மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 4 ஏப்ரல், 2020

மனசின் பக்கம் : மதம் மறந்து மனிதம் பேணுங்கள்

தம் பிடித்து ஆடும் மனிதர்களைப் பற்றி எழுதும் எண்ணத்துடன்தான் அமர்ந்தேன். இவர்களைப் பற்றி என்ன எழுதுவது என்ற அயற்சியுடன் எழுதும் மனநிலையும் அற்றுப் போய் அமர்ந்தவன் பஹத் பாசில் நடித்த டிரான்ஸ் படத்தைப் பார்க்கலாமென ஆரம்பித்தால் ஏனோ படத்துடன் ஒட்ட முடியவில்லை... இவ்வளவுக்கு பஹத் என்னும் நடிப்பு ராட்சஸனின் இதில் அடித்து ஆடியிருக்கிறான் என்று எல்லாருமே சிலாகித்து எழுதியிருந்தும் மனநிலை ஒட்டவில்லை என்றால் அது எப்படிப்பட்ட படமாகினும் நம்மை ஈர்க்காது.

தென்காசி சம்பவம் இவர்கள் தெரிந்தேதான் செய்கிறார்கள் என்பதைப் பறை சாற்றியிருக்கிறது. எல்லா மதத்துக்கும் தெய்வம் உண்டுதான்... சாமி கும்பிட்டாலும் கும்பிடாவிட்டாலும் அவனவன் மதக் கொள்கை அவனவனுக்கு... கோவில்கள், சர்ச்சுகள் எல்லாம் மூடப்பட்ட நிலையில் இவர்கள் மட்டும் அல்லாவிடம் அப்படி என்ன வேண்டிவிடப் போகிறார்கள்..? என் இஸ்லாமிய நண்பர்கள் பலர் இதை வன்மையாகக் கண்டித்திருப்பது போற்றுதலுக்குரியது. பல படித்த நண்பர்கள் அவர்களை ஆதரிப்பதும் மதம் சார்ந்து நிற்பதும் வேதனை அளிக்கிறது.

இந்த நோய் தன்னையும் கொல்லும்... குடும்பத்தையும் கொல்லும்... பக்கத்து வீட்டுக்காரனையும் கொல்லும் என்பதை மறந்து அல்லது தெரிந்தே இப்படிச் செய்வதை என்னவென்று சொல்வது..? இவர்கள் செய்வதைப் பற்றிக் கோபப்பட்டால் நம் நண்பர்களே நம்மைச் சங்கி எனச் சொல்லக் கூடும். இப்போதுதான் சாமி கும்பிடுபவன் எல்லாம் சங்கியாகி விட்டானே... 

இன்றைய நிலமையைப் புரிந்து நடந்தால் நாளைய போராட்டதுக்கு உயிர் இருக்கும்... இல்லையேல் என்ன சொல்வது...? தாங்கள் மதமே பெரிதென நம்பும் மூடர்கள் எந்த மதத்தில் இருந்தாலும் அது அந்த மதம் சார்ந்த மக்களுக்கு மட்டுமின்றி நாட்டுக்கே கேடு... இதற்கு மேல் விரிவாகப் பேச விருப்பமும் இல்லை மனமும் இல்லை.

ஊரிலிருந்து வந்த பிறகு மனநிலை ஒரு நேர்கோட்டில் பயணிக்காத நிலையில் கொரோனாவும் சேர்ந்து கொள்ள, அறைக்குள் அடைந்து கிடப்பது... படுத்திருக்கும் கட்டிலில் அமர்ந்து வேலை செய்வதென வெறுப்பே மிதமிஞ்சி நிற்கிறது. ஆட்குறைப்பு செய்யலாம்... சம்பளத்தைக் குறைக்கலாம் எனத் தனியார் நிறுவனங்களுக்கு அரசு ஆணை பிறப்பித்தவுடன் எப்போதெனக் காத்திருந்த கூட்டம் மார்ச் மாதம் முழுவதும் வேலை பார்த்தவனுக்கு சம்பளத்தில் பிடித்தம் செய்ய ஆரம்பித்திருக்கிறது. அரசின் அறிவிப்பு நிறுவனங்களுக்குப் பாலையில் மழை பெய்தது போலாகிவிட்டது.

அறை நண்பர் வாங்கும் சம்பளத்தில் பிடித்தம் செய்யப் போவதாக அலுவலகத்தில் இருந்து சொல்லிவிட்டார்கள். மனிதர் புலம்பலுடன் இரவுத் தூக்கத்தையும் இழந்து விட்டார்... வாங்கும் சொற்பச் சம்பளத்தில் பிடித்தம் என்பது எவ்வளவு பாதிப்பைக் கொடுக்கும் என்பதைச் சொல்லித்தா தெரிய வேண்டுமென்பதில்லை... வெளிநாட்டு வாழ்க்கை மகிழ்வையோ பணத்தையோ அவ்வளவு எளிதில் கொடுத்து விடுவதில்லை... பார்த்த வேலைக்கேற்ற ஊதியம் என்பது கேள்விக்குறிதான். 

எங்கள் கம்பெனியில் நான்காண்டுக்கு பிறகு சம்பள உயர்வு இருக்குமென பிப்ரவரி மாதத்தில் சொன்னார்களாம்... ஏப்ரலில் நடைமுறைப் படுத்தப்படும் என்றார்களாம்... இப்போது நிலமை வேறு... உயர்வெல்லாம் உயரே போய்விட, ஜரூராய் ஆட்குறைப்பு சென்ற வாரம் முதல் ஆரம்பித்திருக்க, இப்போது 25% பிடிமானம் இருக்கலாம் என்று சொல்கிறார்கள்... உண்மை நிலவரம் தெரியவில்லை... இருப்பினும் 25% பிடிமானம் போக வாங்கும் சொற்ப சம்பளத்தில் இங்கு ஏன் நிற்க வேண்டும்..? ஒரு மாதம் இரு மாதம் என்றால் சரியெனக் கடத்தலாம் எங்கள் நிறுவனம் இதைச் செயல் படுத்த ஆரம்பித்தால் அது அப்படியேதான் தொடர ஆரம்பிக்கும்... அப்படி ஒரு நிலை வந்தால் இங்கெதற்கு இருக்க வேண்டும்...? என்ற எண்ணமே மனசுக்குள் பிரதானமாய்...

சம்பளத்தைக் குறைக்கலாம் என்ற அரசு, கடைகளில் விற்கும் பொருட்களின் விலைகளை ஒரு வரைமுறைக்குள் கொண்டு வரவில்லையே... ஐந்து திர்ஹாமுக்கு வாங்கிய சுரைக்காய் இன்று பதினேழு திர்ஹாம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்... கடை வைத்திருப்பவன் பெரும்பாலும் மலையாளியும் பெங்காலியும்தான்... அவர்கள் குணத்தைக் காட்டுகிறார்கள் என் செய்வது...? கடைகளுக்குச் செல்லும் மக்களுக்கு கையுறை கொடுக்கப்படுகிறது... கிருமிநாசினி கண்டிப்பாக கைகளில் தடவிக் கொள்ள வேண்டும்... முகக்கவசம் அணிந்தால் மட்டுமே அனுமதி என்ற கெடுபிடிகள் இருப்பது பாராட்டுதலுக்கு உரியது. முப்பது பேர் மட்டுமே உள்ளே அனுமதி மற்றவர்கள் இடைவெளி விட்டு வெளியில் நில்லுங்கள் என்பதை எல்லாரும் சரிவரப் பயன்படுத்துதல் பார்க்க அழகாய் இருக்கிறது...  நம்ம ஊர்க் கறிக்கடையில் நிற்பதைப் போல் இங்கு எங்கும் பார்க்க இயலவில்லை...

எட்டு மணிக்கு ஊரடங்கு என்றால் மக்கள் எல்லாம் வீட்டுக்குள்தான் இருக்கிறார்கள்... வீம்புக்கு கொரோனாவைக் காட்டு என எவனும் வெளியில் வரவில்லை... எனக்கு அங்க போனால்தான் என்னால் இறைவனிடம் நேரிடையாகப் பேச முடியும் என எவனும் சொல்லவில்லை... கை தட்டுங்கள் என்றதும் எதற்கு...? கொரோனா இறக்குமா...? கேனத்தனமாகச் சொல்கிறாய்...?  என எவனும் பதிவெழுதவில்லை... மீம்ஸ் போடவில்லை...  இதையெல்லாம் பார்க்கும் போது இந்த நாட்டுச் சட்டதிட்டமே நம் நாட்டிலும் இருந்தால் தமிழகம் இரண்டாம் இடத்துக்கும் போயிருக்காது... (நாளை முதலிடமாகவும் இருக்கலாம்.) இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் விரைந்து நகராது. என்ன செய்ய... ஜனநாயக நாடு என்ற ஒன்றே ஜனங்களை ஏன்..? எதற்கு..? எப்படி...? எனக் கேள்வி கேட்க வைக்கிறது.  

நீ செய்வது தவறு அதைச் செய்யாதே என்றால் அவன் அங்க கூடலையா... இவன் இங்கே கூடலையான்னு எதிர்க் கேள்விகள்... அதில் ஒருவர் எடப்பாடிக்கு முதலில் பரிசோதனை பண்ணுங்கள் என்கிறார்... என்னத்தைச் சொல்வது...? எங்கு கூடினாலும் தவறு தவறுதானே... நம்மில் இருந்து தொடங்கினால் நலம்தானே... அவன் செய்கிறான் என நானும் செய்வேன் என்பது என்ன வகை நியாயம்..?  அம்மாவோ அய்யாவோ இருந்திருந்தால் இத்தனை சிரத்தையான நடவடிக்கைகள் எடுத்திருப்பார்களா என்று யாரும் யோசிக்கவில்லை... தன்னாலான எல்லாமும் செய்யும் அரசுக்கு நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான் அவர்கள் சொல்வதைக் கேட்டு வீட்டுக்குள் அடங்கியிருப்பதே... வீம்புக்கு வீதிக்கு வந்தால்...? நாலு பேர் தோளில்தான் செல்ல வேண்டும்.

இன்னும் எத்தனை நாள்... எத்தனை வாரம்... எத்தனை மாதம் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது... கண்ணுக்குத் தெரியாத ஒரு கிருமி உலகை அழித்துக் கொண்டிருக்கிறது.... அதன் ஆர்ப்பரிக்கும் ஆட்டம் அடங்கப் போவது எப்போது என்பது தெரியாத நிலையில்தான் உலகம் ஓடிக் கொண்டிருக்கிறது. உலகையே தன் கையில் பிடித்து ஆட்டிக் கொண்டிருந்த அமெரிக்காவைத் துவம்சம் செய்து கொண்டிருக்கிறது கொரோனா... என் கையில் எதுவும் இல்லை என டிரம்ப் கைவிரிக்க ஆரம்பித்துவிட்டார். இப்போதே வேகமெடுக்கும் இறப்பு விகிதம் இன்னும் சில நாளில் இத்தாலியை விட அதிகமாகும்... ரெண்டரை லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்... இதே நிலை நம்ம நாட்டில் வந்தால்... என்னாகும்...? யோசித்தோமா...? மருத்துவ வசதிகள் அந்தளவுக்குச் செய்ய முடியுமா..? கொத்துக் கொத்தாக மனிதர்கள் சாவார்கள்... என்ன செய்ய முடியும்... கொஞ்சமேனும் யோசித்தால் இருபத்தி ஒருநாள் வீட்டுக்குள் இருக்கச் சொன்னதை ஏற்றுக் கொள்வோம். தெய்வங்கள் கோவிலிலும் சர்ச்சிலும் மசூதியிலும் பத்திரமாக இருக்கும்... முதலில் நாம் பத்திரமாவோம்... அதன் பின்னர் அவர்களைச் சந்திக்கலாம்.

இருபத்தி ஒருநாள் என்பதை மோசமாகப் பார்க்கிறோம் நாம்... எப்படி இருப்பது என எகத்தாளம் பேசுகிறோம்... நாங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறோம் என்று சொன்ன சிங்கப்பூர் ஏப்ரல் ஏழாம் தேதி முதல் ஒரு மாதம் ஊரடங்குக்கு உத்தரவிட்டிருக்கிறது. காலையில் தம்பியிடம் பேசும் போது அதெல்லாம் பிரச்சினை இல்லை... அரசு சொல்வதைக் கேட்டு இருந்து விடுவோம் என்றார். அங்கெல்லாம் இருப்பார்கள்... இல்லையேல் அரசு அடித்தாடிவிடும்... இப்பவே நாட்டை விட்டு எவன் வெளியே போனாலும் மீண்டும் சிங்கப்பூர் வரமுடியாதென அதிரடியாய் அறிவித்து விட்டார்கள்... அரசின் ஆணைக்கு மக்களும் ஒத்துழைக்கிறார்கள்... நாங்கள் இருக்கும் அமீரகத்தைப் போல. 

வயதானவர்கள் மட்டுமே சாகிறார்கள் என்று சொன்னவர்கள் மத்தியில் இளைஞர்களும் சாகத்தான் செய்கிறார்கள்... குழந்தைகளை அதிகம் பாதிக்காது என்றார்கள்... குழந்தைகளுமே பாதிக்கத்தான் படுகிறார்கள்... கை கொடுத்தால்... தும்மினால் பரவும் என்றார்கள்... அருகருகே நின்றாலும் பரவியிருக்கிறது எனச் சர்வே அறிக்கை கொடுக்கிறார்கள். அடித்து ஆடும் கொரோனாவின் முன்னால் அறிவியல் எல்லாம் படுத்துக் கிடக்கிறது... மருந்து இல்லாமல் இந்தக் கிருமியை ஒழிக்க வேண்டுமென்றால் நாம் ஒவ்வொருவரும் நம்மிலிருந்து தொடங்க வேண்டும்... வெளியில் சுற்றுதலை விடுத்து வாழ்வின் எஞ்சிய பக்கங்களை மகிழ்வாய் வாழ, சில நாள் வாழ்க்கையை தியாகம் செய்வோம் மக்களே...

மதம் கடந்து மனிதத்துடன் வாழ முயலுங்கள்...

மனிதமே உங்களை நிலை நிறுத்தும்... மதம் அல்ல என்பதை உணருங்கள்...

-'பரிவை' சே.குமார்.

11 எண்ணங்கள்:

Yarlpavanan சொன்னது…

சிறந்த வழிகாட்டல்
வரவேற்கிறேன்

துரை செல்வராஜூ சொன்னது…

தறுதலைகளால் சூழ்நிலை தடுமாறுகின்றது..
தடம் மாறுகின்றது...

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நல்ல பாயின்ட்ஸ் குமார்!!! அங்கு எல்லாம் சட்டத்தை மதிக்கிறார்கள் இங்கு நம் மக்கள் எங்கு போனாலும் கடைக்குச் சென்றாலும் கூட தள்ளி நிற்பதில்லை இத்தனைக்கும் வட்டம் போட்டுத்தான் இருக்கிறார்கள். என்ன செய்ய. எல்லா நிகழ்வுகளுமே இங்கு மீம்ஸ் ஆகிறது வதந்திகளுக்கும் கட்டுக் கதைகளுக்கும் பஞ்சமில்லை.

உங்களின் நிலைமை வருந்த வைக்கிறது. குமார் நல்லதை நினைப்போம் நல்லது நடக்கப் பிரார்த்திப்போம். கண்டிப்பாக நல்லது நடக்கும்.

கீதா

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

குமார் ஏதோ ஒரு மாரியம்மன் கோயிலில் கூட மக்கள் கூடியதாகத் தெரிகிறது. பெரிதாகப் பேசப்படவில்லை. அதுவும் தவறுதான்.

மக்கள் சும்மாவேனும் சமூகவலைதளங்களில் குறிப்பிட்ட மதம் அல்லது சமூகத்தைப் பற்றி புரளிகள், கட்டுக்கதைகளைப் பரப்புவது நாட்டிற்கு நல்லதல்ல.

கீதா

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

நம்மிலிருந்து தொடங்குவோம். இதனை எதிர்கொள்வோம்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஆயிரம் விமர்சனம் இருந்தாலும், அமைச்சர் விஜயபாஸ்கர் நன்றாக தான் செயல்பட்டார்... அவர் ஏன் ஓரம் கட்டப்பட்டு, 'பீலா' எதற்கு களமிறங்கி உள்ளார்...?

சே... இந்த நேரத்திலும் மதம்...

கோமதி அரசு சொன்னது…

அருமையான பதிவு.
மக்கள் புரிந்து நடந்து கொண்டால் நல்லது.
ஒரு சிலர் செய்யும் தவறால் அனைத்து மக்களும் பாதிக்கப்படும் நிலமை.
விரைவில் இறைவன் அருளால் சரியாக வேண்டும்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லதே நடக்க வேண்டும். இந்த நேரம் மதத்திற்கானது அல்ல... மனிதத்திற்கானது. ஒவ்வொருவரும் உணர வேண்டிய விஷயம். உணர்ந்தால் நலம்! இல்லையேல் அனைவருடைய வாழ்க்கையும் “அவன்” கையில்!. நலமே விளையட்டும். அது மட்டுமே இப்போதைய தேவை.

வல்லிசிம்ஹன் சொன்னது…

அதி கொடூரமாக நோய் எல்லா இடங்களிலும் தாண்டவமாடும் போது,
நம் நாட்டில் இந்தக் கலவரங்கள் அவசியமா. சிந்திக்க மாட்டார்களா. நம்மைக்காக்க வரும் மருத்துவர்கள் மேல் கல்லெறிவதால்
நம்மையே தண்டிக்கிறோம் என்று தெரிய வேண்டாமா.
மிக மிக வருத்தம்.

ஸ்ரீராம். சொன்னது…

மதங்கள் மறைந்து மனிதம் தலைதூக்க வேண்டிய நேரம்.

Bhanumathy Venkateswaran சொன்னது…

நல்ல பதிவு. இந்த நிலையில் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களை நினைத்தால் மனம் மிகௌம் சங்கடபடுகிறது. தாய் நாட்டிற்கும் திரும்ப முடியாது, சம்பளக் குறைப்பில் அங்கு காலம் தள்ளுவதும் கடினம். கடவுள் மேல் நம்பிக்கை இழந்து விடுமோ என்று பயம் வருகிறது. இதுவும் கடந்து போகும் என்று நம்பலாம்.