மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 1 மே, 2020

'எதிர்சேவை - மண்வாசம்' - எழுத்தாளர் கோபி சரபோஜி

திர்சேவைக்கு மீண்டும் ஒரு விமர்சனம்... இம்முறை எழுத்தாளர் கோபி சரபோஜி அவர்களிடமிருந்து வந்திருக்கிறது. இந்த விமர்சனத்தை எழுதி முடித்து ஏதாவது பத்திரிக்கைக்கு அனுப்பும் எண்ணத்தில் இருந்தவர், எங்கள் அமீரக எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் குழுமம் நடத்திய புத்தக விமர்சனப் போட்டிக்கு அனுப்பலாமா..? என முகநூல் வழி என்னிடம் கேட்டார். தாராளமாக அனுப்புங்கள்... அது உங்கள் பார்வை... உங்கள் எழுத்து என்னிடம் என்ன கேள்வி என்றேன். இறுதி நாளில் அனுப்பி வைத்து வெற்றியின் எல்லையான இறுதிச் சுற்று வரைக்கும் களத்தில் நின்றார்... அது அவரின் எழுத்துக்கு கிடைத்த வெற்றியே ஆகும்.


நேற்றிரவு பேசும்போது அடுத்ததாய் எங்கள் குழுமத்தின் புத்தக விமர்சனக் காணொளிப் போட்டி இருக்கிறது. அதில் புதிய எழுத்தாளர்களின் புத்தகத்தைக் கையில் எடுக்காமல் பெரும்பாலானோர் வாசித்த புத்தகத்தைக் கையில் எடுத்துக் கலந்து கொள்ளுங்கள் என்று சொன்னேன். அதற்கு அவர் சொன்னது வெற்றிக்காக கலந்து கொள்ளும் எண்ணம் எப்போதும் எனக்கு இருந்ததில்லை... பெரிய எழுத்தாளர்களின் கதைகளை எடுத்துக் கொண்டால் புதியவர்கள், நல்ல கதைகளை மற்றவர்களுக்கு அறியத் தராமல் போய்விடும் அல்லவா..? நாமே பிரபலங்களைத் தேடிச் சென்றால் மற்றவர்களிடம் புதியவர்களை கொண்டு செல்லும் பணியை யார் செய்வது..? நான் புதியவர்களின் எழுத்துக்களை பல இடங்களுக்கு எடுத்துச் செல்லவே எப்போதும் ஆசைப்படுவேன் என்றார்.

மேலும் உங்கள் புத்தகம் குறித்தான கட்டுரையை எந்த இணைய இதழுக்கு அனுப்பினால் உங்கள் புத்தகம் பலரைச் சென்றடையும் எனக் கேட்டார். நாம் சொல்லி அவர் அனுப்புதல் என்பது எனக்கு விருப்பமில்லை... அவரின் எழுத்து... அதற்கான அங்கீகாரம் எங்கு கிடைக்குமோ அங்குதான் அவர் அனுப்பவேண்டும் என்பதே என் எண்ணம் என்றாலும் இணைய வழி உறவின் மூலம் இத்தனை அன்பாய் பயணித்தல் என்பது எல்லாருக்கும் கிடைத்துவிடாது. எனக்கு அது அதிகமாகவே கிடைத்திருக்கிறது. இருவரும் பல இணைய இதழ்கள் பற்றிப் பேசினோம்... முடிவில் புத்தகம் பேசுது என்று முடிவாகியது. 

இன்றைய மே தின விடியலில் புத்தகம் பேசுதுவில் BOOKDAY.CO.IN எதிர்சேவைக்கான நூலறிமுக விமர்சனக் கட்டுரை வந்திருந்தது. வாசித்த போது மிகவும் மகிழ்ந்தேன்... ஆம் இன்றுதான் அவரின் விமர்சனத்தை வாசித்தேன். என்னிடம் தனியாக அனுப்பி வாசியுங்கள் என்றெல்லாம் சொல்லவில்லை. கதைகள் எப்படி என்று கேட்டபோது என் பார்வையில் பிடித்த, பிடிக்காத, எப்படி எழுதலாம் என்பவற்றைச் சொல்லியிருக்கிறேன் என்பதுடன் நிறுத்திக் கொண்டார். எப்பவுமே என் கதைகள் ஆஹா... ஓஹோ... அது மாதிரி யாராலும் எழுத முடியாது என்ற எண்ணமெல்லாம் எனக்குள் இருந்ததேயில்லை... நல்ல கதைகள் யார் எழுதினாலும் எனக்குப் பிடிக்கும்... சமீபத்தில் என்னைக் கவர்ந்த கதை யாவரும் தளத்தில் பதியப்படும் கொரோனா காலத்துக் கதைகளில் வெளியான ராம் தங்கத்தின் கதை... ஜீவா என்ற பையன் பின்னே நம்மையும் பஞ்சுமிட்டாய் வாங்க ஓட வைத்த கதை... எப்போதுமே என் களம் வேறு... காட்சிப்படுத்துதலில் கவனம் கொள்வேன் அவ்வளவே. 

பெரும்பாலான கதைகளைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். 'குலசாமி' மற்றும் 'விரிவோடிய வாழ்க்கை' குறித்தான அவரின் பார்வை மிகவும் சரி... அது இரண்டுமே போட்டிகளுக்காக அவர்கள் கொடுத்த செய்தியை வைத்து எழுதிய கதைகள் என்பதால் கொஞ்சம் பிரச்சார நெடி இருக்கும்... தவிர்க்க இயலாதது என்றாலும் குலசாமியின் ஆரம்பத்தில் வரும் பாராக்களைத் தவிர்த்திருக்கலாம்தான்... அதேபோல் விரிவோடிய வாழ்க்கை வேறு தளத்தில் எழுத முயற்சித்திருக்கலாம்... உண்மையைச் சொன்ன விமர்சனத்துக்கு மிக்க மகிழ்ச்சி.

'எதிர்சேவை'யை இன்னும் இழுத்திருக்கலாம் என்பது பலரின் கருத்தாய் இருந்தது. இவரோ முடிவு இப்படித்தான் இருக்கும் என்பதை ஊகிக்க முடிந்தது என்று சொல்லியிருக்கிறார். ஆம்... மாமா மகளும் அத்தை பையனும் வரும் கதையில்... பைக்கில் பயணிக்கும் கதையில் முடிவை கண்டிப்பாக ஊகிக்க முடியுமல்லவா... அதையும் சொல்லியிருப்பது சிறப்பு.

'நினைவின் ஆணிவேர்' கதை பலரால் பாராட்டப்பட்ட முதல் பரிசு பெற்ற கதை. ஒரு பாரா கதையின் போக்குக்குத் தடையாக இருந்தது என்றும் அடுத்த பாராவில் தடை உடைந்தது என்று சொல்லியிருக்கிறார். இது இதுவரை யாரும் சொல்லாதது... அவரின் வாசிப்பின் தீவிரத்தை, ஆழ்ந்த வாசிப்பைத்தான் இந்த விமர்சன வரிகள் காட்டின.

'அப்பாவின் நாற்காலி', 'மனத்தேடல்' என எல்லாவற்றையும் பற்றிப் பேசியிருக்கிறார். புத்தகத்தில்... கதைகளில் இருக்கும் தவறுகளையும் நறுக்கெனச் சுட்டிக்காட்டியிருக்கிறார். அவரின் பார்வை என்னும் தராசு சாதக, பாதக விசயங்களைச் சரிசமமாகவே பார்த்திருக்கிறது என்பதுதான் இந்த விமர்சனம் கொடுக்கும் மிகப் பெரிய மகிழ்ச்சி... இப்படியான விமர்சனங்களே இன்னும் நம்மைப் பலப்படுத்தும் என்பது உண்மை.

ஒற்றுப் பிழைகள் ஆங்காங்கே பரவலாய் இருப்பதாய் சொல்லியிருக்கிறார். வட்டார வழக்கு என்னும் போது பெரும்பாலும் சரியான உச்சரிப்பில் வார்த்தைகள் வருவதில்லை... அதனால் இந்த ஒற்றுப் பிரச்சினையை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நாலைந்து முறை நாங்கள் திருத்திய போதும் நாம் பேசும் வழக்கில் கதைகள் இருந்ததால் ஒற்றுப் பிரச்சினையை யோசிக்கவில்லை என்பதே உண்மை. அவரிடமும் இதைச் சொன்னேன். இனி வரும் கதைகளில் இதையெல்லாம் கருத்தில் கொள்வேன் என்றும் சொன்னேன்.

உண்மையில் இப்படியான... அதிகப் புகழாரம் சூட்டாத விமர்சனங்களையே அதிகம் விரும்புகிறேன். எடுத்து வைத்த முதல் அடிக்கு பெரும்பாலும் பூக்களே வழியெங்கும் நிரம்பியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இனி வரும் கதைகளையும் இப்படியே படைக்க வேண்டுமே என்ற பயமும் இருக்கிறது. மிகச் சிறப்பான விமர்சனம்... புத்தகம் பேசுதுவில் வாசித்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்... 


அருமையானதொரு விமர்சனத்தைக் கொடுத்த அண்ணன் கோபி சரபோஜிக்கும், அதைப் பிரசுரித்த புத்தகம் பேசுது இணையத் தளத்துக்கும் நன்றி.
-'பரிவை' சே.குமார்.

5 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வாழ்த்துகள் குமார்...

பலவற்றை சுட்டிக் காட்டி உள்ளார்...

அவ்வப்போது தொடர்பு கொள்ளும் இனிய நண்பர்...

மு. கோபி சரபோஜி சொன்னது…

அன்பிற்கு நன்றி குமார்....

ஸ்ரீராம். சொன்னது…

வாழ்த்துகளும் பாராட்டுகளும் குமார்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

பாராட்டுகள் குமார்.

மாதேவி சொன்னது…

அவரின் விமர்சனம் உங்களை மேலும் முன்னேற்றமடைய செய்யும். வாழ்த்துகள்.