மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 6 டிசம்பர், 2014

தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 11)

முந்தைய பகுதிகள் : 


பத்தாவது பகுதியின் இறுதியில்...

"என்னப்பா... சொல்லு..." அவனுக்கே உரிய பாசத்தோடு கேட்டான் மணி.

"உங்கிட்ட கொஞ்சம் பேசணும்... முடியுமா?" எப்பவும் போல் நலம் விசாரிக்காமல் நேரிடையாக கொஞ்சம் கோபமாகக் கேட்டான் குமரேசன்.

"என்னடா எதாவது பிரச்சினையா...? குரல் ஒரு மாதிரி இருக்கு...? என்னாச்சு...?" பதற்றாமாய்க் கேட்டான் மணி.

இனி...

'என்னடா ஏதாவது பிரச்சினையா..?' என அண்ணன் கேட்டதும் "ஆமா உம்பொண்டாட்டிக்கு வேற வேல... ஏதாவது ஏழரை இழுக்குறதுதானே பொழப்பா இருக்கு" என்றான் கடுப்பாக.

"என்ன... என்ன பிரச்சினை... யார்க்கிட்ட பிரச்சினை?" பதற்றமாய்க் கேட்டான் மணி.

"ம்... நீங்க எடம் வாங்குனது அப்பாவுக்குத் தெரிஞ்சி அவரு போன் பண்ணிக் கேட்டாராமாம்..."

"அவருக்கு எப்படித் தெரியும்..?"

"அது எனக்கென்ன தெரியும்... உம்பொண்டாட்டி கேட்ட மாதிரி கேக்குறே..? அவரு கேட்டா அதுக்கு நானா கெடச்சேன்... நாந்தேன் சொல்லிப்புட்டேன்னு போனைப் பண்ணி கத்துது... இன்ன வார்த்தையின்னு இல்ல... மயிரு மட்டையின்னு... இம்புட்டு பேசுனதுக்கு வேற யாராவாச்சும் இருந்திருந்தா நடக்கிறதே வேற... அண்ணன் பொண்டாட்டியாப் போச்சு..." டென்ஷன் குறையாமல் பேசினான்.

"அவருக்கு எப்படி தெரியுமின்னு தெரியலை... அவரு கேட்டா எங்கிட்ட சொல்லாம உங்கிட்ட எதுக்குடா சண்டைக்கு வரணும்... அவளுக்கு அறிவு இல்லையா என்ன..."

"இங்க பாருண்ணே... என்னால முடியாதுங்கிறதுக்கு காரணத்தையும் சொல்லிட்டேன்... அபிதான் அவ அப்பாக்கிட்ட பேசி வாங்கிக் கொடுத்தா... செஞ்சதை சொல்லிக் காமிக்கிறவ அவ கிடையாது. அப்பாக்கிட்ட உன்னையச் சொல்லச் சொன்னதுக்கு மாட்டேன்னு சொல்லிட்டே.... அதுக்கப்புறம் நா போயிச் சொல்ல... கிறுக்கனா என்ன... எனக்கு போட்டுக் கொடுக்கிற புத்தி கிடையாது... "

"சரி விடுடா.... உன்னையப் பத்தி எனக்குத் தெரியும்... அவ பேசினதுக்கு நா மன்னிப்புக் கேட்டுக்கிறேன்..."

"ஏய்... என்னண்ணே நீயி... எனக்கிட்ட மன்னிப்புக் கேட்டுக்கிட்டு... அதோட பேச்சு சரியில்லை... இது உனக்குத் தெரியாம இருக்கக் கூடாதுன்னுதான் உங்கிட்ட சொன்னேன்... அதுக்கிட்ட போயி சண்டை கிண்டை போடாதே... என்ன... "

"சரிடா... எல்லாருமாச் சேந்துதான் மாமன் பொண்ணுன்னு கொண்டாந்தோம்... ஆனா அவ இப்படியிருப்பான்னு தெரியாமப் போச்சே..."

"சரி... சரி... இனி வருந்திப் பாரம் சுமந்து என்னாகப் போகுதுண்ணே... குடும்பத்துக்கு ஏத்த பொண்ணுன்னு கொண்டு வந்தோம்... மாமா குணத்துல பாதி இல்லை... விடு... மகாவுக்காக எல்லாத்தையும் அனுசரிச்சித்தான் ஓட்டணும்..."

"அதுக்காக... அவ செய்யிறதை எல்லாம் ஏத்துக்கச் சொல்றியா?"

"அப்படிச் சொல்லலை... அவங்களை மெதுவா மெதுவாச் சொல்லி திருத்தப்பாரு..."

"அவ என்ன பச்சக்கொழந்தயா... மண்டை மண்ணுக்குள்ள போறவரைக்கும் அவள்லாம் திருந்தமாட்டா"

"டென்ஷனாகாதே... அப்பாக்கிட்ட கூப்பிட்டு எதாவது சொல்லி சமாளிக்கப்பாரு... நா அப்பறமா பேசுறேன்" என போனை வைத்தான்.

"சுந்தரி... ஓம்பெரிய தம்பி காரைக்குடியில வீட்டெடம் வாங்கியிருக்கானாம்..." கேட்டபடியே வீட்டிற்குள் நுழைந்தான் அழகப்பன்.

"ஆமா...அவனுக்கிட்ட எங்கே அம்புட்டுக் காசு இருக்கு... எவனாச்சும் சின்னவன் வாங்கினதை பெரியவன்னு சொல்லியிருப்பானுங்க..." அடுக்களையில் இருந்து முந்தானையில் கையைத் துடைத்தபடி சொல்லிக் கொண்டு வந்தாள் சுந்தரி.

"ஆமா... அவனுக்கிட்ட கொட்டிக் கெடக்காக்கும்... பாவம் வீட்டுக்கு கடன் வாங்கி கட்டிப்புட்டு அல்லாடுறான்... மணிப்பயதான் அவனோட மச்சினன் வீட்டுக்குப் பக்கத்துல எடம் வாங்கியிருக்கானாம்..."

"சின்ன மச்சினனை மட்டும் சொல்ல விடமாட்டீங்க... சரி மணியா வாங்கியிருக்கான்..? அம்புட்டுக்காசுக்கு என்ன பண்ணியிருப்பான்...?"

"அதான் எந்தங்கச்சி இருக்காளே... ஆத்தா சித்ரா... அவ அவனைப் பிச்சிப்பிடுங்கி எங்கயாச்சும் வாங்க வச்சிருப்பா...."

"யாரு சொன்னா?"

"டவுனுக்குள்ள மாமாவைப் பார்த்தேன்... அவருக்கும் தெரியாதாம்... ஆளுக சொல்லித்தான் தெரியுமாம்... உடனே போன் பண்ணினா அந்தப்புள்ள மோசமாப் பேசிருச்சாம்..."

"அவளுக்கு எம்புட்டுத் திமிரு..?"

"விடு..விடு... எனக்கு அதெல்லாம் வருத்தமில்ல.... சித்ரா இப்படித்தான்னு நமக்குத் தெரியும்... மாமாவுக்கு இது தேவையில்லாத வேல... அவருக்கு சொல்லாதப்போ எதுக்கு கூப்பிட்டுக் கேக்கணுங்கிறேன்... பாவம் மனுசன்... மாப்ள ஞாயமா உங்ககிட்ட சொல்லியிருக்கணும்... அவன் சொல்லாததுக்கு நா மன்னிப்புக் கேட்டுக்கிறேன்னு அந்த பெரிய மனுசன் எங்கிட்ட குறுகி நிற்கிறாரு... புடிச்சி திட்டி விட்டுட்டேன்... எங்கப்பா ஸ்தானத்துல வச்சிருக்க மனுசன் எங்கிட்ட மன்னிப்பு கேக்குறதா..."

"சரி விடுங்க... அப்பா எப்பவும் இப்படித்தான்... ஆனா அந்தப்பய ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே?"

"என்ன பேசுறே... நாம பண்ணுறதெல்லாம் எல்லாருக்கிட்டயும் சொல்லிக்கிட்டா இருக்கோம்... எங்கிட்டோ மணி நல்லா இருந்தாச் சரி... எனக்கு நம்ம பிள்ளைகளும் அவனுகளும் ஒண்ணுதான்... சரி பசிக்கிது... சோத்தைப் போடு...."

"என்னங்க இன்னைக்கி உங்கப்பா போன் பண்ணி ஏவங்கேட்டாரு...?" சாப்பாட்டை தட்டில் வைத்தபடி சொன்னாள் சித்ரா.

"என்ன கேட்டாரு...?" அவளை ஏறிட்டபடி கேட்டான் மணி.

"எடம் வாங்குனது தெரிஞ்சி  சொல்லியிருந்தா நா பணம் பொரட்டிக் கொடுத்திருப்பேனே... அப்படி இப்படின்னு பேசினார்."

"ம்..."

"அதானே உங்க வீட்டு மனுசங்களைப் பத்திப் பேசினா அடச்சிப் போயிருவியளே..." குமுறினாள்.

"நீ அவருக்கிட்ட என்ன சொன்னே... ஏதாவது சொல்லியிருப்பியே...?"

"நா ஒண்ணும் சொல்லல சாமி... வேணுமின்னா போனைப் போட்டுக் கேளுங்க..."

"ஆமா... குமரேசனுக்கு போன் பண்ணுனியா...?"

"அதானே... இங்கிட்டும் போட்டுக் கொடுத்துட்டாரா...?"

"சொல்லு பேசினியா?"

"என்ன தம்பி சொன்னீகளான்னு கேட்டேன்... அம்புட்டுத்தான்..."

"வேற ஒண்ணும் பேசலை...?" சோற்றை அள்ளியபடிக் கேட்டான்.

"இல்லையே... அவருக்கிட்ட ரொம்ப பேசவே மாட்டேன்... கேட்டேன்... இல்லைன்னாரு... வச்சிட்டேன்... இப்ப எதுக்கு இதெல்லாம்... பேசாம சாப்பிட்டு உங்கப்பாவுக்கு ஒரு போனைப் போட்டு நா சம்பாரிச்சு கஷ்டப்பட்டு வாங்குறேன்... இதுல எல்லார்க்கிட்டயும் சொல்லணுமின்னு எதுக்கு எதிர்பாக்குறீங்கன்னு கேளுங்க.."

"அவனை மயிரு... மட்டையின்னு பேசினியா?"

'ஆஹா.... இவன் அதை விட்டு வெளிய வரமாட்டேங்கிறானே...' என நினைத்தபடி ஒன்றும் பேசாமல் மிடறு விழுங்கினாள்.

"கேக்குறதுக்கு பதில் சொல்லுடி பரதேசி நாயே..." என்று கத்தியபடி எச்சிக்கையை அவள் கன்னத்தில் பளார் என இறக்க, எதிரே சாப்பிட்டுக் கொண்டிருந்த மகா 'அப்பா' எனக் கத்தினாள்.

(வேரும் விழுதுகளும் வளரும்)

(தனபாலன் அண்ணா வலைப்பூவை சரி செய்து கொடுத்தார். ஆனால் இன்னும் மற்றவர்களுக்கு பின்னூட்டம் இடுவதில் இருக்கும் சிக்கல் தொடர்கிறது. காலையில் கில்லர்ஜி அண்ணா, ரூபன் என நட்புக்களுக்கு இட்ட பின்னூட்டம் போயே போச்சு... ஆனால் எல்லாருடைய பகிர்வுகளையும் வாசிக்கிறேன்... பின்னூட்டம் எழுதி தட்டினால் எங்க போகுதுன்னு தெரியலை... வாசிக்கிறேன்.. ரசிக்கிறேன்... விரைவில் பின்னூட்டத்தில் சந்திப்பேன் - குமார்.)

-'பரிவை' சே.குமார்.

11 எண்ணங்கள்:

துரை செல்வராஜூ சொன்னது…

என்னதான் நடக்குது ... இங்கே!?...

KILLERGEE Devakottai சொன்னது…

குடும்பக்குழறல்கள் போகட்டும் எல்லோர் வீட்டிலும் இப்படித்தான்... தொடர்கிறேன்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

கைநீட்டி அடிக்கிறவரை போய்விட்டதே..!

Menaga Sathia சொன்னது…

ம்ம் எல்லார் வீட்லயும் நடக்கறதுதான்,இனி என்ன ஆகப்போகுதோ,தொடர்கிறேன்..

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தொடர்கின்றேன் நண்பரே
பின்னூட்டச் சிக்கல்கள் மெதுவாய் தீரட்டும்
அதற்காகக் கவலைப் பட வேண்டாம்

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தம 2

கோமதி அரசு சொன்னது…

குழந்தை முன் கவலை அளிக்கிறது.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

தொடர்ந்து வருகிறோம்.

Kamala Hariharan சொன்னது…

வணக்கம் சகோதரரே!

மற்றவர்களின் குண நலன்களை புரிந்து கொள்ளாத அந்த மூத்த மருமகளால் இன்னும் எத்தனை பிரச்சனைகள் அந்த குடும்பத்திற்கு வரப் போகிறதோ?

சுவாரஸ்ஸமாக கதை நகர்கிறது.தொடர வாழ்த்துக்கள்.
நானும் தொடர்கிறேன்.

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஒரு சராசரிக் குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்கள்....மனித மனங்கள் எப்படி எல்லாம் ஆட்டிப் படைக்கின்றன...ம்ம்ம்ம்ம் வீட்டுக்கு வீடு வாசப்படிதான்....தொடர்கின்றோம் நண்பரே!.

எப்போது பின்னூட்டம் இட முடிகின்றதோ அப்போது இடுங்கள் நண்பரே! பரவாயில்லை.....

UmayalGayathri சொன்னது…

வீடுகளில் நடக்கும் நடவடிக்கைகள்..கதைகளில் அழகாக பரிமளிக்கிறது சகோ.
முடியும் போது கருத்திடுங்கள்.