மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 24 ஜூலை, 2023

மனசு பேசுகிறது 'மடை மாற்றுதல்'

ண்பர்கள் அல்லது உறவினர்கள் கூடி ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி தீவிரமாகப் பேசிக் கொண்டிருக்கும் போது அதற்குச் சம்பந்தமில்லாத ஒரு விசயத்தை இடையில் ஆரம்பித்து வைத்து பேச்சின் போக்கையே மாற்றுவதைச் சிலர் வாடிக்கையாக வைத்திருப்பதைப் பார்த்திருப்போம். அதைத்தான் நாம் 'மடை மாற்றுதல்' என்று சொல்வோம்.

சமீபமாக நண்பர்களுடனான பேச்சுக்களின் போதோ, வாட்ஸப் குழுமங்களில் ஏதாவதொன்றைப் பகிரும்போதோ மொக்கையாய் ஏதாவதொன்றைச் சொல்லி அல்லது எழுதி அதற்குச் சம்பந்தமே இல்லாமல் பேசியோ எழுதியோ சொல்ல வந்ததைச் சொல்ல விடாமல், பகிர்ந்ததை மற்றவர்கள் வாசிக்க விடாமல் மொக்கைக்கு மணிக்கணக்கில் மொக்கைப் போடுவதைப் பார்க்க முடிகிறது. 

இந்த 'மடை மாற்றுதல்' என்ற வார்த்தையைக் கிராமங்களில், விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்கள் நன்றாகவே அறிந்திருப்பார்கள். கண்மாயில் இருந்து மடை திறந்து, வாய்க்கால் வழி ஓடி வரும் தண்ணீரை வயலுக்குத் திருப்ப, வரப்பில் ஒரு திறப்பு வைத்திருப்பார்கள். அதற்குப் பெயர் வாமடை - வாகமடை - என்பார்கள். 

வாய்க்கால் வழி விரைந்தோடி வரும் தண்ணீரைத் தடுத்து வயலுக்குத் திருப்பிவிடுவார்கள். அந்த வயலுக்குப் பாய்ந்து முடித்ததும் அடுத்துப் பாய வேண்டிய வயலுக்குத் திருப்பி விடுவார்கள். இதைத்தான் நாங்கள் 'வாமடை மாற்றுதல்' என்று சொல்வோம்.

அடித்துப் பெய்யும் மழையின் போது 'அப்பா நம்ம வயல்ல வாமடை தொறந்து கிடந்துச்சு... இங்கயிருந்து போற தண்ணி பூராம் வயலுக்குள்ள போயிரும். அதை அடச்சி விட்டுட்டு வாயேன்' என்று சொல்ல, குடையோ, கொங்காணியோ அல்லது நனைந்து கொண்டோ போய் அடைத்து விட்டு வந்த அனுபவம் கொஞ்சமாவது எனக்கும் உண்டு.

விவசாயத்தில் பயன்படுத்திய மடை மாற்றுதல் என்பது விளைச்சலுக்கானது, ஆனால் இப்போது இந்தப் பதிவை அல்லது எழுத்தை யாரும் வாசிக்கக் கூடாது, அவன் பேசுவதை யாரும் கேட்கக் கூடாது என்பதற்காகவே இது பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு மோசமான மனநிலை. இதில் நான் எப்படி மடை மாற்றினேன் பார்த்தாயா என மார்தட்டிக் கொள்வதில் என்ன சந்தோசம் இருந்து விடப்போகிறது..?

மடை மாற்றுதலை விட நாங்க பள்ளியில் படிக்கும் போது மழை பெய்ததும் அடுத்த ஊர் கண்மாய்க்குப் போகும் குளக்காலை அடைத்து எங்க கண்மாய்க்குத் தண்ணீரைத் திருப்பி விடுவதும், கண்மாய் நிறைந்தால் தண்ணீர் வெளியேறும் சறுக்கையில் மணல் மூடைகளைப் போட்டு அடைத்து கொஞ்சம் கூடுதலாகக் கண்மாயில் தண்ணீர் தேக்க நினைப்பதும் எனத் திரிவோம். வெயிலோடு விளையாடித் திரியும் நாங்கள் மழையோடும் அப்படித்தான் திரிவோம். கண்மாயில் தண்ணீரை நிறைத்து, இந்த வருடம் விவசாயத்துக்குத் தண்ணீர் பற்றாக்குறை வராது என்ற நிலையில் நீர் நிறைந்த கண்மாயில் ஆட்டம் போட்டு மகிழ்வது அப்போது எங்களுக்கு இனம்புரியாத ஆனந்தம்.

அப்படி ஒரு வருடம் கண்மாயில் தண்ணீரை நிரப்பிய போது புதிதாகக் கட்டிய மடையில் எந்தப் பக்கம் தண்ணீர் போகிறது எனத் தெரியாமலே வெளியாகி, ஒரு வயலுக்குப் பாயும் அளவுக்கான தண்ணீர் வீணாக வாய்க்கால் வழி ஓடிக் கொண்டிருந்தது. ஊரார் அதை அடைக்க எல்லா முயற்சியும் செய்து பார்த்தும் பலனில்லை, தண்ணீர் வெளியாவது நின்றபாடில்லை. முள்ளுக்குள்ளயும் கல்லுக்குள்ளயும் மழையிலயும் கிடந்து நிரப்பிய தண்ணீர் வீணாவதைப் பொறுக்க முடியாமல் ஒரு கட்டத்தில் இன்று அடைத்துப் பார்க்கலாமெனப் போனவர்கள் கடப்பாறையை வைத்து  மடையை உடைத்து அடைத்தோம். அதுக்கப்புறம் அதை எப்படி உடைக்கலாம்ன்னு பிரச்சினை வந்து, அடுத்த முறை சிமிண்டையோ, மண்ணையோ திங்காமல் தண்ணீர் கசியாத நல்ல மடையாகக் கட்டப்பட்டது.

இந்தக் கதை இங்க எதுக்குன்னா 'மடை மாற்றிட்டோம்' என மார் தட்டிக் கொள்ளும் நண்பர்களுக்கு நாங்க அந்த மடையையே உடைத்தவர்கள் இந்த மடை மாற்றத்தால் எங்களுக்கு எந்தப் பாதிப்பும் இருக்கப் போவதில்லை என்பதைச் சொல்லிக் கொள்ளத்தான்.

எந்த எழுத்தும் பேச்சும் சென்று சேர வேண்டிய இடங்களுக்கு யார் தடுத்தாலும் எப்படியாவது சென்று சேரும், அதைத் தடுக்க யாராலும் முடியாது என்பதை உணருங்கள். உங்கள் மடை மாற்றலின் கேவலம் புரிய வரும்.

மடை மாற்றிட்டோம் என்று மகிழாதீர்கள்... உங்கள் பயிர் வளர்ச்சியைத்தான் நீங்கள் தடுத்துக் கொள்கிறீர்கள். தண்ணீர் இல்லாமல் அது ஒருநாள் 'சாவி' (காய்ந்து) ஆகிப் போய் விடும்.

-பரிவை சே.குமார்

2 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

சுவாரஸ்யமான நினைவுகள், தகவல்கள்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமையாக சொன்னீர்கள் குமார்...