மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 20 பிப்ரவரி, 2013மன்னித்துவிடு பாலச்சந்திரன் - கார்ட்டூனிஸ்ட்.பாலா


2009 ஆரம்ப நாட்கள் ஈழப்போர் உச்சத்தில் இருந்த நேரம். அங்கிருந்து வரும் புகைப்படங்கள் விடீயோக்கள் போரின் கொடூரத்தை சொன்னது. அதில் கர்ப்பிணி ஒருவரின் வயிறு கிழிந்து அவரின் சிசுவின் பிஞ்சு கால் விரல்கள் வெளியே தொங்கிக்கொண்டிருந்த புகைப்படம் ஒன்றும் இருந்தது. 

என்னால் மறக்கவே முடியாத படம் அது. அப்போது என் மனைவியும் எழுமாத கர்ப்பிணியாக இருந்தார். அதனாலயே என்னை அந்தப் படம் மிகுந்த சித்திரவதைக்குள்ளாக்கியிருந்தது. அந்த சிசுவின் கால்விரல்கள் பிறந்திராத என் குழந்தையாக என்னைச் சித்திரவதை செய்தது. 

இன்றளவும் சிலபேர் மீது எனக்கு வன்மம் குறையாமல் இருப்பதற்கு அந்தப் படமும் ஒரு காரணம். 

இனிமேலும் தொடர்ந்து ஈழத்திலிருந்து வரும் புகைப் படங்களைப் பார்த்தால் மனப்பிறழ்வுக்குள்ளாகிவிடுவோம் என்ற அச்சத்தின் காரணமாக அவைகளைப் பார்ப்பதை தவிர்த்துவிடுவேன். சில மாதங்களுக்கு முன்பு மார்பில் துப்பாக்கியால் சுடப்பட்டுக் கொல்லப்பட்ட பாலச்சந்திரனின் படம் வெளியாகியிருந்தது. இப்போது சுட்டுக்கொல்லப்படுவதற்கு முன் உயிரோடு இருக்கும் பாலச்சந்திரனின் படம் வெளியாகியிருக்கிறது. 

தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது.. தனக்கு என்னாகும் என்பது பற்றியெல்லாம் ஏதும் அறிந்திராத அந்தப் பாலகன் ராணுவம் கொடுத்த பிஸ்கெட்டை சாப்பிட்டுக்கொண்டிருக்கிற அந்தப் புகைப்படத்தை பார்த்த தருணத்திலிருந்து 2009 காலகட்டங்களில் ஏற்பட்ட மன உளைச்சல் இன்று வந்தது. கொல்லப்பட்ட பாலச்சந்திரனின் படத்தை விடப் பிஸ்கெட் சாப்பிட்டுக்கொண்டு உயிரோடு அமர்ந்திருக்கும் இந்தப் படம் எனக்கு மிகுந்த வலியை கொடுக்கிறது.. 
அதுவும்.. அந்த வெறித்தக் கண்கள்... பாவிகளே.. எப்படி மனசு வந்தது.. அந்த குழந்தையை சுட்டுக்கொல்ல..

ஒரு சிறுவனைக்கூட விட்டு வைக்க முடியாதளவுக்கு வன்மத்தோடு இருக்கும் ஒரு இனவெறி அரசுடன் தமிழர்கள் சேர்ந்து வாழ வேண்டும் என்று இப்போதும் கூறி அறிவுஜீவிகள் சிலர் தங்கள் வாழ்வை செழிப்பாக்க கூடும். 

தலைவர் வருவார்.. ஐந்தாம் கட்ட ஈழப்போர் வெடிக்கும்.. என்று செத்துப்போன உங்களை வைத்து சிலர் பிழைப்பும் நடத்தக்கூடும். 

தம்பி.. உன் தந்தையிடம் சொல்.. இவர்களுக்கு மத்தியில் நாம் தமிழர்களாகப் பிறந்ததே அசிங்கம் என்று.. 

மன்னித்துவிடு பாலச்சந்திரன்.. 
நாங்கள் கையாலாகாத தமிழர்கள்.. 


நன்றி:  கார்ட்டூனிஸ்ட்.பாலா

-'பரிவை' சே.குமார்

3 கருத்துகள்:

 1. வணக்கம்

  இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
  http://blogintamil.blogspot.com/2014/06/2.html?showComment=1403913354053#c858988773780526037

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...