மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 16 ஜூலை, 2023

நிகழ்வு : 'மாயநதி' பேராசிரியை உமாதேவியுடன் கலந்துரையாடல்

மீபமாய் நிறைய நிகழ்வுகளுக்குப் போகும் வாய்ப்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது. பலரைச் சந்திக்க, அவர்களுடன் உரையாட வார விடுமுறைகள் மட்டுமின்றி வாரநாட்களிலும் வாய்ப்புக் கிடைப்பது மகிழ்ச்சி. நேற்றைய நாளும் அப்படி ஒரு நாளாக, ஒரு சிறப்பான பேச்சைக் கேட்கும் நாளாக அமைந்தது.

நேற்று காலை முஸாபாவில் இருக்கும் ராஜாராம் அறையில் காலை உணவை முடித்துக் கொண்டு நாங்கள் துபைக்குப் பயணப்பட்டோம். எப்பவும் போல் நிறையப் பேசிக் கொண்டே பயணித்தோம். சகோதரர் நேதாஜியின் இல்லத்தில் மதிய விருந்தை முடித்துக் கொண்டு, சகோதரர் பிர்தோஷ் பாஷா தங்கியிருந்த ஹோட்டலுக்குப் போய் அவரையும் அழைத்துக் கொண்டு கேலக்ஸி பதிப்பகம், GP புரொடக்சன்ஸ் மற்றும் சகோதரி ரமாமலர் இணைந்து ஏற்பாடு செய்திருந்த திரைப்பட பாடலாசிரியர், பேராசிரியை உமாதேவி அவர்களுடனான இலக்கியக் கலந்துரையாடல் நிகழவிருந்த லாவண்டர் ஹோட்டலுக்குப் போனோம். சிறிது நேரத்தில் பாலாஜி அண்ணனும் வந்து இணைந்து கொண்டார்.
அதிகமான நபர்கள் வராமல் எண்ணிக்கையில் குறைவாகவே அரங்கில் ஆட்கள் இருந்தாலும் இந்த நிகழ்வு பத்தோடு பதினொன்றாய் இல்லாமல் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு மேல் மிகச் சிறப்பாக நடந்தேறியது. குறிப்பாக தன்னை நோக்கி எறியப்பட்ட அத்தனை கேள்விகளுக்கும் யோசிக்காமல், ஏனோதானோவெனப் பதில் சொல்லாமல் சிறப்பான பதில்களை சிக்ஸரெனப் பறக்கவிட்டு கைதட்டல்களைத் தொடர்ந்து வாங்கிக் கொண்டிருந்தார் பேராசிரியை உமாதேவி.
நிகழ்வின் தொடக்கமாய் பேராசிரியை உமாதேவியைப் பற்றிய ஒரு காணொளி - அவரின் திரைப்படப் பயணம் - ஒன்று திரையிடப்பட்டது. பாலாஜி அண்ணன் தம்பி கலைஞன் நாஷ் இணைந்து மிகச் சிறப்பாகத் தொகுத்திருந்தார்கள். பாடல்களைக் கேட்டபோது மாயநதி தவிர்த்துச் சில பாடல்கள் இவர் எழுதியதுதானா என்ற ஆச்சர்யம் மனசுக்குள் எழுந்தது. அதன்பின் சகோதரர் ஒருவர் மிக அழகாக உமாதேவி அவர்களின் பாடல் ஒன்றைப் பாடினார். பாடி முடித்ததும் பேராசிரியை அவரைப் பாராட்டினார்.
வந்திருந்தவர்கள் தங்களைப் பற்றி அறிமுகம் செய்து கொள்ளவும், சிறப்பு விருந்தினரைப் பற்றி ஒரு சில வார்த்தைகள் பேசவும் ஒவ்வொருவராய் அழைத்து ரமாமலர் பேசச் சொன்னது சிறப்பு. அப்படிப் பேசியவர்களில் ஒரு கவிஞராய் தங்கை சந்தியாவின் பேச்சும், அரசியல் செயற்பாட்டாளராய் பிலால் அவர்களின் பேச்சும், வாசிப்பாளராய் அசோக் அண்ணனின் பேச்சும் சிறப்பாக இருந்தது. நாங்களும் சின்ன அறிமுகத்துடன் ஏதோ பேசினோம்.


அறிமுகப்படலம் முடிந்தபின் பேராசிரியை உமாதேவி அவர்களை நோக்கி நண்பர்கள் கேள்விகளைத் தொடுக்க ஆரம்பித்தார்கள். அவர் எல்லாவற்றுக்கும் விளக்கமாகவும் விரிவாகவும் பதிலளித்தார். தமிழ் பேராசிரியை என்பதால் சங்க இலக்கியம், வல்லினம் - மெல்லினம், வாசித்த, பாதித்த கவிதைகள், கவிஞர்கள், பதினைந்தாம், பதினேழாம் நூற்றாண்டுப் பெண் கவிஞர்கள், அரசியல், கற்பு என எல்லாவற்றையும் மிக விரிவாகவே பேசினார். கேள்வி கேட்டவர்களுக்கான விளக்கத்தைத் தாண்டி நாம் அறிய வேண்டிய, புரிந்து கொள்ள வேண்டிய விசயங்களை மிகத் தெளிவாக எடுத்து வைத்தார்.
அவர் பேசியவற்றில் கொஞ்சமாய்....
* பிற மொழிக் கலப்பில்லாமல் எனது பாடல்களை எழுத வேண்டும் என்பதில் உறுதியாய் இருக்கிறேன். அப்படித்தான் இதுவரை எழுதியிருக்கிறேன். இயக்குநர் இந்த இடத்தில் இந்த வார்த்தை வேண்டுமெனக் கேட்டால், நான் எழுதிட்டேன் நீங்க சேர்த்துக்கிறதுன்னா சேர்த்துக்கங்க எனச் சொல்லிவிடுவேன்.
* நமக்கெல்லாம் ஒரு கவிதை எப்படி அறிமுகமாகியிருக்கும். ஏதாவதொரு அச்சு இதழ்ல வந்ததைத்தான் நாம் பார்த்திருப்போம், படித்திருப்போம். அது நமக்கு ரொம்ப நெருக்கமானதாக அமைந்து விடாது. நான் எட்டாவது படிக்கும் போது கல்லூரி படித்த என் அண்ணன் டைரியில் எழுதி வைத்திருந்த கவிதையை வாசித்த போது என்னை அது கவர்ந்தது. அதுவும் நம்மளுக்கு நெருக்கமான வரிகள் எழுதி வைத்திருக்கும் வரிகளை வாசிக்கும் போது நம்மோடு ரொம்பவே நெருக்கமானதாக ஆகிவிடுமல்லவா...? அப்படித்தான் என் அண்ணனின் கவிதை எனக்குள் ஆனது. நம் வீட்டில் ஒருவருக்கு கவிதை வரும்போது நாமும் எழுதினால் என்ன எனத் தோன்றியதால் எழுதியதுதான் என் முதல் கவிதை. இப்படித்தான் என் கவி ஆர்வம் அரங்கேறியது.
* எங்கப்பா கூத்துக் கட்டுவார். எங்க ஐயாவும் - அம்மாவின் சித்தப்பா - கூத்துக் கட்டுவாங்க. எங்கப்பா கட்டி நான் பார்த்ததில்லை. உங்கப்பன் கண்ணன் வேசம் போட்டால் கண்ணனாக இருப்பான். கர்ணன் வேசம் போட்டால் கர்ணனாக இருப்பான் என எங்கப்பத்தா சொல்லிக் கேட்டிருக்கிறேன்.
* எங்கப்பாவும் எங்கய்யாவும் நெருக்கமான நண்பர்கள். எங்கப்பாவைவிட எங்கய்யாதான் கூத்துக்காகவே வாழ்ந்தவர். இளைஞர்களை எல்லாம் கூத்து அழிந்து விடக்கூடாது என்பதால் படித்த, படிக்காத இளைஞர்களுக்கு எல்லாம் பழகிக் கொடுப்பார்.
* ஏகலைவனை எனக்கு ரொம்பவே பிடிக்கும். தனக்கு குரு தட்சணையாக உன்னுடைய கட்டை விரலைக் கொடு என்றதும் உடனே வெட்டிக் கொடுத்தவன் அவன். வில்வித்தை புரிய கட்டை விரல் ரொம்பவே முக்கியம் என்ற போதும் குரு கேட்டுவிட்டார் என்பதற்காக தன் கட்டை விரலை வெட்டி ஒரு இலையில் வைத்து உரிய மரியாதையுடன் கொடுத்திருப்பான் என்று நான் நினைக்கவில்லை. இந்தா இதை எடுத்துக் கொள் என ஒரு நாய்க்குத் தூக்கிப் போடுவதைப் போல்தான் போட்டிருப்பான் என்பதே என் எண்ணம். அதை நான் ஒரு கவிதையாக வடித்தேன்.
* அப்பா கூத்துக் கட்டியவர் என்பதால் தஞ்சாவூரில் வருடாவருடம் கூத்தாடுபவர்கள் ஒவ்வொன்றின் வசனத்தையும் எழுதி வைத்திருப்பார்கள். உங்கப்பா அப்படி எதுவும் வைத்திருக்காங்களா என்ற கேள்விக்கு அப்பாவிடம் அப்படி எதுவும் இல்லை. கம்பராமாயணத்தையும் இராமாயணத்தையும் இவர்களால் எப்படி ஒரு இரவில் நடத்திக் காட்டிவிட முடிகிறது என்று ஆச்சர்யப்படுவேன்.
* எங்கய்யாதான் ஊருக்குள் எல்லாம் செய்வார். எங்க ஊருக்குள் கிறிஸ்துவத்தைக் கொண்டு வந்தவரும் அவரே. அம்மன் கோவில் கட்ட பண வசூல் செய்து கொடுத்ததும் அவரே. எல்லாத்திலும் அவரோட பங்களிப்பு இருக்கும். கொத்தனாராக அவர் இருந்ததால் எல்லாத்தையும் இழுத்துப் போட்டுச் செய்வார்.


* அதென்ன கலை இலக்கியக் கலந்துரையாடல் அரசியல் என்றும் சேர்த்திருக்கலாமே. கலையிலும் இலக்கியமும் அரசியலோடு இணைந்ததுதானே.
* எங்க ஊரில் பெண்கள் எட்டாவது பத்தாவதுக்கு மேல் படிப்பதில்லை, கல்யாணம் பண்ணி வைத்து விடுவார்கள். எங்கப்பா என்னைப் படிக்க வைக்க முடிவு செய்தபோது எங்க மாமா ஒருவர் இதெல்லாம் தேவையில்லாத வேலை படிச்சி உங்களுக்கா சம்பாரிச்சிக் கொடுக்கப் போறா, போற இடத்துல புருசனுக்குச் சம்பாரிச்சிப் போடுவா என்று சொன்னபோது எம்மக எனக்குச் சம்பாரிச்சிப் போடவோ அவ புருசனுக்குச் சம்பாரிச்சிப் போடவோ நான் படிக்கவைக்கவில்லை, இந்தச் சமூகத்தில் அவள் தனித்து நிற்பதற்காகவே படிக்க வைக்கிறேன் என்று சொன்னார். அப்போது நான் அந்த இடத்தில் இருந்தேன். படிப்பறிவில்லாத, விவசாயம் பார்த்த ஒரு மனிதரின் சிந்தனை எவ்வளவு உயர்ந்தாக இருந்தது பாருங்கள்.
* கல்லூரியில் படிக்கும் போது ஒரு கவிதைப் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு வாங்கியதும் எனது கவிதையை எங்கள் துறையில் இருந்த கண் தெரியாத ஆசிரியரிடம் வாசித்துக் காட்டி, இது யார் எழுதிய கவிதை என எங்கள் துறைத் தலைவர் கேட்டபோது இது உமாவோட கவிதையின்னு அவர் சொன்னார், இப்படியான கருத்துக்களைத் தைரியமாக நாந்தான் எழுதுவேன் என்பதை அவர் உணர்ந்தது வைத்திருந்தது, என் மீதான அவரின் நம்பிக்கை ஆகியவற்றை அந்தப் பதில் காட்டிக் கொடுத்தது. அதன்பின் துறைத் தலைவர் அவர்கள் ஒரு பேப்பரில் வட்டத்தின் மேல் வட்டமாய் மூன்று வட்டம் வரைந்து நடுவில் ஒரு புள்ளி வைத்து இது என்ன என என்னிடம் கேட்டபோது நான் விளக்கம் கொடுக்க, இது சாதி, மதம், சமூகம் என வட்டங்கள், இந்தப் புள்ளிதான் நீ. இந்த வட்டங்களை உடைத்துக் கொண்டு வெளியில் வரவேண்டும் என்று சொன்னார். அவர்தான் எனக்கு குரு. எந்த இடத்திலும் அவரைப் பற்றிப் பேசாமல் நான் இருந்ததில்லை.
* சாதீய அடக்குமுறைகளை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே ரஞ்சித் திரைப்படங்கள் எடுத்தாலும் கருப்பாய் நாயகனைக் காட்டி, வெள்ளைத் தோல் நாயகிகளை வைப்பது ஏன்..? இதுவும் ஒரு அரசியல்தானே என்ற கேள்விக்கு இங்கே இருக்கும் சமுதாய ஏற்றத்தாழ்வுகளை உடைக்கவும் சாதீய அடக்குமுறைகளைத் தகர்த்தெறியவும்தான் அவர் படம் எடுக்கிறார். அதை பொதுவில் சொல்லவும் செய்கிறார். இது குறித்து விரிவான விளக்கம் வேண்டுமென்றால் ரஞ்சித்திடம்தான் கேட்கவேண்டும்.
* வீரத் துரந்தாரா என்றால் என்ன என்று கேட்டவரிடமே அடுத்த வரியில் வரும் சமர் வீரனேக்குப் பொருள் தெரியுமா உங்களுக்கு எனக் கேட்டு, வீரத் துரந்தரா என்பது நானே உருவாக்கிய வார்த்தைதான்... அவன் அவனுக்காக இல்லாமல் ஊருக்காக, மற்றவர்களுக்காகத்த்தான் இங்கே போர் புரிகிறான் என்பதற்கான வார்த்தைதான் அது. இந்த வார்த்தைக்கு அர்த்தம் இருக்கா என ரஞ்சித்தே என்னிடம் கேட்டிருக்கிறார். இப்படியான வார்த்தைகளை நாம் உருவாக்க வேண்டும்.
* வீரத் துரந்தராவில் நான் மெல்லின 'ர'தான் போட்டிருப்பேன். ஆனால் பல இடங்களில் அதை வல்லின 'ற'வாகத்தான் எழுதுகிறார்கள். நான் பேட்டிகளில் எல்லாம் சொன்னாலும் மாற்றிக் கொள்ள மாட்டேன் என்கிறார்கள்.
* நான் ரஜினியின் தீவிர ரசிகன், இங்கிருக்கும் எல்லாரும் ரஜினி ரசிகர்கள்தான் - அதை நீங்க எப்படி சார் முடிவு பண்ணுனீங்க, நானெல்லாம் இல்லை - என்று சொல்லிக் கேட்கப்பட்ட கேள்விக்கு நான் ரஜினிக்குப் பாட்டெழுதவில்லை கபாலிக்கு, காலாவுக்குத்தான் நான் பாட்டு எழுதினேன். அந்த நேரத்தில் நான் குமுதவல்லியாக, ஜரீனாவாக மாறித்தான் எழுதினேன். ரஜினிக்கு எழுதுவதாய் நினைத்திருந்தால் இப்படி ஒரு பாடல் வந்திருக்குமா தெரியாது.
* இன்று தமிழ் திரையுலகில் பெண் கவிஞர்கள் ரொம்பவே குறைவு.
* தாபம் எனக்கு ரொம்பப் பிடித்த வார்த்தை, மெட்ராஸ் படத்தில் நான் நீ நாம் பாடலில் தாப பூ என்ற வார்த்தையைப் போட்டிருந்தேன். அப்படி ஒரு பூ இருக்கிறதா என்ற கேள்வி எழுத்தது. காமத்தைக், காதலைச் சொல்ல இதைவிட அழகான வார்த்தை வேறு என்ன இருக்கிறது.
* நான் என் பிள்ளைகளுக்கு பாடத்தை நடத்தமாட்டேன். வாழ்க்கையில் எப்படித் தடைகளை உடைத்து வெளிவர வேண்டுமெனத்தான் சொல்லிக் கொடுப்பேன். மதிப்பெண் தேவையில்லை, இந்தச் சமூகத்தின் சுவர்களை உடைத்தெறிந்து வெளியில் வந்து தங்கள் திறமைகளை நிரூபிக்க வேண்டியதன் அவசியத்தை அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அது போதும் வாழ்க்கைக்கு.
* நானூறு பிள்ளைகள் மத்தியில் ஆசிரியையாய் நின்று பாடம் நடத்துவதே எனக்கு மகிழ்வு, எனது விருப்பமும் அதுவே என்றாலும் நாலு கோடிப் பேருக்கு என் தமிழை, நான் சொல்ல நினைத்ததைக் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற விருப்பம், அதனால் கிடைக்கும் புகழ் என எல்லாமே எனக்குள்ளும் இருக்கும்தானே.
* தான் எழுதிய ஒரு அழகான கவிதையை வாசித்து அதன் இறுதியில் வரும் 'கற்பழிப்பு' என்ற வார்த்தை சரியானது அல்லவே எனக் கேள்வி கேட்டவருக்கு விளக்கமாய் கற்பு என்பது வார்த்தை தவறாமைதான். அதை நாம்தான் பெண்களுக்கானது என மாற்றி வைத்திருக்கிறோம். கற்பை இரு பாலருக்கும் பொதுவில் வைப்போம். இதில் ஆண் பெண் எனப் பால் வேறுபாடு பார்ப்பதைவிட, இருவருக்கும் பொதுவானது என வைத்துக் கொள்ளலாம். அந்த இருவர் ஆணோ, பெண்ணோ, திருநரோ யாராகவோ இருக்கட்டும்.
* சினிமாவில் தாமரை, நீங்கள் என விரல்விட்டு எண்ணக் கூடிய எண்ணிக்கையில்தான் கவிஞர்கள் இருக்கிறார்கள் என்றாலும் சங்க காலத்தில் நாற்பதுக்கும் மேற்பட்ட பெண் கவிஞர்கள் இருந்திருக்கிறார்களே என்ற கேள்விக்கு சங்க காலக் கவிஞர்கள், அதியமான் - தொண்டைமான் போரை நிறுத்திய ஔவையார், பல ஔவையார்கள் இருப்பது, கன்னட பெண் கவிஞர், திரைப்படத்தில் முதன்முதலில் புரட்சிகர வரிகளை எழுதிய இஸ்லாமிய பெண் கவிஞர், தமிழகத்தில் பதினைந்தாம் பதினேழாம் நூற்றாண்டுகளில் இருந்த பெண் கவிஞர்கள், அவர்கள் எழுதிய புரட்சிகர பாடல்கள் என விளக்கிப் பதில் அளித்தார்.


இப்படியாக இன்னும் நிறைய, நிறைவாகப் பேசிக் கொண்டே போனார். இறுதியாகத் திரைப்படப் பாடலாசியராக இருக்கும் நீங்க படத்தை இயக்கவோ, தயாரிக்கவோ, அல்லது அரசியலுக்கு வரவோ செய்வீர்களா என்ற கேள்விக்கு சிரித்தபடி பூசி மெழுகினாற்போல் ஒரு பதில் சொல்லித் தப்பிக் கொண்டார் என்றாலும் அதன் பின் நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது என்னையப் பார்த்து ஏங்க அப்படி ஒரு கேள்வி கேட்டீர்கள் எனப் பிலாலிடம் கேட்டுச் சிரிக்க, அவரோ அதுதானே நடமுறை என ஆரம்பித்து கொஞ்சம் விளக்கவும் செய்தார்.
பேராசிரியை உமாதேவி ரொம்ப இயல்பாகப் பேசினார். ஐந்து புத்தகம் போட்டிருக்கீங்களா...? என வியப்போடு என்னிடம் கேட்டுக் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தார்.
நினைவுப்பரிசுகள், வாத்தியார் புத்தகம், பொன்னாடை என பாலாஜி அண்ணன் பேராசிரியைக்குச் சிறப்புச் செய்தார். வாத்தியாரை எழுதியவன் என்ற முறையில் நானும் மேடையில் இருந்தேன்.
பாலாஜி அண்ணன் நன்றி கூறினார்.
தனது வீட்டில் தங்கியிருந்தவரை விழாவுக்கு அழைத்து வந்திருந்த கவிதா, தனியொருவராய் போராட்ட வாழ்க்கையில் முன்னேற்றப் பாதையின் உச்சத்தில் இருப்பது மகிழ்ச்சி. எங்களைப் பார்த்ததில் அவருக்கும் பெரும் சந்தோசம். ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தார்.
அளவான சிற்றுண்டியை முடித்துவிட்டு பேராசிரியை உமாதேவியுடன் போட்டோக்கள் எடுத்துக் கொண்டோம். வரலாறு முக்கியம்ல்ல.
தான் கேட்ட பாரதி குறித்தான் கேள்விக்குச் சரியான விளக்கம் கேட்டுப் பெற்று விடும் முனைப்பில் அசோக் அண்ணன் சிற்றுண்டி சாப்பிட்டபோதும் பேராசிரியருடன் அளவளாவிக் கொண்டிருந்தார்.
பல வருடங்களுக்குப் பின் பலரைச் சந்திக்க முடிந்தது.
நல்லதொரு நிகழ்வு. நிறைய விசயங்களைச் சலிப்பில்லாமல் பேசினார்.
எப்பவும் சிறப்பு விருந்தினர் வந்து மேடையில் அமர்ந்து பேசுவார், நாங்களும் வந்து பார்த்துட்டுப் போயிருவோம். இது கலந்துரையாடல் பாணி என்பதால் எங்களுக்கு என்ன தேவையோ அதை உங்களிடம் இருந்து பெற்றுக் கொண்டோம் எனப் பிலால் சொன்னபோது இப்படி ஒரு நிகழ்வு எனக்கும் நிகழ்ந்ததில்லை. பேட்டி கொடுத்திருக்கிறேன், இப்படிக் கேள்விகளால் திக்குமுக்காடவைத்து சிறப்பான நிகழ்வாய் நகர்த்திச் சென்றுவிட்டீர்கள், மறக்கமுடியாத நிகழ்ச்சி என்றார்.
நிகழ்வை அமீரக வலையொளி யூடிப் சேனல் வீடியோ எடுத்தார்கள். நிகழ்வு முடிந்ததும் பேட்டியும் எடுக்க ஆரம்பித்தார்கள்.
விழா மேடையில் பேராசிரியையுடன் அமர்ந்திருந்த GP புரொடக்சன்ஸ் உரிமையாளர் திரு. கோகுல்பிரசாத் அவர்களை ஆரம்பத்தில் பேசச் சொல்லியிருக்கலாம், அல்லது அவரை மேடையில் ஏற்றாமல் இருந்திருக்கலாம் எனத் தோன்றியது. (இது எனக்கு மட்டும்தான்)
நாங்கள் பஞ்ச பாண்டவர்களாய் - பாலாஜி அண்ணன், பிலால், ராஜாராம் (அ / இ எதுவேணுமின்னாலும் முன்னால போட்டுக்கங்க ராஜா), பால்கரசு (இவரு நேற்று மௌனவிரதம்) , நான் - எப்பவும் போல், அதாவது வழக்கம் போல் அங்கிருந்து கிளம்பி ஒரு ஹோட்டலுக்குப் போய் இட்லி சாப்பிட்டபடி நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.
அதன்பின் கிளம்பி இளையராஜாவின் பாடல்களைக் கேட்டபடி பயணித்து இரவு 1.30 மணிக்கு அறைக்குத் திரும்பினோம்.
நல்ல நிகழ்வு. எங்களுக்கும் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி.
திரைப்படப் பாடலாசிரியர் என்று எழுதாமல் பேராசிரியர் என்றே எழுதியிருக்கிறானே என்று வாசித்து முடித்தபோது தோன்றியிருந்தால் பாடலாசிரியர் என்பதைத் தாண்டி, அவர் படித்த படிப்பின் பின்னணிதான் அவர் பேசிய பேச்சில் பெரும்பங்கு வகித்தது. ஒரு தமிழ் பேராசிரியை என்பதை அவரின் விளக்கங்கள் ஒவ்வொரு முறையும் சொல்லிக் கொண்டேயிருந்தது. என்னைப் பொறுத்தவரை பேராசிரியர் என்று சொல்வதையே மகிழ்வாக நினைக்கிறேன்.
நிகழ்வை ஏற்பாடு செய்த மூவருக்கும் மீண்டும் நன்றியும் வாழ்த்துகளும்.
-பரிவை சே.குமார்.

1 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உரையாடல் மிகவும் சிறப்பு...