மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 27 பிப்ரவரி, 2013ரயில் பட்ஜெட் - முக்கிய அம்சங்கள்: ஒரு பார்வை


14ம் நிதியாண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டை மத்திய ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சால் நேற்று தாக்கல் செய்தார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

* பயணிகள் கட்டணம் உயரவில்லை.
* முன்பதிவு, தக்கால் கட்டணம் உயர்கிறது.
* பார்சல், லக்கேஜ் கட்டணத்தில் மாற்றமில்லை.
* இணையதளம் மூலம், அதிகாலை, 12:30 மணி முதல், இரவு, 11:30 வரை டிக்கெட் எடுக்கலாம்.
* மொபைல் போன் மூலம், "இ- டிக்கெட்' வசதி அளிக்கப்படும்.
* ஒரே நேரத்தில் இப்போது, 40 ஆயிரம் பேர்,"இ - டிக்கெட்' எடுக்க முடியும்; இது, 1.2 லட்சம் பேராக அதிகரிக்க, "நெக்ஸ்ட் ஜென்' இ - டிக்கெட் என்ற புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். இதன் மூலம், ஒரு நிமிடத்தில், 7,200 டிக்கெட் வாங்க முடியும்.
* 67 புதிய எக்ஸ்பிரஸ், 26 புதிய பாசஞ்சர் ரயில், எட்டு, டி.இ.எம்.யு., ஐந்து, எம்.இ.எம்.யு., ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்.
* ரயில்களில், படிப்படியாக, பயோ - டாய்லெட் அறிமுகப்படுத்தப்படும்.
* ரயில்வே பாதுகாப்பு படை பிரிவில், பெண்களுக்கு, 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
* கூடுதலாக, ஆறு இடங்களில், "ரயில் நீர்' பாட்டிலில் அடைக்கும் தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்படும்.
* பயணிகள், ஊழியர்கள், "ஆதார்' அடையாள அட்டை பயன்பாடு அதிகரிக்கப்படும்.
* ரயில்களில், அறிவிப்பு வசதி மற்றும் எலக்ட்ரானிக் டிஸ்பிளே வசதி செய்யப்படும்.
* பல ரயில்களில், இலவசமாக, "வை - பி' வசதி அளிக்கப்படும்.
* எரிபொருள் கட்டணத்தை பொறுத்து, சரக்கு கட்டணம், ஏப்ரல் முதல் மாற்றியமைக்கப்படும்.
* 12வது திட்ட காலத்தில் (2012 - 17), 10,797 ஆளில்லா, லெவல் - கிராசிங்குகள் நீக்கப்படும்.
* ஆட்டோமேடிக் சிக்னல்களில், ரயில் பாதுகாப்பு எச்சரிக்கை முறை பின்பற்றப்படும்.
* விபத்து நிவாரண பணியில், தானாக செயல்படும் நிவாரண ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்.
* ரயில் பெட்டிகளில், தீ மற்றும் புகை கண்டறியும் கருவிகள், எளிதில் தீப்பிடிக்காத துணிகள் பயன்படுத்தப்படும்.
* ரயில் உணவுகளை கண்காணிக்க, தனி பிரிவு ஏற்படுத்தப்படும். அதை தொடர்பு கொள்ள, கட்டணமில்லா தொலைபேசி எண், 1800 111 321 அறிமுகப்படுத்தப்படுகிறது.
* முன்பதிவு டிக்கெட்டின் தற்போதைய நிலை குறித்து, எஸ்.எம்.எஸ்., அலர்ட் செய்திகள் அனுப்பப்படும்.
* 500 கி.மீ.,க்கு புதிய பாதை, 750 கி.மீ.,க்கு இரட்டை பாதை, 450 கி.மீ.,க்கு அகலப்பாதை அமைக்கப்பட உள்ளது.
* விருது வெல்லும் விளையாட்டு வீரர்களுக்கு, சலுகை கட்டணம் வழங்கப்படும்.
* இந்த ஆண்டில், 1.52 லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படும்.
* ரயில் கட்டண ஒழுங்குமுறை ஆணையம் ஏற்படுத்தப்படும்.
* ரயில்வே துறைக்கு நஷ்டம், நடப்பு நிதியாண்டில், 24,600 கோடியாக இருக்கும்.
* சில குறிப்பிட்ட, சதாப்தி மற்றும் ராஜ்தானி ரயில்களில், "அனுபூதி' என்ற பெயரில், விசேஷ, "ஏசி' பெட்டிகள் அறிமுகப்படுத்தப்படும்.
* சுதந்திர போராட்டத்துடன் தொடர்புடைய இடங்களுக்கு செல்ல, "ஆசாத் எக்ஸ்பிரஸ்' ரயில் அறிமுகப்படுத்தப்படும்.
* சீனா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா நாடுகளின் ரயில்வே துறை மட்டுமே பெற்றுள்ள, "1 பில்லியன் டன்' சரக்கு கையாளும் திறன் சாதனை, விரைவில் இந்திய ரயில்வே துறைக்கும் கிடைக்கும்.
* ரேபரேலி, பில்வாரா, சோனேபட், காலஹண்டி, கோலார், பாலக்காடு மற்றும் பிரதாப்கார் பகுதிகளில், புதிய ரயில் பெட்டி தொழிற்சாலைகள் அமைக்கப்படும்.
* நலிவடைந்தோர், மாற்றுத் திறனாளிகளுக்கான, 47 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.
* "ஏசி' ரயில் இன்ஜின்கள் அறிமுகப்படுத்தப்படும்.

பயணிகள் கட்டணமும் உயரும்: பன்சால் சூசகம்:

"எரிபொருள் விலைஏற்றத்திற்கு ஏற்ப, ஏப்ரல் மாதம் முதல், சரக்கு கட்டணத்தில், 5 சதவீதம் உயர்த்தப்படும்' என, அறிவித்துள்ள ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால், "பயணிகள் கட்டணமும் உயரலாம்' என, சூசகமாக தெரிவித்தார். ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்த பின், பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர், பவன்குமார் பன்சால் கூறியதாவது: எரிபொருள் விலையை சரிகட்டும் நடவடிக்கையாக, ஏப்ரல், 1ம் தேதி முதல், சரக்கு கட்டணத்தில், 5 சதவீதம் உயர்த்தப் படும். இதன் மூலம், வரும் நிதியாண்டில், 4,200 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும். பிற துணை கட்டணங்களான, முன்பதிவு கட்டணம், ரத்து கட்டணம், தக்கால் கட்டணம் போன்றவற்றின் மூலம், 483 கோடி ரூபாய் திரட்டப்படும். மொத்தம், 4,683 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும். டீசல் கட்டண உயர்வு மற்றும் மின் கட்டணம் அதிகரிப்பு போன்றவற்றால், ரயில்வே துறைக்கு, 5,100 கோடி ரூபாய் கூடுதல் செலவாகிறது. இப்போதைக்கு, பயணிகள் கட்டணத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. எரிபொருள் விலையின் அடிப்படையில் கட்டண மாற்றம் எதிர்காலத்தில் இருக்க வாய்ப்பு உள்ளது. பயணிகள் கட்டணத்தை உயர்த்தாததால், 850 கோடி ரூபாய் இழப்பை, ரயில்வே துறையே ஏற்று கொள்கிறது. பட்ஜெட்டில், மேற்கு வங்கம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என, திரிணமுல் காங்கிரஸ் கூறுவதில் உண்மைஇல்லை; அம்மாநிலத்திற்கு, 14 புதிய ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அமைச்சர், பன்சால் கூறினார்.

பன்சாலின் கன்னி பட்ஜெட்: பல இடங்களில் தடுமாற்றம்: 

மத்தியில் ஆளும், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு தலைமை வகிக்கும், காங்கிரஸ் கட்சி வசம், 17 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்துள்ள, ரயில்வே பட்ஜெட் சமர்ப்பிக்கும் வாய்ப்பு, ரயில்வே அமைச்சரும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான, பவன்குமார் பன்சாலுக்கு கிடைத்தது. இது தான் அவரின் முதல், ரயில்வே பட்ஜெட் என்பதால், அவரிடம் தடுமாற்றம் காணப்பட்டது. குறிப்பாக, ஊர்களின் பெயரை அவர் வாசிக்கும் போது, தட்டுத் தடுமாறியதை, எதிர்க்கட்சி தலைவர், சுஷ்மா வெகுவாக ரசித்து சிரித்து கொண்டிருந்தார். காங்கிரஸ் தலைவர், சோனியாவும் அதை கவனித்தாலும், கண்டுகொள்ளாதது போல இருந்தார். பார்வையாளர் மாடத்தில், பன்சாலின் மனைவி மது மற்றும் மகன்கள் அமர்ந்திருந்தனர். பன்சாலின், 75 நிமிட பட்ஜெட் உரையின் முதல் அரை மணி நேரத்தில், எம்.பி.,க்கள் அனைவரும் அமைதியாக இருந்து கேட்ட படி இருந்தனர். புதிய ரயில்வே திட்டங்கள், காங்கிரஸ் எம்.பி.,க்கள் மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சியினரின் தொகுதிக்கு சென்றதை அறிந்த பிற கட்சியின் எம்.பி.,க்கள், கூச்சல் எழுப்பினர்; சிலர், பட்ஜெட் உரை தாளை கிழித்து எறிந்தனர். குறிப்பாக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், ஐக்கிய ஜனதா தளம், திரிணமுல் காங்கிரஸ் மற்றும் சில இடதுசாரி கட்சிகளின், எம்.பி.,க்கள், சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு, கோஷம் எழுப்பினர். ராஜ்யசபா எம்.பி.,க்கள் பலர், லோக்சபா வந்து, பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து, பன்சாலின் பட்ஜெட் உரையை கவனித்தனர்.

நன்றி : தினமலர்.

-'பரிவை' சே.குமார்

2 கருத்துகள்:

  1. ஆர்ப்பாட்டமும் கூச்சலும்தான் அதிகமாய் இருக்கும் அதுதான் பாராளுமன்றம்.உங்களின் ரயில்வே பட்ஜெட் பற்றிய அலசல் அருமை

    பதிலளிநீக்கு
  2. நல்ல தகவல் பதிவு குமார்.

    பயணிகள் கட்டணம் உயரவில்லை என்றால் கூட முன்பதிவு கட்டணம் உயர்ந்திருப்பதால் பயணசீட்டிற்கு அதிக விலை கொடுத்தாக வேண்டுமே?

    பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...