மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 6 அக்டோபர், 2013

கிராமத்து நினைவுகள் : கல்யாணம்

கிராமத்துத் திருமணங்கள் எல்லாம் இப்போது திருமண மண்டபங்களைத் தேடி நகரத்துக்கு வந்துவிட்டது. முதல் நாள் மூன்று மணிக்கு எல்லாப் பொருட்களையும் ஏற்றி வந்து திருமணம் முடிந்த அன்று மதியம் மூன்று மணிக்கு மண்டபத்தைக் காலி செய்து கொடுக்க வேண்டும். அந்த இரண்டு நாட்களும் பரபரப்பாக வேலை நடக்கும். திருமணம் முடித்து வீட்டுக்குச் சென்றால் திருமணம் நடந்ததற்கான அறிகுறி இல்லாது வீடு அமைதியாக இருக்கும். காரணம் சொந்தங்கள் எல்லாம் மண்டபத்துக்கு வந்துவிட்டு சென்றுவிடும்.

கிராமங்களில் திருமண வேலை என்பது நிச்சயம் பண்ணியதில் இருந்து ஆரம்பித்துவிடும். ஒரு புறம் விறகு வெட்டு காயவைத்து அடைந்து வைப்பார்கள். மறுபுறம் நெல் அவிழ்த்து காயவைத்து அரைத்து வைப்பார்கள். இதுவே பெண் வீடாக இருந்தால் முறுக்கு, அதிரசம் என பலகாரங்களுக்கும் மாவு தயார்ப் பண்ணி வைப்பார்கள்.

ஊருக்குள் பத்திரிக்கை வைப்பதில்லை. எல்லாருடைய வீட்டுக்கும் நேரில் சென்றுதான் அழைப்பார்கள். உறவுகளுக்கும் பழகிய நட்புக்களுக்கும் மட்டுமே கொஞ்சமாக பத்திரிக்கை அடித்துக் கொடுப்பார்கள். பத்திரிக்கை கொடுக்க ஊரில் இருக்கும் இளவட்டங்களை ஏரியா வாரியாகப் பிரித்து அனுப்புவார்கள். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு முக்கியமான ஒருவரின் முகவரிக்கு அனுப்பி மற்றவர்களுக்கு கொடுக்கச் சொல்வார்கள்.

ஊரில் அழைக்கும் முறை என்பது எப்படியென்றால் கல்யாணத்துக்கு முன்று நாட்கள் முன்னதாக வீட்டுப் பெரியவர்கள் இருவரும் வீடுவீடாக சென்று அழைப்பு விடுக்க வேண்டும் என்பது எங்கள் ஊரில் கடைபிடிக்கும் முறை. பெரும்பாலும் மாலை வேளைகளில்தான் சொல்லச் செல்வார்கள். அப்போதுதான் ஆண்கள் வேலை முடிந்து வீட்டிற்கு வந்திருப்பார்கள். செட்டிய வீட்டுக் கணக்குப்பிள்ளைகளாகத்தான் எங்க ஐயாக்கள் இருந்தார்கள். எனவே சாயந்தரம் வீட்டுக்கு வந்துவிடுவார்கள்.

ஒவ்வொரு வீடாக கணவன் மனைவி இருவரும் சென்று விவரம் சொல்லி அழைப்பார்கள்.

'அம்மான் (மாமா) உங்க பேத்திக்கு கலியாணம் வச்சிருக்கோம்... நீங்கதான் முன்னாடி நின்னு நடத்திக் கொடுக்கனும். அயித்த மொத நாளே வந்து வேலவெட்டி பாத்துக் கொடுக்கனும்...' 

'அண்ணம்பொண்டி (அண்ணன் பொண்டாட்டி) உங்க மகனுக்கு கலியாணம் வச்சிருக்கோம்... நீங்கதான் முன்னாடி நின்னு நடத்திக் கொடுக்கனும்.'

'ஆத்தா தம்பிக்கு கலியாணம் வச்சிருக்கோம்... குடும்பத்தோட வந்து நின்னு செறப்பா செஞ்சிபுடனும்...'

'மச்சான்... இது உங்க வீட்டுத் தேவை.... காய் வாங்குறதுல இருந்து வாழமரம் தோரணம்  கட்டுற வரைக்கும் எல்லாத்துக்கும் வந்துடனும்...'

'சின்னத்தா பேத்திக்கு கலியாணம்... வாவரசிக (சுமங்கலி) நீங்கதான் நின்னு செஞ்சு கொடுக்கனும்...'

"அண்ண மவனே உங்க கொழுந்தியா கலியாணம்.. எங்கயும் போயிடக்கூடாது.. ஓட நடக்க ஒத்தாசைக்கு ஆளு வேணுமப்பு...'

என்று உறவு முறையைச் சொல்லி சந்தோஷமாக அழைப்பார்கள். அவர்கள் கொடுக்கும் காபியையும் குடித்துவிட்டுத்தான் வருவார்கள். வீட்டிற்கு முன்னும் பந்தி போடுவதற்கு என்று அருகிலும் கொட்டகை போட்டு வாழை மரம், தென்னங்குருத்தில் தோரணம் கட்டி கல்யாண வீடு களைகட்டும்.

கொட்டகை போடும் போது மழைகாலம் என்றால் தண்ணீர் உள்ளே வராமல் '/\' - இந்த வடிவத்தில் போடுவார்கள். இதற்கு குதிரைக் கொட்டகை என்பார்கள். சாதாரண நாட்கள் என்றால் மட்டக்காவனம் என்று சொல்லப்படும் '-' இந்த வடிவக் கொட்டகை போடுவார்கள்.  எங்க ஊரில் கண்ணப்பன் என்பவர்தான் கொட்டகை போடுவார். எங்க அப்பா அவரை அம்மான் என்றுதான் அழைப்பார். இந்த இடத்தில் போடலாம் மாப்ள.... இங்க சமையக் கொட்டகை போடலாம் மாப்ளன்னு சொல்லிக்கிட்டு அடிவச்சி அளப்பாரு பாருங்க.. அவரோட குட்டைக்காலை அப்படி இப்படி சாய்த்து வச்சு வேகவேகமாக அளப்பாரு... அவரு அளக்குற 100 அடியில 10,15 அடி கண்டிப்பாக் குறையும். எப்படி இருந்தாலும் நல்லதோ கொட்டதோ எல்லாருடைய வீட்டுக்கும் அவருதான் கொட்டகை.

முதல் நாள் மாலை தாய்மாமன் சீர் கொண்டுக்கிட்டு வருவார். அவரோடு அவரது ஊர்க்காரர்கள் வருவார்கள். அவர்களை வரவேற்று மரியாதை செய்து சம்பிரதாய நிகழ்வுகளை எல்லாம் முடித்து மதியமுதலே கிடாய் வெட்டி சமையல் செய்ததை ஊராரெல்லாம் நின்று 'தம்பி இங்க கறி வையுப்பா...' 'இந்தா பாரு இந்த எலைக்கு எலும்பு சூப்பு போடுப்பா... கொஞ்சம் எலும்பை அரிச்சுப் போடுப்பா...' என்று நன்றாக கவனித்து தடபுடலாக விருந்தை நடத்தி பின்னர் ஊரார் அமர்ந்து பேசிக்கொண்டே சாப்பிடுவார்கள்.

மறுநாள் காலை பெண் வீடென்றால் காலைப் பலகாரம் அங்குதான். எனவே இரவே காலைப் பலகாரத்துக்கான சமையல் களைகட்ட ஆரம்பித்துவிடும். மாப்பிள்ளை வீட்டார் வந்ததும் சாப்பிட்டு சம்பிரதாயங்கள் முடித்து பாயில் அமர வைத்தோ அல்லது மரப்பெஞ்சில் அமரவைத்தோ அல்லது கோவிலில் வைத்தோ திருமணம் முடித்து பெண் வீட்டில் இருந்து மாப்பிள்ளை வீட்டிற்கு கிளம்புவார்கள். மாப்பிள்ளை வீட்டில் மதியம் உணவு முடித்து பெண்ணையும் அவருக்கு துணையாக ஒருவரையும் விட்டு விட்டுச் செல்வார்கள். 

மறுநாள் பெண் வீட்டிற்கு சொந்தங்கள் சூழ கிளம்பிச் செல்வார்கள். இதற்கு மறுவீடு செல்லுதல் என்று சொல்வார்கள். அங்கு தடபுடலாக விருந்து நடக்கும். மாலை திரும்பும் போது புதுமணத்தம்பதிகளை அங்கேயே விட்டு வருவார்கள். அவர்கள் ஒரு நாள் அங்கிருந்துவிட்டும்  பெண் வீட்டு உறவுகளுடன் மறுவீடாக மாப்பிள்ளை வீட்டுக்கு வருவார்கள். இங்கு விருந்து தடபுடலாக நடக்கும். இதில் மறு வீட்டுப் பலகாரம் என்று வேறு கொண்டு வருவார்கள். 

இப்படியாக கிராமத்துத் திருமணங்கள் மிகவும் சந்தோஷமாக எல்லாரும் கூடி கொண்டாடும் ஒரு நிகழ்வாக இருந்தது. வேன் பிடித்து அதில் இங்கிருந்து அங்கும்... அங்கிருந்து இங்குமாக போய் வந்த அந்த நாட்கள் ரொம்ப சந்தோஷமானவை.

எங்கப்பா ஐந்து பேருக்கு ஊரில் எங்க வீட்டில்தான் திருமணம் நடத்தினார். முதன் முதலாக எனக்குத்தான் தேவகோட்டையில் மண்டபம் பிடித்து நடத்தினார். அதில் பட்ட அனுபவத்தில் தம்பிக்கு மண்டபம் வேண்டாம் வீட்டிலேயே வைப்போம் என்று ஒத்தைக் காலில் நின்றார். ஆனால் கொட்டகைச் செலவு மற்ற செலவுகளை எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்ததில் மண்டபம் செல்ல வைத்து விட்டது.

திருமண மண்டபங்களை நோக்கி கிராமத்துத் திருமணங்கள் சென்ற பிறகு திருமணச் சந்தோஷம் மட்டுமின்றி மறுவீடு... மூன்றாவது வீடு விருந்தையெல்லாம் சுருக்கி ஒரே நாளில் எல்லாத்தையும் முடித்து விடுகிறார்கள். மண்டபத்தில் இருந்தபடியே முதல் முறை சென்று வந்துவிட்டு மீண்டும் மறுமுறை செல்லும் போது மண்டபத்தில் இருந்து மிச்ச மீதி பலகாரங்களை எடுத்துக் கொண்டு போய் பேருக்குச் சாப்பிட்டு மறு வீட்டை முடிக்கிறார்கள். திருமணம் முடிந்த இரண்டாம் நாளில் சீதனமாக வந்த வண்டியில் புதுமாப்பிள்ளையும் பொண்ணும் போவோமா ஊர்கோலம் என்று கிளம்பிவிடுகிறார்கள்.

இப்போதெல்லாம் கிராமத்துத் திருமணங்கள் சுத்தமாகவே மறைந்துவிட்டன. பெண்கள் பருவமடைந்தால் ஊரில் உள்ளவர்களுக்குச் சொல்லி விருந்து வைத்து சாதாரண நிகழ்வாக நடத்தினார்கள். இன்று அதையும் மண்டபங்களுக்கு கொண்டு வந்து பூப்புனித நீராட்டு விழா என வீதி முழுவதும் பேனர் வைத்துக் விழாவாக நடத்துவதில் கிராமத்து மக்களும் ஆர்வம் காட்ட ஆரம்பித்துவிட்டனர்.

'கண்ணனுக்கு கலியாணம் அதான் இன்னைக்கே போறோம்ன்னு' வாயெல்லாம் பல்லாக வந்த ரத்த சொந்தமெல்லாம் பத்து மணிக்குத்தான் தாலிகட்டுறது... அப்பப் போனா பதினோரு மணிக்கு சாப்பாடு போடுவாங்க... அப்படியே சாப்பிட்டு வந்துக்கிட்டே இருக்கலாம் என்று சொல்லும் காலமாகிவிட்டது.

அவசர யுகத்தில் எல்லாமே அவசர கதியில் நடக்கும் போது கிராமத்துத் திருமணங்களும் இந்த ஓட்டத்தில் இணைந்து தனது சுயத்தை இழந்துவிட்டது வருத்தமான விஷயமே...

-'பரிவை' சே.குமார்.

சனி, 5 அக்டோபர், 2013

மாரி செல்வராஜின் மறக்கவே நினைக்கிறேன்


இந்தியா சுதந்திரம் அடையும் போது உனக்குக் கல்யாணமே ஆயிடுச்சா தாத்தா?’, 'நிஜமாவா சொல்றீங்க... தனுஷ்கோடி கடலுக்குள்ள முங்கி அழியும் போது உங்களுக்கு நல்லா விவரம் தெரியுமா?’, 'நல்லா யோசிச்சு சொல்லுங்க... ரயில்வே கேட்ல வெச்சு எம்.ஜி.ஆரை நேர்ல பார்த்தீங்களா... இல்லை ரயில்ல போகும்போது தூரமா நின்னு பார்த்தீங்களா?’, 'நீ ஆயிரம் சொன்னாலும் பூவானிப் பெரியம்ம பெரிய அதிர்ஷ்டக்காரி... ஒரு மாசமா இழுத்துக்கிட்டு கிடந்த உசுரு, சிவாஜி செத்த அன்னைக்குதான பொசுக்குனு போச்சு!’, 'சொன்னா எங்க நம்பப் போறீங்க... சுனாமி அன்னைக்குத்தான் திருச்செந்தூர்ல கடக்குட்டி பயலுக்கு மொத மொட்டை அடிச்சிக்கிட்டு இருந்தேன்... கால் நனைக்கக்கூட தண்ணி இல்லாம அவ்வளவு தண்ணியும் உள்ள போனதை இப்போ நினைச்சாலும் உடம்பே சிலுக்குது!’

-இப்படியாகத் தொடர்ந்து கேட்கப்படும் கேள்விகளிலும் கேட்டவுடன் 'இதற்காகத் தானே காத்திருந்தேன்’ என்பதைப் போல ஆழமாக யோசித்து, மனதின் தாழ்வாரத்தில் படரும் பச்சைக்கொடியாக விரியும் பதில் களிலும்தான் எத்தனையோ பெரிய வரலாற்று நிகழ்வுகள், எதுவுமறியா எளிய மனிதர்களின் நினைவுகளில் நீங்கா எச்சங்களாக மிஞ்சி இருக்கின்றன.

திருநெல்வேலியில் நடந்த மாணவர் போராட்டங்களால் சிறை சென்றிருந்த ஊர் தம்பிகள் கணபதியையும் சுப்பிரமணியனையும் பார்க்கச் சென்றிருந்தேன். உங்கள் யூகம் சரிதான். தொப்பையும் தொந்தியுமாக இருக்கும் கணபதியும் வேகமும் விவேகமுமாக இருக்கும் சுப்பிரமணியனும் அண்ணன் - தம்பிகள்தான். இருவரும் ஒரே கல்லூரியில் ஒரே வகுப்பில் படிக்கிறார்கள். இருவருமே காங்கிரஸுக்கு எதிராக உண்ணாவிரதம் இருப்பார்கள்; ஆர்ப்பாட்டங்கள் நடத்துவார்கள்; போஸ்டர் ஒட்டுவார்கள். கட்டக்கடைசியாக காங்கிரஸ் தலைவர்கள், ராஜபக்ஷே கொடும்பாவிகளை எரித்தபோது, சிறைக்கு ஒன்றாகச் சென்றிருக்கிறார்கள். கட்டம்போட்ட கம்பிகளுக்கு உள்ளே அண்ணன் - தம்பிகளைப் பார்க்கும்போது, மனதினுள் எழுந்த கதர்வேட்டி ஆவுடையப்பன் மாமாவின் நினைவு, வரலாறு எவ்வளவு வேகமாக தன் உடலைச் சிலுப்பிப் புரண்டு படுத்திருக்கிறது என்பதை உணர்த்தியது!

'ஓடியா... ஓடியா... பச்சப்புள்ளைங்களுக்கு பிசைஞ்சு கொடுக்க பச்சரிசி இட்லி இருக்கு’ என தெருத் தெருவாகக் கூவிக்கூவி அன்றைய நாட்களில் இட்லி விற்ற கதர் வேட்டி ஆவுடையப்பன் மாமா, சுதந்திர தினத்தில் காங்கிரஸ் கொடியை கூரையில் ஏற்றி மிட்டாய் கொடுக்கும் தீவிர காங்கிரஸ்காரர்.

'ஒரு சுருட்டு வாங்கிக் கொடுத்தோம்னு உங்ககிட்ட வந்து ஓட்டு கேட்கல காங்கிரஸ்காரன். சுதந்திரம் வாங்கிக் கொடுத்தோம்னு கேக்குறான். என் தாத்தன், நேருவுக்கு ஓட்டு போட்டான். எங்க அப்பன், இந்திரா காந்திக்கு ஓட்டு போட்டான். நான், இப்போ ராஜீவ் காந்திக்கு ஓட்டு போடுறேன். அப்புறம் ராஜீவ் காந்தி மவன் வந்தா, அவனுக்கு என் மவனுவ ஓட்டு போடுவானுவ. வேட்டி சீலை குடுத்ததைப் பெருமையாச் சொல்ற கட்சியும், சுதந்திரம் வாங்கிக் குடுத்ததைப் பெருமையா சொல்ற கட்சியும் ஒண்ணா?’ என்று தேர்தல் காலங்களில் மீசை முறுக்கும் ஆவுடையப்பன் மாமாவுக்கு, திருமணமாகி 15 வருடங்கள் கழித்துத்தான் கணபதியும் சுப்பிரமணியனும் இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தார்களாம்.

ஊரில் முதன்முதலில் இட்லி விற்றது, இரட்டைப்பிள்ளை பெற்றது என ஆவுடையப்பன் மாமா எங்களுக்கு எப்போதுமே ஆச்சர்யம்தான். ஒரே மாதிரி வலதும் இடதுமாக நடுவீட்டில் படுத்துக்கிடக்கும் கணபதியையும் சுப்ரமணியனையும் பார்க்க கதவு வழியாக, ஜன்னல் வழியாக முண்டியடிப்போம். ஆவுடையப்பன் மாமாதான் எல்லோரையும் உள்ளே அழைத்துச் சென்று குழந்தைகளை அருகில் தூக்கிக் காட்டுவார். இரண்டு குழந்தைகளும் ஒரே நேரத்தில் சிரிப்பது, ஒரே நேரத்தில் அழுவது, ஒரே நேரத்தில் புஷ்பம் அத்தை மார்பில் பால் சப்புவது என கணபதியும் சுப்பிரமணியனும் பிறந்ததிலிருந்தே ஆச்சர்யம்தான். குழந்தைகளாக இருக்கும் அவர்களைப் பார்க்கத்தான் நாங்கள் ஆவுடையப்பன் மாமா வீட்டுக்குப் போவோம். குழந்தைகளுக்கு கண் மை வைப்போம், இட்லிக்கு, மாமாவோடு சேர்ந்து மாவாட்டுவோம், சட்னிக்குத் தேங்காய் திருகுவோம். அப்படித்தான் மாமாவோடு காங்கிரஸ் கட்சிக்காக ஏழு வயதில் பிரசாரம் செய்யப் போனதும்!

ஆவுடையப்பன் மாமா என்ன சொன்னாலும் எங்களுக்குப் பிடிக்கும். ரோசாப் பூ வைத்துக் கொண்டு அவர் பின்னால் நேரு மாமா மாதிரி அலைவது பிடிக்கும். 'கனியம்மா அக்கா ஓட்டு போடு... காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு போடு’, 'ராணி அக்கா ஓட்டு போடு... ராஜீவ் காந்திக்கு ஓட்டு போடு’ என்று அவர் பின்னாடி கத்திக்கொண்டு அலைவது ரொம்ப ரொம்பப் பிடிக்கும். ஆனால், ராஜீவ் காந்தி இறந்துவிட்டார் என்ற செய்தி, ஊருக்குள் வந்த நாளில் ஆவுடையப்பன் மாமா செய்த காரியம்தான் யாருக்குமே என்றைக்குமே பிடிக்காமல் போய்விட்டது.

ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட தகவல் கிடைத்ததும் வீட்டைவிட்டு வெளியேபோன ஆவுடையப்பன் மாமாவைக் காணாமல், புஷ்பம் அத்தை நெஞ்சில் அடித்து அழுதுகொண்டு இருந்தாள். ஆதிச்சநல்லூர் விலக்கில் திருச்செந்தூர் மெயின் ரோட்டில் ஒற்றை ஆளாக ஆவுடையப்பன் மாமா படுத்துக்கொண்டு பஸ்ஸை மறிப்பது தெரியவர, எல்லோரும் அங்கு ஓடினோம். சுடும் வெயிலில் ஆவுடையப்பன் மாமா நடு ரோட்டில் மல்லாந்து படுத்துக்கிடந்ததையும், பேருந்துகள் எதுவும் ஓடாமல் அப்படியே நின்றதையும், நான்கு போலீஸ்காரர்கள் வந்து மாமாவைக் குண்டு கட்டாகத் தூக்கிக்கொண்டு சென்றதையும், புஷ்பம் அத்தை போலீஸ்காரர்களிடம் கெஞ்சி யதையும், இரண்டு வயதாகியும் இன்னும் காட்டுப்பேச்சிக்கு முதல் மொட்டை போடாமல் ஜடையோடு ஒரே மாதிரி கணபதியும் சுப்பிரமணியனும் அம்மணமாக அழுதுகொண்டு இருந்ததையும் மறுபடியும் நினைத்துப் பார்த்தால், போன செவ்வாய்க்கிழமைதான் நடந்தவைபோல் இருக்கின்றன எல்லாம்!

ஊரிலிருந்து ஆட்கள் போய், ஆவுடையப்பன் மாமாவை போலீஸ் ஸ்டேஷனில் இருந்து அழைத்து வந்தார்கள். 'ரெண்டு புள்ளைங்கள 15 வருஷம் கழிச்சுப் பெத்துட்டு எல்லாத்தையும் அநாதையா விட்டுட்டு குடும்பத்த வெளங்காம ஆக்கப்போறியா நீ?’ என்று புத்திமதி சொல்லி மாமாவை வீட்டுக்குள் அடைத்து, 'இந்தா புஷ்பம்... இன்னும் ஒரு வாரத்துக்கு அவன வெளியில எங்கேயும் போகவிடாத. சொன்னாப் புரியாது... அவன் பரம்பரை காங்கிரஸ்காரன். பைத்தியக்காரத்தனமா எதாவது செஞ்சாலும் செஞ்சுக்குவான் ஜாக்கிரதை’ என்றும் சொல்லிவிட்டுப் போனார்கள்.

அன்று முழுவதும் நாங்கள் ஆவுடையப்பன் மாமா வீட்டில் இருந்தோம். அடைக்கப்பட்ட கதவுக்குப் பின்னால் இருந்து மாமா குரல் கொடுப்பார். 'புஷ்பம் ஒண்ணுக்கு வருதுடி... கதவத் தெற. போய்ட்டு வந்திடுறேன்’ என்று. பதிலுக்கு வெளியே இருந்து புஷ்பம் அத்தை குரல் கொடுப்பாள், 'அங்க பயலுவ பால் டப்பா இருக்கு. அதுல இருந்து வைங்க. அப்புறம் நான் எடுத்து வெளியே கொட்டிக்கிறேன்’ என்று. வெளியே இருக்கிற எல்லோரும் விழுந்து விழுந்து சிரிப்போம். புஷ்பம் அத்தை எல்லாவற்றையும் மறந்து சிரித்தாள். கணபதியும் சுப்பிரமணியனும்கூட காரணம் தெரியாமல் ஒரே மாதிரி சிரித்தார்கள். எல்லாம் சரியாகப் போய்க்கொண்டிருந்தன.

இரவு முழுவதும் நாங்கள் அங்குதான் இருந்தோம். மாமா, அடைக்கப்பட்ட கதவுக்கு உள்ளிருந்தே கணபதியிடமும் சுப்பிரமணியிடமும் பேசுவார். அப்பா என்ன சொல்கிறார், எதற்காக கதவுக்குப் பின்னால் இருந்தே பேசுகிறார் என்று தெரியாமல் கணபதியும் சுப்பிரமணியனும் தூங்கும் வரை அந்தக் கதவையே தட்டிக்கொண்டு கிடந்தார்கள். வாசலிலும் திண்ணையிலும் புஷ்பம் அத்தை மடியிலும் அப்படி அப்படியே உறங்கிப்போன எங்கள் எல்லோருக்கும் காலையில் காத்திருந்தது அந்தப் பேரதிர்ச்சி!

எப்போதும் கோழி கூவி, காகம் கரைந்து, பால் கறக்க பசு மாடு கத்தி எழுப்பும் ஊரை, அன்று புஷ்பம் அத்தை தன் நெஞ்சில் அடித்துக்கொண்டு எழுப்பினாள். வீட்டுக்குள் அடைக்கப்பட்டிருந்த ஆவுடையப்பன் மாமாவையும் காணவில்லை. வெளியே கதவுக்குப் பக்கத்தில் ஒரே மாதிரி பெருவிரலைச் சப்பியபடி உறங்கிக்கொண்டிருந்த கணபதியையும் சுப்பிரமணியனையும் காணவில்லை. ஊர் முழுவதும் தேடி ஆள் அனுப்பினார்கள். ஆற்றுக்கு, குளத்துக்கு, கிணற்றுக்கு, ஆதிச்சநல்லூர் மெயின் ரோட்டுக்கு... என எல்லாப் பக்கமும் ஆள் அனுப்பினார்கள். பெற்ற பிள்ளைகளையும் புருஷனையும் காணாமல் புஷ்பம் அத்தை மயங்கி மயங்கி விழுந்தாள். நேரம் ஆக ஆக வேறு வழியில்லாமல் புதுக்குடி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார்கள். மொத்த ஊரும் முகம்கூட கழுவாமல் ஆவுடையப்பன் மாமாவுக்காகக் காத்திருந்தது.

'பய புத்திகெட்டுப் போய் ராசீவ்காந்தி செத்த இடத்துக்கே போய்ட்டானோ?’

'அப்படியெல்லாம் இருக்காதுப்பா... அம்புட்டுத் தூரம் எப்படி புள்ளையலத் தூக்கிட்டுப் போவான். இங்கதான் எங்கேயாவது காங்கிரஸ்காரன்காரங்க பண்ற போராட்டத்துக்குப் போயிருப்பான்!’ என்று ஆளாளுக்கு ஒவ்வொரு யோசனையில் பேசிக்கொண்டிருக்க, கருங்குளம் பொட்டக்குளம் வழியாக கணபதிக்கும் சுப்பிரமணியனுக்கும் மொட்டை அடித்து தானும் மொட்டை அடித்து எதுவும் நடக்காததுபோல ஆவுடையப்பன் மாமா ஊருக்குள் சைக்கிளில் வந்ததைப் பார்த்து எல்லோரும் வாயடைத்துப்போனார்கள்.

'அடப்பாவி... காட்டுப்பேச்சிக்குப் போடுற மொத மொட்டையை காங்கிரஸுக்குப் போட்டுட்டு வந்துட்டானே கிறுக்குப் பய’ என்று ஊர்க்காரர்கள் சொல்லிக்கொண்டிருக்கும்போதுதான் அது நடந்தது. திண்ணையில் மயங்கி விழுந்துகிடந்த புஷ்பம் அத்தை தன் இரட்டைப் பிள்ளைகளும் புருஷனும் மொட்டையாக வந்து நிற்பதைப் பார்த்து பொறுக்க முடியாதவளாக ஓடிப்போய் மண்ணை அள்ளி மாமாவின் மீது எறிந்தாள். காறிக்காறித் துப்பினாள். கையில் கிடைத்த எல்லாவற்றையும் வைத்து ஆவுடையப்பன் மாமாவை அடித்தாள்.

'இரக்கத்தோடு ரெண்டு கொடுத்தாளே அந்தக் காட்டுபேச்சி... அவளுக்கு மொத்த முடியும் சடையா ஒட்டினதுக்கு அப்புறம் வந்து மொட்டை அடிக்கிறேன்னு நான் சாவாம கிடந்து விரதம் இருக்க, என் புள்ளைங்களுக்கு மொத மொட்டையே எழவு மொட்ட அடிச்ச நீயெல்லாம்  மனுசனா? இனிமே ஒரு நிமிஷம் உன்கூட இருக்க மாட்டேன்!’ என்று இரண்டு பிள்ளைகளையும் பிடுங்கிக்கொண்டு அம்மன்புரத்துக்குப் போனவள்தான் புஷ்பம் அத்தை.

'புள்ளைங்களுக்கு மண்டையில மயிறு முளைச்சா அதெல்லாம் தானா வந்திருவாப்பா. நான் போய் எதுக்குக் கூப்பிடணும்? அவளா எப்போ வருவாளோ... அப்போ வரட்டும்’ என்று இருந்த ஆவுடையப்பன் மாமாவைப் பார்க்க, 10 வருஷம் கழித்து நெஞ்சு வலியால் இறந்த பின் பிணமாகத்தான் புஷ்பம் அத்தை எங்கள் ஊருக்குத் திரும்பி வந்தாள்.

ஒரு பெரிய மருதமரம் சாய்ந்து மண்டையில் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதுபோல, அந்த நாள் அப்படியே மறையாத கீறலாக நினைவில் இருக்கிறது. புஷ்பம் அத்தை புதைகுழிக்கு அந்தப் பக்கம் மறுபடியும் அதே மொட்டைத் தலையோடு கணபதியும் சுப்பிரமணியனும் கதறி அழுததும், அதைப் பார்க்க முடியாமல் ஆவுடையப்பன் மாமா துண்டால் முகத்தை மூடிக்கொண்டு சலனமே இல்லாமல் இருந்ததும், கணபதியையும் சுப்பிரமணியனையும் கையைப் பிடித்து ஒரு தாத்தா கூட்டி வந்து ஆவுடையப்பன் மாமாவிடம் ஒப்படைத்ததையும், பக்கத்தில் நின்ற பெரியவர்கள், 'ஏப்பா... ஆனது ஆகிப்போச்சு. இத்தன வருஷம் கழிச்சி புள்ளைங்க வந்து முன்னாடி நிக்குது. அவங்களப் பாத்து எதாவது பேசுப்பா. இனி உன்னை விட்டா அவங்களுக்கு யாரு இருக்கா?’ என்று முகத்தை மூடியிருந்த ஆவுடையப்பன் மாமாவின் துண்டை விலக்கிச் சொன்னார்கள்.

முதல் மொட்டை இழவு மொட்டை போட்டதற்காகப் பிரிந்துபோன தன் பிள்ளைகள் 10 வருடங்கள் கழித்து அதே இழவு மொட்டையோடு முன்னாடி நிற்பதைப் பார்க்க முடியாமல் எழுந்து, 'முடி முளைக்கிறவரைக்கும் என் பக்கத்துல வராதீங்கப்பா. என்னால உங்களைப் பார்க்க முடியாது’ என்று நடுரோட்டில் முக்காடிட்டப்படி ஆவுடையப்பன் மாமா ஓடியதும், இப்போது 10 வருடங்கள் கழித்து அதே காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கணபதியும் சுப்பிரமணியனும் கம்பிக்கு உள்பக்கம் நின்றுகொண்டிருப்பதும் வரலாற்றின் வேடிக்கையா, வினோதமா, துரோகமா, வலியா, அபத்தமா, அறியாமையா, அரசியலா, முட்டாள்தனமா... எனக்குத் தெரியவில்லை!

எழுத்து : மாரி செல்வராஜ்
படம்      : ஸ்யாம்
நன்றி    : ஆனந்த விகடன்
-'பரிவை' சே.குமார்

தொடர்கதை : கலையாத கனவுகள் - 19

முந்தைய பதிவுகளைப் படிக்க...

******

19. சந்தோஷமும் வருத்தமும்

முன்கதைச் சுருக்கம்: 

கிராமத்து ஏழைக்குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான்.  அக்காவுக்கு விருப்பமில்லாத மாப்பிள்ளையை பேசி வைத்திருக்கும் அம்மாவுடன் மல்லுக்கு நிற்கிறான். கல்லூரியில் வைரவனைத் தாக்க வந்தவர்களுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக கெட்டபெயர் ஏற்படுகிறது. அவனைப் பார்க்க வரும் புவனா, அவனுடன் மல்லிகா இருக்கவும் கோபமாகிறாள். அவளைப் பார்த்துப் பேசி சமாதானமாக அவனுடன் மனம் விட்டுப் பேச வேண்டும் என்கிறாள். எப்பவும் போல் சேகருடன் பேசிவிட்டு வீட்டு வருகிறான்.

இனி...

சேகர் வீட்டில் இருந்து திரும்பியவனை "எங்கடா போனே?" என்றாள் நாகம்மா.

"சேகரைப் பார்க்கப் போனேன்...."

"எப்பப் பார்த்தாலும் அவன் கூட என்ன பேச்சு..."

"பேசினா என்னம்மா... சும்மா வாம்மா..."

"அதானே... அவனப் பத்தி சொன்னா மட்டும் கேக்க மாட்டே..."

"அம்மா பொங்கல் டிரஸ்..."

"ம்... எனக்கும் சீதைக்கும் மட்டும் இங்க எடுக்கப்போறேன்... உனக்கும் அண்ணனுக்கும் அவன் எடுத்துக்கிட்டு வாறேன்னு சொல்லியிருக்கான்..."

"அம்மா எனக்கு ஜீன்ஸ் பேண்ட் வேணும்..."

"சரி நாளைக்கு அண்ணனுக்குப் போன் பண்ணிச் சொல்லிடு... "

"ம்... அம்மா... என்னோட பிரண்ட்ஸ் எல்லாம் பொங்கலுக்கு இங்க வாறேன்னு சொல்றாங்கம்மா..."

"பொங்கலுக்கா... சீதை கலியாணத்துக்கு கூட்டியாரலாமுல்ல..."

"இல்லம்மா... பொங்கலுக்கு வந்தா அவங்களுக்கு வித்தியாசமான அனுபவமா இருக்கும்ல்ல..."

"ம்... சரி கூட்டியா... ஆனா அந்த சேகரு மாதிரி பொம்பளப்புள்ளங்களை கூட்டியாந்திராதே... எல்லாரும் ஒரு மாதிரி பேசுவாளுங்க,,,,"

"எப்புடிம்மா.... கிளாஸ்ல எல்லாரும் வாறாங்கன்னா பொண்ணுங்களும் வருவாங்க... எப்படி வேணாங்கிறது..."

"என்னடா... சொல்றே... பொண்ணுங்களைக் கூட்டியாறியா?"

"ம்... எல்லாரும் வாறேன்னு சொல்றாங்கம்மா... மத்தவங்க வீட்டுக்கு நாங்க பொயிட்டு வந்திருக்கோம்.."

"என்னடா நீயி... அக்கா கலியாணமின்னா பரவாயில்லைடா.. ஆனா பொங்கலுக்கு வந்தா ஊரு ஒரு மாதிரி பேசுமுடா..."

"ஏம்மா கூடப் படிக்கிறவங்கதானேம்மா... வந்தா என்ன தப்பும்மா..."

"அதுக்கில்லடா... ஊருக்குப் பயந்து சொல்றேன்... எவளாவது நாக்குமேல பல்லப்போட்டு எதுனாச்சும் பேசுவா... அதான்..."

"சரிம்மா... நான் கூட்டியாரலை..." என்றவன் பேசாமல் உட்கார்ந்திருக்க "என்னடா... என்னாச்சி..." 

"ஒண்ணுமில்லம்மா... விடு..."

"எதுக்கு இப்ப மொகத்தைத் தூக்கி வச்சிக்கிட்டு இருக்கே... இப்ப என்ன பெரண்டக் கூட்டியாரணும் அம்புட்டுத்தானே... கூட்டியா... ஆனா ஊருல நாலு பேரு நாலுவிதமா பேசுற மாதிரி வச்சுடக்கூடாது... சரியா?"

"ம்... சரிம்மா...ரொம்ப தாங்க்ஸ்ம்மா..." என்றபடி அவள் மடியில் படுத்துக் கொண்டான்.

"என்னடா... அம்மாவுக்கு கொலயடிச்சிட்டியா?" என்றபடி அருகில் வந்து அமர்ந்தாள் சீதா.

"உனக்கென்னடி எம்மவனே விழுந்து அடிபட்டுக் கிடக்கான்... எனக்கெதுக்கு கொலயடிக்கனும்... எம்புள்ள தங்கம்டி... அவனால எந்தப் பிரச்சினையும் வராது. தெரிஞ்சிக்க..."

"அப்ப என்னாலயும் அண்ணனாலயும் பிரச்சினை வருங்கிறியா?"

"பின்னே... இந்தா இவனக் கட்டிக்கன்னு சொன்னா அழிச்சாட்டியம் பண்ணுறியல்ல..."

"அம்மா..."

"என்னடா... எதுக்கு இப்போ ஒம்மான்னு கத்துறே,,,?"

"அதுதான் அண்ணன் வரட்டுன்னு சொல்லிட்டிங்கல்ல... அப்புறம் எதுக்கு அதுகிட்ட கோபப்படுறீங்க... அதை விடுங்கம்மா... அம்மா... அக்காவுக்கு ஒரு சுடிதாரு எடுத்துக் கொடுங்கம்மா..."

"சுடிதாரா...? கல்யாணத்துக்கு நாலு நல்ல சீலய போடணுமில்ல... இப்புடி வாங்கினாத்தானே உண்டு..."

"சேலையும் வாங்குங்கம்மா... எல்லாப் புள்ளங்களும் சுடிதார் போடுதுக... ஒண்ணு இதுக்கும் வாங்கிக் கொடுக்கலாம்ல..."

"என்ன அக்காவுக்கு வக்காலத்து பலமா இருக்கே.... சரி.... சரி... வாங்குவோம்..."

"இன்னிக்கு எங்கம்மா நல்ல மூடுல இருக்காங்க... எது கேட்டாலும் கிடைக்கும் போல..." என்றவனின் காதைப் பிடித்து திருகி "என்ன கேட்டாலும் ஆமாம் போட நான் என்ன கிறுக்கச்சியா...?" என்றாள்.

"சும்மா சொன்னேன்மா.."

"அம்மா... இவன் எதுக்கோ அடிப்போடுறான்... பாத்துக்கங்க..."

"ஏன்டி உனக்கு வக்காலத்து வாங்குறான்... நீ போட்டுக் கொடுக்கிறியா?"

"நல்லா கேளுங்கம்மா... " 

அவர்களின் பேச்சு சிரிப்பும் சந்தோஷமுமாகப் போய்க்கொண்டிருந்தது.


"வாங்க ஐயா... பொன்னி ராமுத்தம்பி வந்திருக்கு பாரு..." என்றார் தமிழய்யா.

"வாப்பா... இப்ப தலை எப்படியிருக்கு..?"

"இப்ப பரவாயில்லம்மா..."

"எதுக்கு ரவுடிகளுக்கெல்லாம் சப்போர்ட் பண்ணிக்கிட்டு நீ ரவுடின்னு பேர் வாங்கனும்..."

"இல்லம்மா... ஒருத்தரை அடிக்கும் போது எப்படிம்மா பாத்துக்கிட்டுப் போறது..."

"அதுக்காக நல்லவன்னா பரவாயில்லை... பல பேரை அடிக்கிற ரவுடிப்பய அவன்... அவனுக்காக எதுக்கு நீ போகனும்..."

"இல்லம்மா... நான் பேசிக்கிட்டு இருக்கும் போது அடிக்க வந்தாங்க... அவரு நம்ம புவனாவோட அண்ணன்... இன்னைக்கு ஏன்டா அவனுக்காக நீ சண்டைக்குப் போனேன்னு எல்லாரும் கேக்குறீங்க... நான் பாட்டுக்கு எவனோ சாவட்டுன்னு வந்திருந்தா புவனாவோட அண்ணனை அடிச்சிருக்காங்க நீ பாட்டுக்கு வந்துட்டேன்னு கேக்கமாட்டீங்களா?"

"புவனாவுக்காக சண்டைக்குப் போனாலும் உனக்கு கெட்டபேர்தானே...?"

"இருக்கட்டும்மா... ஒருத்தரை காப்பாத்தினேன்னு சந்தோஷப்பட்டுகலாம்ல..."

"ம்... இரு காபி கொண்டு வாரேன்..."

"ஏந்தம்பி நல்ல புள்ளையின்னு பாத்தா நீங்களும் அப்புடித்தான் இருக்கீங்க..."

"என்னய்யா... நான் என்ன பண்ணினேன்..."

"அம்மான்னு சொல்லி ஒருத்தரை கூட்டியாந்து எல்லாரையும் ஏமாத்திட்டதா நினைச்சிக்கிட்டு இருக்கீங்க.... எல்லாருக்குந் தெரியும்... எதுக்கு இப்படியெல்லாம்..."

"இல்லய்யா... அம்மாவுக்கு தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவாங்க... அதான்  இப்படி..."

"இது நல்ல பழக்கமில்லையில்ல... அப்ப நீங்க மறுபடியும் தப்புப் பண்ணுவீங்கன்னு நினக்கத் தோணுதுல்ல..." என்றபோது புவனா வந்திறங்கினாள்.

"என்ன இரண்டு பேரும் சொல்லி வச்சு வாறீங்களா..?"

"அப்படியெல்லாம் இல்லய்யா..." வேகமாக மறுத்தான் ராம்கி.

"என்னய்யா காரசாரமா பேசிக்கிட்டு இருந்தீங்க... நான் வந்ததும் பேச்சு மாறிடுச்சு..."

"அதெல்லாம் இல்ல புவனா... தம்பி அம்மாவை கூட்டியாந்ததைப் பத்தி பேசிக்கிட்டு இருந்தோம்..."

"அதான் நானும் கேக்கனுமின்னு நினைச்சேன்... அது இவரு அம்மாவெ இல்ல... எங்க ஊர்ல கல்லறுக்கிற பொம்பளை..." என்றதும் ராம்கி பேசாமல் தலை குனிந்து அமர்ந்திருந்தான்.

"சரி புவனா... விடுங்க... அம்மா வருத்தப்படுவாங்கன்னு பண்ணிட்டார். நீங்க பேசிக்கிட்டு இருங்க... நான் முத்தையா ஐயாவை பாக்க வாறேன்னு சொல்லியிருந்தேன். பொயிட்டு வாறேன்... பொன்னி இரண்டு காபி கொண்டு வா... புவனாவும் வந்திருக்காங்க..." என்றபடி ஐயா எழுந்து செல்லவும். புவனா அந்தச் சேரை இழுத்து ராம்கிக்கு அருகில் போட்டு அமர்ந்தாள்.

(புதன்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 4 அக்டோபர், 2013

ராஜா ஓநாயும் ராணி ஆட்டுக்குட்டியும்

இந்த வாரம் இரண்டு படங்கள் பார்த்தோம். சங்கரின் உதவியாளர் என்ற அடைமொழியுடன் தனது முதல் படத்தை இயக்கிய இயக்குநர் அட்லியின் ராஜாராணி மற்றும் மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும்... இரண்டு படங்களும் பார்க்கலாம் என்ற மனோநிலைக்கு கொண்டு செல்லும் படங்களே.


ராஜாராணி - நாயகனுக்கு ஒரு காதல்... நாயகிக்கு இரு காதல்... இரண்டும் சூழலால் கலைந்து போக... காதலை இழந்த இருவருக்கும் சர்ச்சில் திருமணம் நடக்கிறது. இந்தத் திருமணக்காட்சியே படத்தின் ஆரம்பம். கதாநாயகன் மனசில்லாமல் நண்பர்களைப் பார்க்க.... அவர்கள் தலையசைக்க சம்மதம் தெரிவிக்கிறார். ஆனால் நாயகி எல்லாம் பார்த்து எனக்கு இன்னாரை திருமணம் செய்ய சம்மதம் என்று சொல்லும் போது இன்னாருக்குப் பதில் சூர்யா என்று சொல்ல அப்பா நெஞ்சைப் பிடித்துக் கொண்டு விழ, பதறிய நாயகி மன்னிப்புக்கேட்டு சரியாக சொல்லும் போதே அவருக்கு ஒரு கதை இருப்பது நமக்குத் தெரிய வருகிறது.

திருமணம் முடிந்ததும் ஒரே அறைக்குள்... ஒரே கட்டிலில்... ஒரே போர்வைக்குள்... படுத்திருந்தாலும் தனித்தனித் தீவாய் வாழ்க்கை.... நாயகியை வெறுப்பேற்ற ராஜேந்தர் பாடலை சத்தமாக வைப்பது ரொம்ப ஓவர்... காரணம் நாயகிக்கு அந்த குடும்பத்தை உண்மையிலுமே பிடிக்காது... அப்படியிருக்க அவரது பாடலை வைத்தால் அவர் கோபம் கொள்ளாமல் என்ன செய்வார்.... நாயகனின் செய்கைக்கு அழுகிறார்... நாயகன் ரசிக்கிறார்.... குடித்து விட்டு வந்து அலம்பல் செய்கிறார்.... நாயகி அப்பாவுக்காக திருமணம் செய்து கொள்வதால் நாயகனை தூக்கியெறிந்து பேசுகிறார்.... இப்படிப் போகும் கதையில் இருவருக்குள்ளும் உள்ள காதல் கதை என்ன...? இருவரும் இணைந்தார்களா இல்லையா என்பதை நகைச்சுவை கலந்து தந்திருக்கிறார்கள்.

நாயகனாக ஆர்யா நாயகியாக நயன்தாரா, ஆர்யாவின் காதலியாக நஸ்ரியா, நயனின் காதலனாக ஜெய்... சந்தானம், சத்தியராஜ், சத்யன்...


படத்தின் கதையை சுவராஸ்யமாகக் கொண்டு செல்வது நயன்-ஜெய் காதல் காட்சிகளே.. குறிப்பாக ஜெய்யை நயனின் தோழிகள் கலாய்க்கும் இடத்தில் மனிதர் விழுந்து விழுந்து சிரிக்க வைத்துவிடுகிறார். ஜெய் அருமையாக நடித்திருக்கிறார். ஜெய்யின் அப்பாவால் இவர்களது காதல் முடிவுக்கு வருகிறது.

ஆர்யா-நஸ்ரியா காதல் கதை அவ்வளவு சுவராஸ்யமாக இல்லை. தேவையில்லாமல் இழுப்பது போல் தெரிகிறது. நஸ்ரியாவை பார்க்கும் போதெல்லாம் ஆர்யா கேனத்தனமாக இளித்துக் கொண்டு நிற்பதுபோல் காட்டி வெறுப்பேற்றுகிறார்கள். நடிக்க அதிகம் வேலை இல்லை என்றாலும் தனக்குக் கிடைத்த வாய்ப்பை அழகாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் நஸ்ரியா.

சந்தானம், இரட்டை அர்த்த வசனங்கள்... அப்பாவாகவோ சித்தப்பாவாகவோ ஒரு கதாபாத்திரம் வைத்து வாடா, போடா என தரக்குறைவாகப் பேசுவது ... என வழக்கமான பாணியிலேயே இதிலும் வருகிறார். குணச்சித்திர வேடம் என்று சொல்லிக் கொள்கிறார்கள். அப்படியெல்லாம் தெரியவில்லை. சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். சத்தியராஜ் வழக்கமான அப்பாவாக வருகிறார். சத்யன் அடிக்கும் காமெடிகள் சிரிக்கவைக்கவில்லை.

படத்தின் இறுதிக் காட்சி விமான நிலையத்தில்.... பல படங்களில் பார்த்துப் பழகிய காட்சி என்பதால் நயன் செல்லும் போது பதட்டத்துடன் பயணிக்க வைக்கவில்லை. 

மௌனராகம் படத்தின் கதை என்றும்... திருமணமானவர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய கதை என்றும் சொன்னார்கள் ... அந்தளவுக்கு இல்லை என்றாலும் ஒரு முறை ரசித்துப் பார்க்க வைக்கும் கதை... 

இளம் இயக்குநர் அட்லிக்கு வாழ்த்துக்கள்.


ஓநாயும் ஆட்டுக்குட்டியும்... மிஷ்கினின் வித்தியாசமான இயக்கத்தில் உருவான படம்... இரவு நேர சென்னை வீதிகளில் பயணிக்கும் கதை... விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லை... ஓநாயாக வரும் மிஷ்கின் குண்டடிபட்டுக் கிடக்க அவரைக் காப்பாற்றப் போராடி தானே ஆபரேசன் செய்து, பின்னர் போலீஸில் சிக்கி ஓநாயைக் கொல்லப்புறப்பட்டு அவரிடம் ஆட்டுக்குட்டியாக மாட்டிக் கொள்ளும் ஸ்ரீக்கு வழக்கு எண் கொடுத்த புகழை இது கொடுக்காது என்பது உண்மை.

மிஷ்கினைத் தேடும் போலீஸ், கொல்லத் துடிக்கும் வில்லன், போலீஸ் தூண்டுதலில் கொலை செய்ய வந்து அவருடன் பயணிக்கும் நாயகன், மிஷ்கின் காப்பாற்றத் துடிக்கும் கண் தெரியாத குடும்பம் என கதை பயணப்படுகிறது. முடிவில் ஓநாயை ஆட்டுக்குட்டி கொன்றதா இல்லையா? ஓநாய் ஆட்டுக்குட்டியின் மனதில் இடம் பிடித்ததா இல்லையா... கண்தெரியாத அந்தக் குடும்பம் என்னவாயிற்று என்பதே கதை.

படத்தின் மிகப்பெரிய பலம் ராசாவின் பின்னணி இசைதான்... மனிதர் புகுந்து விளையாடியிருக்கிறார். குறிப்பாக கார் பார்க்கிங்கில் கதை பயணிக்கும் போது மனிதர் இசையால் நம்மை கதையுடன் மட்டுமின்றி ராசாவுடனும் பயணிக்க வைக்கிறார். 

மிஷ்கின் படங்களில் வழக்கமாக வரும் சட்டையை பாதி கழற்றி வைத்துக் கொண்டு ஓரு மாதிரி ஓடி வந்து பின்னர் திரும்பி மீண்டும் வந்து அடிப்பது போன்ற ஒரு சில காட்சிகள் இதிலும் வருகின்றன. கண் தெரியாத குடும்பத்தை இவர் ஏன் காப்பாற்றுகிறார் என்பதை தனிக்கதையாகக் காட்டாமல் மிஷ்கின் குழந்தைக்கு கதையாக சொல்வது சிறப்பு. இந்தப் படத்தை எடுத்திருக்கும் விதத்துக்காகவும் வித்தியாசமான கதைக்காகவும் ஒரு முறை பார்க்கலாம்.



-'பரிவை' சே.குமார்

வியாழன், 3 அக்டோபர், 2013

வீடியோ : பிரபுவின் பாடல்கள் சில...

இன்றைய பாடல் பகிர்வில் இளைய திலகம் பிரபுவின் படங்களில் இருந்து சில பாடல்களைப் பார்க்கலாம்.  இன்றைய இந்தப் பதிவு '444' வது பகிர்வு...


படம் : டூயட்
பாடல் : என் காதலே...




படம் : சின்ன தம்பி
பாடல் : போவோமா ஊர்கோலம்...




படம் : பாண்டித்துரை
பாடல் : என்னை மறந்த பொழுது...




படம் : உத்தமராசா
பாடல் : இந்த மாமனோட மனசு...




படம் : சின்ன மாப்ளே
பாடல் : காட்டுக் குயில் பாட்டுச் சொல்லி....




படம் : சின்னவர்
பாடல் : அந்தியில வானம்



பாடல்களை ரசித்துப் பார்த்திருப்பீர்கள். மீண்டும் அருமையான பாடல்களுடன் அடுத்த பாடல் பகிர்வில் தொடருவோம்...

-'பரிவை' சே.குமார்.

புதன், 2 அக்டோபர், 2013

தொடர்கதை : கலையாத கனவுகள் - 18

முந்தைய பதிவுகளைப் படிக்க...


******
18. மனமெங்கும் அவளின் வாசம்

முன்கதைச் சுருக்கம்: 

கிராமத்து ஏழைக்குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான்.  அக்காவுக்கு விருப்பமில்லாத மாப்பிள்ளையை பேசி வைத்திருக்கும் அம்மாவுடன் மல்லுக்கு நிற்கிறான். கல்லூரியில் வைரவனைத் தாக்க வந்தவர்களுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக கெட்டபெயர் ஏற்படுகிறது. அவனைப் பார்க்க வரும் புவனா, அவனுடன் மல்லிகா இருக்கவும் கோபமாகிறாள். அவளைப் பார்த்துப் பேசி சமாதானமாக அவனுடன் மனம் விட்டுப் பேச வேண்டும் என்கிறாள்.

இனி...

"வாடா..மண்டையெல்லாம் ஒடச்சிக்கிட்டு வந்தியாமே... இப்ப எப்படியிருக்கு? இப்படி உக்காரு... " என்றபடி கயிற்றுக் கட்டிலில் எழுந்து அமர்ந்தான் சேகர்.

"பரவாயில்லடா... விழுந்ததுதான்..."

"இங்க பாரு... எங்க பயலுக உங்க காலேசுல படிக்கிறாய்ங்க... வெவரமா புட்டுப்புட்டு வச்சிட்டாய்ங்க... ஆமா அந்தாளு நீ சொன்ன ரவுடிதானே... உன்னோட ஆளோட அண்ணன்னதும் நீ ஹீரோவாயிட்டியாக்கும்... நடக்கட்டும்... நடக்கட்டும்..."

"உனக்குச் சொல்லிட்டாய்ங்களா.... அட கண்ணு முன்னாடி ஒருத்தனை அடிக்கிறாய்ங்க... பாத்துக்கிட்டு இருக்கச் சொல்லுறியா... அது எதிரியா இருந்தாலும் காப்பாத்தணுங்கிறதுதான் என்னோட எண்ணம்..."

"ம்.... இப்ப எல்லாம் பேசுவீங்கடா... பள்ளிக்கொடத்துல படிக்கயில பாண்டி என்னைய பதம் பாக்கும் போது பாத்துக்கிட்டு நின்னவந்தானே நீயி... இன்னைக்கு வெவரமா பேசுறே... எல்லாம் பூமா பித்தம்டா..."

"பூமாவா... இது யாருடா புதுசா..?"

"அவ பூமா இல்லையா... இல்லையே... பூலதானே ஆரம்பிக்கும்... ம்... பூலாந்தேவிதானே..?"

"ஏன்டா நீயா எதாவது பேரை சொல்லிக்கிட்டு... அவங்க பேரு புவனா..."

"ம்... இப்ப ஞாபகம் வந்திருச்சு... புவனாராம்... கரெக்ட்..."

"எதுக்குடா கத்துறே... அதுவும் ராம் வேற சேத்துக்கிட்டு... அத்தை வீட்லதானே..?"

"அம்மாவுக்கு உடம்புக்கு முடியலை.... அதான் படுத்திருக்காங்க..."

"உள்ள சட்டி முட்டி உருட்டுற சத்தம் கேக்குது..."

"அதுவா எங்க வீட்டு பூனை வந்திருக்கு... அது வந்த சத்தமாத்தான் இருக்கும்..."

"யார்டா... அது... உங்க வீட்டுப் பூனை..."

"ம்... என்னையத்தான்டா பூனையின்னு நக்கல் பண்ணுறான்... இவரு சிங்கம்...." என்றபடி தண்ணீர் பிடிக்க வெறுங்குடத்தை கையில் வைத்தபடி உள்ளிருந்து வந்தாள் காவேரி.

"அடேய் இதைத்தான் பூனையின்னியா..."

"அப்புறம் இது பூனையில்லாம புலியா... குந்தானி..."

"இங்கருடா... குந்தானியின்னு சொன்னியன்னா பாத்துக்க.... " என்று விரலை உயர்த்திக் காட்டியவள் "என்னடா பொம்பளப்புள்ள பேரு அடிபடுது... ஊருக்குள்ள இந்தப் பூனையும் பால்குடிக்குமான்னு இருக்கிறது... காலேசுக்குப் போனவுடனே எவளையாவது புடிச்சிரவேண்டியது.... எவடா அவ..."

"அதெல்லாம் ஒண்ணுமில்ல... எங்கூட படிக்கிற பொண்ணைப் பத்தி சொல்லிக்கிட்டு இருந்தேன்... நீ எதாவது  நெனச்சுக்காதே சும்மா..."

"எங்கக்கிட்டயா... என்னைக்கா இருந்தாலும் தெரியாமயா போயிடும்..."

'இங்க பாரு உனக்கு ஒருத்தனை பட்டாப்போட்டு வச்சிருக்காய்ங்க... மத்தவங்களை பத்தி யோசிக்காம இவனை வளைச்சிப் போடுற வழியைப் பாரு... போ அடிபைப்ல உன்னோட நண்பிகள் கூடியிருப்பாளுக..."

"எங்களுக்குத் தெரியும்... எப்பப்பாரு ரெண்டுபேருக்கும் இதுதான் பொழப்பு..." என்றபடி நகர

"ஆமா குந்தானிக்கு எங்களை வேவு பாக்கிறதுதான் வேலை... போடி..."

காவேரி கீழே கிடந்தை கல்லை எடுத்து அவர்களை நோக்கி எறிந்தாள்.

:ஏன்டா... அதுகிட்ட போயி.... எதுக்கு அதை குந்தானியின்னு கேலி பண்ணுறே... பாவன்டா அது... ரொம்ப நல்ல பொண்ணு..."

"அடேய் இப்ப சர்ட்டிபிகேட் கேட்டாங்களா... சரி விடு...அவளுக்கிட்ட நான் எதாவது வம்பிழுக்கணுமின்னு அவளோ வழியக்க வருவா... இதெல்லாம் எங்களுக்குள்ள சகஜம்டா... உன் மேட்டருக்கு வா... எதாவது இம்ப்ரூவ்மெண்ட்..."

"எதுல..?"

"ம்.... தெரியாத மாதிரி கேக்கிறே...? அதான்டா உன்னோட காதல்..."

"ஏன்டா நீ வேற... அவங்க எதுக்கெடுத்தாலும் கோபப்படுறாங்க... என்னோட கிளாஸ்மெட்டுக்கிட்ட பேசினாலே கோபம் வருது... சும்மா பிரண்டா இருக்கும் போதே இப்படின்னா... இவங்களை காதலிச்சா அம்புட்டுத்தான்...."

"டேய்... டேய்... எனக்கு சின்ன வயசுலயே காதுக குத்திட்டாய்ங்கடா... நீ திரும்பக் குத்தாதே...அவளைப் பத்திப் பேசினாலே உன்னோட முகம் பிரகாசமாயிடுதே... வவ் இல்லையின்னு மட்டும் சொல்லாதடா... எத்தனை பேரைப் பார்த்திருப்பேன்... உன்கிட்ட உரிமையோட கோபப்படுறான்னா அவ உன்னைய சின்சியரா லவ் பண்ணுறாடா... சீக்கிரமே ட்ரீட் வைக்கிற மாதிரி இருக்கும்.."

"சும்மா இருடா... எங்க குடும்ப சூழலுக்கு நான் படிச்சி அம்மாவோட கனவுகளை எல்லாம் நிறைவேத்தனும்... எங்களுக்காக கஷ்டப்படுற எங்கண்ணனை கடைசி வரைக்கும் கஷ்டப்படாம வச்சிக்கனும். என்னை மாதிரி ஆளுக்கு காதல் கீதல் எல்லாம் சரிவராது..." மனசுக்குள் அவள் தன்னை காதலிக்க வேண்டும் என்று  நினைத்தாலும் வார்த்தைகளில் வாழ்க்கையை கொண்டு வந்தான்.

"உன்னோட எண்ணமெல்லாம் ஓகேதான்... அதுக்காக காதல் இருக்கக்கூடாதுன்னு எவன் சொன்னான்... அந்தப் பொண்ணுக்கு என்னடா குறைச்சல்... நல்லாப் படிக்கிற பொண்ணு... கண்டிப்பா உனக்கு துணையா நிப்பா... என்ன காலேசுல அவ அண்ணனால பிரச்சினை வந்தாத்தான்... மத்தபடி மூணு வருசம் ஜாலியாப் போயிரும்... வெளிய வந்தப்புறம்தான் ஜாதி அது இதுன்னு நிறைய சந்திக்க வேண்டியிருக்கும்... ஆனா அவ உன்னைய விரும்ப ஆரம்பிச்சிட்டாங்கிறது மட்டும் நீ சொல்றதுல இருந்து தெரியுது. நீ விலகினாலும் அவ உன்னை விடமாட்டாடா..."

".........." ஒன்றும் பேசாமல் தரையைப் பார்த்துக் கொண்டிருந்தான். தண்ணீர் குடத்துடன் திரும்பிய காவேரி, "இன்னும் பொம்பளப்புள்ளங்க பேச்சுத்தானா... உங்கம்மா அங்கதான் இருக்கானான்னு கேட்டுச்சுப்பா.... சீக்கிரம் போ... இவங்கூட பேசிக்கிட்டு இருந்தா பொம்பளப்புள்ளங்களப் பத்தித்தான் பேசுவான்... நீயும் இதுகூட சேர்ந்து கெட்டுப் போயிடாதே..."

"ஆமாடா... ஆத்தா ஔவையாரு சொல்லுறா கேட்டுக்க... போடி குந்தானி..." என்ற சேகர், "சரிடா... அத்தை கோபமாயிடாம சீக்கிரம் போ.... நாளைக்குப் பேசுவோம்..."

"ஆமா... ரொம்ப முக்கியமாப் பேசப்போறாய்ங்க... போங்கடா..." என்றபடி காவேரி உள்ளே போக, ராம்கி அங்கிருந்து வீடு நோக்கிக் கிளம்பினான். சேகருடன் பேசிய பின்னர் அவனை புவனா அதிகமாக ஆக்கிரமித்துக் கொண்டாள்.

(சனிக்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.