மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 28 டிசம்பர், 2014

தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 14)

முந்தைய பகுதிகள் : 


பதிமூணாவது பகுதியின் இறுதியில்...

ண்டி வேகமாகப் பயணிக்க போனை காதுக்கும் தோளுக்கும் இடையில் வைத்து தலையைச் சாய்த்துப் பிடித்துக் கொண்டு ஒவ்வொருவருக்காக விவரம் சொல்ல எதிர்முனைகள் துடித்தன. 

வண்டிகள் குண்டுங்குழியுமான சரளை ரோட்டில் பயணித்து ஆர்.எஸ்.பதி. காடுகளைக் கடந்து மருதம்பட்டி தார்ச்சாலையில் ஏறியபோது...

கந்தசாமியின் தலை கண்ணதாசனின் உடம்பில் சாய, அமாவாசை இருட்டில் எங்கோ ஆந்தை அலறியது.

இனி...

ந்தசாமியின் தலை தன் மேல் சாயவும் கண்ணதாசனுக்கு ஒரு கணம் இதயமே நின்றது போல் ஆகிவிட்டது. 'சித்தப்பா..சித்தப்பா...' என்று கூப்பிட்டான். வண்டி ஓட்டிய ராசு இருட்டில் திரும்பிப் பார்க்க முடியாததால் "என்னாச்சு மாமா...?" எனப் பதட்டத்தோடு கேட்டான்.

"வண்டியை நிறுத்துடா.... சித்தப்பா... தல.... பயமா இருக்குடா..." வார்த்தை வெளியில் வராதபடி பதட்டமும் பயமும் அவனைப் பற்றிக் கொண்டன.

ராசு வண்டியை நிறுத்த, கண்ணதாசன் 'சித்தப்பா... சித்தப்பா...' என்று உலுக்கினான். ராசுவும் 'அய்யா... அய்யா...' என்று அழைத்துப் பார்த்தான்.

அதற்குள் பின்னால் வந்த வண்டிகள் எல்லாம் 'என்ன... என்ன..?' என்றபடி நிற்க, 'ஆத்தி... என்னாச்சு...?" என்ற பதறலாய் இறங்கப் போன காளியம்மாளைப் பார்த்ததும் 'ஒண்ணுமில்ல... சித்தப்பா நல்லா உக்காரணுமின்னு சொன்னாங்க... அதான்... நீங்க போங்க... இந்தா வாறோம்..." என கண்ணதாசன் அவர்களைப் போகச் சொல்ல வண்டிகள் கிளம்பின.

"என்ன மாமா ஆச்சு... நீங்க எல்லாரையும் போகச் சொல்லிட்டீங்க?" பதட்டமாய்க் கேட்டான் ராசு.

"பாப்போம்... அவங்க எல்லாம் இங்க நின்னா... சின்னம்மாவும் வந்திருக்க பொம்பளங்கைளும் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிருவாங்க... போகட்டும்..." என்றபடி அவரை உலுக்கிப் பார்த்தவன், பயத்தோடு மூக்கில் கை வைத்துப் பார்த்தான்.

"மாமா..."

"ராசு வண்டியை எடு... மூச்சிருக்கு... மயக்கமாயிட்டாரு போல..."

"நெஞ்சுவலி வந்தா மயக்கம் வருமா..?" வண்டியை ஸ்டார்ட் பண்ணியபடி கேட்டான் ராசு.

"தெரியலை மாப்ள... முன்னப் பின்ன செத்தாத்தானே சுடுகாட்டுக்கு வழி தெரியும்... ஒண்ணும் புரியல... ஆனா நிலமை ரொம்ப மோசமா இருக்க மாதிரி தெரியுது... ஆந்தை வேற கத்துது... நல்ல சகுனமாத் தெரியலை... எனக்கு ரொம்பப் பயமா இருக்கு... இவருதான் எங்களுக்கு எல்லாமே... வண்டியை வேகமா ஓட்டு..." 

"ம்... நல்லா புடிச்சிக்கங்க..." என்ற ராசு வண்டியை விரட்டினான்.


"என்னங்க... போன் பண்ணிப் பாருங்க... ஆஸ்பத்ரிக்கு வந்துட்டாங்களான்னு... இந்த இருட்டுக்குள்ள எப்படி வண்டியில வச்சிக் கொண்டாருவாங்க..." கண்ணீரோடு பேசினாள் அபி.

"கண்ணதாசண்ணே போன் எடுக்கல... போய்க்கிட்டு இருக்காக போல... நாங் கெளம்புறேன்... நீ காலையில பிள்ளைகளைக் கூட்டிக்கிட்டு வா..." என்றான் குமரேசன்.

"முதல்ல அழகப்பண்ணனுக்கு போனடிங்க... அவங்க எப்படியும் ஆஸ்பத்திரி வந்திருப்பாங்க... அன்டயத்துல பஸ் கிடைச்சி மாறி மாறிப் போறது சிரமங்க... விடியக்காலையில எல்லாருமாவே போகலாங்க..."

"ம்... நீ சொல்றது சரிதான்... ஆனா அங்க காசு பணத்துக்கு என்ன பண்ணுவாங்கன்னு தெரியலையே..."

"எல்லாத்துக்கும் அழகப்பண்ணன் இருக்காக... கண்ணதாச மாமா இருக்காக... பயப்பட வேண்டியதில்லையில்ல... அவங்க பாக்கட்டும் நாளைக்கி நாம கொடுத்திடலாம்... இப்ப அண்ணனுக்கு போன் பண்ணுங்க..."

"சரி..." என்றபடி மொபைலில் அழகப்பனின் நம்பரை அழுத்தினான்.

"என்ன மச்சான்... சொல்லுப்பா..." அந்த நேரத்திலும் அழகப்பனின் குரல் கணீரென்று கேட்டது.

"அத்தான்... ஆஸ்பத்திரிக்கு போயிட்டீங்களா? அப்பாவை கூட்டியாந்துட்டாங்களா..?"

"இப்பத்தான் மச்சான் நானும் உங்கக்காவும் போயிக்கிட்டு இருக்கோம்... கண்ண மச்சானுக்கிட்ட பேசினேன்... ஒண்ணும் பயப்படாதே... அவரு நல்லா இருப்பாரு..."

"நா... இப்பவே கிளம்பி வரவா... எந்தாஸ்பத்திரிக்கு வாறாங்க...?"

"ராஜசேகருக்கிட்டதான் வாறேன்னு சொன்னாங்க... நீ இப்ப வந்து என்ன பண்ணப் போறே... பஸ் மாறி வர்றது சிரமம்... காலையில கிளம்பி வா... நாங்க இருக்கோமுல்ல... ஆஸ்பத்திரிக்குப் பொயிட்டு போன் பண்ணுறேன்..."

"சரி மச்சான்.."

"என்னங்க... அண்ணன் என்ன சொல்றாக?"

"அவரும் அக்காவும் ஆஸ்பத்திரிக்கு போய்க்கிட்டு இருக்காங்களாம்... பொயிட்டு கூப்பிடுறேன்னு சொன்னார்... என்னைய காலையில வரலாம்ன்னு சொல்றாரு..."

"ம்... அதான் நான் சொல்றேன்.... எல்லாருமாப் போயிருவோம்..."

"சரி..."


வசரம் அவசரமாக சட்டையை மாட்டிக் கொண்டிருந்தான் மணி. முந்தின இரவு நடந்த பிரச்சினையும் அதன் பின்னான நிகழ்வுகளும் மூவருக்குள்ளும் ஒரு சுமூகமான பேச்சை கொடுக்கவில்லை என்றாலும் அப்பாவுக்கு முடியலை என்றதும் பதறியவனை மகாதான் ஆறுதலாக அணைத்துக் கொண்டாள். சித்ராவோ 'அவருக்கு ஒண்ணும் ஆகாது... கலங்காதீக' என்று சொல்லியபடி அருகே அமர்ந்தாள்.

"இந்த நேரத்துல போவணுமாப்பா...?" மகாதான் கேட்டாள்.

"வேற என்னம்மா பண்றது.... அவருக்கு என்னாச்சோ... ஏதாச்சோன்னு மனசு தவிக்கிது... யாரும் போனெடுக்க மாட்டேங்கிறாங்க... உங்க சித்தப்பா பேசுவான்... அவனோட மொபைலும் பிஸியா இருக்கு.... எனக்குப் பயமா இருக்குடா..." கண் கலங்கினான்.

"ஐயாவுக்கு ஒண்ணும் ஆகாதுப்பா... நா வேணா சித்தப்பாவுக்கு அடிச்சிப் பாக்கிறேன்..."

"ம்..."

மணியின் போனை வாங்கி குமரேசனுக்கு அடித்தாள். ரிங்க் போக "அலோ... சொல்லுண்ணே...?" என்றது எதிர்முனை.

"சித்தப்பா நா... மகா..."

"ம்..."

"என்ன சித்தப்பா எம்மேல கோபமா...?"

"சேச்சே... ஏண்டா இப்படி பேசுறே... சித்தப்பாவுக்கு டென்சன்டா... ஆமா அப்பா, அம்மா எங்கே..?"

"இந்தாத்தான்... அப்பாக்கிட்ட பேசுங்க..." என்றபடி போனை மணியிடம் கொடுத்தாள்.

"சொல்லுப்பா..."

"ஊருக்குப் போனடிச்சியா..?"

"இல்ல... கண்ணதாசன் கூப்பிட்டதுதான்... இப்ப எந்தப் போனுக்கு அடிச்சாலும் பிஸியா இருக்கு... நீ பேசினியா..."

"ம்... இப்பத்தான் பெரியத்தானுக்கு அடிச்சேன்.... அவரும் ஆஸ்பத்திரிக்கு வந்துக்கிட்டு இருக்காராம்... அங்க பொயிட்டு போன் பண்றேன்னு சொன்னார்..."

"ம்..."

"அவருக்கு வேணா அடிச்சிப் பேசு... ஆமா இப்பவா கிளம்புறே...?"

"ஆமா... இந்த நேரத்துல ராமேஸ்வரம் வண்டி இருக்கும்... அதுல ஏறினா நேர தேவகோட்டை போயிடலாம்... நீயி..."

"அத்தான் சொல்றதை வச்சித்தான் கிளம்பணும்... அன் டயமா இருக்கு... பஸ் மாறி மாறிப் போகணும்... விடியக்காலையில எல்லாரையும் கூட்டிக்கிட்டு கிளம்பலாம்ன்னு பாத்தேன்..."

"ம்.. நா... முன்னாடி போறேன்... நீ வா..."

"சரிண்ணே... அண்ணி வர்றாங்களா?"

"மகா இருக்காளே... அவளுக்கு காலேசு... நிலமை எப்படின்னு பாத்துக்கிட்டு அவளை வரச் சொல்லலாம்..."

"சரிண்ணே... பாத்துப் போ.."

"சரிப்பா..." என்றபடி போனை வைத்தவன் "சரி... வீட்டைப் பூட்டிக்கிங்க... பத்திரமா இருங்க... நா அங்க பொயிட்டுப் போன் பண்றேன்..." என்றபடி கிளம்பினான்.

"பாத்துப் போங்க... மப்ளரைக் கட்டிக்கங்க.. உங்களுக்கு பனி ஆகாது... பஸ்ல சன்னல் பக்கமா உக்காராதீங்க..." பின்னாலே சொல்லிக் கொண்டு வந்தாள் சித்ரா.

"சரிம்மா... பாத்துக்க... நா பொயிட்டுக் கூப்பிடுறேன்..."


டாக்டர் ராஜசேகர் ஆஸ்பத்திரி வாசலில் சோகமாய் நின்றவர்களின் அருகே வண்டியை நிறுத்திய அழகேசனைப் பார்த்ததும் கண்ணதாசன் 'அத்தான்' என ஓடி வந்தான்.

"என்ன மச்சான்... என்ன சொல்றாங்க...?"

"ஐசியூல வச்சிருக்காங்கத்தான்... டாக்டர் கிரிட்டிக்கல்ன்னு சொல்றாரு... காலையில வரைக்கும் பாக்கலாம்... இல்லேன்னா மதுரைக்குத்தான் கொண்டு போகணுங்கிறாரு... பர்ஸ்ட் அட்டாக்காம்... ரொம்ப சிவியரா இருக்காம்... பக்கவாதம் வரக்கூட வாய்ப்பு இருக்குன்னு சொல்றாரு..." கண்ணன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே... "அப்போவ்..." என ஓடிய சுந்தரி, "அம்மோவ்..." என நாற்காலியில் கண்ணீரோடு அமர்ந்திருந்த காளியம்மாளைக் கட்டிக் கொள்ள அவள் தேம்பித் தேம்பி அழுதாள்.

"ம்... அப்ப காலையில வரைக்கும் எதுக்கு பாக்கணும்... இவரு பர்ஸ்ட் எய்ட் கொடுத்துட்டா நாம மதுரை கொண்டு போயிடலாமே... வண்டி வரச்சொல்லவா...?" என்றார் அழகேசன்.

"இல்லத்தான்... இவரால முடியலைன்னாத்தான் சொல்லிடுவாரே... பாத்துருவாருன்னு நம்புவோம்... அப்புறம் கடவுள் விட்ட வழி..."

"நல்லதே நடக்கும் மச்சான்... ஆமா மத்தவங்களை எல்லாம் போகச் சொல்லு... அவங்க எதுக்கு தூங்காம... இங்க நின்னு ஒரு காரியமும் இல்ல... காலையில வரட்டும்... அதான் நாம இருக்கோமுல்ல...."

"சரித்தான்... "

"அப்படியே அயித்தையையும் சுந்தரியையும் கூட அனுப்பி வச்சிரு... நானும் நீயும் போதும்..."

"வேண்டாந்தான்... அதுக இருக்கட்டும்... அங்க போயி அழுதுக்கிட்டு நிம்மதியாத் தூங்காதுக... ஆமா மணி அண்ணனும் குமரேசனும் பேசுனாங்களா...?"

"பெரியவுக நமக்கிட்ட எப்ப பேசியிருக்காக... குமரேசன் பேசினான்.... ராத்திரியில அடிச்சிப் பிடிச்சி வந்து என்ன பண்ணப் போறான்... நடக்குறது நடக்கத்தான் போகுது... காலையில வாடான்னு சொன்னேன்... ஆஸ்பத்திரி பொயிட்டு போன் பண்றேன்னு சொன்னேன்... உங்க சின்னக்கா கண்மணி கூப்பிட்டுச்சு... அவரு வெளியூரு போயிருக்காராம்... என்னாச்சுத்தான்... எப்படியிருக்காரு... பாத்துக்கங்க... காலையில வந்துடுறேன்னு ஒரே அழுகை..."

"ம்... திடீர்ன்னு இப்படி... வயக்காட்டுல இருட்டு ஏமமுன்னு பாக்காம சுத்துற மனுசன்... பேசிக்கிட்டு இருந்துட்டுத்தான் போனேன்.... சின்னவன் பிள்ளைக வர்றதைப் பத்தி சந்தோஷமாப் பேசினாரு... படுத்து கொஞ்ச நேரத்துல சின்னம்மா எழுப்பிருச்சி..."

"ம்... குமரேசனுக்கிட்ட பேசிடுறேன்... நீ மணிக்கு அடிச்சிப் பாரு...."

"சரித்தான்..."

யிருக்குப் போராடும் சூழலில் கந்தசாமி அறைக்குள் கிடக்க, காளியம்மாளோ தெய்வங்களை வேண்டியபடி நாற்காலியிலும்... சுந்தரியும் கண்ணீரோடு அவளருகேயும்... மணி மனம் முழுக்க பாரத்துடன் பஸ்ஸிலும்..., குமரேசன் வீட்டுக்கும் வாசலுக்குமாக நடந்துக்கிட்டும்... கண்மணி தலையணையை கண்ணீரால் நனைத்துக் கொண்டும்... உறக்கமின்றி விழித்திருக்க, அந்த இரவு மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது விடியலை நோக்கி...

(வேரும் விழுதுகளும் வளரும்)
-'பரிவை' சே.குமார்.

12 எண்ணங்கள்:

கோமதி அரசு சொன்னது…

குடும்பதலைவர் ஆஸ்பத்திரியில் இருந்தால், மற்றவர்கள் மனநிலை எப்படி இருக்கும் என்பதை அப்படியே கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள் குமார்.
போனபதிவில் ஆந்தை அலறியதை சொல்லி கொஞ்சம் பயமுறுத்தி விட்டீர்கள்.
இந்த பதிவில் விடியலை நோக்கி என்று முடித்து இருப்பதால் நாளை பொழுது பெரியவருக்கு நல்ல விடியலாக இருக்கும் என்று நம்புகிறேன்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை நண்பரே
தொடருங்கள் தொடர்கிறேன்

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தம 3

”தளிர் சுரேஷ்” சொன்னது…

மிக அருமையாக இயல்பான நடையில் செல்கிறது தொடர்! தொடர்கிறேன்! நன்றி!

KILLERGEE Devakottai சொன்னது…

நடையழகு அருமை
தமிழ் மணம் 4

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அம்மா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா
தங்கள் வாக்களித்தமைக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Kamala Hariharan சொன்னது…

வணக்கம் சகோதரரே!

சென்ற வார இந்த தொடரின் முடிவை படித்தேன். கருத்திட இயலாமல் மனம் கணத்தது.வீட்டிலும், இணையத்தில் கவனம் செலுத்த இயலாமல், உறவின் வருகையால் தடைபட்டது. தாமதத்திற்கு வருந்துகிறேன்.

கதையாயிருந்தாலும், கந்தசாமியின் குடும்பத்தை நிஜமான வடிவத்தில் உலாவ செய்திருக்கிறீர்கள். ஒவ்வொரு வாரமும் கதையின் எதிர்பார்ப்புகள் அதிகமாகி கொண்டே செல்கின்றன.அந்த இரவு விடியலை நோக்கி நகர்வதை போல நல்ல செயதிகள் விடியலோடு விடிந்தால் நன்று..

தொடருங்கள்.. ! இனியும் தொடர்கிறேன்.

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

கண்முன் விரிகின்றன காட்சிகள்! தொடர்கின்றோம்!