மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 25 அக்டோபர், 2021

பிக்பாஸ் -5 : 6. ஆள நினைத்து வீணாப்போன அபிஷேக்

காயினை எடுக்கவும் அடிச்சிக்கவுமாத்தான் இருந்தானுங்க, பிக்கி கூப்பிட்டு காயினை யார் யார் வச்சிருக்கீங்களோ அவங்களே வச்சிக்கங்க, உங்களுக்கு இன்ன இன்ன சக்தி கிடைக்கும் அப்ப சக்திமான் மாதிரி ஆகிக்கங்க, ஆனாலும் சூனாபானாக்களாச் சூதனமாப் பொழச்சிக்கங்க, கருவாட்டுப் பானையை பத்திரப்படுத்தாட்டி நாய் தூக்கிட்டுப் போற மாதிரி எவனாச்சும் ஆட்டையைப் போட்டுட்டா அந்தச் சக்தியெல்லாமே அவனுக்குப் போயிரும், அம்புட்டுத்தான்னு சொல்லிட்டாரு.


பட்ஜெட்ல பொருள்கள் வாங்குறதுக்கு எழுதுறதுக்குள்ள வாரச் சந்தைக்குள்ள நிக்கிற உணர்வைக் கொடுத்தானுங்க, காலையில இருந்து திங்கிறதுக்கு ஏதாவது கொடுன்னு கத்திக்கிட்டு இருந்த ப்ரியங்கா, பட்ஜெட் பொருட்கள் வாங்குறதுல தன்னோட கத்தலை ஒரு பொருட்டாவே எடுத்துக்கலையேன்னு பொங்கிப் பொங்க வச்சிச்சு, இதுல வேற முதல்நாளே கட்சி செயற்குழு மாதிரி ஒண்ணக் கூட்டுனானுங்க போல அப்பல்லாம் அமைதியா இருந்துட்டு தமிழக சட்டசபை மாதிரி பட்ஜெட்டுல கூச்சல் ஆக்கிட்டானுங்க போல.

இம்புட்டு ரணகளத்துலயும் ராஜூ பலகுரலில் வாகனங்களை ஓட்டியது சற்றே ஆறுதல், பாவனி மூணு வருசத்துக்கு முன்னால காலி டப்பான்னு சொன்னதை அவ காலியாயிட்டாப்பான்னு எடுத்துக்கிட்டு மூஞ்சி மேல (பாவனியின் தமிழ்) - மூஞ்சிக்கு நேரதான் - பேசிக்கிட்டு நிக்கிது. அதுபோக எங்கே ராஜூ ஆம்லெட் போட்டுக் கொடுத்துட்டு பேர் வாங்கிருவானோன்னு அதுக்குப் பயம் வேற... என்னத்தச் சொல்ல, ஓவியா ஆகும்ன்னு பார்த்தா ஓரே அடியா எல்லாரையும் ஒழிக்கப் பாக்குது.

ராஜூ ப்ரியங்காவுக்கு உருளை பொரியல் செய்து கொடுத்து 'ஆஹா ஒரு உருளையே உருளை சாப்பிடுதே...!' அப்படின்னு ரசிக்கலாம்ன்னு பார்த்தா, அது கூட இருக்கவனுங்க அதையும் தட்டி விட்டு உடைச்சிட்டானுங்க, ராஜூவுக்கு கெட்ட பெயர் வாங்கிக் கொடுக்கலாங்கிற எண்ணமும் இருந்திருக்கலாம் அல்லது எதேச்சையாகவும் உடைந்திருக்கலாம், எப்படியோ அந்த ஆச்சர்யக்குறியை கேள்விக்குறி ஆக்கி ப்ரியங்காவை புலம்ப விட்டுட்டானுங்க.

சனிக்கிழமை...

கமல் அட்டகாசமாக வந்தார், அபிஷேக்கை வைத்துச் செய்தார், இது அறிவுரையில்லை உங்களைக் கண்டிக்கிறேன் என்றது பாகிஸ்தான் சொல்லி வைத்து இந்தியாவை அடித்தது போல் மிரட்டலாய் இருந்தது, வயசானாலும் சிங்கம் சிங்கம்தானே. கலக்கல் ஆண்டவரே.

காயின் விளையாட்டில் அபிஷேக் விளையாண்ட விதம் பற்றி அதிகம் பேசினார், அபிஷேக்கை வாரிய போதெல்லாம் ப்ரியங்காவும் அந்த அர்னால்ட்டு நிரூப்பும் ரொம்பவே படபடப்பா இருந்தாங்கன்னுதான் சொல்லனும்.

'நீ யார் அடுத்தவங்க விளையாட்டை விளையாட..?' என்றபோது 'அது இப்படி சார்... அது அப்படி சார்'ன்னு பெரிய கதைவிட்டான் அபிஷேக். பிக்பாஸ் பார்க்கவே இல்லைன்னு சொன்னே ஆனா உக்காந்து அதை அலசி ஆராய்ந்து இங்க வந்த மாதிரியில்ல இருக்கு உன்னோட நடவடிக்கை என்றதும்  பார்க்கலை சார், சுத்தமாப் பாக்கலை சார், வார இறுதியில நீங்க வர்றதால கொஞ்சம் பார்ப்பேன் சார், ப்ரோமோ மட்டும் பார்ப்பேன், ஆபீஸ்ல பேசும் போது கேட்பேன்னு விதவிதமா ரீல் சுத்த, நீங்க பாக்கலைன்னு சொன்னாலும் உங்க செயல்பாடுகள் என்ன செய்தீங்கன்னு மக்களுக்குக் காட்டிரும் என்றார்.

அக்சரா எழுதிக் கொடுத்த பிரச்சினையைப் பேசும்போது ப்ரியங்காவை வைத்துச் செய்தார். நீ எழுதிக் காட்டலையா என்ற போது ப்ரியங்கா ஏதேதோ பேசினார். இந்த ப்ரியங்கா பேச ஆரம்பித்தால் மணிக்கணக்குல பேசுகிறார், முடியல. துண்டுச் சீட்டு விவகாரம் நல்லதல்ல என்றார் கமல்... இது யாருக்கு... ஆக... யாருக்கோ.

பாவனி - அக்சரா பிரச்சினையைப் பற்றிப் பேசினார், பார்க்கப் போனா அக்சரா பிரச்சினைக்குரிய ஆளாகத் தெரிந்தாலும் நிறைய சைலன்ட் கில்லர்ஸ் இருக்காங்க அவங்களைத்தாண்டி மிகப்பெரிய பிரச்சினைக்காரின்னா அது பாவனிதான், தன்னோட தலையில தானே மண்ணள்ளிப் போட்டுக்கும்ன்னு தோணுது, எதுவுமே புரியாம எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு சண்டைக்குப் போயிருது. கமல் பேசி முடித்ததும் அவங்க பிரச்சினையைத் தீர்த்து வைக்க அர்னால்ட் நிரூப்பும் அபினய்யும் பேசினாங்க, நானா போய் பேசணுமா அது மட்டும் முடியாதுன்னு இருவரும் ஈகோவைத் தூக்கி வச்சிக்கிட்டாங்க.

தாமரையும் இசையும் விளையாட்டில் கலந்துக்காம ஒதுங்கியிருந்துக்கிட்டு யாராவது எனக்கு உதவுங்கன்னு இருப்பதை நேரடியாகக் கண்டித்தார். உங்க விளையாட்டை நீங்க விளையாடுங்க, அடுத்தவர் முதுகில் சவாரி செய்யாதீங்க என்றார். சுருதி போன வாரமே பேச வாய்ப்புக் கிடைக்கலை என்றதால் பேச வாய்ப்புக் கொடுத்தார்.  

சனிக்கிழமை அடி வாங்கியதெல்லாமே அபிஷேக்தான், கமல் பலர் எழுதுவதையும் வாசித்து அதிலிருந்துதான் தான் என்ன பேச வேண்டும் என்பதை முடிவு செய்வார் என்பது முதல் சீசனில் இருந்தே தெரிந்ததுதான் என்றாலும், அபிஷேக்கின் செயல்பாடுகளை அக்குவேரு ஆணிவேராக பிரித்து மேயக் காரணம் சமூக தளங்களில் அபிஷேக் மீது எழுந்த விமர்சனங்கள்தான் என்று தோன்றியது. எல்லாரையும் தானே கட்டி ஆள வேண்டும் என்ற ஆசை ஒரு திராவிடனாய் அவனுக்குள் இருந்ததில் ஆச்சர்யமில்லை என்றாலும் கமலுக்கு இவ்வளவு கோபம் எந்த சீசனிலும் வரவில்லை என்றே தோன்றியது - இது அறிவுரை இல்லை கண்டிப்பு என்றதில் தெரிந்தது போன வாரத்தில் கமலிடம் காணமல் போயிருந்த நேர்மையின் உருவம்.

தாமரை, இசை அப்படின்னு சிலரைக் காப்பாற்றி அபினய், இசை, சின்னப்பொண்ணு, அபிஷேக், ப்ரியங்காவை பதட்டத்தோடு அமர வைத்துச் சென்றார்.

ஞாயிற்றுக்கிழமை...

சிபியின் தலைவர் பதவி பற்றியும் அதில் மற்றவர்களின் கருத்துக்கள் என்ன என்பதைப் பற்றியும் பேசினார். சமையல் பிரச்சினையில் அண்ணாச்சின் உப்பில்லையை கொஞ்சம் உப்பு வைத்தே பேசினார். பட்ஜெட் விளையாட்டில் ரொம்பப் பேர் உண்மையாக விளையாடவில்லை என்ற அர்னால்டின் கருத்தை விவரிக்கச் சொல்ல, அர்னால்ட் கொஞ்சம் யோசித்துப் பின் வாங்கினான், ஆனாலும் கமல் விடவில்லை - அர்னால்ட் பின் வாங்கக் காரணம் அப்படி விளையாடாடதில் முதன்மை அவனின் சிங்கர் குழுதான்.

சிபியைத் தலைவராக்க அதிகமான மாலையைப் பெற்றிருந்த ராஜூக்கிட்ட இருந்து எடுத்த காரணம் என்ன என்று துருவித் துருவிக் கேட்க, அபிஷேக் இடைபுக, உன்னைக் கேக்கலையே நீ ஏன் வடிவேலு மாதிரி வாலண்டியரா வண்டியில ஏறுறே என்று மூக்கு மேலே (வாசகம் உதவி பாவனி) கேட்டார்.  ராஜூவிடம் அது குறித்துக் கேட்டபோது எனக்குப் பாவனியை விட சிபியை ரொம்பப் பிடிக்கும் என்றதும் இப்ப ஒரு உண்மை தெரிஞ்சிருச்சு என எடுத்துக் கொடுத்தார். இந்தப் பாவனி வேற இதை என்னைக்காச்சும் சொல்லிச் சண்டை இழுக்குமேங்கும் போதுதான் பாக்குற நமக்கு பதக்குன்னு இருந்துச்சு.

குழுக்களாய் இருப்பதாய் அண்ணாச்சி, சுருதி ஆகியோர் சொன்னார்கள், அது குறித்தான விவாதமும் நடந்தது.

ராஜூவின் பலகுரல் இசையை ஒரு கலைஞனாய் பாராட்டினார், தான் விகடகவியாக நடித்ததைக் காட்டிலும் சிறப்பாக இருந்தது என்ற பாராட்டு ராஜூவுக்கு மிகப்பெரிய வரம் என்று கூட சொல்லலாம். நல்லவற்றைப் பாராட்ட கமல் எப்போதும் தயங்கியதில்லை, அந்த வகையில் அவரைப் பாராட்டலாம்.

அதிகாலையில பப்ளிக் டாய்லெட் வாசல்ல காத்துக்கிட்டு இருக்கவனோட நிலமையிலதான் அபிஷேக் இருந்தான். உடலெங்கும் ஓடிய டபடப்பை வெளிக்காட்டாமல் அமர்ந்திருந்தான். அதுவும் ப்ரியங்காவையும் அபினய்யையும் காப்பாற்றிய பின் அவனின் படபடப்பு கூடி, அழுது முகம் கழுவியவன் மற்றவரின் கேள்விகளுக்கு மழுப்பலாய் பதில் சொன்னான். 

ரொம்ப இழுக்காமல் ஐக்கியைக் காப்பாற்றி, அபிஷேக்கை வெளியில் அழைத்ததும் எல்லாரும் குழுறினார்கள் - நீதான் இந்த வீட்டின் குசேலன் - நீதான் இந்த வீட்டின் இராஜராஜ சோழன் - எங்களை ரட்சிக்க வந்த ஏசுகிருஷ்ணன் - எங்களைப் பாதுகாத்த இராஜேந்திர சோழன் - விடியலை ஏற்படுத்தி இருட்டை விரட்டியதாய் படம் காட்டும் முகஸ் - குடும்பத்தை அரவணைத்த முக - சின்னம்மாவைத் தூக்கி எறிந்த இபிஎஸ் - இபிஎஸ்ஸைத் தாங்கிய  ஓபிஎஸ் - என ஆளாளுக்கு விருமாண்டியில் அப்பத்தா செத்ததும் 'ஏ நாயே என் தாயே'ன்னு கமல் அழுததைப் போல் அழுதார்கள்.

ப்ரியங்கா 'போகுதே போகுதே என் பைங்கிளி'ன்னு அழுதுச்சு. இதுக்கு இடையில அர்னால்டுக்கும் ப்ரியங்காவுக்கும் உண்மையா விளையாண்டதுல மிகப்பெரிய சண்டை, அஞ்சாங்கிளாஸ் டீச்சர் ஆங்கிலம் பேசுவது போல் விடாமல் ப்ரியங்கா பேச, தாமரை மாதிரி நாமளும் என்ன சொல்லுதுன்னு விளங்காமல் விக்கித்துப் போய் அமர்ந்திருந்தோம்.

அபிஷேக்கை உள் நிறுத்த காயினை உபயோகிப்போம் என்று ஆளாளுக்குப் பிதற்ற, பாவனி என் உயிரை -காயின்- கொடுத்து உன்னைக் காப்பேன்னு காயினோட ஓட, இப்ப இதால யாரையும் காப்பாத்த முடியாது, அதுக்குன்னு ஒரு நேரம் காலம் இருக்குன்னு பிக்கி சொல்லிட்டாரு, காயினால நான் இங்க தங்க விரும்பலைன்னு அபிஷேக் சொல்லிட்டான். அப்புறம் கிளம்பிட்டான்.

கமல் அவனிடம் பேசி, உன்னை நீ பார் - மற்றவர் மீது உன் எண்ணத்தை திணிக்காதே என்றெல்லாம் சொல்லி, குறும்படம் போட்டு அனுப்பி வைத்து விட்டுக் கமல் கிளம்பினார்.

முக்தா சீனிவாசன் எழுதிய சிறுகதை தொகுப்பு பற்றி தனது புத்தக அறிமுகத்தில் சொன்னார்.

வீட்டுக்குள் அபிஷேக்குக்காக எல்லாரும் பொங்கிக்கிட்டு இருந்தாங்க, அண்ணாச்சி மட்டும் அவன் மூளைக்கு அவன் தேர்ந்தெடுத்த பாதை தவறு, இதை விட்டுட்டு அவன் அவனாக விளையாண்டிருந்தால் கண்டிப்பாக வெளியே போயிருக்கமாட்டான் என்றார். அதுதான் உண்மையும் கூட.

அபிஷேக் உள்ளே தன் எண்ணப்படி மற்றவர்கள் விளையாட நினைத்ததும், எல்லாரையும் தன் கைக்குள் வைத்துக் கொள்ள நினைத்ததும் வெளியேறக் காரணம் என்றாலும் கமலின் பேச்சின் போது அவனின் முகபாவங்கள், பிக்பாஸெல்லாம் ஒரு விளையாட்டா என்பதைப் போல் அது குறித்தான மதிப்பீடு, பெண்களை அரவணைப்பது போல் தன் ஆதிக்கத்துக்குள் வைத்துக் கொள்ள முயற்சித்தது, ஏன்டா பள்ளிக்கூடம் போறவங்களை எல்லாம் இங்க கூட்டியாந்தீங்க போன்ற வார்த்தைப் பிரயோகங்களே வெளியேற - வெளியேற்ற - முக்கியக் காரணமாக இருந்திருக்கும் என்றே தோன்றுகிறது.

அபிஷேக் இல்லைன்னா விளையாட்டே இல்லை என்ற ஒரு பிம்பம் இருக்கு, பலர் இப்படித்தான் சொல்றாங்க, ஆனாலும் இனிதான் மற்றவர்கள் தங்கள் விளையாட்டை விளையாடுவார்கள், போட்டியின் போக்கு இனிதான் மாறும்.

பார்க்கலாம் - எதிர்பாராததை எதிர்பார்க்கலாம் என்பதுதானே கமலின் தாரக மந்திரம். அபிஷேக்கின் வெளியேற்றம் கூட சென்ற சீசன்களைப் போலில்லாமல் நாங்கள் சரியாக, மக்கள் விருப்பப்படிதான் நடத்துகிறோம் என்பதைக் காட்டத்தானே.

தொடரும்.

-'பரிவை' சே.குமார்.

3 எண்ணங்கள்:

துரை செல்வராஜூ சொன்னது…

இதுவும் ஒரு நிகழ்ச்சி என்று இதனை நேர்முகம் செய்து கொண்டு இருக்கின்றீர்களே!..

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அபிஷேக் இனிமேல் மாறட்டும்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

அன்பின் ஐயாவுக்கு,

தங்கள் கருத்துக்கு நன்றி.

நலமா?

இது ஒரு நிகழ்ச்சி என்பதை விட கமலைப் பிடிக்கும் என்பதால் பார்க்க ஆரம்பித்ததுதான். மெகாசீரியல்களில் மூழ்கிக் கிடக்கும் வெளிநாட்டு வாசிகளைப் போலில்லாமல் இதைப் பார்ப்பது ஒரு வகையில் பிடித்துத்தான் இருக்கிறது. இரவு பத்தரை மணிக்கு அறையில் விளக்கு அணைக்கப்படும், பின் எழுதுதல் என்பது சாத்தியமில்லை என்பதால் தூக்க நேரம் எடுக்கும் என்றால் ஏதாவது பார்ப்பதுண்டு- அதை இது எடுத்துக் கொள்கிறது.

போக, முதல் சீசன் முதலே எழுதுவதால் என் எழுத்துக்கான பயிற்சியாகத்தான் இதை நான் எடுத்துக் கொள்கிறேன். இருமுறை இணைய இதழ்களில் எழுதும் வாய்ப்பும் கிடைத்தது.

பிடித்தது பிடிக்காதது என்பதைவிட அதில் தெரிந்து கொண்டதென்ன என்பதையே எழுத முயற்சிப்பேன். என் எழுத்தை உயிர்ப்போடு வைக்க தினமும் ஏதாவது எழுத வேண்டும் என்று நினைப்பேன். அதனால்தான் இதில் இறங்கினேன்.

நன்றி ஐயா.