மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 31 டிசம்பர், 2013

2013 - கொடுத்ததும் மறுத்ததும்

வணக்கம் நண்பர்களே... அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

(இளமை இதோ இதோ - புத்தாண்டுப் பாடல் உங்களுக்காக)

ன்னும் சில மணி நேரங்களில் 2014 பிறக்கப் போகிறது. கடந்து செல்ல இருக்கும் 2013 நல்லதையும் கெட்டதையும் கலந்தே கொடுத்தது என்பதை பெரும்பாலான பதிவுகளிலும் முகநூல் பக்கங்களிலும் காண முடிகிறது.

இந்த ஆண்டு என் வாழ்வில் செய்தது என்ன என்று சற்றே பின்னோக்கிப் பார்த்தால் முதலில் வருவது எங்கள் வீடுதான். ஆம் 2012 வீடு கட்டுவதென முடிவெடுத்து வங்கியில் கடன் வாங்கி ஆரம்பித்தோம். 2013 மே மாதம் எங்கள் சொந்த இல்லத்தில் குடியேறினோம். கடன் தலைமேல் இருந்தாலும் நம்ம வீடு என்கிறபோது கவலைகள் மறக்கத்தான் செய்கிறது.

இந்த வருடத்தில்தான் மனசு வலைப்பதிவில் அதிக பகிர்வுகளைப் பகிர்ந்திருக்கிறேன். 2010ல்தான் முதல் சதம் அடித்தேன். மொத்தம் 101 பதிவுகள். 2011ல் 61, 2012ல் 38 பதிவுகள் மட்டுமே பகிர்ந்தேன். இந்த முறை இந்தப் பதிவுடன் சேர்த்து மொத்தம் 314 பகிர்வுகள் (அட கூட்டுத் தொகை 8... நமக்கு பிடித்த எண்). இது நான் நினைத்துப் பார்க்காத ஒன்று. அடுத்த ஆண்டு இது தொடருமா தெரியாது. 

இந்த வருடத்தில் சோதனை முயற்சியாக கலையாத கனவுகள் தொடர்கதை எழுத ஆரம்பித்து அதுவும் 37 பகுதிகளைக் கடந்துவிட்டது. கதை எப்படி என தொடர்ந்து வாசித்து கருத்திடும் யோகராஜா சாரைத்தான் கேட்கணும். தொடர்கதையை 50 பேர் படிப்பது என்பதே அரிதாக இருக்கிறது. தொடர்ந்து வாசிக்கும் அந்த 35 பேருக்கும் நன்றி. இடையில் நிறுத்திவிடலாம் என்று கூட நினைக்க வைத்தது என்றாலும் முயற்சியை கைவிட வேண்டாம் என்று தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் என்னை க்ரைம் கதை எழுதச் சொல்லி தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டிருக்கிறார் மேனகா அக்கா, மற்றுமொரு தொடர்கதையா... யோசிக்க வேண்டிய விஷயம்.

இந்த வருடத்தில் வலைச்சரத்தில் மீண்டும் ஒரு முறை ஆசிரியராய் பணியாற்றும் வாய்ப்பை மதிப்பிற்குரிய சீனா ஐயா கொடுத்தார். அவரின் மனம் மகிழும் வண்ணம் பகிர்வுகளை வழங்கியது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. நான்கைந்து முறை மற்ற ஆசிரியர்களால் அறிமுகம் செய்யப்பட்டேன். ஐயாவின் பின்னூட்ட வாழ்த்தில் சில வரிகள்...
"...பதிவு அருமை - வடிவமைப்பு கண்ணைக் கவரும் வண்ணம் புது விதமாக இருக்கிறது. சிறு பகிர்வு - எட்டின் மகிமையை எடுத்துரைத்தமை நன்று.  காணொளியினை அறிமுகப் படுத்திய நன்று. குறுங்கவிதை மிக மிக அருமை. பதிவரின் பெயர், தளத்தின் பெயர், கவர்ந்த பதிவுகளின் சுட்டிகள், பதிவில் இருந்த கவர்ந்த சில வரிகள், பதிவினைப் பற்றிய கருத்து - என எழுதியது தங்களீன் ஈடுபாட்டினைக் காட்டுகிறது... " 
உங்களது மனம் திறந்த வாழ்த்துக்கு மிகுந்த மகிழ்ச்சியும் நன்றியும் ஐயா.

மறைந்த கிராமியக் கலைஞர் பாவலர் ஓம் முத்துமாரி அவர்களைப் பற்றி நான் பகிர்ந்த பதிவு குறித்து மதிப்பிற்குரிய முத்துநிலவன் ஐயா தனது பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதை நான் மிகப்பெரிய சந்தோஷமாகக் கருதுகிறேன். அதிலிருந்து...
"....நன்றி நண்பர் சே.குமார் அவர்களே!  தொலைதூரத்தில் இருந்துகொண்டு அந்தக் கிராமியக் குயிலை நினைத்துக் கொள்கிறீர்களே இதுதான் நம பாவலர் ஓம் முத்துமாரியின் உண்மையான சொத்து!      நீங்கள் வாழ்க!..." 
இது போன்ற வாழ்த்துக்கள்தான் எங்களுக்கு உண்மையான சொத்து. மிகுந்த சந்தோஷம் ஐயா.

நிறைய படிக்க நினைத்து கொஞ்சமேனும் படிக்க முடிந்ததில் சந்தோஷமே.

இந்த வருடத்தில் மனங்கவர்ந்த சில சிறுகதைகளை எழுத முடிந்தது. கல்லூரியில் படிக்கும் போது எழுதிய கதைகளுக்கும் தற்போதைய கதைகளுக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதை உணரமுடிகிறது.

என்ன சந்தோஷங்களே தொடருதுன்னு பார்க்காதீங்க வருத்தமும் இருக்கத்தான் செய்கிறது. 

இந்த வருடத்திலாவது குடும்பத்தை இங்கு கூட்டி வர வேண்டும் என்று நினைத்து முடியாமல் போய்விட்டது. வீட்டுக் கடன், கம்பெனியில் சம்பள உயர்வு இல்லாமை என எல்லாம் தடுத்துவிட்டது. இதனால் புரிந்து கொண்ட இதயங்களுக்குள் அடிக்கடி மனஸ்தாபம் வருவதை தவிர்க்க முடியாமல் போனது. வரும் 2014ல் ஆவது நடக்க வேண்டும்... எல்லாம் இறைவன் சித்தம்.

சிறுகதைத் தொகுப்பு கொண்டுவர நினைத்து அகநாழிகை வாசு அண்ணன் மற்றும் வம்சி சைலஜா மேடத்திடமும் பேசி இருந்தேன். வீட்டு வேலை, கடன் இவைகள் முன்னுக்க வர புத்தக எண்ணம் பின்னுக்குப் போய்விட்டது. பிறக்கும் வருடத்தில் நடக்கும் என்று நம்புகிறேன்.

வேறு வேலைக்கு தொடர்ந்து முயற்சித்தும் தட்டிக் கொண்டே போகிறது. இன்னும் எதுவும் நடக்கவில்லை. 

வருடம் ஆரம்பிக்கும் போது சந்தோஷமாக இருந்தாலும் இந்த மாதத்தில் என் கையிருப்பு சில சில்லறைகளாகவே இருந்தது. மிகவும் கஷ்டமான சூழலில் டிசம்பர் மாதம் கடந்து கொண்டிருந்தது. 

(நல்லோர்கள் வாழ்வைக் காக்க - புத்தாண்டுப் பாடல் உங்களுக்காக)

சரி நண்பர்களே... எனது அன்பிற்குரிய அனைவருக்கும் வரும் புத்தாண்டு மிகச் சிறப்பான ஆண்டாக அமைய எல்லாம் வல்ல  இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
-'பரிவை' சே.குமார்.

10 எண்ணங்கள்:

செங்கோவி சொன்னது…

புத்தாண்டிலாவது சம்பளம்கூடி, குடும்பத்துடன் வாழ வழி பிறக்கட்டும்..இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

பெயரில்லா சொன்னது…

வணக்கம்
சே.குமார்(அண்ணா)
20013இல் வாண்டின் இறுதிப்பதிவு மிகச்சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.....இந்த வருடத்தில் தங்கள் வாழ்வில் புது வசந்தங்கள் வீசட்டும்.....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Unknown சொன்னது…

உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தினர்&நண்பர்கள்&உறவினர்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!பிறக்கும் ஆண்டில் வேதனைகள் மறைந்து,இனிதே உங்கள் பதவியில் மேன்மை பெற்று நலமே வாழ பிள்ளையார் அப்பனை வேண்டுகிறேன்!!///யார் அந்த 'யோகராஜா' சார்?

Unknown சொன்னது…

"கலையாத கனவுகள்"...........நான் பல கதைகள் படித்திருக்கிறேன்.தொடராக அல்ல.........சிறு/பெரும் கதைகள்.உங்கள் எழுத்து நடை மற்றைய பிரபல(?) எழுத்தாளர்களை விடவும் வித்தியாசமானது.உங்கள் எழுத்தில் என்ன மாயம்,மந்திரம் இருக்கிறதோ தெரியவில்லை.கதையை வாசித்துக் கொண்டே போக..........காட்சிகள் மனக் கண் முன் விரிகிறது.அருமையான கதை ஓட்டம்.தொடரட்டும்,தொடர்வேன்!///பலர் படிப்பதில்லை என்பது ஒரு குறை தான்.இப்போதெல்லாம் முக நூலில் தான் பலரும்(பதிவர்கள் கூட)பொழுதைக் கழிக்கிறார்கள்!(நானும் கூட.........இப்போ ஒரு வார காலமாக விலகியிருக்கிறேன்)அது ஒரு காரணமாகக் கூட இருக்கலாம்.ஏன் நீங்கள்,முக நூலிலும் பகிரக் கூடாது?சும்மா ஒரு கேள்வி தான்,உங்கள் விருப்பம்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் - இயற்கை எய்திய இயற்கை விஞ்ஞானி மதிப்பிற்குரிய திரு.கோ. நம்மாழ்வார் ஐயா அவர்களுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்...

Link : http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Fertilize-Part-1.html

அன்புடன் DD

துரை செல்வராஜூ சொன்னது…

வாழ்க வளமுடன்!..
வளர்க நலமுடன்!..
எல்லாம் வல்ல இறைவனை வேண்டி
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..

ராமலக்ஷ்மி சொன்னது…

புதுவருடம் எல்லா வகையிலும் சிறப்பாக அமைந்திட இனிய நல்வாழ்த்துகள்!

இளமதி சொன்னது…

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர், உறவினர், நண்பர்களுக்கும்
உளமார்ந்த இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!