மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 20 பிப்ரவரி, 2013

வட்டியும் முதலும் ! - ராஜுமுருகன்



(நன்றி : ஓவியம்: ஹாசிப்கான்)


ரேஞ்சர் தெரியுமா உங்களுக்கு?

கடலூர் பக்கம் ஒரு கிராமத்தில் வசிக்கும் நரிக்குறவ மக்களின் தலைவர் ரேஞ்சர். பாண்டிச்சேரி கலைச்செல்வன்தான் ரேஞ்சரைப் பற்றிச் சொல்லி, அவரிடம் என்னை அழைத்துப்போனது. நாங்கள் போனது ஒரு சாயங்காலம். ஊர் திடலில் மொத்த நரிக்குறவ மக்களும் திரண்டு இருந்தனர். கொஞ்ச நேரத்தில், 'தலைவர் வர்றாரு... தலைவர் வர்றாரு...’ எனச் சத்தங்கள் வர, ரேஞ்சர் வந்தார். ஜகஜக வெனப் பச்சைக் கலரில் தலைப்பாகை கட்டி, கூலிங் க்ளாஸ் போட்டு, பளபள காவி பைஜாமா, பட்டு வேட்டியில் விசித்திரமாக இருந்த ரேஞ்சரை ஒரு நாற்காலியில் அமர்த்தித் தூக்கி வந்து திடல் நடுவே உட்காரவைத்தார் கள். அது தலைவருக்கு அவர்கள் தரும் மரியாதை போல என நினைத்தேன். கூட்டத்தில் சில பிரச்னைகளை அந்த மக்கள் சொல்ல, சடசடவென லா பாயின்ட்களோடு பல விஷயங்களை ரேஞ்சர் பேசியது அவ்வளவு வசீகரம். கூட்டம் முடிந்ததும் மறுபடி நாற்காலியோடு அவரைத் தூக்கிப் போனார்கள். அப்போதுதான் கவனித்தேன்... அவருக்கு இரண்டு கால்களும் ஊனம். சட்டென்று அந்தக் காட்சியின் விசித்திரம் துயரமாக மாறி என்னை அறைந்தது.

''இது என்ன பேரு ரேஞ்சர்னு..?'' என்றதும் பகபகவெனச் சிரித்தார். 

''நம்மாளுகள்ல பார்த்தீங் கன்னா, ஊர்ப் பேரை நிறைய ஆளுகளுக்கு வெச்சிருப்போம். சிதம்பரம், பழநி, பாண்டிசேரினு. அப்ப எங்க தங்கிருக்கமோ அந்த ஊர் பேரை வெச்சி ருவோம். அப்புறம் எம்.ஜி.ஆர், ரஜினி, அஜித், விஜய்னு சினி ஆக்டருங்க பேரையும் வெச்சுருவோம். எங்கப்பா ஒரு மொரட்டுக் கூக... நாங்க அப்ப காட்டுக்குள்ள இருந்தோம். எப்போ பாத்தாலும் இந்த ரேஞ்சருங்க வந்து டார்ச்சர் குடுத்துட்டே இருப்பாங்க... அப்பதான் நா பொறந்துருக்கேன். ஒடனே எங்கப்பா, 'நீங்க என்னடா ரேஞ்சரு... எம் புள்ளையும் ரேஞ்சருதான்’னு கோவத்துல இந்தப் பேரை வெச்சுட்டாரு. எப்பிடியோ நாமளும் ரேஞ்சர் ஆகிட்டம்...'' என்றவரின் கால்களைக் கவனித்தேன். இரண்டு கால்களும் செயல்பட முடியாமல் ஊனமாகி இருந்தன. நான் கவனிப்பதைப் பார்த்தவர், ''இதுங்களா..? இதுக்குப் பின்னாடி ஒரு கதை இருக்குங்க...'' எனச் சிரித்தார்.

20 வருடங்களுக்கு முன்பு அந்த மக்கள் எல்லாம் பிழைப்புக்காக கடலூர் பக்கம் வந்திருக்கிறார்கள். ஊசிமணி பாசிமணி விற்பது, வேட்டையாடுவது எனத் திரிந்தவர்களின் வாழ்க்கையை மாற்ற நினைத்து இருக்கிறார் ரேஞ்சர். அப்போது கடலூரில் இருந்த அதிகாரி ஒருவர், அரசு புறம்போக்கு நிலத்தை அவர்களுக்கு வழங்க... ரேஞ்சர் அந்த மக்களைச் சேர்த்துக்கொண்டு விவசாயம் பார்க்கத் தொடங்கியிருக்கிறார். மொத்தப் பேரும் கை கோத்து, விதைத்து, நட்டு, உரம் போட்டுக் காவல் காத்துப் பயிர் பண்ணியிருக்கிறார்கள். பயிர்கள் வளர்ந்து அறுவடைக்குத் தயாராகிவிட்ட ஓர் இரவில், 'தொழிலாளிப் பசங்க மொதலாளியாகலாம்னு பாக்குறீங்களாடா... விவசாயம் கேக்குதா ஒங்களுக்கு...’ என குரூப் கட்டி வந்த பக்கத்து ஊர்க்காரர்கள் மொத்த வயலையும் அறுத்துப் போய்விட்டார்கள். அப்போது பார்த்து அந்த அதிகாரி மாற்றலாகிவிட்டார். ஊர்க்காரர்களை எதிர்த்துக் கேட்க முடியாமல்... என்ன செய்வது என்று தெரியாமல் மொத்த ஜனமும் கண்ணீரில் நிற்க, நொறுங்கிவிட்டார் ரேஞ்சர். போலீஸ் ஸ்டேஷன், கலெக்டர் ஆபீஸ் எனத் திரிந்தவர் மனசு நொந்துபோய், தற்கொலை செய்துகொள்வதற்காக ஒரு புளிய மரத்தில் ஏறிக் கீழே குதித்திருக்கிறார். 

அதில்தான் இரண்டு கால்களும் செயல் இழந்துவிட்டனவாம்.

''தற்கொலை செஞ்சுக்கக்கூடத் தெரியாத தற்குறியா இருந்திருக்கேங்க நான்... இயலாமை யும் கோவமும் முண்டிக்கிட்டு என்ன பண்ற துனு தெரியாம எத்தன ஏழபாளைங்க இருக் காங்க சாமி இந்த நாட்டுல? சாவணும்னா புளிய மரத்துல ஏறிக் குதிக்கக் கூடாதுங்கறதுதான் நான் கத்துக்கிட்ட பாடம்...'' என இப்போது சிரிக்கிறார் ரேஞ்சர். அதன் பிறகு, ஆஸ்பத்திரியில் வைத்து, இரண்டு கால்களும் செயல்படாத நிலையில் வந்தவரை அந்த மக்கள் தலைவராக்கிக்கொண்டார்கள். அப்புறம் இந்த மக்களின் பிரச்னைகளையே தனது தினசரி வாழ்வாக்கிக்கொண்டார். உட்கார்ந்தபடியே உலகம் படித்து, சட்டங்கள் அறிந்து, மனிதர்கள் புரிந்து அந்த மக்களுக்காகவே இருக்கிற ரேஞ்சரைப் பார்க்கும்போது ஆச்சர்யமாக இருந்தது. வரும்போது அவர் சொன்னார், ''சார்... நா எதுக்காக விவசாயம் பண்ணணும்னு நினைச்சேன்... எதுக்காவ புளிய மரத்துல ஏறி வுழுந்து சாவணும்னு துடிச்சேன்... எனக்காகவும் இதுங்களுக்காகவும் இல்ல... எங்க புள்ளைவளுக்காவ... இந்தக் கதியத்த பொழப்ப அதுங்க வாழக் கூடாதுங்கறதுக்காவ... நம்ம கஷ்டத்த அடுத்த தலைமுறைக்குக் குடுத்துட்டுப் போவக் கூடாது சார். அதுங்களுக்கு எதாவது நல்லது பண்ணிட்டுப் போறவன்தான் மனுஷன். பணங்காச வுடுங்க... நம்பிக்கையக் குடுத்துட்டுப் போவணும்ல?!''

இதைக் கேட்டதும் எனக்குச் சிலிர்த்துவிட்டது. அவரைக் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு வந்தேன். அடுத்த தலைமுறைக்காக நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம்? என்ன நம்பிக்கைகளை சேர்த்துவைக்கிறோம்? நமது நினைவாக எதைக் கையளிக்கப்போகிறோம்? என அலை அலையாக மனம் கேள்வி எழுப்பியது. இரை தேடும் வித்தையை மட்டும் அல்ல, பசி தீர்க்கும்கருணை யையும் அல்லவா கையளிக்க வேண்டும். அதிகாரத்தை அடையும் பாதைகளை மட்டும் அல்ல; எளியவர்களுக்காகப் போராடும் உணர்வு களையும் அல்லவா சொல்லித் தர வேண்டும். பிழைப்பதற்கான மூளையை மட்டும் அல்ல; வாழ்வைத் தரிசிப்பதற்கான மனசையும் அல்லவா கையளிக்க வேண்டும்.

நான் ஆதர்சங்களாக நினைக்கும் பலரால் பணம், அதிகாரம் எதிலும் ஓர் இடத்தை அடையவே முடியவில்லை. உலகின் அற்புதமான சொற்களையும், கனவுகளையும், நம்பிக்கைகளையும் நமக்குத் தந்தபடி அவர்கள் 'பிழைக்கத் தெரியாதவர்களாக’ தேநீர்க் கடைகளிலும், மதுக் கடை களிலும், பயணங்களிலும் காணக் கிடைக்கிறார் கள். அறத்தையும் அடுத்தவர்களின் விளைவு களையும் பொருட்டாகக் கருதாமல், மோதி மிதித்து நடக்கும் பலர் பணம், அதிகாரம் என ஓர் இடத்தை அடைந்துவிட்டதையும் பார்க்கி றேன். ஈழப் பிரச்னை எரிந்தபோது, தவ்விக் குதித்து வந்த பலர் இப்போது என்ன செய்கிறார் கள்? கூடங்குளத்துக்காக எகிறி வந்தவர்கள் பாதிப் பேர் எங்கே போனார்கள்? 'போராளி’ என்கிற அடையாளத்தைத் தனது வாழ்வின், பிழைப்பின் ஒரு பகுதியாக வைத்திருப்பவர்கள், அடுத்த அரசியல் முகத்தை மாட்டிக்கொண்டு வேறு வேலைகளில் பிஸியாகிவிட்டார்கள். தனது இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதை மட்டுமே நோக்கமாக வைத்திருப்பவர்கள் அவர்கள். அவர்கள்தான் நினைத்ததைக் கொள்முதல் செய்கிறார்கள். தனக்கான நாற்காலியை அடைகிறார்கள். சுற்றத்தால் கொண்டாடப்படுகிறார்கள். ''வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுறாங்க பாஸ்...'' என்றபடியே மத்திய அமைச்சகத்துடன் ஐபோனில் பேசுகிற இடத்தில் இருக்கிறார்கள். ''அவரைப் போல பொழைக்கத் தெரியணும். அந்த இடத்துக்கு நீ வரணும்டா...'' என அடுத்த தலைமுறைக்கு (தவறான)முன்னுதாரணம் ஆகிறார்கள். ஒவ்வொரு நாளும் வேகம் எடுக்கிற உலகத்தில் சக மானுடர்களின் பசி, ஏக்கம், போராட்டம் பற்றிய அக்கறையின்மை யைத்தான் அடுத்த தலைமுறைக்குக் கொடுக்கிறோமா நாம்? தனிப்பட்ட வாழ்க்கையின் வெற்றி, தோல்வி யைத்தான் அவர்களுக்குப் பாடமாக்குகிறோமா?

சமீபத்தில் திருவொற்றியூரில் நண்பர் குமரய்யா அழைத்திருந்த ஒரு விழாவுக்குப் போயிருந்தேன். வட சென்னையைச் சேர்ந்த ஏழை மாணவர்களுக்கு இலவசப் புத்தகங்கள் வழங்கும் விழா அது. சில நண்பர்கள் சேர்ந்து 'புத்தக வங்கி’ ஏற்படுத்தி, இந்தக் காரியத்தைச் செய்கிறார்கள். விழாவில் திருவொற்றியூர் முருகனைச் சந்தித்தேன். ''இவரு கேன்சர் விழிப்பு உணர்வுக்காக சைக்கிள்லயே தமிழ்நாடு முழுக்கச் சுத்திட்டு வந்திருக்கார் சார்... இதுக்காக இதுவரைக்கும் கிட்டத்தட்ட ஐயாயிரம் கிலோ மீட்டர் சைக்கிள்லயே போயிருக்காரு...'' என முருகனை அறிமுகப்படுத்தினார்கள். ''எப்பிடி இந்த விஷயம் உங்களுக்குத் தோணுச்சு?'' என அவரிடம் கேட்டேன். ''என் மனைவி கேன்சர் வந்து செத்துப்போயிட்டாங்க சார். மார்பகப் புற்று நோய்... அது வரைக்கும் அதைப் பத்தி எதுவும் தெரியாது. அப்புறம்தான் இந்தப் புற்றுநோய்க்காக எவ்வளவு சிகிச்சைகள் இருக்கு... எவ்வளவு இடங் கள் இருக்கு... என்னல்லாம் பண்ணணும்னு  தெரிஞ்சது. நான் என் மனைவியை அவ்வளவு நேசிச்சேன் சார். அவங்க போனதை இப்போ வரை ஜீரணிக்கவே முடியலை. என்னை மாதிரி இந்த நோயால எவ்வளவு ஜனம் கஷ்டப்படும்னு நெனைச்சேன்.... நாளைக்கு வர்றவங்க இதைத் தெரிஞ்சுக்கணும்னு நெனைச் சேன்... அதனாலதான் சார் இந்த சைக்கிள் பயணத்தை ஆரம்பிச்சேன். ரெண்டு மாசத்துக்கு ஒரு தபா எங்க ஏரியால மருத்துவ முகாமும் ஏற்பாடு பண்றேன். ஏதோ என்னால முடிஞ்சது'' என்றார் புன்னகையுடன்.

வெற்றி, தோல்வி என்றெல்லாம் எதுவும் இல்லை. சந்தோஷம் துயரம் என்றும் எதுவும் இல்லை. நமது தோல்வியை வெற்றியாகவும் துயரத்தைச் சந்தோஷமாகவும் வரும் தலை முறைக்குக் கொடுப்பதுதான் இந்த வாழ்வின் அர்த்தம் என்பதை திருவொற்றியூர் முருகன் எனக்குச் சொல்லித்தந்தார். குழந்தைகளின் கலைஞன் வேலு சரவணனும் அப்படித்தான்.

வேலுவை நான் பரபரப்பான தி.நகர் சாலை ஒன்றில் சந்திப்பேன். ஏதேதோ வேலை களுக்காக ஓடித் திரியும்போது நடுவில் கிடைக்கும் சந்திப்பு.

''குழந்தைகளுக்கான ரசனையை மேம்படுத்த ஒரு கூத்து பண்றோம். அதுக்காகப் போயிட்டு இருக்கேன்...'' என்பார் புன்னகையுடன். ஒரு நாள் பார்த்தால் விழுப்புரம் பக்கத்தில் ஏதாவது கிராமத்துப் பள்ளிக்கூடத்தில் குழந்தைகளுக்குக் கதை சொல்லிக்கொண்டு இருப்பார். தஞ்சா வூர் பக்கம் ஏதோ ஒரு சிற்றூர் மைதானத்தில் குழந்தைகளோடு விளையாடிக்கொண்டு இருப்பார். ஒரு நாள் திருவண்ணாமலையில் பொம்மை முகமூடி மாட்டிக்கொண்டு அவர் தவ்வித் திரிய, மொத்தக் குழந்தைகளும் குதித்துச் சிரித்துக் கிடந்த காட்சி அழகாக இருக்கிறது இப்போதும்.

வேலுதான் சொன்னார், ''பிள்ளைகளுக்கு இயற்கையையும் மண்ணையும் நேசிக்கக் கத்துத்தரணும். அவங்களுக்கு ரசனையையும் அன்பையும் ஊட்டுறதுதான் என் வாழ்க்கை.

பணம் காசு எதுவும் இல்லைங்க... அவங் களோட ஒரு சிரிப்பு போதும் என் வாழ்க் கையை அர்த்தப்படுத்த. அடுத்த தலை முறைக்கு நாம அந்த சிரிப்பைத்தானே தரணும்!''

அந்தக் கணம் எனக்கு அவராகவே மாறிவிடத் தோன்றியது!

-'பரிவை' சே.குமார்.

1 எண்ணங்கள்:

RAMA RAVI (RAMVI) சொன்னது…

சிறப்பான பதிவு குமார்.
நன்றி பகிர்வுக்கு.