மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 7 அக்டோபர், 2021

பிக்பாஸ் 5 : 1. ஆரம்பிக்கலாங்களா..?


பிக்பாஸ் 5...

நெறியாளராய் கமலே ஐந்தாவது சீசனாக இதிலும் தொடரும் போது பார்க்கலாம் என்ற ஆர்வம் வரத்தான் செய்கிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டுப் பார்த்தால் கமல் ஒரு கலைஞன், தமிழ் சினிமாவில் விபரம் அறிந்த கலைஞன், தீவிர வாசிப்பாளன் என்பதாலும் அவரின் நெறியாள்கை மிகச் சிறப்பாக இருக்கும் என்பதாலும் பார்ப்பதுண்டு.

பிக்பாஸ் எழுதலையா..? எனச் சில நண்பர்கள் கேட்டார்கள். தொடர்ந்து எழுத முடியுமா என்ற நிலையில் நகரும் வாழ்க்கையில் இந்த முறை வேண்டாமே என்றுதான் தோன்றியது என்பதால் 'இல்லங்க எழுதலை' என்று முடித்துக் கொண்டேன். காரணம் இப்போதைய நிலையில் தினமும் பதிவெழுத முடியாது என்பதே உண்மை. ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு இந்தப் பக்கம் வரவேயில்லை, எதுவும் எழுதவும் இல்லை என்றாலும் இந்த நாட்களில் ஜீரோ டிகிரி நாவல் போட்டிக்கு ஒரு நாவல் எழுதி அனுப்பியதும், கண்மணி போட்டிகென எழுதி இன்னும் முடிக்கப்படாமல் இருக்கும் நாவலை மீண்டும் எழுதிக் கொண்டிருப்பதும் தொடரத்தான் செய்கிறது. 

இதற்கிடையே மூன்றாவது முறையாக கலக்கல் ட்ரீம்ஸில் வரும் 2022 ஜனவரிப் புத்தகக் கண்காட்சிக்கு ஒரு சிறுகதை தொகுப்போ / நாவலோ கொண்டு வரும் வேலையை ஆரம்பிக்கச் சொல்லித் தசரதன் பச்சைக் கொடி காட்டியிருக்கிறார். அதற்கான வேலைகளையும் ஆரம்பிக்க வேண்டும்.

இந்த முறை பிக்பாஸில் மொத்தம் 18 முகங்கள். இதில் அறிந்த முகங்கள் என்று பார்த்தால் சின்னப்பொண்ணு, பிரியங்கா, இமான் அண்ணாச்சி மற்றும் தாமரைச்செல்வி மட்டுமே. மற்ற பதினாலு பேரும் அறியாத முகங்களே. அதுவும் சிலரின் பெயர்கள் கூட வாய்க்குள் நுழைய மறுக்கிறது.

இதுவரை இங்கிருந்து போனவர்களுக்கு சினிமாவில் மிகப்பெரிய ரத்தினக் கம்பள வரவேற்பு கிடைக்க வேண்டியது அதைக் கோரோனா கொன்று சென்று விட்டது. இந்த முறை இவர்களுக்கான வாய்ப்பு வெளியில் வந்தவுடன் கிடைக்கும் என்றும் இதில் இருக்கும் எல்லாருமே சூப்பர் ஸ்டார், சூப்பர் ஆக்டர் ஆயிருவாங்க என்று எப்பவும் போல் கமல் சொன்னாலும் பிரியங்கா, தாமரைச்செல்வி போன்ற ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் எல்லாருமே வேலை வெட்டி இல்லாமல் இங்கு வந்தவர்கள் என்றுதான் தோன்றுகிறது.

ஜெர்மனியில் இருந்து வந்திருக்கும் மது கொஞ்சிக் கொஞ்சிப் பேசினாலும் முடிந்தவரை தமிழில்தான் பேசுகிறார். இங்கிருக்கும் ஆண்கள் எல்லாம் லண்டனில் படித்து வந்தவர்களைப் போல ஆங்கிலமே அதிகம் பேசுகிறார்கள். பிக்பாஸ் வேற இதையெல்லாம் கண்டுக்கல... அட இவனுக கன்டெண்டே கொடுக்க மாட்டானுக... இதுல இதையும் கண்டுக்கிட்டா என்னத்துக்கு ஆகுறதுன்னு நினைச்சிட்டாரு போல.

ரெண்டு பேரு இருக்கானுங்க.. ஒருத்தன் அபிலாஷ் இன்னொருத்தன் ராஜன்... இன்னும் பலரின் பெயர்கள் சரியாய் தெரிய வரவில்லை... இவ்வளவுக்கும் இந்த முறை மைக்கிலேயே பேரைப் பொறிச்சு அனுப்பிட்டானுங்க... சரி பேர அப்பறம் பார்த்துப்போம், நேரே விஷயத்துக்கு வருவோம். இந்த ரெண்டு பேருல ஒருத்தன் யூடிப்பராம், உக்காந்தா அறுக்க ஆரம்பிச்சிடுறான்... மற்றொருவன் இணை இயக்குநர், யார் பேசினாலும் விமர்சனம் செய்வது போல் ஒன்னறைப் பக்கம் பேசுறான். 

இவனுக போக ஒருத்தன் அடியாள் மாதிரி இருக்கான். ஒருத்தன் அடிபட்ட பல்லி மாதிரி இருக்கான். ஒருத்தன் ரஜினிக்கு டூப்புன்னு உக்காந்திருக்கான். இன்னொருத்தன் ஜெமினி சாவித்திரி பேரன்னு சொல்லிக்கிட்டு இருக்கான். இவனுங்க போக இமான் அண்ணாச்சி தன் பங்குக்கு சந்தானத்துக்கு டப் கொடுத்துக்கிட்டு இருக்கார்.

இசைவாணி 'நாம கறுப்பு நம்மளை அடிச்சவங்க முன்னால எழுந்து காட்டுவோம்' என்ற வசனத்தையே சுமந்து திரிகிறார், சர்பட்டா பரம்பரை பாதிப்பு போல. மதுவின் பேச்சோ ரசனையாய்... சின்னப்பொண்ணு அடிக்கடி சில பாடல்களைப் பாடிக் கொண்டிருக்கிறார், வேல் முருகனைப் போல் வேலாவேலைக்குப் பாடிக் கொல்லாமல் இருந்தால் சரி, தாமரைச்செல்வி கூத்தில் டான்ஸராக வந்து அதகளப்படுத்துபவரா இத்தனை அப்பிராணியாக இருக்கிறார் என யோசிக்க வைக்கிறார். திருநங்கை நமீதாவுக்கு ஒரு இடம் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி என்றாலும் இவரே வனிதாக்காவாகும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. ஜக்கி பெர்ரி குதிரை வால் மாதிரி முடியுடன் பர்பி பொம்மை மாதிரித் திரியுது.

இன்னும் சிலரைப் பற்றி எதுவும் தெரியவில்லை. கலகலப்புக்கு பிரியங்கா.... என்ன பெரிசு என பிக்பாஸைக் கலாய்ப்பதில் நம்மையும் ரசிக்க வைக்கிறார். அர்ச்சனாவாக மாறி அன்புதான் பெரிசுன்னு எந்த வடையும் சுடாமல் இருந்தால் தப்பித்துக் கொள்வார்.

இந்த வார பட்ஜெட் டாஸ்க்காக உங்க கதையைச் சொல்லுங்க எனச் சொல்லி ஒரு டாஸ்க் கொடுத்திருக்கானுங்க... தினமும் சிலருன்னு மெகா சீரியலுக்கு டப் கொடுக்கிறார்கள். இசைவாணி அரசுப் பள்ளிக்குப் பணம் கட்ட முடியாமல் வெளியில் நின்ற கதையைச் சொல்லி, அடிக்கடி வீடு மாறுதல், நிகழ்ச்சிக்குப் போனால் மைக் கொடுக்காதது (ஒரு நிகழ்ச்சிக்கு ஒருவரை அழைத்துச் சென்று ஏன் மைக் கொடுக்காமல் இருக்கவேண்டும். அதுக்கு வீட்டுலயே இருக்க விட்டிருக்கலாமே) என கலந்து கட்டி ஒரு கதையைச் சொன்னார். எல்லாரும் ஒப்பாரி வைத்தார்கள்.

அடுத்து சின்னப்பொண்ணு பஸ்ல புள்ள உருண்டது, சூராணத்துல பொறந்தது, கூழு குடிச்சது, ஒரு நாள் பாடினால் 20 ரூபாய் சம்பளம் என விக்கிரமன் கதைப்பாணியில் 'லாலாலாலலாலா' இன்னாமலே சொல்லி முடிக்க, ராஜன் எழுந்து வந்து இந்தக் கதையில் உயிர்ப்பு இல்லை... பாடல் மட்டுமே உயிர்ப்பாய் இருந்தது எனச் சொன்னார்.

அப்புறமா இந்த அபிலாஷ் பையன், அங்க நின்னு சொன்னாத்தானே உயிர்ப்பு பயிர்ப்பு எல்லாம் பாப்பீங்க இப்ப பாருங்கடா என எழவு வீட்டுல பிணமாட்டம் பதினோரு பொம்பளங்களுக்கும் மத்தியில் உக்கார்ந்து அம்மா கதையைச் சொல்லி ஒப்பாரி வச்சான்... பிக்கிக்கு ஒரு வார மெகாசீரியலை ஒரே நாள்ல பார்த்த மகிழ்ச்சி, வறண்ட பூமியில மழை பேஞ்ச சந்தோஷம், அதை அப்படியே எடுத்து சும்மா இருபது நிமிசத்துக்கும் மேல அபிலாஷின் கண்ணீர்க்கதை என்ற தலைப்பை மட்டும் தவிர்த்து ஓட்டி மகிழ்ந்தார். பெண்கள் அழப் பிறந்தவர்கள் என்பதை அபிலாஷின் கதை ஆணித்தரமாக நிரூபித்தது. விக்கிரமன், விசு, உதயகுமார், கஸ்தூரிராஜா இடங்களுக்கான போட்டி இந்த பிக்பாஸ் போட்டியாளர்களிடம் அதிகமாக இருக்கும் என்று நம்பலாம்.

நேற்று முதலில் பேசியது இமான் அண்ணாச்சி,  'நான் ஒரு விகடகவி நான் ஒரு கதை சொல்வேன்... பதினெட்டு வருசம் பனகல் பார்க்' என அவரே சிரித்துக் கொண்டு ஒரு கதை சொன்னார். அப்ப பயலுக்களுக்குள்ள சின்ன கசமுசா... அடிச்சிக்குவானுங்கன்னு பிக்கி கேமராவை அங்கிட்டே வைக்க, நான் ரஜினிக்குப் போட்டி எனச் சொல்லும் சிவா அர்னால்ட் போல இருந்தவனைப் பார்த்து பயந்து சரண்டர் ஆயிட்டான். சினிமாவுல தலைவர் எம்மாம் பெரிய உருவமா இருந்தாலும் சும்மா அடிச்சித் தூள்தூளாக்குவார், ஆனா இங்க ரஜினிக்கு டூப்பு நாந்தான் எனச் சொல்லும் சிவா பதுங்கிட்டார். எதுக்குடா வீணாவுல முதல் சண்டைய என் பேர்ல ஆரம்பிக்கிறீங்கன்னு நினைச்ச அண்ணாச்சி 'ஏலே இது என்னோட கதையே இல்லங்கிறேன்... இது வானத்தப்போலலா... அம்புட்டுத்தான்' என முடித்துக் கொண்டார்.

அப்புறம் சுருதி அதோட கதையைச் சொன்னுச்சு, யாருமே கவனிக்கலை... எங்கப்பாவுக்கு வயசு அதிகம்... எங்கம்மா ரெண்டாந்தாரம்... சாப்பாடு இல்ல... அப்பாட்ட இருந்து அன்பில்ல... கஷ்டம்.... கஷ்டம்... கஷ்டமே என் கதை,  என மிகப்பெரிய விசு படத்தை ஓட்டியது. பெரும்பாலும் இதயக்குறியை வச்சி சாதிக்கப் பிறந்தவளே வா... சாதனைப் பெண்ணே வான்னு வாயால வடை சுட்டானுங்க. இவங்கள்ல ஐந்து பேர் இமான் ஓட்டிய கதையைப் பிடிக்கலைன்னு சொன்னாவங்கதான்... இந்தப் புள்ளக்கி அம்புட்டுப் பேரும் ஆறுதல் சொன்னானுங்கன்னாப் பாத்துக்கோங்க... பொண்ணுங்க அழுதா இந்த உலகமே அழும் போல.

அப்புறம் முழுக்க முழுக்க பிரியங்காதான்... நகைச்சுவை நடிகர்கள் எனச் சொல்பவர்கள் எல்லாரும் சிரிக்க வைக்க ரொம்பச் சிரமப்படுவார்கள். இவரோ போகிற போக்கில் அடித்து ஆடுகிறார். மைக்கே இல்லாம மன்னார்குடி வரைக்கும் கேக்கும் குரல் அது... ஆட்டம் பாட்டம் கொண்டாட்டாம்... போற போக்கைப் பார்த்தால் பிரியங்காவுக்குத் தீவிர ரசிகர் ஆனாலும் ஆயிருவேன் போல... நேற்றைய ஒளிபரப்பில் கவலை மறந்து சிரிக்க முடிந்தது என்றால் அது பிரியங்காவால் மட்டுமே.

இந்த மூணு நாளில் இவர்கள் செய்தது என்ன..?

அணி பிரிச்சானுங்க... 

சாப்பிட்டானுங்க...

சாப்பிட்டானுங்க...

சாப்பிட்டானுங்க...

கக்கூஸை வைத்துக் காமெடி பண்ணுனானுங்க...

பொண்ணுங்களைக் கிண்டல் பண்ணுனானுங்க...

ஜாலியாச் சுத்துனானுங்க... 

இடையில நாலு பேர் கொசுவர்த்தி வச்சி பிளாஸ்பேக் ஓட்டுனானுங்க...

அழுதானுங்க...

அடிக்கிறமாரி பேசினானுங்க...

ஆனா அடிச்சிக்கலை...

மொத்தமாய் இன்னும் விறுவிறுப்புக் கூடலை... பேசியே கொன்னு எடுக்கிறானுங்க... பிக்கி டாஸ்க் கொடுத்தால் ஒருவேளை பேசுவதைக் குறைப்பானுங்க போல. 

தொடர்வோம்.

-'பரிவை' சே.குமார்.

2 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்லது... தொடர்க...

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஓ சீசன் 5 ஆ?

ப்ரியங்கா தேஷ்பாண்டே ரொம்ப கலகலப்பான பெண்.

உங்கள் விவரணத்தைத் தொடர்கிறோம்

கீதா