மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 9 அக்டோபர், 2021

பிக்பாஸ்-5 : 2. கண்ணீர் கதைகள்

பிக்பாஸில் இந்த வாரம் சொந்தக்கதை சோகக்கதை வாரம் என்பதால் - அடுத்த வாரமும் இதுதான் தொடரும் - நான்கு பேர் கதை சொல்லி முடித்த நிலையில் கடந்த இரண்டு நாட்களும் அதேதான் தொடர்ந்தது.

ஜெர்மனி மதுவுக்கான கதையில் - எல்லாருமே அழ வைக்க வேண்டும் என்பதே டாஸ்க், அதனால்தான் ஆன கதை - ஜெர்மனியில் ஆரம்பித்து அக்காவுடன் தங்கியது, படிக்கத் தனியாகப் போய் தங்கியது, காதலும் அதன் முறிவும், தற்கொலை எண்ணம் என விரிவாகப் பேசியதில் ரசிக்க முடிந்தது அந்தத் தமிழ்தான். போனதின்னா, வந்ததின்னா, படிச்சதின்னா அப்படின்னு தின்னா தின்னான்னு பேசுவது ரசிக்க வைத்தது.


அடுத்துப் பேசிய நமீதா திருநங்கையான பின் ஒரு பெண் / ஆண் பட்ட வேதனைகளை, குடும்பத்தாரின் பார்வையை, வெளிமனிதர்களின் பார்வையை, தான் பட்ட வேதனைகளைச் சொல்லி அழுது, திருநங்கைகளுக்காக இங்கிருக்கும் வரை பேசுவேன் என்று சொன்னதும் அவர் கதை முடிந்த பின் பாடிய பாடலும் மனதை அறுத்தது எனலாம்.

அவர் சொன்ன கதையில் கம்பியை முறுக்கி எடுத்து, ஏறிக் குதித்து, பல மாடிகளில் இருந்து மெல்ல இறங்கி, மரத்தில் தாவி என ஒரு சினிமாவுக்கான காட்சியை கண் முன் நிறுத்தினார். இதெல்லாம் கொஞ்சம் அதிகமான விஜய் சேதுபதி பட பில்டப்தான் என்றாலும் நமீதாவின் தேர்வு சரியான தேர்வுதான் என்றாலும் வனிதா நமீதா ஆக முடியாது, ஆனால் நமீதா வனிதா ஆகலாம். கூடிய விரைவில் திருநங்கை என்ற ஒன்றை வைத்து தன்மேல் எல்லாரும் பாசம் வைப்பார்கள் என்று நினைத்து மிக மோசமாக நடந்து கொள்வார் என்பதை அவரின் சில நிகழ்வுகள் காட்டிக் கொண்டிருக்கின்றன.

நமீதா கிட்டத்தட்ட பவா செல்லத்துரை போல ஒரு பெருங்கதையாடல் நடத்தி முடித்தார். அடுத்த கதையாக பாவனி ரெட்டியின் கதை, உண்மையிலேயே மிகவும் துயரமான வாழ்க்கைக் கதை. சொன்ன கதைகளில் - அதாவது கேட்ட கதைகளில் -  ரொம்பவே வருத்தப்பட வைத்த கதை இதுதான். காதல், வீட்டை விட்டு வெளியேறி திருமணம், தான் விரும்பிய விசுவல் மீடியாத் துறை, கணவனுக்கும் தனக்குமான சின்னப் பிரச்சினை, அதன் காரணமாக அவனின் தற்கொலை, காரணம் இவர்தானென்ற சுற்றத்தாரின் சுடு சொல், அப்பா அம்மாவின் அதரவு, அதைக் காட்டிலும் மாமியாரின் அன்பு, தற்போது ஜெயித்தது என அவரின் கதை மனசைக் கலங்கடித்தது. பாவனிக்கு ஆர்மி அமைவது உறுதி.

இதனிடையே சின்னச் சின்ன சீண்டல்கள், சிரிப்புகள் குறிப்பாகச் சாப்பாடு என கலந்து கட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இமான் அண்ணாச்சி மற்றவர்களைப் போல் நடித்துக் காட்டியது, அர்ச்சனாவின் பேச்சுக்கள் என சோக கீதங்களுக்கு இடையே சுகமான பயணமாய் ஆக்கிக் கொண்டிருந்தார்கள்.

அந்த யூடிப்பர் - அவன் பெயர் அபிலாஷ்ன்னு நினைக்கிறேன் - விவாகரத்துப் பெற்றவனாம், பாவனியை முப்பத்தி மூணு வயசுக்காரி, அக்கா எனச் சொல்லிக் கொண்டு கட்டிப்பிடித்தலும் மடியில் படுத்தலுமாய் இருக்க ஆரம்பித்திருக்கிறான். இதில் கேமராவைப் பார்த்து ஸ்கூல் பசங்க உனக்கு லவ் லெட்டர் கொடுத்திருவானுங்கடின்னு வேற சொல்றான். இமான் அண்ணாச்சி அவ உனக்கு என்ன வேணும்ன்னு கேட்டதும் அக்கா என்று சொல்ல, இமான் அண்ணாச்சி சிரித்த சிரிப்பு நம் எல்லாருடைய சிரிப்பாகவும் இருந்தது எனலாம்.

தாமரைச் செல்வி இவ்வளவு அப்பாவியாக இருப்பார் என்று தோன்றவில்லை, அவரின் நடவடிக்கைகள் எல்லாருக்குமே கடுப்படிக்கும் என்பதே உண்மை. எங்க ஊர்ப்பக்கம் நாடகங்களில் இராதாகிருஷ்ணனிடம் அந்த ஆட்டம் போடுபவர் இங்கே எதுவும் தெரியாதவராய், மேக்கப் போட்டு நடிப்பவர் மேக்கப் சாதனங்களைக் குறித்து பிரியங்காவிடம் பேசியதெல்லாம் ரொம்ப அதிகம் என்றே தோன்றியது.

ராத்திரியில ஆந்தை மாதிரி முழிச்சிக்கிட்டு நடக்க விட்டு ரசிச்சிக்கிட்டு இருந்தானுக, திருடன் போலீஸ் விளையாட்டை மாபியா விளையாட்டுன்னு விளையாண்டானுங்க. இந்த விளையாட்டுகளில் இறுதியில் நமீதாவுக்கும் தாமரைக்கும் சண்டை வந்தது அதற்குக் காரணம் தாமரையில் வெகுளித்தனமும் நமீதாவின் புரிந்து கொள்ளாமையும்தான், நான் மேலே சொன்னதுதான் நமீதா வனிதா ஆகும் நாட்கள் தூரத்தில் இல்லை.

பிரியங்கா நீ சிரிக்காதேக்கான்னு சொன்னாலும் தாமரை சிரிச்சிக்கிட்டே இருக்க, சண்டை சூடு பிடித்தது. பின்னர் சமாதானங்கள், அண்ணாச்சியின் முயற்சியில் நமீதா அதெல்லாம் முடியாது, நான் இனிமே பேசுனா கேவலமாக் கேள்வி கேப்பேன்னு சொல்ல பிரச்சினை ஓய்ந்த பாடில்லை.

நள்ளிரவில் யாருமற்ற நேரத்தில் சமாதானம் ஆகி - காரணம் தவறு தன் மீதுதான் என்பதையும், மற்றவர்கள் எல்லாம் தாமரைக்கு ஆதரவாக இருப்பதையும் உணர்ந்தே நமீதா சமரசத்துக்கு வந்தார். அதுவும் நான் உங்கிட்டே பேசுனேன்னு யார்கிட்டயும் சொல்லாதேன்னு சொல்லிட்டுத்தான் பறக்கும் முத்தம் கொடுத்து, சூடான காப்பியைக் கொடுத்து சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

தொடரும்.

-'பரிவை' சே.குமார்.

4 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை... தொடர்க...

ஸ்ரீராம். சொன்னது…

பிக்பாஸ் தொடங்கி விட்டதா?  நமீதா முன்பே ஒருமுறை வந்தார் இல்லையோ?

ஸ்ரீராம். சொன்னது…

நமீதா யார் என்று தினமலர் பக்கத்தில் பார்த்தேன்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

நன்றி தனபாலன் அண்ணா.

நன்றி ஸ்ரீராம் அண்ணா.

இந்த நமீதா திருநங்கை, நமீதா மாரிமுத்து - நடிகை ஷகிலாவின் வளர்ப்பு மகள் என்று சொல்கிறார்கள்.

இவர் பிபியில் இருந்து திடீரென வெளியேற்றப்பட்டிருக்கிறார். அவராகத்தான் போனார் என்று சொல்கிறார்கள் என்றாலும் அவரின் பேச்சுக்களும் நடவடிக்கையும் காரணமாக இருக்கலாமோ என்று தோன்றுகிறது.