மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 28 அக்டோபர், 2021

பிக்பாஸ் - 5 : 7. நெருப்பாய் மாறிய 'காற்று' தாமரை

மலின் வருகைக்குப் பின், அபிஷேக்கின் வெளியேற்றத்துக்குப் பின் வீட்டுக்குள் ஞாயிற்றுக்கிழமை நிகழ்வில் சுறுசுறுப்பு குறைவாக இருப்பதாகவே எல்லாரும் காட்டிக் கொண்டார்கள். இனி வரும் வாரங்கள் பஞ்ச பூதங்களைப் பிரதிபலிக்கும் விதமாக ஐந்து காயின்களையும் வைத்து நகர்த்தப்படும், வாரம் ஒரு காயினை வைத்திருப்பவர் நாட்டாமை ஆகலாம் என பிக்கி கொளுத்திப் போட்டு முதல் வாரத்தில் பிரச்சனைக்குரிய இசையின் நெருப்பை அடுப்படிக்குள் வைத்தார்.


யார் சாப்பிடலாம், என்ன சமைக்கலாம், சமையலறைக்குள் யார் வரலாம் என்பதையெல்லாம் நீயே முடிவு செய் என்று சொன்னார். இசையும் நிதி அமைச்சகம் கிடைத்த பிடிஆரைப் போல ஆட்டம் போட ஆரம்பித்துவிட்டது. சும்மாவே இசையோட செய்கைகளும் பேச்சும் ஒன்றுக்கொன்று  முரணாக இருக்கும் என்பதால் எல்லாருமே ஒதுங்கிப் போய்க் கொண்டிருக்கும் வேளையில் நானே எஜமானி என அது நிக்கும் போது பிரச்சினைகள் கொடி கட்டிப் பறக்கும் என்ற பிக்கியின் நினைப்புக்குத் தக்கவே அது நடந்து கொள்ள ஆரம்பித்தது.

இந்த வாரத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்வின் முதல் கட்டமாக பிங்கி பாங்கி போடுவதைப் போல் ஒருவர் பெயரைச் சொல்லி,  அவரைப் பார்க்காமல் மற்றவரைக் கூப்பிட  வேண்டுமென ஆடினார்கள். ப்ரியங்கா ஆரம்பத்தில் அவுட்டானது போல் தோன்றினாலும் நானில்லை நிரூப் தவறு செய்தான்னு சொல்லுச்சு... சின்னப்புள்ள விளையாட்டுல ப்ரியங்காவும் மதுவும் வெற்றி. அடுத்த சுற்றில் இருவருக்கும் நண்பர்கள் பந்தை எறிய அதைக் கச்சாவால் (வலை) பிடித்து கூடையில் போட வேண்டும். பெரும்பாலானோர் மதுவுக்கு எறிந்தார்கள் - மது மதுர விஷம் என்பதை விரைவில் தெரிந்து கொள்வார்கள் - இங்கே ப்ரியங்காவுக்கு அபிஷேக் இல்லாதது தேமுதிகவுக்கு விஜயகாந்த் இல்லாததைப் போல மிகப்பெரிய பின்னடைவு. அவனிருந்திருந்தால் ப்ரியங்காதான் வெற்றி, இல்லாததால் மது வெற்றி பெற்றார். இலங்கைத் தமிழையும் கொலை செய்து பேசலாம் என்பதை மது உலகுக்குக் காட்டிக் கொண்டிருக்கிறார். அணிகளைப் பிரித்தார்.

அப்பறம் வெட்டியாத்தான் சுத்துனாங்க... இசை மட்டும் பாலைக் குறை, தயிரைக் குறை, எல்லாரும் சாப்பாட்டைக் குறைன்னு கத்திக்கிட்டு இருந்துச்சு. அதோட பேச்சு அண்ணாச்சிக்கு கொஞ்சம் வருத்தத்தையும் கடுப்பையும் கொடுத்தது. பாவனியும் ஸ்ருதியும் எப்படியும் தாமரையோட காற்று காயினை எடுத்துக் கதற விட வேண்டுமென திட்டம் தீட்டிக் கொண்டிருந்தார்கள்.

பாவனியைப் பொறுத்தவரை எல்லாருடனும் மோதினாலும் எப்பவும் சண்டையிட சரியான ஆள் அபினய்தான் என்பதை முடிவு செய்து வைத்திருக்கிறது. என்ன சொன்னாலும் அவன் பெரிதாக எதிர்வினை ஆற்றுவதில்லை. போன வாரத்தில் இருந்து எங்கே ராஜூ முதல் இடத்தில் உட்கார்ந்து விடுவானோ என்ற பயம் அதன் மனதுக்குள் எழ, ஆம்லெட்டில் இருந்து ஆலாபனை வரை அவனை மட்டுமே பேசுகிறது. சில நேரங்களில் பாவனி வனிதாவின் பின்னத்தி ஏரோ என்று நினைக்கத் தோன்றுகிறது. பாவனிக்கு ஓவியாவின் இடமெல்லாம் கிடைப்பது கடினமே. போகப்போக பாவனி இன்னும் மோசமாகத்தான் ஆடுவார் என்று தோன்றுகிறது.

இசை, பாவனி, ஸ்ருதி, மது என்ற கூட்டணி உருவாகியிருக்கிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம், இந்தக் கூட்டணி தொடரும் பட்சத்தில் வீட்டுக்குள் நிறைய பிரச்சினைகள் வெடிக்கும். அபிலாஷ் இல்லாத ப்ரியங்கா சற்றே அடக்கி வாசிப்பது ஆறுதல், ப்ரியங்கா அவராகவே இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக மக்கள் மனதில் மேலே ஏறிவிடுவார் ஆனால் அவர் அவராக இருக்க வேண்டும், அங்கேதான் சிக்கலே.

இந்த வாரத்துக்கான வெளியேற்றுப் படலத்துக்கு விளையாட்டு அரங்கில் வைக்கப்பட்ட தீயில் யாரை வெளியேற்ற நான் நினைக்கிறேன் என்பதைச் சொல்லி, அவர்களின் பெயர் எழுதிய பேப்பரைப் போட வேண்டும். சென்ற முறை போட்டோவை நெருப்பில் போட்டதற்கு மக்கள் - பார்வையாளர்கள் - மத்தியில் எதிர்ப்பு இருந்ததால் இந்த முறை பெயர் மட்டுமே.

திங்கக்கிழமை பாட்டுப் போட்டதும் எப்பவும் போல் கட்டுத்தொரயில எழுந்த மாடு நெளிக்கிற மாதிரி, வயித்தை நிரப்புன மலைப்பாம்பு உடம்பை நெளிக்கிற மாதிரி ஆட்டம்ன்னு ஒண்ணு போட்டானுங்க.  அப்புடி என்ன பாட்டுப் போட்டாங்கன்னு நினைக்கிறீங்க, நெருப்புடா நெருங்குடா பார்ப்போம்... நல்ல பாட்டுக்கே இவனுக தில்லைநாயகம் இதுல இந்தப் பாட்டுக்கு ஆடிட்டாலும்... சரிதான்.

குளித்துவிட்டு உடைமாற்றிக் கொண்டிருந்த தாமரையின் காயினை எடுக்க பாவனியும் சுருதியும் திட்டம் போட்டார்கள். பாவனிதான் மெயின் வில்லன், நிகழ்வுக்குப் பின் பாவனி உத்தம வில்லியாக மாற முயற்சித்து, கமலைப் போல் அஷ்டாவதானியாக தன்னை மாற்றிப் பார்த்தார்.

ஒருவர் உடை மாற்றும் போது உள்ளே செல்வதே தவறு, அதில் இருவரும் பேசி வைத்துப் போய் தாமரையை மறைப்பதாய் பாவனி துண்டைப் பிடித்துக் கொண்டு நிற்க, சுருதி எடுத்துக் கொண்டு வந்தார். பின்னாலயே பாதி உடுத்தியும் உடுத்தாமலும் தாமரை வந்து கேட்க, கழிவறைக்குள் தஞ்சம் புகுந்த சுருதி வந்து பேசுறேன் என்றார்.

நம்பியாரை, அசோகனை, பாபு ஆண்டனியை, ரகுவரனை, பசுபதியை ஒரு  சேரப் பார்த்தது போல் இருந்தது பாவனி முகத்தில், பிரச்சினை பெரிதான போது எல்லாரும் வந்து நீங்கள் செய்தது தவறு என்று சொன்ன போது இந்த வாரத் தலைவராக மது இருவரின் கருத்தையும் கேட்க வேண்டிய இடத்தில் நண்பிகளுக்காக வாதாடினார், இதை இந்த வாரம் கமல் கேட்கக் கூடும்.

எப்படி எடுக்கலாம், அதை அவளுக்கு நாங்கதான் எடுத்துக் கொடுத்தோம் என்றதை பாவனி விஷமாக எடுத்துக் கொண்டு அதையே பல பாவனைகளில் கக்கிக் கொண்டிருந்தார். இங்கே சொல்ல வேண்டியது ராஜூ இந்த மூன்று வாரத்தில் நாமினேசனில் வராததும், எல்லாருக்குமே பிடித்துப் போனவனாய் இருப்பதும் பாவனிக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருக்கிறது. எப்படியும் ராஜூ கெட்டவன் என நிரூபிக்க பல வகைகளில் பிரயத்தனம் செய்து வருகிறார். மற்றவர்களைவிட ராஜூ மீதான வெறுப்பை உமிழ இதுவே காரணம். இந்தக் கூட்டணி இந்த முறை கண்டிப்பாக ராஜூவை வெளியேற்றுப் படலத்தில் வைக்கும். மக்கள் ஓட்டில் அவனைக் கமல் முதல் ஆளாய் மக்களால் காப்பாற்றப்பட்டாய் என்று சொன்னால் பாவனியின் முகபாவம் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை நிறைய இருக்கு.

தாமரையைப் பொறுத்தவரை எடுத்தது தவறில்லை ஆனால் அதை எடுத்த விதத்தை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒரு கிராமத்துப் பெண் என்ற நிலையில் பார்த்தால் அவரின் உணர்ச்சிகள் உண்மையானவை, நகரத்து மனிதர்கள் அரைகுறையாக உடுத்திக் கொண்டு அலைவதைப் போலல்ல அவர்கள், நாடகத்திலேயே நடித்தாலும் தங்கள் அந்தரங்க விஷயங்களில் பாதுகாப்பானவர்கள்தான். இத்தனை குரூரமான மனமா இவர்களுக்கு என்பதுதான் தாமரையின் கோபத்துக்கும் அழுகைக்கும் காரணம்.இந்தப் பிரச்சினை கமலால் பேசப்படும் போது சுருதி நான் சுத்தமான ஆர்கேஜி நெய் என்றும், நானோ கண்ணகியின் ஜெராக்ஸ் என்று பாவனியும் சொல்லக்கூடும். குறிப்பாக ராஜூ மீது மிகப்பெரிய குற்றப்பத்திரிக்கை வாசிக்கப்படும். கமல் குறும்படம் போடலாம், அது பாவனிக்கு எதிராகவும் தாமரைக்கு ஆதரவாகவும் இருக்கலாம்.

இந்த வார பட்ஜெட்டுக்கான போட்டியாக நகரம் கிராமம் என்று பிரித்து விளையாடச் சொல்லியிருக்கிறார் பிக்கி, போட்டியில் எந்த சுவராஸ்யமும் இல்லை என்றுதான் சொல்லணும். ஐக்கி எல்லாம் பர்பி டாலுக்கு சேலை கட்டி விட்ட மாதிரித் தெரியுது. ராஜூ கிராமத்தானைப் போல மீசை, தாடியை மாற்றி இருக்கிறான். அபினய் அக்மார்க் கிராமத்தானாக இருக்கிறார்.

பிக்கி நெருப்பை வைத்து இசை என்னும் இம்சையைக் கிளப்பி விட்டு அடித்துக் கொள்ள வைக்கலாம் என்று பார்க்கிறார். இசையும் புதிதாக அமைச்சரானவர்களைப் போல தடாலடி சட்டங்களைப் போடுகிறார், அதெல்லாம் அமைச்சர்களுக்கு ஆவதைப்போல புஸ்ஸூன்னு போயிருது. இரவு கோபமாய் அமர்ந்திருந்தார், எல்லாரையும் என்ன பண்றேன் பாருன்னு நிலாவைப் பார்த்துப் பொங்கிக்கிட்டு இருந்தார். ஒவ்வொருவராய் வந்து சாப்பிட வான்னு சொன்னதுக்கு நிலா பாத்தேன் பசி அடங்கிருச்சுன்னு கத சொன்னார். இவர்தான் யாரும் என்னைக் கவனிப்பதில்லை, ஒதுக்குகிறார்கள் - இதை இவர்கள் எல்லாம் ஒரு காரணியாக எல்லா இடத்திலும் ஏன் வைக்கிறார்காள் என்றே தெரியவில்லை யாராக இருந்தாலும் நாம் மற்றவருடன் நடந்து கொள்ளும் விதமே நட்பைப் பேணும் என்பதை அறியாமல் எல்லா இடத்திலும் சாதியைத் தூக்கிச் சுமந்து கேவலத்தின் உச்சம் - என்றெல்லாம் கமலிடம் சொன்னார். வீட்டைப் பொறுத்தவரை இசையே எல்லாரிடமிருந்தும் விலகி இருக்கிறார். குறிப்பாக அண்ணாச்சி சாதியைச் சுமக்காமல் எல்லாருடனும் சகஜமாய் பழகுவதை இவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, அதனாலேயே அவர் மீதான குற்றப் பத்திரிக்கை நீண்டு கொண்டே போகிறது.

நேற்று வரை அடித்து ஆடி மக்கள் மனசில் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருப்பவர்கள் ராஜூவும் சிபியும்.

தொடரும்.

-'பரிவை' சே.குமார்.

1 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வில்லன்கள் அனைவரும் பாவ்னியாக... ஹா... ஹா...