மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 17 டிசம்பர், 2010மொதச் சொத்து


செல்லம்மாவுக்கு மகன் சொன்ன செய்தியைக் கேட்டதும் மனசு நொறுங்கிப்போனது. என்னப்பா சொல்றே... அந்த நிலத்தை விக்கப் போறியா?... மறுபடியும் கேட்டாள். ஆமா... அது வேஸ்ட்டாத்தானே கிடக்கு... அதை கொடுத்துட்டு ரோட்டோரமா ஒரு இடம் வருது. வாங்கிப் போட்டா பின்னால வீடு கீடு கட்டி வாடகைக்கு விடலாம். அந்தப் பக்கம் இருக்கிற எல்லா நிலத்தையும் ஒருத்தர் வெல பேசுறார்... நல்ல வெல போகுமாம். அதான் கொடுத்துடுவோம். அது உங்கப்பா மொதமொதலா எனக்கு வாங்குன்ன சொத்துடா... அதை விக்கணுமாடா மெதுவா கேட்க, ஆமா பெரிய அரண்மனைய வாங்கி கொடுத்திட்டாரு... ஒரு ஏக்கரு எடந்தானே... எல்லாப் பயலும் வித்துட்டா அப்புறம் அதை ஒருத்தனும் வாங்க வரமாட்டான். நல்ல வெல கிடக்கிறப்போ வித்துடலாம். உங்க பேருல இருந்தா பின்னால பொம்பளைப் புள்ளங்க வேற பிரச்சினைக்கு வந்ததுங்கன்னா... சரி இடத்தை விக்கிற வரை யாருகிட்டயும் சொல்லாதீங்க... அப்புறம் எங்களுக்குத்தான் சொத்துன்னு கொடிப் புடிக்க வந்திருங்க என்றபடி கிளம்பினான்.

அவன் விற்பதாக சொன்ன நிலம் ரோட்டோரத்தில் இல்லைதான்... ஆனால் நல்லா வெளஞ்ச நிலம்தான்... இப்ப வானம் பொய்த்துப் போகவும் பராமரிக்க ஆள் இல்லாததாலயும் விவசாயத்தை துறந்துட்டு கருவ மரங்களை தாங்கி நிக்குது. இப்பவும் வீட்டுல அடுப்புக்கு போக வருசம் வருசம் அதுல இருக்க வெறக வெலக்கி கொடுத்து சம்பாதிக்கத்தான் செய்யிறாங்க.

செல்லம்மா அந்த வீட்டு மருமகளா வந்தப்போ கொஞ்ச நிலம்தான் இருந்தது. வெஜயன் மாமாவோட நிலத்தை பங்குக்கு போட்டுக்கிட்டு இருந்தாங்க. அவரு டவுனுல எதோ கவருமெண்ட் உத்தியோகம் பாத்ததால வெவசாயம் பண்ண விரும்பலை... கொஞ்ச காலத்துக்கு பின்னால ஒரு வெலய வச்சு அவ மாமனாருக்கிட்டயே கொடுத்துட்டாரு... வெவசாய வேல காலத்துல மாமனாரு சொல்லாமலே செல்லம்மா மாங்கு மாங்குன்னு வெவசாய வேல எல்லாத்தையும் இழுத்துப் போட்டுகிட்டு பாப்பா... இருக்கதுலயே பெரிசாவும் கடைசியாவும் இருக்கிற எல்லச் செய்யிக்கு கம்மாயில இருந்து தனியாளா தண்ணி கொண்டு போயி பாச்சிடுவா. சில சமயங்கள்ல மாமனாருக்கு உடம்பு முடியலைன்னா இவளே வயல்ல இறங்கி உரமெல்லாம் போட்டிருக்கா. அவ புருஷன் தனராஜ் ஸ்டேட் பேங்குல பியூனா இருந்தான். கவருமெண்ட் உத்தியோகம் பாக்கிறதால கல்யாணத்துக்கு முன்னால இருந்தே மாமனார் அவனை வய பக்கம் வரவிட்டதில்லை. அவனும் வய பக்கமே வாரதில்லை. ஆனா அவனுக்கும் சேத்து செல்லாத்தா வேல பாத்தா.

அப்பத்தான் இந்த நிலம் வெலக்கு வந்தது. அவள் மாமனார் காசு இல்லைன்னு வேண்டாமுன்னு மறுத்தப்போ தனராஜ்தான் நல்ல இடம்ப்பா... மொத்தமா ஒரு ஏக்கருக்கிட்ட இருக்கு.... வெவசாயம் பண்ண நல்ல இடமுன்னு எங்கெங்கயோ பணம் பொரட்டி வாங்க வச்சான். அவன் முத முதல்ல பணம் போட்டு வாங்கினதால அவங்கிட்ட சொல்லி மருமக பேர்ல பத்திரம் போட வச்சாரு. அதனால செல்லம்மாவுக்கு அந்த நிலத்து மேல தனிப்பட்ட பாசம். அவ புருசன் மொதமொதலா வாங்கின நெலம்... அதுவும் அவ பேர்ல வேற... சந்தோஷம் இருக்காதா என்ன.

அதை எல்லாரும் பெரிய செய்யின்னு சொன்னாலும் அவ மாமனாரு மட்டும் செல்லம்மா செய்யின்னுதான் சொல்வாரு. செல்லம்மா செய்யில நாளைக்கு உரம் போடணும்... செல்லாத்தா செய்யிக்கு தண்ணியடச்சு விடனுமின்னு அவரு சொல்றப்போ அவளுக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கும். மாமனாரும் மாமியாரும் போய்ச் சேந்ததுக்குப் பின்னால எல்லா வயலையும் செல்லம்மா மட்டும்தான் பாத்தா... அப்பல்லாம் நாட்டுக்கட்டு கட்டுன சேலய மொழங்கால் வரைக்கும் தூக்கி சொருகிகிட்டு தலமுடிய கொண்ட போட்டுகிட்டு அவ வயலுக்குள்ள திரியிறதைப் பாக்கணுமே... சும்மா ஆம்பளக் கணக்கா வேலை பாப்பா... அவளுக்கு பொறந்ததெல்லாம் அப்பன மாதிரி... இங்கன கெடக்கத அங்கன எடுத்துப் போடாதுக... மூத்தவன் மட்டும் அப்ப அப்ப அவ திட்டுக்குப் பயந்து வயல்ல இறங்கி வேல பாப்பான். மத்ததெல்லாம் அப்பவுல இருந்து இப்ப வரைக்கும் வயப்பக்கமே வாறதில்லை.

நல்லா வெளஞ்சுக்கிட்டிருந்த ஊர்ல விவசாயமே வாழ்க்கைன்னு கிடந்த மக்களெல்லாம் அறுவடையான பின்னால வய வேலை பாக்கிறவங்க கொறஞ்சிட்டாங்க. பாதிச் செய்யில கருவ மரம் வளர்ந்து பசுமையா இருந்த அந்த ஊரை கொஞ்சம் கொஞ்சமா தன்னோட பிடிக்குள்ள கொண்டாந்திருச்சு. எதோ நாலஞ்சு குடும்பம் வெவசாயத்தை இழுத்துக்கிட்டு கிடந்துச்சு. அதுல செல்லம்மாவும் ஒருத்தி, எல்லா வயலையும் வெயிலு காலத்துல மராமத்து பாத்து கருவ வராம வச்சிருப்பா... மண்டிக்கிடக்கிற கொலுஞ்சிச் செடியவும் மழை பேஞ்சு தண்ணி நிக்கிறப்போ தூரோட பிடுங்கி வயல்ல போட்டு வப்பா... அது தண்ணியல அழுகி கருப்பு கலாரா தண்ணி நிக்கும்... அது நல்ல உரமுன்னு மாமனாரு சொல்லியிருக்கிறாரு.

செல்லம்மா அவ புருசன் அவளுக்குன்னு வாங்கின வயல்ல விவசாயம் பண்ண ரொம்ப சிரமப்பட்டா, அவ்வளவு பெரிய வயல முன்ன மாதிரி பாக்க முடியலை. இன்னொரு பிரச்சினை என்னன்னா வேலக்கு ஆள் கிடைப்பது குதிரைக் கொம்பா இருந்துச்சு. அதனால பாத்தா செலவழிச்சு அழிவுல இருந்து காக்க முள்ளெல்லாம் அடச்சு ஆள் வச்சி பாத்து கடைசியா கொடக்கூலி மிஞ்சாது போலன்னு அத தரிசா போட்டா அடுத்த ரெண்டு வருசத்துல ஊரே தரிசாயிடுச்சு. பயிரு வெளஞ்ச பூமியெல்லாம் முள்ளு வெளஞ்சு ஏதோ தீவு மாதிரி ஆயிடுச்சு.

முன்னெல்லாம் வருசப் பொறப்பன்னைக்கு வயல்ல போயி புது ஏர் கட்டுவாங்க... மாமனார் காலத்துல அவரு ஏர் கட்ட குடும்பமே போயி நெல்ல வயல்ல போட்டு இந்த வருஷம் நல்லா வெளயணுமின்னு சாமி கும்பிட்டு வருவாக. அவருக்கு அப்புறம் ஏர் ஓட்ட ஆளில்லாததால செல்லம்மா மம்பட்டிய எடுத்துக்கிட்டு யாராவது ஒருத்தனை கூட்டிக்கிட்டு போயி ரெண்டு கொத்து கொத்திட்டு நெல்லப் போட்டு மேல தண்ணிய ஊத்திட்டு வருவா... அதுவும் இப்ப சில காலமா இல்லை. பொங்கலன்னைக்கு புத்தாண்டுன்னு சொல்லிட்டாங்களா... பொங்கலை பாக்கிறதா... விளைஞ்சு அறுப்புக்கு நிக்கிற வயல்ல ஏரோட்டப் போறதா... சொல்லப் போனா ஏர் ஓட்ட யார் வீட்டுலயும் மாடு இல்லை... இப்பல்லாம் டிராக்டருதான் உழுகுது.... எல்லா வயலையும் ஒரே நாள்ல உழுதுருவான்... அவனுக்கு வரப்பு இருக்கதுதான் சிரமம் இல்லேன்னா இந்த பக்கத்துல இருந்து அந்தப்பக்கம் வரைக்கும் ஒரே ஓட்டா ஓட்டிடுவான்.

எல்லாரோட வயலுகதான் தரிசா இருந்துச்சின்னா பல வீடுகள் மனிதர்கள் இல்லாம தரிசாயிக்கிட்டே வர ஆரம்பிச்சாச்சு. யாரோ ஒரு புண்ணியவான் அந்த ஏரியாவுல எதோ ஒரு பேக்டரி கட்டப்போறானாம் அவன் தான் எல்லா நிலத்தையும் வளச்சு வாங்குறான். எல்லாரும் விக்க ரெடியாயிட்டாங்க. மத்த செய்யெல்லாம் கேட்டா கொடுத்துடலாம்... பெரிய செய்யி மட்டும் நம்ம காலத்து வரைக்கும் அவரு நெனவா இருக்கட்டும் என்று செல்லம்மா நினைத்திருந்தாள். ஆனால் சுத்தி உள்ள வயலுகளை எல்லாம் வித்துட்டாங்கன்னா இது தீவு மாதிரி போக வழியில்லாம ஆயிடும். அதான் இப்ப கொள்ளக்காடுக எல்லாத்தையும் பிளாட் போட்டு வீடாக்கிட்டாங்கள்ல... டவுனும் அவ ஊரும் ஏறத்தாழ ஒண்ணாயிருச்சு. அதனால பய சொல்றபடி கொடுத்துட்டு ரோட்டோரமா ஒரு எடத்த வாங்கப் போடலாம். மொத மொதலா அவரு சம்பாத்தியத்துல வாங்கினதுன்னு தரலைன்னு சொல்லிட்டா நாளக்கி எல்லாரும் கொடுத்துட்டா இப்ப கொடுக்கிறதா சொல்ற வெலயும் கிடைக்காது. அவன் சொல்றதுதான் வெலயாயிடும். கொடுத்துடுறது நல்லது என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.

அந்த வயல்ல இருந்து கொஞ்சம் மண்ணெடுத்து அவரு நெனவா முடிஞ்சு வச்சுக்கணும். இந்த வயசுல அங்க போக முடியாது. மாமனாரு காலத்துல இருந்தவங்க வரப்புக் கட்டுறதுன்னு சொல்லி வரப்ப நல்லா கட்டி நடக்கிற மாதிரி வச்சிருந்தாங்க... அப்புறம் வந்தவங்க வரப்ப வெட்டுறதுன்னு சொல்லி இப்ப ரெண்டு செய்களுக்கு இடையே பேருக்கு சொவரெடுத்த மாதிரி இருக்கு. அதுல நடக்க தனி தகிரியம் வேணும். போயி விழுந்து கிடந்தா அவ்வளவுதான் என்று நினைத்தவள் ஏய்... இசோறு... அடேய்... இசோறு என்று கத்த அய்யோ அப்பத்தா எத்தனை தடவை சொல்லிருக்கேன்.... என் பேரு இசோறு இல்ல... கிஷோருன்னு... என்ன சோறோ... எனக்கு அப்புடித்தான் வருது... நம்ம பெரிய செய்யில போயி கொஞ்சம் மண்ணெடுத்துக்கிட்டு வாடா... அட போ நீ வேற.... அங்க யாரு போவா.... வேற வேலையில்ல... நான் பித்திக்கா விளையாடப் போறேன்... என்றபடி டூர்ரென்று ஓடினான். ம்... யாரு போவா... என்று நினைத்தவள், சரி சொர்ணம் மயன் வரட்டும் அவங்கிட்ட சொல்லி எடுத்தராச் சொல்வோம் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு வாசலில் காத்திருந்தாள்.

-'பரிவை' சே.குமார்.

24 கருத்துகள்:

 1. நாட்டு நடப்பு இதுதான்! நாமதான் ஏத்துக்கணும்

  பதிலளிநீக்கு
 2. நல்லாருக்கு குமார். நம்ம மக்களுக்கு புரிய வேண்டிய சங்கதி.

  பதிலளிநீக்கு
 3. கிராமிய மனங்கமழும் கதை;
  நெஞ்சை சுட்ட கதை!

  பதிலளிநீக்கு
 4. காட்சிகள் கண் முன் விரியும் வண்ணமான எழுத்து நடை.

  பதிலளிநீக்கு
 5. அருமையா சொல்லியிருக்கீங்க..

  பதிலளிநீக்கு
 6. குமார் எப்டிங்க நாலு இடுகைகளை உங்கள் கட்டி மேய்க்க முடிகிறது? ஒவ்வொன்றுமே அற்புதமாகத்தான் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 7. வாங்க நிஜாமுதீன்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க தொப்பிதொப்பி...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 8. வாங்க வைகை...
  உண்மைதான் நண்பரே...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


  வாங்க தமிழ்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 9. வாங்க சித்ராக்கா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க வெறும்பய அண்ணா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 10. வாங்க ஜோதிண்ணா...
  நாலு இடுகைகளா... அல்லது வலைப்பூவா?
  வலைப்பூ நாலை மேய்த்துக் கொண்டுதான் இருந்தேன் தற்போது வேலைப்பளுவின் காரணமாக எல்லாவற்றையும் இங்கு மட்டும்தான் எழுதுகிறேன்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 11. கதை அருமை குமார். நிஜங்களோடு சேர்த்து.

  பதிலளிநீக்கு
 12. நல்ல வர்ணனைகள்..சூப்பரா எழுதுறீங்க..கதை முடிஞ்சதா..இன்னும் இருக்கான்னு என் சிற்றறிவுக்கு புரியலீங்களே!

  பதிலளிநீக்கு
 13. கதை அருமை குமார்.நல்ல எழுத்து நடை,கதைகளை நிச்சயம் தொகுத்து வெளியிடுங்க,தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
 14. அருமையான எழுத்து நடை.
  யதார்த்தம் தான் என்றாலும், மனசு பாரமாய்.
  நல்லாயிருக்கு குமார்.

  பதிலளிநீக்கு
 15. தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும் நண்பரே,

  யதார்த்தம் கலந்த சுவாரசியத்துடன் அருமையாக பகிர்ந்துள்ளீர்கள்

  தொடருங்கள்

  நன்றி
  நட்புடன்
  மாணவன்

  பதிலளிநீக்கு
 16. எங்க அப்பத்தா அவங்க பழைய வீடு இருந்த இடத்து மண்ணை திருநீறா பூசிக்கிறதைப் பார்த்திருக்கேன். அந்த நினைவு வந்துச்சு உங்க கதை படிக்கிறப்போ .

  பதிலளிநீக்கு
 17. வாங்க அக்பர்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க உழவன்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 18. வாங்க செங்கோவி...
  பெரியவர்களெல்லாம் இப்படி சொன்னா நம்பிடுவோமா?
  இது சிறுகதைதான் ... தொடராது.
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 19. வாங்க ஆசியாக்கா...
  நீங்கள் அடிக்கடி சொல்கிறீர்கள். அபுதாபியில் இருந்து கொண்டு புத்தகம் தொகுப்பதென்பது முடியுமா தெரியவில்லை. பார்க்கலாம் அக்கா.
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 20. வாங்க மாணவன்...
  தாமதாமாக மாணவன் வந்தால் தப்பில்லைங்கோ...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 21. வாங்க சிவகுமாரன்...
  நானும் இதுபோல் சிலரை பாத்திருக்கிறேன்.
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 22. உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.

  http://blogintamil.blogspot.com/2011/01/blog-post_05.html

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...