மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 7 பிப்ரவரி, 2011சுமைதாங்கிமுன்னெல்லாம் அடிக்கடி வீட்டுப் பக்கம் வரும் செண்பகம் இப்ப அதிகமா வாறதில்லை. மூச்சுக்கு முன்னூறு தரம் அக்கா... அக்கான்னு வருவா. கொஞ்ச நாளா பாத்த பேசுறதோட நிறுத்திக்கிறா. இன்னைக்கு அவகிட்ட ஏண்டி வாறதில்லையின்னு கேக்கணும் என்று நினைத்தபடி மாட்டெருவையை சுமந்து வயலை நோக்கி நடந்து கொண்டிருந்தாள் பர்வதம்.

மழக் காலங்கிறதால பசும்புல்லை தின்னுட்டு மாடு பூராம் கழிய ஆரம்பிச்சிருச்சு. கசாலை எல்லாம் தொறுத்தொறுன்னு கிடக்கு பாக்கச் சகிக்கலை. மாடுக மேலெல்லாம் எருவும் மூத்தரமுமா கலரே மாறிப்போயி கெடக்குக. இந்த சரவணப் பயலை மாட்டை குளிப்பாட்டுடான்னா அசைய மாட்டேங்கிறான். நாமதான் குளிப்பாட்டணும் போல. என்ன அந்த சனியங்களை இழுத்துக் கொண்டு போய் சேக்கிறதுதான் கஷ்டம். ஒண்ணு காட்டுக்கு இழுத்தா ஒண்ணு மேட்டுக்கு இழுக்கும். இன்னும் சொல்லப் போனா பில்லப்பசுவை தண்ணிக்குள்ள இறக்க போராடணும். தனி மூக்கனையில போட்டு தறத்தரன்னு இழுத்துக்கிட்டுப் போனாலும் தண்ணிக்கிட்ட போனோடனே டக்குனு பிரேக்கு போட்ட மாதிரி நின்னுக்கும். இல்லேன்னா நம்மளை இழுத்துப் போட்டுட்டு மாக்காலி எடுத்து ஒரே ஓட்டம்... அப்புறம் அந்தக் கயிரை பீ பிருக்கெல்லாம் இழுத்துக்கிட்டு திரிஞ்சிட்டு சாயந்தரம்தான் வரும். கயறைத் தொடவே அருவெறுப்பா வரும்.

அவரு இருந்த செவ்வா வெள்ளி அவனையும் கூட்டிக்கிட்டு மாடுகளை குளிப்பாட்டி பொட்டு வச்சு கொண்டாந்து கட்டிட்டு வேலைக்குப் போவாரு. போன வாரம் முதலாளிகூட நாமக்கல் போனவரு நாளைக்குத்தான் வாராரு. வயலுக்குப் பொயிட்டு வந்துட்டு இந்தக் காளய கூட்டிக்கிட்டு போயி கழுவியாந்திரணும். மத்தியானத்துக்கு கீரத்தண்டு கிடக்கு அதோட கருவாட்டைப் போட்டு வச்சமின்ன நாக்குக்கு ருசியா சாப்பிடலாம். நாச்சியக்கா மோரு ஊத்தப் போகயில வெங்காயம் தக்காளி வாங்காரச் சொல்லணும் ரெண்டோ மூனோதான் கிடக்குது. எதேதோ யோசனைகள் எழுந்த வண்ணம் இருக்க வரப்பில் போய்க்கொண்டிருந்தவளின் எதிரில் எருக்கொட்டிவிட்டு வெறுங்கூடையுடன் செண்பகம் வந்து கொண்டிருந்தாள்.

"என்னக்கா யோசன பலமா இருக்கு எந்தக் கோட்டையைப் பிடிக்க..."

"ஆமா அது ஒண்ணுதான் கொறச்சல்... மாட்டை குளிப்பாட்டணுமின்னு நெனச்சிக்கிட்டு வந்தேன்."

"அதான் சரவணன் இருக்கானுல்ல... அவனை குளிப்பாட்ட சொல்ல வேண்டியதுதானே..."

"அது இருந்த எடத்த விட்டு எந்திரிச்சா என்னத்துக்கு ஆகுறது... சரி நில்லு மேட்டுச் செய்யில கொட்டிட்டு வந்துடுறேன்" என்றபடி நகர்ந்தாள்.

எருவக் கொட்டிட்டு 'சை கழுஞ்சு வைக்கிதுக மேலெல்லாம் வழிஞ்சு சேல எல்லாம் போச்சு' என்றபடி வந்தாள்.

"உங்கிட்ட கேக்கணுமின்னே நினச்சேன்டி... ஆமா இப்பல்லாம் எங்க வீட்டுப் பக்கம் அதிகம் வாறதில்லையே ஏண்டி."

"அதெல்லாம் ஒண்ணுமில்லேக்கா... வேல நிறைய இருக்கு..."

"பொய் சொல்லாதடி... அப்படி என்னடி வேல இருக்கு... "

"அது.."

"என்னமோ மறைக்கிறே... எங்கூட்டுக்கு போவப்படாதுன்னு உங்காத்தா சொன்னுச்சா..."

"ஐய்யோ... அம்மா அதெல்லாம் சொல்லாது. அதுவே உங்கூட்டுப் பக்கம் வராம இருக்கவும் நோண்டி நோண்டி கேக்குது... அதுகிட்ட எதோ சொல்லி சமாளிச்சிட்டேன்."

"எதோ சொல்லி சமாளிச்சிட்டேன்னா... என்ன பிரச்சினை உனக்கு..."

"ஒண்ணுமில்லேக்கா... வேல இருந்துச்சு அதான்..."

"மறுபடியும் மறைக்கிறே... சொல்லலாமின்னா சொல்லு..."

"அப்பறம் வீட்டுக்கு வாரேங்க...இப்ப அம்மா பால் ஊத்தப் போயிருக்கு, தங்கச்சியும் தம்பியும் பரிச்சைக்குப் படிக்கிறாங்க... அப்பா வேலக்குப் போறதுக்குள்ள அவருக்கு சாப்பாடு செய்யணும்.. வாரேங்க" என்று அவள் பதிலை எதிர்பார்க்காமல் ஓடிவிட்டாள்.

'ம்ம்... என்னத்தையோ மறைக்கிறா... என்னான்னு தெரியலை... சரி அப்புறம் வரட்டும் என்னன்னு கேக்கலாம்' என்று நினைத்தபடி சென்றவள் எதிரே நாச்சியக்கா வர, அக்கா வெங்காயம் தக்காளி வாங்கிக்கிட்டு வா... வந்து காசு வாங்கிக்க என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு போனாள். வாசலில் கிட்டிக் கம்பு செதுக்கிக் கொண்டிருந்த சரவணனை பாத்தவளுக்கு கோபம் தலைக்கேறியது. "ரொம்ப முக்கியம்... இதுதான் உங்களுக்கு சோறு போடப்போகுது... தூக்கிப் போட்டுட்டு எந்திரிக்கிறியா இல்ல எருக்கூடய தலயில போடவா"

"போம்மா... கிட்டி வெளடா செதுக்கி வச்சிட்டு வாரேன்" முகத்தை தூக்கி வச்சிக்கிட்டு சொன்னான்.

"வா மாட்டைக் குளிப்பாட்டிட்டு நீ என்ன வேணாலும் வெளயாடு... வா"

"மாடு குளியாட்டவா சித்தப்பா வந்தோடனோ அதுகிட்ட சொல்லலாமுல்ல... நா வரலை போ" சொல்லிக்கிட்டே தள்ளிப் போனான்.

"அவுக கலக்கிட்டரு உத்தியோகம் பாக்கிறாக காலயில போனா ராத்திரிக்குத்தான் வாராக. அப்புடி என்னதான் வேலயோ தெரியலை. நீங்க கிட்டி வெளாடப் போங்க... எனக்குத்தானே எல்லாம் வந்து கிடக்கு. இன்னைக்கு பட்டினிதான் போ" அவள் கோபமாக சத்தம் போட

"கம்மாயில சொறியிருக்கு... மேலெல்லாம் அரிக்கும்மா"

"அப்ப பைப்புல தண்ணி அடிச்சுக் கொடு... நா மாட்டக் கழுவுறேன்"

"தண்ணி அடிக்கிறதுக்கு கம்மாக்கே போகலாம்."

"சரி வா..."அடுக்கடுக்கான வேலைகளில் மூழ்கியதால் நேரம் போனதே தெரியவில்லை. கீரத்தண்டையும் கருவாட்டையும் போட்டு கொழம்பை கூட்டிவிட அந்த ஏரியாவே மணத்தது. அவளது மாமியாவுக்கு அந்த வாசம் வயித்துப்பசியை கிள்ளி நாக்கில் எச்சில் ஊற வைத்தது.

"என்னத்தா... கீரத்தண்டும் கருவாடுமா வக்கிறே." என்றவாறு உள்ளே வந்தது.

"ஆமா அயித்தை... வேற ஒண்ணுமில்ல... நாளைக்கி கிடக்க பயரைப் போட்டு வச்சமின்னா நாளானைக்கு சந்தையில காய் வாங்கிக்கலாம்..."

"ம்.. இந்த சரவணன் எங்க போனான? ராமசாமியண்ண தோட்டத்துல போயி கத்திரிக்கா வாங்கிகிட்டு வரலாமுல்ல... அங்க வதி அழியுது அத்தாச்சி வந்து பறிச்சிக்க சொல்லுன்னு அண்ணபொண்டி சொன்னுச்சு. நாம அங்க போறமாதிரியா இருக்கு பாதைக... இவனை விட்டா சைக்கிள்ல ஒரு நிமிசத்துல பொயிட்டு வந்திருவான்."

"ஆமா... அது எந்தப் பொட்டல்ல கிட்டி வெளாடுதோ... லீவ் விட்டா வீட்ல தங்குறதில்லை. நாளக்கி பாக்கலாம்"

"சரி... ராமசாமி அண்ண போனா பிடுங்கியாரச் சொல்லிட்டு வாரேன்" என்றபடி ராமசாமி வீட்டில் ஊர்க்கதை பேச போய்விட்டாள். இனி ரெண்டு மணியோ, மூணு மணியோ தெரியலை.

அரிச்ச தலய சொறிஞ்சிக்கிட்டு பேனு கெடக்கு போல புடுங்குது... யாரையாச்சும் பாக்க சொல்லலாமுன்னா யாருமில்ல நாமளே உருவிப்பாப்போமுன்னு ஈருவலிய எடுத்துக்கிட்டு திண்ணையில வந்து உக்காந்தவள் செம்பகம் வாராதை பாத்ததும் இவகிட்ட தலயக் கொடுக்கலாம். நல்லா பேன் பாப்பானு நெனச்சிக்கிட்டா.

"என்னக்கா வேல முடிஞ்சிருச்சா..."

"இப்பதான் முடிச்சேன். சித்த எந்தலைய கொஞ்சம் பாரேன்... ஒரே அரிப்பா இருக்கு."

"இப்படி திரும்பி உக்காருங்க வெளிச்சம் தெரியலை. எங்க அத்தைய காணோம்."

"அவங்க மீட்டிங்குக்கு போயாச்சு."

"அப்புறம் அவங்களுக்கும் பொழுது போகணுமில்ல..."

நினைவு வந்தவளாய், "சரி நீ ஏன் இங்க வரலைங்கிறதுக்கு காரணத்தை சொல்லு" என்றாள்.

"அதான் வந்துட்டேன்ல..."

"பேச்ச மாத்தாதே... எனக்கு தல வெடிச்சிடும் போல... ஒரு நாள்ல பாதி நேரத்தை இங்கயே போக்குறவ திடீர்ன்னு வரலையின்னா..."

"சொல்லாம விடமாட்டீங்க... அப்படித்தானே... முருக மாமா உள்ளயா?"

"எதுக்கு அவனைக் கேக்கிறே..."

"இல்ல எல்லாரும் இருந்தா சொல்ல வேண்டாமேன்னுதான்..."

"அவன் இல்ல... வேற யாரும் இல்ல"

"பேன் இல்லக்கா ஈறு நெறய இருக்கு. ஒண்ணுமில்லேக்கா... மனசு சரியில்லை..."

"...." பேசாமல் அவளைப் பார்த்தாள்.

"உங்களுக்கெல்லாம் தெரியாது... நா முருக மாமா மேல உசுரையே வச்சிருந்தேன். ஆனா..."

இப்பத்தான் அவளுக்கு புரிந்தது. அவளது பெரும்பாலான நேரம் இங்கே கழிந்தாலும் அதில் முருகனுடன் அவள் அடிக்கும் லூட்டிதான் அதிகமிருக்கும். அவனை எதாவது சொல்லி வம்பிழுத்துக் கொண்டே இருப்பாள். அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

"அவனுமா...?"

"இல்லக்கா... நா மட்டும் சின்ன வயசுல இருந்தே மாமா மேல ஆசய வளத்துக்கிட்டேன். "

"அவங்கிட்ட சொன்னியா..."

"இல்ல... படிப்பு முடிஞ்சதும் சொல்லலாமுன்னு இருந்தேன். அதுக்குள்ள..."

"அதுக்குள்ள..."

"அன்னைக்கு உங்ககிட்ட மாமா என்ன சொன்னுச்சு..."

"என்ன சொன்னான்...." யோசித்தவளுக்கு அதற்கான விடை கிடைத்தது. கூட படிச்ச புள்ள கூட பழகுறதாவும் அவளையே கட்டிக்கப் போறேன்னும் முருகன் சொன்னது ஞாபகத்தில் ஆடியது.

"என்ன சொன்னாங்கன்னு ஞாபகம் வந்திருச்சா..."

"ம்..."

"அதைக் கேட்டேன்... அதுக்கப்புறம் மாமாவ பாக்க மனசில்ல அதான் இங்கிட்டு வரல..."

"அடி கிறுக்கி இதுக்காகவா வராம இருந்தே... அவன் சொல்லியிருக்கான்... நாங்க ஒத்துக்கலையில்ல... மனசு மாறாமய போயிடுவான். அப்படியே அவளத்தான் கட்டுவேன்னு கட்டினா உனக்கு என்ன நல்ல மாப்ள கெடக்காமயா போயிடுவான்..."

"கெடப்பான்... கெடப்பான்... முருக மாமா மாதிரி கெடப்பானா..?"

அதற்குள் பர்வதத்தால் பதில் சொல்ல முடியலை.

"என்னால போன போகட்டுமின்னு விட்டுட்டுப் போக முடியலக்கா... மாமாவ பாக்காம இருக்க நினச்சாலும் முடியலக்கா. ரோட்ல சைக்கிள்ல வாரப்ப என்னயறியாம எட்டிப் பாக்கச் சொல்லுது..." கண் கலங்கியது.

"சரி விடு... மாமாகிட்டயும் அத்தைகிட்டயும் பேசி உன்னைய அவனுக்கு கட்ட ஏற்பாடு பண்றேன். நம்மள மீறியா போகப் போறான்."

"வேண்டாங்க... கட்டாயப்படுத்தி வாழ்க்கையில் சேந்தா சந்தோசம் போயிடுமுக்கா. மாமாவோட சந்தோசத்தையும் பறிச்சிட்டு, அவரை விரும்புன பொண்ணோட சந்தோஷத்தையும் பறிச்சிட்டு நா மட்டும் எப்படிக்கா நல்லா இருக்க முடியும். நான் மட்டும்தானே விரும்புனேன். மாமா இல்லையில்ல... ஒத்த மனசு செத்தா பரவாயில்லக்கா. ரெண்டு மனசைக் கொன்ன பாவத்தை சுமக்கணுமாக்கா. மாமா நெனப்ப சுமந்துக்கிட்டு கிடக்கிறதும் ஒரு சுகந்தாக்கா. அந்த சுகத்தை நான் இப்ப அனுபவிக்கிறேங்க...அவங்க சேரட்டும்... இத யார்கிட்ட பேசாதீங்கக்கா.... நான் வாரேன்" என்றபடி கண்ணீரை துடித்துக் கொண்டு சென்றவளை பார்த்துக் கொண்டிருந்த பர்வதத்தின் கண்கள் நீந்திக் கொண்டிருந்தன.

***************

நன்றி... நன்றி... நன்றி..!


எனது அக்கா சமைத்து அசத்தலாம் வலைப்பூவில் சமைத்து அசத்தும் ஆசியா உமர் அவர்கள் "One Lovely Blog Award" ஒன்றைப் பெற்று அதை பலருக்கு கொடுத்துள்ளார்கள். அந்தப் பலரில் சகோதரனாய் நானும்....

விருதுக்கு நன்றி அக்கா.

***************
-'பரிவை' சே.குமார்.

 நன்றி: படங்கள் கூகிள் 

39 கருத்துகள்:

 1. ஒத்த மனசு செத்தா பரவாயில்லக்கா. ரெண்டு மனசைக் கொன்ன பாவத்தை சுமக்கணுமாக்கா. மாமா நெனப்ப சுமந்துக்கிட்டு கிடக்கிறதும் ஒரு சுகந்தாக்கா. அந்த சுகத்தை நான் இப்ப அனுபவிக்கிறேங்க...அவங்க சேரட்டும்..

  கதையில் கிராமத்து மனம்... நல்லா இருக்கு....

  பதிலளிநீக்கு
 2. உருக்கமான கதை குமார்.

  விருதுக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 3. இது தான் மனசுங்கிறது!பொதுவாக இந்த நேரம் நெட் பக்கம் வரமாட்டேன்,தம்பி மனதார கூப்பிட்டதால் காதில் விழுந்து வந்திட்டேன் போல.

  கதை யாரு எழுதினது? என் தம்பி எழுதினதில்ல பின்ன கேட்கணுமா, என்ன ?கருவாடும் கீரைத்தண்டும் புதுசாக ரெசிப்பி கதையில் வருது,செய்து பார்த்திட்டா போச்சு.

  இந்தக்கதையும் மனதை தொட்டது,கதை படிக்கும் பொழுது மனதில் ஒரு வலி வரனும் அப்ப தான் அதற்கு வெற்றி.அதை தவறாமல் கடைபிடிக்கிறீங்க தம்பி.

  பதிலளிநீக்கு
 4. இது தான் மனசுங்கிறது!பொதுவாக இந்த நேரம் நெட் பக்கம் வரமாட்டேன்,தம்பி மனதார கூப்பிட்டதால் காதில் விழுந்து வந்திட்டேன் போல.

  கதை யாரு எழுதினது? என் தம்பி எழுதினதில்ல பின்ன கேட்கணுமா, என்ன ?கருவாடும் கீரைத்தண்டும் புதுசாக ரெசிப்பி கதையில் வருது,செய்து பார்த்திட்டா போச்சு.

  இந்தக்கதையும் மனதை தொட்டது,கதை படிக்கும் பொழுது மனதில் ஒரு வலி வரனும் அப்ப தான் அதற்கு வெற்றி.அதை தவறாமல் கடைபிடிக்கிறீங்க தம்பி.

  பதிலளிநீக்கு
 5. எக்ஸலண்ட் குமார்! கிராமத்து பெண்களின் அன்றாட வாழ்வின் விவரிப்பு அருமை! :)

  பதிலளிநீக்கு
 6. பதிவுக்காக பாராட்டுக்கள்! விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 7. என்ன சொறதுன்னு தெரியல.
  செண்பகத்தோட நுட்பமான
  அறிவு, பின்னால் இரு உசுரு
  கஷ்டப்படுவதற்கு தன் உசுரு
  மட்டும் கஷ்டப்படுவது மேல்
  என்கிற பக்குவமான மனசு;
  அவளை நீடூழி வாழ வாழ்த்தறோம்.

  பதிலளிநீக்கு
 8. அருமையாய் இருக்கு குமார்!

  இப்பதான் ராகவனின் ஒரு சிறுகதை வாசித்து நிறைந்து போய் வந்தேன். இங்கு இன்னொரு வகையான நிறைவு.

  என்னங்கடா பாவிகளா, சிறுகதையில் எல்லோரும் இந்த கலக்கு கலக்குகிறீர்கள்! :-)

  நம் வட்டார சொல்லாடலை அப்படியே இதில் பார்க்க முடிகிறது மகனே.. ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் மட்டும் கொஞ்சம் சரி பண்ணனும் குமார். சற்று இடறுது. எனக்கும் இந்த குறை உண்டு. சரி பண்ண, நண்பர்கள் இருப்பதால், சரி பண்ணி பிறகு பதிகிறேன். ஒரு முறைக்கு இருமுறை இதில் கவனம் செலுத்தவும். மற்றபடி நல்ல பக்குவம் குமார். சந்தோஷமா, நிறைவா இருக்கு.

  வாழ்துகள் மகனே! :-)

  பதிலளிநீக்கு
 9. ஒத்த மனசு செத்தா பரவாயில்லக்கா. ரெண்டு மனசைக் கொன்ன பாவத்தை சுமக்கணுமாக்கா//

  அருமையான வரிகள்...

  வாழ்க வளமுடன்.
  வேலன்.

  பதிலளிநீக்கு
 10. சூப்பர் சார்... விருதுக்கு வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 11. வட்டாஅர வழக்கில் அருமையான கதை. வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 12. கிராமத்து மண் சார்ந்த பதிவு ,கலக்கல் குமார்

  பதிலளிநீக்கு
 13. சீக்கிரம் ஒரு சிறுகதைத் தொகுப்பு போடுங்க.. அட்டகாசமா நடை இருக்கு. அதுவும் கிராமம் சார்ந்த கதை அதிகம் பிடித்துப் போகிறது. வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 14. அருமை குமார். தொடர்ந்து எழுதுங்கள்.

  பதிலளிநீக்கு
 15. வசிய மருந்தை வார்த்தைகளில் தடவி உலவ விட்டிருக்கிறீர்.மருந்து குணமேற்படுத்தி மனதை லேசாக்க வேண்டும்.ஆனால் இங்கு கனக்க செய்து விட்டது நண்பரே.
  செண்பகம் சுமையை எங்கள் மீது இறக்கி வைத்து விட்டாளே.நாங்கள் தான்[வாசகர்கள்]சுமைதாங்கிகளோ?.

  பதிலளிநீக்கு
 16. குமார்...முதலில் உங்கள் மொழி அசத்துகிறது.கதையோட்டம் நல்லாயிருக்கு.உண்மைதான் அடிச்சுக் கனிய வைக்க முடியாது வேண்டாம் என்பதில் எனக்கும் உறுதி !

  பதிலளிநீக்கு
 17. கதை அருமை .தொடர்ந்து எழுதுங்கள்.

  விருதுக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 18. நல்லாருக்கு குமார்

  விருதுக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 19. கதையோட்டம் மனதைத் தொட்டது.
  கதை முடிவு மனதை நெகிழவைத்தது.
  எப்புடி கலக்கறீங்க?!!!

  பதிலளிநீக்கு
 20. அருமையான எழுத்து நடை. கிராமிய மணம் அப்படியே...!
  விருதுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 21. குமார்.. கதையைப் படிக்கும் போது வைக்கோல் மணத்தையும்,கிராமத்து அமைதியையும் உணர்ந்தேன்... எளிமையாய் கதை சொல்லும் நேர்த்தி உங்களிடம் இருக்கிறது குமார். நிறைய எழுதுங்க.

  பதிலளிநீக்கு
 22. கதை நல்லாயிர்க்குங்க

  பதிலளிநீக்கு
 23. வாங்க எல்.கே...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க ரேவா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 24. வாங்க சுசிக்கா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க சதீஷ் அண்ணா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 25. வாங்க ஆசியாக்கா...
  எப்படி தம்பி மனசு அக்காவுக்கு தெரியாமப் போகும்? நீங்க வந்து படிச்சாத்தானே நம்ம கதைக்கே ஒரு சிறப்பு இருக்கும்.
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 26. வாங்க பாலாஜி...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க வானதி...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 27. வாங்க சித்ரா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க நிஜாமுதீன்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 28. வாங்க பா.ரா. சித்தப்பா...
  ரொம்ப நன்றி.
  நானும் பலமுறை வாசித்துத்தான் போடுறேன். இருந்தும் எங்காவது மிஸ்டேக் வந்துவிடுகிறது. திருத்திக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 29. வாங்க வேலன்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க பிரபாகரன்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 30. வாங்க வித்யாக்கா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க பயணமும் எண்ணங்களும்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 31. வாங்க சி.பி...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க உழவன்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. பார்க்கலாம் சித்தம் இருந்தால்...

  பதிலளிநீக்கு
 32. வாங்க அக்பர்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க சேக்காளி...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 33. வாங்க ஹேமா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க ஆயிஷா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 34. வாங்க சரவணன்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க கலையன்பன் சார்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 35. வாங்க அம்பிகாக்கா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க மோகன்ஜி...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க ரியாஸ்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...