மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 20 டிசம்பர், 2014

தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 13)

முந்தைய பகுதிகள் : 

பனிரெண்டாவது பகுதியின் இறுதியில்...

"சரி தூங்குங்க... நானும் போறேன் படுக்க..." என துண்டை உதறி தோளில் போட்டபடி கிளம்பினான்.

வெகுநேரம் பேரன் பேத்திகள் வர இருக்கும் விடியலை நினைத்து சந்தோஷத்தில் புரண்டு புரண்டு 

படுத்தவரின் நெஞ்சுக்குள் தோன்றிய வலி கொஞ்சம் கொஞ்சமாக கூட ஆரம்பித்தது.

இனி...

ந்தசாமியின் நெஞ்சுக்குள் தோன்றிய வலி பெரும் வேதனையாக மாற தாங்க முடியாமல் "காளியம்ம்ம்ம்மா" என்று தன் பலத்தைக் கூட்டி சத்தமாக அழைத்தார்.

தூக்கக் கலக்கத்தில் இருந்த காளியம்மாளோ இரண்டு மூன்று அழைப்புக்குப் பிறகு கண்ணை முழிக்காமலே "என்னங்க தூக்கத்துல கெளப்புறீங்க... என்ன வேணும்..?" என்று முணங்கியபடி எழுத்து தலையைச் சொறிந்தாள்.

"ம்.. எ...என்னமோ... தெரியலை...லா... நெ....ஞ்ச்சு வலிக்கிறா...ப்ல இருக்கு... பொ...பொரண்டு... பொ...ர,,,ண்டு படுக்குறேன்... வலி... விடலை... ரொம்ம்ம்ம்ம்ப வலிக்குது..." மெதுவாக நிறுத்தி நிறுத்திப் பேசினார்.

"ஆத்தி... என்னங்க... என்ன பண்ணுது..?" வாரிச்சுருட்டி எழுந்து லைட்டைப் போட்டாள்.

வலியின் வேதனை முகத்தில் தெரிய, முகமெல்லாம் வேர்த்திருக்க, நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.

"என்னங்க... என்னாச்சி... ஆத்தி... மாரி... இது என்ன சோதனை... நா என்ன பண்ணுவேன்..." அழுது கொண்டே பிதற்ற ஆரம்பித்தாள்.

"ஏ...ஏலா... எதுக்கு அழுவுறே... கண்ணனை கூப்பிடு..." என்றார் வலியோடு.

வேகவேகமாக ஓடி கண்ணதாசன் வீட்டு வேலிக்கு முன்னே நின்று 'கண்ணா... கண்ணா...' என்று கூப்பிட்டாள். அவளின் குரல் கேட்டு வீட்டின் முன் நின்ற வேப்ப மரத்தடியில் படுத்திருந்தவன் வாரிச் சுருட்டி எழுந்தான். கைலியை இடுப்பில் நல்லாக் கட்டியபடி வந்தவன் பனைமட்டைக் கதவின் கயிரை அவிழ்த்தபடி " என்ன சின்னம்மா... என்னாச்சு..?" என்றான்.

"அப்பாவுக்கு நெஞ்சு வலிக்கிதாம்... வலியால துடிக்கிறாருடா... பயமா இருக்குடா...?"

"என்னது சித்தப்பாவுக்கு நெஞ்சுவலியா...? அவருக்கிட்ட பேசிக்கிட்டு இருந்துட்டுதானே வந்து படுத்தேன்..." என்றபடி அவசரமாக ஓடினான்.

அங்கே முகமெல்லாம் வேர்த்து வெளிறிப் போய் நெஞ்சை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.

"சித்தப்பா... என்னாச்சு... என்ன பண்ணுது...?" பதட்டமாய்க் கேட்டான்.

"ரொம்ம்ம்ம்ப வலிக்...குதுப்பா.... முடியல..." மெதுவாக மூச்சு வாங்கப் பேசினார்.

அவர் அருகே கண்ணீரோடு அமர்ந்த காளியம்மாள் ஆர்.எஸ்.பதி மருந்தை எடுத்து நெஞ்சில் சூடு பறக்கத் தடவினாள்.

"கண்ணா... ஆசுபத்ரிக்கி வேகமா கூட்டிப் போகணுப்பா..." என்றபடி விறகடுப்பில் சுடு தண்ணி வைத்தாள்.

"சித்தப்பா... வண்டியில பின்னாடி உக்காந்துப்பியலா?"

முடியுமான்னு தெரியலையே என்பது போல தலையசைக்க, இரண்டு வீட்டிலும் விளக்கெரியவும், பதட்டமான பேச்சுக்கள் வேறு கேட்கவும் பக்கத்து வீடுகளில் இருந்து ஆட்கள் எல்லாம் தூக்கக் கலக்கத்தோடு வர ஆரம்பித்தார்கள்.

"என்னாச்சு... என்னாச்சு..?" என ஆளாளுக்கு கேள்வியை அடுக்கி பதிலைப் பெற்றார்கள்.

"காளியம்மா சுடு தண்ணி வச்சிக் கொடுத்தியா...?" என்றார் ஒருவர்.

"இந்தா வக்கிறேன்.,.." என்றாள்.

"வலி வந்ததும் கொடுத்திருக்கணுமாத்தா... என்ன போ... இந்தப் பொம்பளைங்களே அழுகத்தான் செய்வீங்க ஆகுற காரியத்தை பாக்க மாட்டீங்க..." என்று சலித்துக் கொண்டார்.

"ஆசுபத்ரிக்கு கூட்டிக்கிட்டு போறதுதான் நல்லது..."

"கண்ணா... உடனே கிளம்புறதுதான் நல்லது... வலியால துடிக்கிறாரு பாரு..."

"ராத்திரி வாயு சம்பந்தமான எதாவது சாப்பிட்டிருப்பாரு... அதன் வாயு பிடிச்சிக்கிருச்சி போல..."

"ஏய் இது வாயு மாதிரி தெரியலப்பா... இது நெஞ்சு வலிதான்... என்னமா வேர்த்திருக்கு..."

"ஆமா முகமெல்லாம் வெளிறிக் கெடக்கு பாரு.." என ஆளாளுக்கும் பேச, காளியம்மாள் கொடுத்த சுடு தண்ணீரைக் கொஞ்சம் குடித்தார்.

"வண்டியில இவ்வளவு தூரம் கூட்டிப் போக முடியுமா தெரியலை... பக்கத்தூரு சாமிநாதன் ராத்திரி வீட்டுக்குத்தான் போயிருப்பான்... கூப்பிட்டா  பத்து நிமிசத்துல வந்துருவான்..."

"ஆனா... இன்னைக்கி அவனோட வண்டி போன மாதிரி தெரியலையப்பா..."

"போகலை மாமா... அவன் சவரிமலைக்கு சவாரி ஏத்திக்கிட்டு போயிருக்கான்... வர ரெண்டு மூணு நாளாகுமுன்னாங்க..."

"அப்ப வேற ஏற்பாட்டை பண்ணுங்கப்பா... மசமசன்னு நிக்காம... அவரு வலியால துடிக்கிறாரு... பேசிக்கிட்டு இருக்க நேரமா இது?"

"வயசுப்புள்ளைக ஒருத்தன் வண்டி ஓட்ட நடுவுல உக்கார வச்சி... பின்னால ஒருத்தர் உக்காந்து பிடிச்சிக்கிட்ட போதும்.. இந்தா இருக்க தேவகோட்டைக்குப் போக எம்புட்டு நேரமாகப் போகுது..." கூட்டத்தில் ஒரு கிழவி சொல்லியது.

"ஆமா பெரியத்தா சொல்றதுதான் கரெக்ட்டு... அப்படியே செய்யலாம்..." 

"கண்ணா... பயலுகளுக்கு போன் பண்ணுனியா...?"

"இல்ல... இனிமேதான் சொல்லணும்..."

"சொல்லு...  இதெல்லாம் உடனே சொல்லணும்.... நாளப்பின்ன ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிட்டா... அப்பவே சொல்லாம விட்டுட்டீங்கன்னு நம்மள குத்தம் சொல்லுவானுங்க..."

"இந்தா சொல்றேன்..."

"ஆமா அழகப்பனுக்கு சொன்னியா...?"

"இனித்தான் சொல்லணும்..."

"சொல்லு... அவரு பறந்து வந்துடுவாரு... சின்ன மாப்ளக்கிட்டயும் சொல்லிரு..."

"ம்..."

"ஆமா... சின்னவரு நல்லது கெட்டது எதுக்கு வாறாரு... அந்தப்புள்ளைய கட்டிக் கொடுத்து யாருமில்லாத அனாதை மாதிரி கெடக்கு... அவருதான் வரலைன்னாலும் அதையாச்சும் அனுப்புறாரா என்ன... எங்கயும் விடுறதில்லை..." புலம்பினாள் கண்ணகி.

"ஏய் இப்ப என்ன பேச்சு... அதெல்லாம் அவரு நல்ல மனுசந்தான்... அவருக்கு பிஸினெஸ்... கொற சொல்றது ஈசிபுள்ள... விடு பேசாம..." கண்ணதாசன்  மனைவியை அடக்கினான்.

"கண்ணா.... என்னால முடியலப்பா... வலி கூடுது..." கண்ணீரோடு சொல்ல, சுற்றி நின்ற உறவுகள் எல்லாம் கண்களில் நீரோடு அவசரப்படுத்த, வாலிபர்கள் ஆளுக்கொரு வண்டியில் ஆட்களை ஏற்றிக் கொள்ள, காளியம்மாவும் ஒரு வண்டியில் ஏற, கண்ணதாசனின் வண்டியை முருகேசு மவன் ராசு ஓட்ட, அதில் கந்தசாமியை அமர வைத்து கண்ணதாசன் பின்னால் பிடித்துக் கொண்டு அமர்ந்தான்.

வண்டி வேகமாகப் பயணிக்க போனை காதுக்கும் தோளுக்கும் இடையில் வைத்து தலையைச் சாய்த்துப் பிடித்துக் கொண்டு ஒவ்வொருவருக்காக விவரம் சொல்ல எதிர்முனைகள் துடித்தன. 

வண்டிகள் குண்டுங்குழியுமான சரளை ரோட்டில் பயணித்து ஆர்.எஸ்.பதி. காடுகளைக் கடந்து மருதம்பட்டி தார்ச்சாலையில் ஏறியபோது...

கந்தசாமியின் தலை கண்ணதாசனின் உடம்பில் சாய, அமாவாசை இருட்டில் எங்கோ ஆந்தை அலறியது.

(வேரும் விழுதுகளும் வளரும்)
-'பரிவை' சே.குமார்.

14 எண்ணங்கள்:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

ஆந்தை அலறல் என்பது எதிர்மறை நிகழ்வாகத் தோன்றுகிறது. தொடர்ச்சியை எதிர்பார்க்கிறேன்.

கோமதி அரசு சொன்னது…

கந்தசாமியின் தலை கண்ணதாசனின் உடம்பில் சாய, அமாவாசை இருட்டில் எங்கோ ஆந்தை அலறியது.//

கவலை அளிக்கிறது.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

என்னவாயிற்று என்பதை அறிய மனம் துடிக்கிறது நண்பரே

துரை செல்வராஜூ சொன்னது…

மனம் பதறுகின்றது...

UmayalGayathri சொன்னது…

வருத்தமாக இருக்கிறது...அடுத்து என்ன வென்று காத்திருக்கிறோம்...

Valaipakkam சொன்னது…

உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை வலைப்பக்கம்- இல் இணைக்கவும்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஏதோ சம்பவித்துள்ளது! அறிய தொடர்கின்றோம்....இப்படி சஸ்பென்ஸ் வைத்துவிட்டீர்களே!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அம்மா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க வலைப்பக்கம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துளசி சார்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.