தான் என்றாலும் பார்க்கலாம், போரடிக்கவில்லை.
-பரிவை சே.குமார்.

3 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

அமேசானில் இருக்கிறதா என்று பார்க்கிறேன்!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரைட்டு...

'பரிவை' சே.குமார் சொன்னது…

நெட்பிளிக்ஸ், அமேசான் எல்லாவற்றிலும் இருக்கும் ஸ்ரீராம் அண்ணா.

**

நன்றி தனபாலன் அண்ணா.