மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 31 ஜூலை, 2023

மனசு பேசுகிறது : ஷார்ஜாவில் நிறைவான சந்திப்புக்கள்

முதல் சந்திப்பு :

ல்லூரியில் படிக்கும் போது எழுத ஆரம்பித்து, இன்று வரை எப்படியோ தொடர்ந்து கொண்டிருக்க்கிறேன் என்றாலும் படிக்கும் போது, சென்னையில் வேலை பார்த்த போது, அமீரகம் வந்த பின் என எழுத்தில் நிறைய மாற்றங்கள் வந்து இப்போது எழுத்தில் என்னளவில் நிறையவே மாற்றிக் கொண்டு, வாழ்வியலைத் தொடர்ந்து பதிவு செய்ய வேண்டுமென எழுதிக் கொண்டிருக்கிறேன்.

இந்த நாலைந்து மாதத்தில் என் எழுத்துக் குறித்தான நட்புக்களின் பார்வை எனக்கு மகிழ்வையும் தொடர்ந்து எழுதுவதற்கான தெம்பையும் கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஒரு எழுத்தை வாசித்து விட்டு இது நித்யாகுமார் எழுத்து மாதிரியே இருக்கு', 'வாசித்த போது எனக்கு என் வாழ்க்கை நியாபகம் வந்தது' , 'கண் கலங்கிவிட்டது', 'இந்த வாழ்க்கையை நானும் வாழ்ந்திருக்கிறேன்', 'உங்க எழுத்து நடை ஈர்க்கிறது' என்றெல்லாம் சொல்வது மகிழ்ச்சியையும் அதே நேரத்தில் இப்படியான எழுத்தை தொடர்ந்து எழுத வேண்டுமே என்ற பயத்தையும் கொடுக்கிறது.
இதில் நேற்றைக்கு நாங்கள் சந்திக்கச் சென்ற சகோதரர் ரவிச்சந்திரன் சற்றே வித்தியாசமானவராய்... எங்க ராஜாராமின் நண்பர் என்பது சில வாரங்களுக்கு முன் தெரியும் என்றாலும் அவரின் பக்கத்து வீட்டில், சிறு வயது முதல் தோளில் கைபோட்டுத் திரிந்த தோழராய் இருப்பவர் என்பதெல்லாம் நேற்றைய சந்திப்பின் பின் தெரிந்து கொண்டேன் இதெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திதான் என்றாலும் என்னைப் பற்றி விசாரித்துக் கொண்டே இருப்பவர் என்பதை சில வாரம் முன்தான் அறிந்தேன்.
ஆம்... நான் வலைப்பூவில் எழுத ஆரம்பித்தது முதல் தொடர்ந்து வாசிக்கிறார் என்பதுடன் எனது கதைகளைச் சிலாகிப்பதுடன், கடந்த வருட என் மோசமான பயணத்தில் இப்போது நன்றாக இருக்கிறேனா..? வேலை என்னாச்சு..? என்றெல்லாம் கேட்டுக் கொண்டே இருக்கும் எனது எழுத்தின் வாசகர் என்பது ராஜாராம் சொன்னது என்றாலும் என்னால் அவரைச் சந்தித்தபின் வாசகர் என்றெல்லாம் எடுத்துக் கொள்ள முடியவில்லை, என் நட்பு வட்டத்தில் ராஜாராமால் கிடைத்த நேதாஜியோடு இவரும் எனது சகோதரராய்.
நேற்றைய தினம் அவரைச் சந்திப்பதற்காகவே நாங்கள் - ஆமாமா அதே பால்கரசு, ராஜாராம், நான் - ஷார்ஜாவுக்குப் போனோம். எங்களைப் பார்த்ததில் அவருக்கு ரொம்பவே மகிழ்ச்சி. நிறையப் பேசினார்... வேரும் விழுதுகளும் நாவல் வேண்டுமெனச் சொன்னவருக்குக் கொடுக்க என்னிடம் என் புத்தகங்கள், குறிப்பாக வேரும் விழுதுகளும் இல்லை. எனவே முதல் சிறுகதைத் தொகுப்பான 'எதிர்சேவை'யைக் கொடுத்து மகிழ்ந்தோம்.
'அதென்ன வேரும் விழுதுகளும்தான் வேணுமாக்கும்..?' என்ற ராஜாவின் கேள்விக்கு 'அது நம்ம வாழ்வியலை, நம்ம வட்டார வழக்கில் சொல்லியிருக்கும் நாவல்... அதுதான் வேணும்' என்று சொன்னார். இதைவிட எனக்கு என்ன வேணும்..? நேற்று மாலையே பாலாஜி அண்ணனின் கேலக்ஸி வழி புத்தகம் வாங்க, பதிவும் செய்து கொண்டுவிட்டார்.
நேற்று மதியம் பிரியாணி, இன்று காலை
அருமையான
சிற்றுண்டி என எங்களைக் கவனித்து மகிழ்ந்தார். அடிக்கடி வாங்க என்றார். நாங்கள் இனி ஷார்ஜா போகும் போதெல்லாம் அவரைச் சந்திக்கத் தவறமாட்டோம் என்பதை அவரின் அன்பு எங்களுக்குள் விதைத்துவிட்டது.
அவரைச் சந்தித்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. என் வாசகர் என அவர் சொன்னாலும் இன்னுமொரு சகோதரன் என்றே நான் சொல்வேன்.
அருமையான சந்திப்பு... நிறைவான பேச்சு... நல்லதொரு படமும் பார்த்தோம்.


***
ரண்டாம் சந்திப்பு :

'டேய் புரோ ஆக்டிவ் எக்செல் வாங்கடா... பேசிக்கிட்டு இருந்துட்டுப் போலாம். நீங்கதான் காபி வாங்கித் தரமாட்டியங்கிறதை கொழுந்தியாக்கக்கிட்ட சொல்லியிருக்கேன். நான் வாங்கித் தாரேன்டா' என்றதும் 'அப்புடியே அரசியல்வாதியையும் அரசியல் கூட்டம் எதுவுமில்லைன்னா வரச்சொல்லுங்கடா' என்ற பாலாஜி அண்ணனின் அன்பான அழைப்புக்கு ரவியையும் கிளப்பிக்கொண்டு கிளம்பினோம்.
பிலாலும் அங்கு வந்து இருந்தார். பால்கரசு சமீபத்தில் எழுதிய 'அரிச்சந்திரா' கதையை பிச்சிப் பிரிச்சு பிலால் தனது விமர்சனத்தை வைத்தார். கந்தசாமி இதுக்கெல்லாமாய்யா சாவான்... அவன் என்ன அம்புட்டு மானஸ்தனா..? கதை சிறப்புத்தான்... அருமைதான், ஆனா அவன் சாகுறதுக்கான காரணம் இன்னும் அழுத்தமா இருக்க வேண்டாமா..? என்றெல்லாம் கேள்விகளை அடுக்க, எழுத்தாளர் பால்கரசு எழுத்தாளர் மிடுக்குடனே பதிலளித்தார்.
பிலாலும் விடுவதாக இல்லை.... சுப்பிரமணியபுரம் படம் பாத்தியளா..? நாயகியின் அப்பா சாவாரே... அதுக்கான காரணம் சரியாச் சொல்லப்பட்டிருக்கும்...? நீங்களும் அதைச் சரியாச் செய்திருக்கணும்... அதான் பெருமாள் பின்னாலயே ஊர் போயிருச்சுல்ல... அவனுங்களே அவரைக் கேலி பண்றமாதிரி எதாவது சேர்த்து ஆளைக் கொன்னிருக்கலாம் என்று சொல்ல, இப்பவும் எழுத்தாளர் எழுத்தாளராகவே அவர் எங்க செத்தார்...? ஊர் எங்கே அவர் பின்னாடி போச்சு...? என்றதும் 'யோவ் ஊரு போச்சுய்யா... அவரு சாவமா அய்யய்யோன்னு கத்துது அந்த வெள்ளையம்மா' எனப் பிலால் தூக்கி அடிக்க, அதுவரை இதையெல்லாம் வீடியோவாக பதிவு செய்து கொண்டிருந்த பாலாஜி அண்ணன் - இதை அவரின் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் - யோவ் அதான் சொல்றாருல்ல, அந்த ஆளைச் செருப்பால அடிச்சி நாண்டுக்கிட்டுச் சாக வச்சிடுய்யா' என்றதும் 'அதை பெருமாள்தானே செய்யணும்..' என என் மனசுக்குள் தோன்றியதைச் சொல்ல நினைத்தால் 'யோவ் எழுத்தாளா நீ சத்த சும்மாயிருடா'ன்னு திட்டுவாரோன்னு அதைச் சொல்லல.
பால்கரசும், ரவியும் கேலக்ஸியில் தங்களுக்கு வேண்டிய புத்தகங்களை பாலாஜி அண்ணனும் சொன்னார்கள்.
மிகச் சிறப்பான பேச்சுக்குப் பின் எப்பவும் போல் பாலாஜி அண்ணன் 'நல்லா சாப்பிடுங்கடா' எனச் சொல்லி நல்லதொரு இரவு உணவைக் கொடுக்க, மகிழ்வான சந்திப்பின் இனிமையைச் சுமந்தபடி ரவியின் வீட்டுக்கு வந்து நீண்ட நேர உரையாடலுடன், ஒரு ஆங்கிலப் படத்தையும் பார்த்தபடி உறங்கிப்போனோம்.
நல்லதொரு சந்திப்பு... நிறைவான பேச்சு...
பிலால் சொன்ன கருத்துக்களை பால்கரசு உள்வாங்கியிருப்பார் என்று நினைக்கிறேன். உவமைகள் நல்லாயிருக்குய்யா என்று சொல்வதை ஏற்றுக் கொள்ளும் மனது இது போன்ற கருத்துக்களையும் ஏற்றுக் கொண்டு வரும் கதைகளை எழுத ஆரம்பித்தால் இன்னும் சிறப்பான கதைகள் அவரிடமிருந்து வரும் என்று நம்புகிறேன்.


***
மூன்றாம் சந்திப்பு :

காலையில் அன்வர் மெட்ராஸ் என்னும் திருச்சிக்காரரின் ஓட்டலில்
அருமையான
காலைச் சிற்றுண்டியைச் சாப்பிட்டு விட்டு ரவியிடம் சொல்லிக் கொண்டு, பிலாலுக்குப் போன் செய்ய, 'அட இங்கிட்டு ஒரு எட்டு வந்துட்டுப் போங்கய்யா' எனச் சொல்லி அவர் வீட்டுக்கு வழியையும் அனுப்பி வைக்க, பயணித்து அவர் வீட்டை அடைந்தோம்.
கீழே வந்து எங்களை அழைத்துச் சென்று ஊரில் இருந்து வந்த கடலச்சு, முருக்கு, காராசேவு மற்றும் ரொட்டியுடன் அருமையானதொரு டீயையும் கொடுத்து எங்களை உபசரிக்க, அதன் பின் நால்வரும் பாயில் அமர்ந்தோம். அவர் பேசினார்... நாங்கள் கேட்டுக் கொண்டிருந்தோம்.
எத்தனை செய்திகள்... அத்தனையும் சிறப்பு.
திருமணம் பற்றிய விபரங்கள், வரதட்சணை வாங்குவதில் எப்படி தான் சார்ந்த சமூகம் மாறியிருக்கிறது, எங்கள் சமூகத்தின் மாமச்சீர் செய்முறைகள், நகை வாங்கப் போன விபரம், மதுரையில் ஆட்டோக்காரனிடம் போட்ட சண்டை, இறப்புக்கு ஏன் போக வேண்டும் என்ற தகவல்கள்... கூட்டுக் குடும்பம் எவ்வளவு சந்தோசத்தைக் கொடுக்கும், எப்படி வாழ்ந்தோம், எப்படி வளர்ந்தோம், இப்போது எப்படி இருக்கிறோம், பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும், அவர்களுக்கு இந்த உலகத்தை எப்படிப் புரிய வைக்க வேண்டும் என விரிவான பேச்சு, விளக்கமான பேச்சு என எப்பவும் போல் அடித்து ஆடினார்.
பேச்சுக்கு இடையே நகைச்சுவையாய் தெறித்து விழும் பிலாலையும் பார்க்க முடிந்தது. இப்படித்தான் நாங்க வாழ்ந்தோம், வளர்ந்தோம் என்று சொன்னார். நானும் அதைத்தான் சொல்கிறேன், நாங்கள் தங்கத் தட்டில் சாப்பிட்டோம் என உதார் விடுவதைவிட இப்படித்தாய்யா வாழ்ந்தோம், இதுதான் நான் எனச் சொல்வது சிறப்பு. அதைத்தான் நான் எப்போதும் விரும்புவேன். பிலால் அப்படியானதொரு வாழ்க்கையை வாழ்ந்ததை விரிவாகப் பகிர்ந்து கொண்டார்.
விடுமுறை நாட்களில் மாடு மேய்த்தேன்... கஞ்சியை விரும்பிச் சாப்பிடுவேன் என்று சொன்னால் நான் முன்பிருந்த அறை நண்பர் அதெல்லாம் எதுக்கு இங்க சொல்றீங்க. கஞ்சியே சாப்பிட்டதில்லைன்னு சொல்லுங்க என்பார். எனக்கு அப்படிப் பேசுவதில் எப்போதும் விருப்பம் இருந்ததில்லை. எங்க ஊர் சிறிய கிராமம், நாங்கள் ஏழு பேர், ரேசன் அரியும், கேப்பைக் கூழும், கூடவே எங்கம்மாவும்தான் எங்களை இந்த நிலமைக்கும், எங்க அண்ணனே என்னையும் என் தம்பியையும் பட்டாதாரிகள் என்ற நிலைக்கும் கொண்டு வந்தார்கள் என்பதை நான் எல்லா இடத்திலும் பதிவு செய்து கொண்டேதான் இருப்பான். அப்படியான வாழ்க்கையை, வாழ்ந்த விதத்தை, பொருளுக்காக மளிகைக் கடையில் போய் நின்றதை - இன்று அதே கடைக்கு அவரின் அக்கா முதலாளி என்று சொன்னபோது மகிழ்வாக இருந்தது - எல்லாம் அவர் சொன்னது சிறப்பு.
அறிஞர் அண்ணாவின் அறிவாலயம் பற்றியும் அதைத் திறந்து வைத்தவரைப் பற்றியும் பேசியதுடன் எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் கதையையும் அதில் அவர் ஒரு ஆப்கான் வீரன் ஒண்ணறை ரொட்டி சாப்பிடுவதைப் பார்த்து 'இவன் உண்மையான போராளியாக இருப்பான் போல' என எழுதியதையும் சொல்லி, காபூல் திராட்சையைப் பற்றியும் அதைச் சொல்லும் போது முத்துலிங்கள் அவர்கள், ரவீந்திரநாத் தாகூர் எழுதிய திராட்சை சிறுகதையில் அந்தச் சிறுமி முதியவருக்கு திராட்சையைக் கொடுத்தது போல் எழுதியிருக்கிறார் என்றும், இப்ப நான் முத்துலிங்கத்தை வைத்துவிட்டு தாகூரின் கதையைத் தேடி வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறேன் என எழுத்து, பேச்சுக்குள் பயணித்தார்.
இறுதியாக எதிர்மறை மனிதர்களைப் பற்றிய பேச்சு வந்தபோது அத்தனை ஆராவாரமும் ஓய்ந்தது போல் இருந்தது. பின் மீண்டும் சில கதைகளைப் பேச, கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் சிறப்பான ஒரு சந்திப்பாக மாறியது.
என் வீட்டுக்கு வந்த முதல் விருந்தாளிங்களே நீங்கதான்... இருங்கய்யா மத்தியானம் சாப்பிட்டுப் போகலாம் என்றவரிடம் எங்களுக்கும் வேலை இருக்கு எனச் சொல்லிக் கிளம்ப, கார் வரை வந்து மகிழ்வாக வழி அனுப்பி வைத்தார்.
எங்களுக்குச் சிறப்பான சந்திப்பு எனபதைவிட நிறைய விசயங்களை பிலாலிடமிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது.
சிறப்பான சந்திப்பு பிலால்.


மொத்தத்தில் ஷார்ஜா பயணம் மன மகிழ்வைக் கொடுத்த சந்திப்புகளையும், தரமான நிகழ்வுகளையும் கொடுத்தது.

-பரிவை சே.குமார்.

1 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நட்பு சிறக்கட்டும்... தொடரட்டும்...