மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 30 டிசம்பர், 2014கள்ளிச் செடிகள்

"என்ன கஸ்தூரி மாமியாளும் மருமகளும் எங்கயோ கிளம்புறீங்க போல..?" எதிர் வீட்டு வாசலில் நின்று கேட்டாள் பார்வதி. 

"ஆமா பார்வதி... வியாழக்கிழமையில்ல சிவன் கோவிலுக்குப் போயிட்டு தட்சிணாமூர்த்திக்கு கொண்டக்கடலை மாலை போட்டுட்டு வரலாம்ன்னு போறோம்..."

"ம்... நானும் வாரேன்..."

"சரி வா..."

"மருமககூட கோயில், கடைவீதியின்னு போக ஆரம்பிச்சிட்டே..."

"ஆமா பார்வதி... அவ மதுரையில வளர்ந்தவ... நம்ம ஊர்ல அவளுக்கு என்ன பொழுது போக்கு இருக்கு சொல்லு... அப்பாவும் மகனும் வேலைக்குப் போயிட்டு லேட்டாத்தான் வர்றாங்க... நாங்க ரெண்டு பேரும்தான் வீட்டுல இருக்கோம். தாரிணிக்கு டிவியில அழுகாச்சி நாடகமெல்லாம் பார்க்கப் பிடிக்காது. அதுவும் விளக்கு வைக்கிற நேரத்துல அழுகிற சீரியல் வீட்டுல போட வேண்டான்னு சொல்லிடுவா... இப்ப அவளோட சேர்ந்து நானும் சீரியல் பார்க்கிறதை விட்டுட்டேன்..."

"அது சரி மருமகளுக்காக மாமியா மாறியிருக்கே... நல்லாயிருக்குடி..."

"இதுல என்ன இருக்கு... அவளுக்கும் ஒரு வேலை கிடைச்சிட்டா பரவாயில்லை... அதுவரைக்கும் அவளுக்கு கொஞ்சமாவது பொழுது போகணுமின்னா இந்த மாதிரிப் போனாத்தானே ஆச்சு..."

"ம்... சரித்தான்..."

கோவிலில் சாமி கும்பிட்டு பிரகாரத்தில் உக்கார்ந்தார்கள். "ஏன்டியம்மா... புதுப்பொண்ணு... போய் தீர்த்தம் எடுத்துக்கிட்டு வா... நாங்க இங்க பேசிக்கிட்டு இருக்கோம்."

"சரி ஆண்டி..." என்றபடி தாரிணி கிளம்ப, "என்னடி நீ மருமகளை மருமகளா நடத்தாம இப்படி பெத்தபிள்ளையைக் கூட்டிக்கிட்டுத் திரியிற மாதிரி திரியிறே..."

"அவளும் ஒரு பொண்ணுதானே... எதுக்கு இப்ப இந்தப் பேச்சு..?"

"அதுக்காக... மருமகளை மருமகளா நடத்தலைன்னா நாளைக்கு நம்மளை மதிக்க மாட்டாளுங்க... எங்க வீட்ல மருமக நான் நில்லுன்னா நிப்பா... உக்காருன்னா உக்காருவா.... உனக்குத்தான் தெரியுமே..."

"இங்க பாரு பார்வதி... என்னோட மாமியார் என்னைய மக மாதிரித்தான் பார்த்துக்கிட்டாங்க... அதனால அவங்களுக்கோ எனக்கோ எந்த பாதிப்பும் வரலை... சொல்லப்போனா எங்க அம்மாக்கிட்ட சொல்லாததைக் கூட என் மாமியார்க்கிட்டதான் சொல்வேன்... அவங்ககிட்ட வளர்ந்த எனக்கு இப்போ தாரிணியை மகளா, தோழியாத்தான் பார்க்கத் தோணுதே தவிர அவ மருமகள்னு ஒரு வட்டத்துக்குள்ள வைக்க முடியல..."

"நீ இதுக்காக பின்னாடி வருத்தப்படுவே..."

"அன்னைக்குப் பார்த்துக்கலாம்... தாரிணி வர்றா... வா போகலாம்..."

"தாரிணி அந்த சட்னியை எடேன்..." என்றான் அருண்.

"இந்தாத்தானே இருக்கு... எதுக்கு சாப்பிடுறவளை டிஸ்டர்ப் பண்ணுறே... நீ சாப்பிடும்மா" என்றாள் கஸ்தூரி.

"அப்பா நாம இந்த வீட்டை வாடகைக்கு விட்டுட்டு இன்டர்சிட்டிக்குள்ள ஒரு பிளாட் பார்த்துக்கிட்டு போயிடலாம்..."

"இப்ப இந்த வீட்டை விட்டுட்டுப் போக அப்படி என்னப்பா அவசரம்?" இட்லியை சட்டினியின் தோய்த்தபடி கேட்டார் தணிகாசலம்.

"இல்லப்பா மனுசங்க சரியில்லை.... நல்லவங்க மாதிரி பழகிக்கிட்டு நஞ்சை விதைக்கிறாங்கப்பா..."

"அப்படி என்னத்தைப்பா விதைச்சாங்க...?" என்று கேட்ட தணிகாசலம் சிரித்தபடி இட்லியை வாயில் வைத்தார்.

"இல்லப்பா ரெண்டு மூணு நாளாவே டிரைன்ல வரும்போது பக்கத்து வீட்டு மகாதேவன் மாமா எதாவது சொல்லிக்கிட்டே வருவாரு.... நான் எதையும் பெரிசா எடுத்துக்கிறதில்லை... ஆனா இன்னைக்கு..."

"என்னத்தை அப்படிச் சொல்லப் போறாரு... விடு...  பெரிய மனுசன் அவரு எதாவது உன்னோட நல்லதுக்கு சொல்லியிருப்பாரு... இதுக்காக வீட்டை மாத்தனுமா என்ன?"

"இல்லப்பா... எதுக்கு அப்பா அம்மா கூட இருந்துக்கிட்டு... ஒரு லோனக்கீனைப் போட்டு சிட்டிக்குள்ள ஒரு பிளாட்டை வாங்கிட்டா வேலைக்குப் போக வர ஈசியா இருக்கும்... அப்படியே தாரிணிக்கு ஒரு வேலை வாங்கிட்டா லைப்பு செட்டிலாகும்ல.... அப்படின்னு சொல்றாரு..."

"அவரு சொன்னது சரிதானேடா... உன்னோட லைப்பை நல்லவிதமா அமைச்சிக்கச் சொல்றாரு.... இதைத் தப்புங்கிறே... எனக்கும் அம்மாவுக்கும் இந்த இடம், இந்த மக்கள் பழகிட்டாங்க... ரிட்டையர்மெண்டுக்கு அப்புறம் என்னால சிட்டிக்குள்ள இருக்க முடியாது. அதனால நீயும் தாரிணியும் சிட்டிக்குள்ள தனியா இருக்க மாதிரி ஒரு பிளாட் பார்க்கலாம்..."

"சும்மா இருங்கப்பா... அவருக்கு எதுக்கு இந்தப் பொழப்பு... நான் இப்போ எங்க அப்பா அம்மாவோட இருக்கிறது பிடிக்கலைன்னு சொன்னேனா என்ன..."

"நீ சொன்னேன்னு நாங்க சொன்னோமா?"

"இல்லப்பா... இவரு மட்டுமில்ல.... இங்க இருக்க எல்லாருமே எதாவது ஒரு விதத்துல எனக்குள்ள தனிக்குடித்தன ஆசையை ஊட்டப் பார்க்கிறாங்க..."

"ஆமாங்க தம்பி சொல்றது உண்மைதான்... இன்னைக்கு பார்வதி எங்க கூட கோயிலுக்கு வந்தா அவளுக்கு நானும் தாரிணியும் ஒண்ணா இருக்கிறது பிடிக்கலை... தாரிணியை தீர்த்தம் பிடிக்கப் போகச் சொல்லிட்டு  எங்கிட்ட மருமகளை மருமகளா நடத்துன்னு உபதேசம் பண்ணுற... மகளா நடத்துனா பின்னாடி அனுபவிப்பேனாம்..."

"சரி சொன்னா சொல்லிட்டுப் போறாங்க... அதுக்கென்ன...?"

"அவ மருமகளை நடத்துற மாதிரி நடத்தணுமாம்..."

"இப்ப என்ன சொல்ல வர்றே..?"

"அருண் சொல்ற மாதிரி வேற பக்கம் போயிடலாம்..."

"வேற பக்கம் பொயிட்டா...."

"இந்த மாதிரி ஆளுகளைவிட்டு தள்ளியிருக்கலாமே" வேகமாகச் சொன்னான் அருண்.

"இங்க பாரு அருண்... தேனீ கூடு கட்டுதுங்கிறதுக்காக வீட்டையா கொளுத்த முடியும்... உங்கம்மாவை எங்கம்மா எப்படிப் பாத்துக்கிட்டாங்களோ அதைவிட ரொம்ப பாசமா தாரிணிக்கிட்ட நடந்துக்கிறா... ஆனா அந்தப் பார்வதி அப்படியில்லை... அவ மாமியாக்கிட்ட எவ்வளவு கொடுமையை அனுபவிச்சான்னு நானும் அம்மாவும் பார்த்திருக்கோம்... இப்ப அவ மருமகளை மகளா நினைக்க ஆசைப்பட்டாலும் தான்பட்ட வலியை மருமக மூலமாப் போக்கப் பார்க்கிறா... ஆனா அவ மருமக அவளுக்கே தெரியாம புருசனை வெளிய கொண்டு போக ஏற்பாடு பண்ணிட்டா..."

எல்லாரும் அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தனர். "மகாதேவனுக்கு மகன் கல்யாணம் பண்ணுன உடனே வெளிநாட்டுக்கு மனைவியோட போய்ட்டான். அந்த வருத்தம்... எல்லாருக்கும் எதாவது ஒரு வகையில பாதிப்பு இருக்கலாம். அதனால நாம ஒண்ணா இருக்கிறது அவங்களுக்கு வயித்தெரிச்சலா இருக்கலாம்.  இங்க இருந்து வேற இடம் போனாலும் இது போல மனிதர்கள் இருக்கத்தான் செய்வாங்க... நம்ம உண்டு நம்ம வேலை உண்டுன்னு போய்கிட்டே இருப்போம்.. நல்லதைக் கெட்டதை ஆராயாம நம்ம வழியில நடந்தா பிரச்சினையே இல்லை... அதுக்காக அவங்களை குத்தம் சொல்லக்கூடாது. அவங்களோட பிரச்சினைகள் அவங்களை இப்படி பேச வைக்குது சரியா..."

"ஆமாங்க... எதுக்கு நாம போகணும்... கள்ளிச்செடிக்குப் பயந்து காம்பவுண்டை இடிக்கவா முடியும்.." என்றாள் கஸ்தூரி.

"அதானே... அம்மா சொல்றது சரிதானே... நீங்க சொல்றதும் உண்மைதானேப்பா... அவங்க பேசினா பேசட்டும்... நமக்குன்னு சுய சிந்தனை இருக்குல்ல..." இது அருண்.

"என்னம்மா நீ ஒண்ணும் சொல்லலையே... தனியா இருக்கணும்ன்னா சொல்லு சிட்டிப்பக்கம் ஒரு பிளாட் பார்த்திருவோம்... சண்டேஸ்ல இங்க வாங்க... சந்தோஷமா ஆக்கி சாப்பிடுவோம்... என்ன சொல்றே...?"

"ஏம்ப்பா... உங்களுக்கு நாங்க டிஸ்டர்ப்பா இருக்கோமா என்ன... எங்களை விரட்டப் பார்க்கிறீங்க... எனக்கு இன்னொரு அப்பா அம்மா கிடைச்சிருக்காங்க... அப்புறம் நாங்க எதுக்கு உறவுகளைப் பிரிஞ்சு புறாக்கூண்டுக்குள்ள அடையணும்... சுதந்திரமா உங்க கூடவே இருக்கோமே" என்றாள் தாரிணி.

"ஆஹா... எம் மருமவ.... இல்லயில்ல மவ அடிச்சா பாரு சிக்ஸர்... இதுதான் வேணும்... கஸ்தூரி இன்னும் ரெண்டு இட்லி வையி... மனசுக்கு சந்தோஷமா இருக்கு" என்று தணிகாசலம் சொல்ல "அம்மா எனக்கும்  வையிங்க... சட்னி நல்லாயிருக்கு" என்றான் அருண். கஸ்தூரியும் தாரிணியும் சிரித்துக் கொண்டனர்.
-'பரிவை' சே.குமார்.

24 கருத்துகள்:

 1. வணக்கம்
  உரையாடல் அற்புதம் அரமையாக உள்ளது வாழ்த்துக்கள்.த.ம2
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. தணிகாசலம் போன்றோர்களால்தான் இன்னும் கூட்டுக்குடித்தனம் வாழ்ந்து கொண்டு இருக்கிறது அருமை நண்பரே....
  நண்பரே கள்ளிச்செடி என்ற பெயரில் நானும் ஒன்று எழுதி வத்திருக்கிறேன்....
  தமிழ் மணம் 1

  பதிலளிநீக்கு
 3. வாவ்..இந்த மாதிரி இருக்கும் பண்பான குடும்பத்தை சந்திக்க வேண்டுமே என்கிற ஆவல் மேலிடுகிறது

  பதிலளிநீக்கு
 4. அருமை...

  கள்ளிச்செடிக்குப் பயந்து காம்பவுண்டை இடிக்கவா முடியும்...? அட...! புது பழமொழி...!

  பதிலளிநீக்கு
 5. புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் நண்பரே

  பதிலளிநீக்கு
 6. கூட்டுக் குடும்பம் வாழ்க!..

  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 7. மிக அருமையான கதை! கள்ளிச்செடிகள் எங்கும் உண்டு! அதற்கு தகுந்த மரியாதையை கொடுத்தால் நமக்கு நிம்மதிதான்!

  பதிலளிநீக்கு
 8. மனசுக்கு சந்தோஷமா முடிச்சிருக்கிங்க.
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 9. வணக்கம் சகோதரரே!

  ஒற்றுமையான குடும்பத்தின் சிறப்பை உணர்த்தும் நல்ல கதை.!
  நல்ல முடிவை வீட்டில் அனைவரும் கலந்து பொறுமையாகப் பேசி எடுத்தால் நன்றாக இருக்குமென்று, ௬ட்டுக்குடும்பத்தின் சிறப்புடன் கதையை முடித்திருக்கும் விதம் வெகு அருமை!
  பாராட்டுடன் வாழ்த்துக்கள்.

  தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும், என் இதயம் நிறைந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  இனிய இப்புத்தாண்டில், அனைவரும் அனைத்து வளங்களையும் பெற இறைவனை மனமாற பிரார்த்திக்கிறேன்.

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 10. அண்ணா , தங்களுக்கும் , குடும்பத்தார்க்கும் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 11. ந்ல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்ற பாடல்தான் நினைவுக்கு வருகின்றாது நண்பரே! அருமையான கதை...

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  அன்புடனும் நட்புடனும்

  துளசிதரன், கீதா

  பதிலளிநீக்கு
 12. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோதரரே!

  பதிலளிநீக்கு
 13. நல்லதொரு குடும்பம்.... பல்கலைகழகம்!

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 14. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 15. ஆஹா இனிமையான குடும்பம்!

  இனிய புத்தாண்டு வாழ்த்துகள் சகோ

  பதிலளிநீக்கு
 16. நிறை மங்கலம் நீடு புகழ் பெற்று நல்வாழ்வு வாழ இறைவன் நல்லருள் பொழிவானாக!..
  அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..

  பதிலளிநீக்கு
 17. தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 18. இனிய புத்தாண்டு 2015 வாழ்த்துகள், நண்பர் குமார்!!!

  பதிலளிநீக்கு
 19. நல்ல கதை குமார்.

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு

 20. பொலிக.. பொலிக.. புத்தாண்டு!

  புத்தம் புதுமலராய்ப் புத்தாண்டு பூக்கட்டும்!
  சித்தம் செழித்துச் சிறக்கட்டும்! - நித்தமும்
  தேனுாறும் வண்ணம் திளைக்கட்டும்! செந்தமிழில்
  நானுாறும் வண்ணம் நடந்து!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  பதிலளிநீக்கு
 21. நல்லதொரு குடும்பம்.
  புத்தாண்டு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...