மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 2 நவம்பர், 2021

பிக்பாஸ் - 5 : 8. 'இசை'யால் வசமிழந்த மது

பிக்பாஸில் போன வாரத்தில் தாமரையின் காயினை எடுத்த விதமே பேசுபொருளாக அமைந்தது. அதுவே வாரத்தை நகர்த்திக் கொண்டிருந்தது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் தாமரை கோபமாகப் பேசினாலும் கிராமத்தாளாக வார்த்தைகளை விட்டாலும் மற்றவர்கள் சொன்னதை ஏற்றுக் கொண்டு அதிலிருந்து மீண்டு விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். சின்னப்பொண்ணு பாடிய நாட்டுப்புறப் பாடலுக்கு அவர் ஆடிய ஆட்டம் செம.


சுருதியும் பாவ்னியும் அதிலிருந்து வெளியில் வரவேயில்லை. தனியாக அமர்ந்து அதையே பேசிக் கொண்டிருந்தார்கள். தாங்கள் செய்தது சரியே என்பதுதான் அவர்களின் வாதமாக இருந்தது. பாவ்னியைப் பொறுத்தவரை தான் செய்தது தவறில்லை என்பதை எல்லாரிடமும் கொண்டு செல்ல ரொம்பவே முயற்சித்தார். சுருதிக்கு தவறு செய்து விட்டோமோ என்ற மனநிலை அப்போ அப்போ எழுந்தாலும் அதை வளர விடாமல் வெட்டி வீழ்த்துவதையே தன் கடமையாக நினைத்து, நீ எங்கே தப்புப் பண்ணினே தாமரைதான் தப்பு கூடவே அந்த ராஜூப்பயலும் எனத் தூபம் போட்டுக் கொண்டேயிருந்தார் பாவ்னி.

இசைக்கு சமையலறை உனது கட்டுப்பாட்டில் என்று சொல்லப்பட்ட போதும் வீடே எனது கட்டுப் பாட்டுக்குள்தான் எனச் சொல்லித் தலைவரான மதுவை ஓபிஎஸ்ஸை ஓரங்கட்டியதைப் போல் கட்டிவிட்டு எடப்பாடியாக ஆடிக் கொண்டிருந்தார். என்னை ஒதுக்குறாங்க என்ற அவரின் தேவையில்லாத கோஷமும் வீடே என் கட்டுப்பாட்டில்தான் என அவர் போட்ட ஆட்டமுமே மற்றவர்கள் அவரின் ஆணையை மதிக்காமல் போகக் காரணமாக இருந்தது என்பதை அவர் இறுதிவரை உணரவில்லை.

சென்ற வாரம் நெருப்புக்கான வாரம் என்பதால் போட்டிகள் எல்லாமே தீ சம்பந்தப்பட்டதாக இருந்தது என்றாலும் எதிலும் சுவராஸ்யம் இல்லை. போட்டியாளர்களே சுவராஸ்யம் அற்றுப் போய்த்தான் திரிகிறார்கள் என்பது வேறு விஷயம்.

நூடுல்ஸ் செய்த ராஜூ அதை எல்லாருக்கும் ஊட்டி விட்டபடி சுற்றி வர, படுக்கை அறையில் சின்னப்பொண்ணுடன் பேசிக் கொண்டிருந்த தாமரை அவன் என்னவோ தங்களுக்குத் தராதது போலப் பேசி, வெளியில் வந்து நேரிடையாகச் சொன்னபோது வேணுமின்னா நீ வந்து வாயை நீட்டியிருக்கணும். இதையெல்லாம் எங்கிட்ட தூக்கிட்டு வராதே என முகத்தில் அடித்தது போல் சொன்னதும் தாமரை மலரவில்லை.

இசைக்கும் அண்ணாச்சிக்கும் ஏனோ ஒத்துப்போகவில்லை. வெளியில் இருந்து பார்க்கும் நமக்கு ஏன் அண்ணாச்சி அந்தப்புள்ளக்கிட்ட மட்டும் இப்படி நடந்துக்கிறார் எனத் தோன்றினாலும் இசையின் செயல்பாடுகள் அத்தனை சரியாக இல்லாததும் தான் தாழ்த்தப்படுகிறேன் என்ற ஆயுதத்தை எப்போதும் கையில் எடுப்பதாலுமே அவர் இசைக்கு அறிவுரை சொல்வதைப் போல் கொஞ்சம் வறுத்தும் விடுகிறார் என்று தோன்றுகிறது.

ப்ரியங்கா கொஞ்சம் மாற்றம் கொண்டிருந்தாலும் சில விஷயங்களில் தனது சில்மிஷத்தை வெளியில் தெரியாமல் காட்டிக் கொண்டுதான் இருக்கிறார் ப்ரியங்கா இன்னும் வெளிப்படையாக மாறும் பட்சத்தில் அன்பு அர்ச்சனா போலில்லாமல் எல்லார் மனதிலும் இடம் பிடிப்பார்.

மது பேசும் தமிழ் ரசிக்க வைக்கிறது என கமலே சொல்வதுதான் காலக் கொடுமை என்ன செய்ய, இலங்கைத் தமிழ் கூட வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்த பின் மம்மி டாடி ஆன நம்ம தமிழ் போல ஆங்கிலத்துக்குள் புகுந்து அல்லோலப்படுகிறது.

'தலைவராய் நான் என்ன செய்தேன்..?' , 'இசைக்கு இருக்கும் மதிப்பு எனக்கு ஏன் இல்லை..?' எனப் பொறுமினாலும் - தலைவராய் அவருக்கு வேலையே இல்லாத வாரம்தான் அது - சில நேரங்களில் சண்டையே போட்டாலும் கூட மிகப்பெரிய பிரச்சினைக்கு நான் தயாரில்லை என்பதாய்தான் அவரின் போக்கு இருந்தது. மது சொன்னதைப் போல் உறங்கியவர்களை மட்டுமே எழுப்பிக் கொண்டிருந்தார் என்பதே உண்மை.

தினமும் ஒழுங்கா விளையாடாத இருவர் இரவு முழுவதும் நெருப்பு எரிக்க வேண்டும் அதை நெருப்பின் தலைவி இசை பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற உலகமகா தண்டனையெல்லாம் பிக்பாஸ்க்கு யார்தான் சொல்லிக் கொடுக்கிறார்களோ தெரியவில்லை.

யாரும் என் பேச்சைக் கேட்கவில்லை எனப் புலம்பிய இசை சிலருக்கு அதற்கெனத் தண்டனை கொடுத்தாலும் பலருக்கு கொடுக்காமல் இருந்தார். இதை தாமரை சுட்டிக்காட்டியது சிறப்பு. நான் தலைவன் என்னும் போது எல்லாரையும் ஒரே மாதிரிப் பார்க்க வேண்டும்.

பாவ்னியைப் பொறுத்தவரை ராஜூதான் முக்கிய எதிரி , அதற்குக் காரணம் எங்கே அவனை எல்லாரும் விரும்புகிறார்களோ என்ற எண்ணமும் தன்னை யாரும் விரும்பவில்லையோ என்ற நினைப்பும்தான். தான் சரியாக விளையாடுகிறேன் என வில்லி வேசத்தில் நாயகியாய் காட்டிக் கொண்டிருக்கும் பாவ்னிதான் இந்த பிக்பாஸ் வீட்டின் 'வனித'வில்லி. அவருக்கு வேண்டும் வரை ஒருவரைப் பயன்படுத்திக் கொண்டு அவர் வேண்டாம் என வரும்போது என்றோ சொன்னதைத் தூக்கிக் கொண்டு சண்டைக்குப் போய் விடுகிறார்.

அண்ணாச்சி, ராஜூ, சின்னப்பொண்ணு மூவரும் தான்  வீட்டுக்குள் மன அழுத்தம் நீக்கும் மருந்து போல, இவர்கள் இருக்கும் இடத்தில் கலகலப்புக்குப் பஞ்சமில்லை. ப்ரியங்காவையும் இதில் சேர்க்கலாம் என்றாலும் சில நேரங்களில் குத்தி விட்டு வேடிக்கை பார்க்கிறார்.  கானக்குயில் எனச் சொல்லப்பட்ட இசையை இதற்குள் கொண்டே வரமுடியாது என்பதே உண்மை. வாரம் முழுவதும் நான் ஒதுக்கப்படுறேன்னு ஒதுங்கியே இருக்கும் அவர் கமல் வரும்போது மட்டும் வடிவேலு நகைச்சுவைக்களைக் கரைத்துக் குடித்துவிட்டு வந்து உட்காருவதைப் போல, சிரித்துக் கொண்டே இருக்கிறார். போலியான முகம் நீண்ட நாட்கள் மறைக்கப்பட வாய்ப்பில்லை.

சிபி தன் போக்கில் சரியாகப் போய்க் கொண்டிருக்கிறார், சின்னதாய் கிராமமா நகரமா என நகர்ந்த பட்டிமன்றத்தில் உடை குறித்தான் தாமரையின் பேச்சுக்கு சிபி எதிர்ப்பு தெரிவித்தது சரியே என்றாலும் நீ அடக்கமா இருக்கியா என்ற வார்த்தையை கேட்டிருக்க வேண்டியதில்லை.

கிராமமா நகரமா பட்டிமன்றம் தாமரையா சுருதியா என்ற போக்கில்தான் பயணித்தது. இருவருமே இதை தாங்கள் நேருக்கு நேர் பேச முடியாததைப் பேசும் ஒரு களமாகத்தான் எடுத்துக் கொண்டார்கள். இதில் ப்ரியங்கா கொஞ்சம் உள்ளடி வேலைகள் பார்த்த போதும், ராஜூ மிகச் சிறப்பாகப் பேசினார். தலைவராக இருந்த இசை என்னவோ பாகுபாடு பார்த்தது போல்தான் தெரிந்தது. அவரின் முடிவுகள் பெரும்பாலும் நகரத்துக்குத்தான் சாதகமாக இருந்தன, அந்தப் பக்கமே அவரின் நட்புக்கள் அதிகமிருந்ததால்.

பட்டிமன்ற போட்டியில் நகரம் மூவாயிரம் வென்றது, கிராமத்தில் சிறப்பான பேச்சுக்காக ராஜூ ஆயிரம் வென்றார். மொத்தத்தில் அந்த வார பட்ஜெட் போட்டிகளில் வென்றது நகரத்து அணிதான்.

எல்லாருமே தங்களைப் பாதுகாக்க, அங்கே யாருக்கு ஆதரவளிப்பதாகக் காட்டிக் கொண்டால் சரியாக இருக்குமோ அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். மற்ற சீசன்களைவிட இந்த சீசனில் நிதானித்து யோசித்தே விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. அதுதான் சின்னப்பொண்ணு, தாமரை, இசை என இவர்கள் மீது பற்று இருப்பதாக போலியாக நடிப்பதற்கு காரணமாய் இருக்கிறது.

ஆமா கமல் வந்து என்ன செய்தார்..?

(தொடரும்)

-'பரிவை' சே.குமார். 

2 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பாவ்னி = ரம்யா பாண்டியன் ?