மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 25 அக்டோபர், 2013

நண்பேன்டா : ஆதிரெத்தினம்

நேசித்த நட்புக்களையும் நேசிக்கும் நட்புக்களையும் நினைக்கும் நெஞ்சுக்குள் இருந்து நண்பேன்டாவாக அடுத்து வருபவன் என் அருமை நண்பன் ஆதிரெத்தினம்.

அண்ணாத்துரை, சேவியரில் ஆரம்பித்து எங்கள் கூட்டணி கொஞ்சம் கொஞ்சமாக கூட ஆரம்பித்தது. வகுப்பில் மூன்று அணியாக பிரிந்த மாணவர் கூட்டணியில் இரண்டு அணிகள் ஐவர் அணியாகி கீரியும் பாம்புமாக மாறிப் போக, முத்தான பத்துப் பேரோடு எங்கள் அணி எல்லாவற்றிலும் தனித்து நிற்க ஆரம்பித்தது. எங்கள் துறையில் இருந்து வெளிவட்டாரங்களிலும் நல்ல பேரை பெற்ற அணியாகத் திகழ்ந்தது. இதுவே எங்கள் தவறுகளை மறைக்கும் பலமாக அமைந்தது என்பதே உண்மை.

எங்கள் அணியில் ஒருவனைத் தவிர மற்றவர்களுக்கு எல்லாம் பங்காளியாக திகழ்ந்தவன்தான் இந்த ஆதி. திருவாடானையில் ஆதிரெத்தினேசுவரர் கோவிலுக்கு எதிரே வீடு. எங்கள் அணியில் இருந்த ஒரே ஐயராத்துப் பிள்ளை... அப்பா தலைமையாசிரியராக இருந்தார். மிகவும் கலகலப்பானவன். பெரும்பாலும் வேஷ்டி சட்டையில்தான் வருவான். குறும்புகளுக்குச் சொந்தக்காரன். அவனுடன் இருக்கும் நேரத்தில் சந்தோஷத்திற்கு பஞ்சம் இருக்காது.

தீபாவளி வந்து விட்டதென்றால் கல்லூரிக்குள் முதலில் பட்டாசு வெடிப்பவன் ஆதியாகத்தான் இருக்கும். கல்லூரியில் பட்டாசு வைப்பது என்பது ஒரு கலை... ஊது பத்தியின் பாதிக்குக் கீழ் வெடியின் திரியைப் பிரித்து சுற்றி வைத்து பத்தியை பற்றவைத்து நாம் விரும்பும் இடத்தில் வைத்துவிட்டு வந்துவிட்டால் மெதுவாக பத்தி எரிய ஆரம்பித்து அது வெடிப்பதற்குள் வெடி வைத்த கூட்டம் எங்காவது மரத்தடியில் போய் பேசிக் கொண்டிருக்கும். அப்பத்தானே யார் வைத்தார் என்று தெரியாது.

இந்தக் கலையிலும் நுணுக்கம் கற்றவன் ஆதி, பேருந்தை விட்டு இறங்கியதும் ஊதுபத்தி வாங்கச் செல்வான். மட்டமான.... வாசனையில்லாத ஊதுபத்தியாக பார்த்து வாங்கி வருவான். அப்பத்தான் ஊதுபத்தியின் வாசனை தெரியாதாம். அவன் வைக்கும் இடங்கள் பெரும்பாலும் பெண்கள் ஓய்வு அறையின் சன்னல் அருகில்... வகுப்பறைகளின் வாசல் ஓரம்... சில சமயங்களில் முதல்வர் அறையின் பின்புறச் சன்னல்கள்.

ஏப்ரல் மாதம் முதல் நாள் அன்று ஆதிக்கு கொண்டாட்டம்தான்... ரீகல் சொட்டு நீல டப்பாக்கள் சில மட்டும் கைகளில் இருக்கும்... மாடியில் நின்று கொண்டு கீழே நடந்து போகும் மாணவர்கள் மாணவிகள் எல்லாருக்கும் அடித்துவிடுவான். ஒருமுறை கீழே கத்திக்கொண்டே பசங்களை விரட்டிச் சென்ற முதல்வர் மீது சொட்டு நீலத்தை பீய்ச்சி அடித்துவிட்டான்... ஆஹா மாட்டுனோம் என்று எங்களுக்குள் உதறல் எடுக்க, டப்பாவை தூக்கி வீசிவிட்டு வாங்கடா கீழ போவோம்... எதுவும் நடக்காத மாதிரி வாங்க என்று எங்களை கீழே கூட்டிச் செல்ல, யாருடா அது... என்று வசனம் பேசிக்கொண்டே எங்களைக் கடந்து முதல்வர் மேலே ஏறிச்செல்ல நேராக மைதானத்துக்குச் சென்று வேப்பமரத்தடியில் அமர்ந்த எங்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

போலீஸ் வைத்திருக்கும் விசிலைக் கொண்டு வந்து பண்ணின அலும்பை எல்லாம் எளிதில் மறக்க முடியாது. எல்லாம் செய்வது அவனாக இருந்தாலும் யாராலும் இவன்தான் பண்ணினான் என்று சொல்ல முடியாத முகத்துக்குச் சொந்தக்காரன்... இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்ற ரகம்... ஆனால் அது பீரே குடிக்கும் என்பது யாருக்கும் தெரியாது.

பெரும்பாலும் ஆதி கொண்டு வரும் மதிய உணவுகள் வெரைட்டி ரகமாகத்தான் இருக்கும். ஐயர் வீட்டுச் சமையல்ல இருக்காதா பின்னே... அம்மாவிடம் எப்படி கொண்டு போனாலும் அவனுங்கதான் சாப்பிடுவாய்ங்க... நிறைய வச்சி விடுங்கன்னு சொல்லி வைக்க, எங்கள் அணியிலேயே பெரிய டிபன் பாக்ஸில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அமுக்கி வைத்து விடுவார்கள். அதே போல் நாங்கள் எல்லாம் அவனது சாப்பாட்டை சாப்பிட, நாங்கள் அசைவ உணவுகளை கொண்டு செல்வதில்லை... எனவே தைரியமாக எங்கள் சாப்பாட்டை சாப்பிடுவான். 

ஒருமுறை ராமேஸ்வரம் சென்றோம். முதல்நாள் இரவு திருவாடானையில் ஆதியின் வீட்டில் தங்கி அம்மாவின் கையால் சாப்பிட்டு, அதிகாலை அங்கிருந்து பேருந்து ஏறி இராமேஸ்வரம் சென்று திரும்பினோம். படிக்கும் போது ஆச்சாரம்... அனுஷ்காரம் எல்லாம் அவனுக்குள் இல்லை. எங்களில் ஒருவனாக... எங்கள் இல்லங்களில் எல்லாம் வந்து சாப்பிட்டு எங்களின் பங்காளியாகவே இருந்தான்.

படிப்பு முடித்து ஆளாளுக்கு வேறு வேறு பாதைகளில் பயணிக்க, திடீரென ஒருநாள் எங்க வீட்டுக்கு ஒரு ஐயர் சைக்கிளில் வந்தார். வாசலில் அமர்ந்து கதைப் புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது வீட்டில் நானும் அம்மாவும் மட்டும்தான். எனக்கு அருகில் அம்மா அமர்ந்திருந்தார். தம்பி யாரோ வாராங்கடா என்று சொல்லும் போது சைக்கிளை நிறுத்தியவர் காதில் கடுக்கன்... கழுத்தில் பெரிய உத்திராட்சம்.... தலைமுடியை அள்ளிக்கட்டி அக்மார்க் குருக்களாகத் தெரிய... அம்மா என்னைய தெரியலையா... நாந்தான் உங்க ஆதி... என்று அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்கியவன்... டேய் பங்காளி... என்னையத் தெரியலையா என்று கட்டிக் கொண்டான்.

என்னடா... இப்படியாயிட்டே... ஆளே மாறிப் பொயிட்டே... என்று ஆச்சர்யமாக கேட்க, இல்ல பங்காளி ஊர்ல ஒரு ஐயப்பன் கோவில் கட்டியிருக்காங்க... அதை என்னைய பாக்கச் சொல்லிட்டாங்க... அப்புறம் அதுக்குத் தகுந்தமாதிரி நம்மளை மாத்திக்கணுமில்ல... என்றவன் இன்று கும்பாபிஷேகம், பூஜைகள் என எல்லாவற்றுக்கும் முதன்மையானவனாக இருக்கிறான்.

இந்த முறை ஊருக்குச் சென்றிருந்த போது அவன் ரொம்ப பிஸியாக இருப்பதாகவும் வெளியில் இருப்பதாகவும் கேள்விப்பட்டேன். வீடு வேலை சம்பந்தமாக அலைந்ததால் அவனை சந்திக்க முடியவில்லை. எங்கள் வீட்டுக்கு அருகில் நண்பர் ஒருவர் கோவில் கட்டிக் கொண்டிருந்தார். ஆதிதான் கும்பாபிஷேகத்துக்கு வாறான் என்றதும் எப்படியும் இங்கு வைத்துப் பார்த்துவிடலாம் என நினைத்து சந்தோஷப்பட, அதற்குள் அலுவலகத்தில் இருந்து அவசர அழைப்பு வர, கும்பாபிஷேகத்திற்கு இரண்டு நாட்கள் முன்னர் கிளம்பி வந்துவிட்டேன்.

சொல்ல மறந்துட்டேனே... கல்லூரியில் படிக்கும் போது ஆதவன் என்ற பெயரில் கவிதைகள் எழுதுவான். அவன் கிறுக்கிய பேப்பர்கள் என்னிடத்தில் இன்றும் பொக்கிஷமாய் இருக்கின்றன. ஆட்டோகிராப் மூன்று பக்கங்கள் எழுதிய என் இனிய நண்பன் இவன்.

பங்காளி உன் அன்பில் என்றும் குறை சொல்ல முடியாது. எங்களுக்கு குடும்பம் குழந்தைகள் என்று வந்தபோது சில மாற்றங்கள் இயற்கையாய் அமைந்துவிட்டது. இந்தமுறை ஊருக்கு வரும்போது திருவாடானையில் இருப்பேன்....

நண்பேன்டா தொடரும்...
-'பரிவை' சே.குமார்.

15 எண்ணங்கள்:

செங்கோவி சொன்னது…

சந்திக்காவிட்டாலும், நட்பு வாழும்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல நட்பு என்றும் தொடரும்......

வாழ்க உங்கள் நட்பு.

பெயரில்லா சொன்னது…

வணக்கம்

நட்பு பற்றிய பதிவு அருமை வாழ்த்துக்கள்.... என்றும் நட்பு தொடர்க...

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

இராஜராஜேஸ்வரி சொன்னது…

நட்பு ,
மனதுக்குள் மலர்ந்து
மணக்கிறது ..!

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

நட்பின் எல்லை விரியட்டும்...

Unknown சொன்னது…

உண்மை நட்புக்களுக்கு சோதனை/பிரிவு வருவது...........!ஹூம்.

துரை செல்வராஜூ சொன்னது…

அன்பின் வழியது உயிர்நிலை!..
தங்களுடைய நண்பர்களைப் பகிர்ந்து கொண்ட விதம் அருமை!..அழகு!..

உஷா அன்பரசு சொன்னது…

நட்பு இனிமையானது..!

சக்தி கல்வி மையம் சொன்னது…

நட்பு என்றைக்குமே நிலைக்கும்..

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க செங்கோவி
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க வெங்கட் அண்ணா..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோ. ரூபன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க இராஜராஜேஸ்வரி அம்மா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சௌந்தர்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க சகோ.யோகராஜா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துரை அண்ணா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க உஷா அக்கா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…


வாங்க நண்பர் கருண்....
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

இனிமையான நட்பின் நியாபகங்கள்! அருமை! பகிர்வுக்கு நன்றி!