மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 5 ஜூலை, 2023

யாவரும்.காமில் 'பொய்க்கால் குதிரைகள்'

ஜூன்-ஜூலை யாவரும்.காம் இணைய இதழில் எனது சிறுகதை ஒன்று வெளியாகியிருக்கிறது. அதுவும் அடுத்தடுத்த இதழ்களில் தொடர்ந்து சிறுகதைக்கு வாய்ப்பளித்திருப்பது மகிழ்ச்சி. யாவரும் இதழாசிரியர் திரு. ஜீவகரிகாலன் அவர்களுக்கு நன்றி.

'வாத்தியார்' வாசித்த நண்பர்கள் தொடர்ந்து இதேபோல் கிராமத்துக் கதைகளை எழுதுங்கள் என்றும்... கிராமங்கள் தொலைத்த, நாம் மறந்த பொருட்களை, திருவிழாக்களை, மரம் - செடி - கொடி - பறவைகளை, வார்த்தைகளை, உறவுகளைப் பற்றி எழுது எனச் சொல்லி வருகிறார்கள். இதுவே வாத்தியாருக்கு கிடைத்த வெற்றி எனலாம்.

அப்படித்தான் இந்தக் கதையிலும் தொலைந்து போன கலைகளைப் பற்றியும் நம்மைத் தொலைத்துக் கொண்டிருக்கும் செல்போன் பற்றியும் எழுதியிருக்கிறேன். வாசித்து உங்கள் கருத்தை அங்கும், இங்கும் சொன்னால் மகிழ்வேன். நன்றி.

பொய்க்கால் குதிரைகள்....

முத்தாளம்மன் கோவில் திருவிழா.

காயத்ரியின் வற்புறுத்தலுக்காக வேண்டா வெறுப்பாகத்தான் வந்திருந்தேன். இப்போதெல்லாம் வேலை முடிந்து வந்ததும் சிறு குளியல், நரசுஸ் பொடி மணக்கும் காபியுடன் கொறிக்க மிக்சர் அல்லது கடலை, அதன்பின் போனில் முகநூல், வாட்ஸப், ரீல்ஸ் எனப் பொழுதைக் கழிக்கவே மனம் விரும்புகிறது என்பதால் அலுவலகத்திலிருந்து கூடடைந்த பின் வெளியில் எங்கும் செல்வதில்லை. போன் என்னைக் கெடுத்துவிட்டது என நீங்கள் நினைக்கலாம் இன்னைக்கு உலகத்துல இருக்க அம்புட்டுப் பேரையும் இந்தப் போன்தான் கெடுத்து வைத்திருக்கிறது என்பதே உண்மை, ஏன் உங்களைக் கூட அது தன் கட்டுப்பாட்டுக்குள்தான் வைத்திருக்கும் என்பதில் எனக்குத் துளியேனும் சந்தேகமில்லை.

சின்ன வயதில் முத்தாளம்மன் கோவில் திருவிழா என்றால் அத்தனை மகிழ்ச்சியாக இருக்கும். செண்பகம் என்னைக் காதலிப்பதாய்ச் சொன்னதும் இந்த திருவிழாவில்தான், என்னோட மாமா மகனுக்கே கட்டி வச்சிட்டாங்க நான் என்ன செய்யட்டும் என சிறிதாய் கண்ணீர் சிந்திச் சென்றவள் இதுதான் என்னோட அத்தான் மலரவன் என அவளின் காக்கைக் கலர் கணவனை அறிமுகப்படுத்தியதும் இதே கோவில் திருவிழாவில்தான். அதன்பின் முத்தாளம்மன் மீது எனக்குத் தனிப்பட்ட விதத்தில் ஏற்பட்ட கோபத்தால் கோவிலுக்குச் செல்ல விரும்புவதில்லை. எப்பவும் ஏதாவதொரு காரணம் சொல்லித் தப்பி வந்தவன் இந்தமுறை வயித்துப் பிள்ளைக்காரி கூப்பிடுறா போயிட்டு வந்தாத்தான் என்ன எப்பப் பாரு இந்த போனை நோண்டிக்கிட்டு இருந்தா சீக்குத்தான் வரும் என அம்மா கத்தியதால் கிளம்பி வந்தேன்.

முன்பெல்லாம் இல்லாத அளவுக்கு இப்போது அருகில் தரிசாய் கிடந்த வயல்களில் கார், வண்டிகளை நிறுத்த சுத்தம் செய்து டியூப்லைட் கட்டி வைத்திருந்தார்கள். அங்கு காரை நிறுத்திவிட்டு இறங்கினோம். ஓரளவுக்குக் கூட்டம் இருந்தது.. மக்கள் நடமாட்டத்தின் காரணமாக அந்தப் பகுதி முழுவதும் தூசியாக இருந்தது. காயத்ரியின் வயிற்றில் யாரும் இடித்து விடாத வண்ணம் அவளைப் பாதுகாப்பாய் கூட்டிக் கொண்டு போனவன், ‘பாரு ஒரே தூசியா இருக்கு… நாளக்கி வந்திருக்கலாம் கொஞ்சம் கூட்டமில்லாமல் இருக்கும். இன்னைக்கு திருவிளக்குப் பூஜைங்கிறதால கூட்டம் அதிகமாத்தான் இருக்கும், இதுல வந்து உடம்புக்கு ஒத்துக்காமப் போச்சுன்னா என்ன பண்றது’ எனச் சத்தமாகச் சொன்னபோது ‘அதெல்லாம் ஒண்ணும் ஆகாது… நீங்க வாங்க’ என்றபடி நடந்தாள்.

‘செல்லாத்தா செல்ல மாரியாத்தா’ என எல்.ஆர்.ஈஸ்வரி ஒலிபெருக்கியில் அதிக சப்தமில்லாமல் பாடிக் கொண்டிருக்க, கோவில் வாசலை அடைந்தபோது கூட்டத்தில் சிலர் செல்லாத்தாவாக மாறி ஆடிக் கொண்டிருந்தார்கள்.

தொடர்ந்து வாசிக்க இங்கே சொடுக்குங்கள்... மனதில்பட்டதை அங்கும், இங்கும் சொல்லுங்கள். என் எழுத்தை மேம்படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும். நன்றி.

-பரிவை சே.குமார்.

7 எண்ணங்கள்:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மண் மணம் கமழும் கதைகளை எழுதும் உங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் குமார். பாராட்டுகளும் வாழ்த்துகளும்.... தொடர்ந்து பல வெற்றிச் சிகரங்களைத் தொட வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

திருவிழாவில் இருந்த உணர்வு வருகிறது...

Mohamed Alim சொன்னது…

திருவிழாவை நேரில் ரசித்ததில்லை... உங்கள் வார்த்தைகளில் கேட்டது நேரில் பார்த்த ரசனையை கொடுக்கின்றது...

எனது தளத்தை பார்வையிட

'பசி'பரமசிவம் சொன்னது…

மாறிவரும், மனிதர்களின் ரசனையை மிகச் சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறீர்கள்.

கதை சற்றே பெரியது என்றாலும் என்னளவில் சலிப்பு ஏற்படவில்லை.

கொஞ்சம் சுருக்கியிருந்தால் தேவலையோ என்றும் தோன்றுகிறது.

மனதைக் கவர்ந்த நல்ல கதை.

பாராட்டுகள் குமார்..

Jayakumar Chandrasekaran சொன்னது…

கதையில் மேலாண்மை பொன்னுசாமியின் நடை, போக்கு, மற்றும் தமிழ் வட்டார வழக்கு தெரிகிறது. ஆனால் புலம்பல் கொஞ்சம் திகட்டச் செய்கிறது. பேரம் கிடைத்தால் பொன்னுசாமியின் மதகதப்பு படித்துப் பாருங்கள்.

Jayakumar

ஸ்ரீராம். சொன்னது…

ரசித்து வாசித்தேன் குமார்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

என்னால் இப்போது எந்த வலைப்பூவும் வாசிக்க முடியாத சூழல் என்றாலும் தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்தும் உங்கள் அன்புக்கு நன்றி.

**

@ வெங்கட் நாகராஜ்

வணக்கம் அண்ணா...

தொடர்ந்து எழுதுவேன். நன்றிண்ணா.

**

@தனபாலன்

தங்கள் கருத்துக்கு நன்றி அண்ணா

**

@முத்துப்பேட்டை அலீம்

தங்கள் கருத்துக்கு நன்றி, தங்கள் தளத்தை வாசிக்கிறேன்.

**

@'பசி'பரமசிவம்

தங்களின் விரிவான கருத்துக்கு நன்றி ஐயா.

இந்த விசயத்தைப் பேச வேண்டும் என்ற போது கதை சற்றே நீளமாகத்தான் போகும், இதைச் சுருக்கினால் பேச வந்த விசயத்தை முழுவதுமாகப் பேசிய மனநிறைவு இருக்காது என்பது என் எண்ணம்.

தங்கள் மனம் கவர்ந்த கதையாக இருந்ததில் மகிழ்ச்சி.

நன்றி.

**

@ஜெயக்குமார் சந்திரசேகரன்

தங்களின் மனதில்பட்டதைச் சொன்ன கருத்துக்கு நன்றி ஐயா.

சொல்ல வந்ததைச் சொல்லியே ஆகவேண்டும் என்றபோது அது உண்மையான புலம்பலாய் இருக்கும் போது நீளமாக, அயற்சியாகத்தான் இருக்கும். இது சிலருக்குப் பிடிக்கும், சிலருக்குத் திகட்டலாய் இருக்கும். இதைச் சொல்ல சிலர் யோசிப்பார்கள். தாங்கள் மனதில் இருப்பதைச் சொன்னதில் மகிழ்ச்சி.

கதகதப்பு வாசித்தேன். நல்ல கதை, நன்றி ஐயா.

**

@ஸ்ரீராம்.

ரசித்து வாசித்ததற்கு நன்றி அண்ணா.

**