மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 6 ஏப்ரல், 2020

மனசு பேசுகிறது: கொரோனாவும் முகநூலும் சினிமாவும்

கொரோனா வைரஸ் சீனாவால் திட்டமிட்டு ...

கொரோனாவின் கோரத்தாக்குதல் தீவிரம் அடைந்து வரும் நிலையில் எல்லாருமே பாதுகாப்பாய் இருங்கள். அவசியமின்றி வெளியில் செல்வதைத் தவிருங்கள். அசைவம் சாப்பிடவில்லை என்றால் செத்துவிடுவேன் எனக் கடைகளில் காத்து நின்று நோயை விலை கொடுத்து வாங்காதீர்கள். அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பதை விடுத்து அவர்கள் கேட்டுக் கொள்வதைப் போல் வீட்டுக்குள் இருங்கள்... உங்கள் உயிர் மட்டுமின்றி வீட்டார்.... அக்கம் பக்கத்தாரின் உயிரும் முக்கியம் என்பதை உணருங்கள்.

நண்பர்களின் பதிவுகளை வாசித்தாலும் என் பதிவுக்கு வரும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டாலும் என்னால் கருத்து இடமுடிவதில்லை. அலுவலக கணிப்பொறியில் செய்ய முடியும் கருத்துப் பதிவு எனது கணிப்பொறியில் செய்ய முடிவதில்லை, ஏனென்று இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் தங்களின் பதிவுகளைப் படிக்கவில்லை என்று நினைக்காதீர்கள்... எல்லாவற்றையும் வாசித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

வீட்டில் இருந்து வேலை என்பது உடல்வலியையே கொடுக்கிறது... அலுவலகத்தில் வேலை என்றால் வேலையுடன் நம்ம வேலைகளையும் பார்க்க முடியும்... சில நாள் வேலை இல்லை என்றால் எழுத்து. வாசிப்பு என இருக்க முடியும்... வீட்டில் வேலை என்றதும் வேலை செய்யாமல் இருக்கக் கூடாது என்பதற்காக பலரின் வேலைகளை அள்ளித் தள்ளுகிறார்கள். அந்த வகையில் இன்று எங்களின் கீழே பணி எடுக்கும் இந்தியக் கம்பெனியில் ஆட்கள் பற்றாக்குறை என்பதால்... (சம்பளமே கொடுப்பதில்லை... மூன்று மாதத்து ஒரு ஆள் என ஊரில் இருந்து விசிட் விசாவில் கொண்டு வருவார்கள்) ஒரு குழு செய்யும் மொத்த வேலையையும் எங்க மேனேஜர் என்னிடம் தள்ளப் பார்க்கிறார். ஒரு குழு...  கிட்டத்தட்ட 5 பேர் பணி செய்து அதை இன்னொருவர் சரிபார்த்து எனக்கு அனுப்புவார். அதே வேலையை நான் ஒருவனே செய்ய வேண்டும் என்று சொன்னபோது முடியாது என்று மறுத்து அவர்கள் பாதி முடித்துக் கொடுத்தால் மட்டுமே நான் செய்வேன் எனச் சொல்லிவிட்டேன். வீட்டில் இருந்து வேலை என்பது உடம்புக்கும் மனசுக்கும் சோர்வையே கொடுக்கிறது. என்ன ஒரு ஆறுதல் ஊருக்குப் பேசலாம்... அதுவும் பல சமயங்களில் இணையம் பல்லிளித்துக் கொண்டிருக்கிறது. ஆறு மணிக்கு மேல் ஊருக்குப் பேசினால் எதுவுமே கேட்பதில்லை... கொரோனா இணையத்தையுமா தாக்கும்... :)

முகநூலில் இருக்கும் நண்பர்கள் மதம் சார்ந்து மிகப் பயங்கரமாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை நம்முடன் அன்பாய்ப் பழகிய நட்பா இது என்ற கேள்வி மனசுக்குள் எழுந்து ஆச்சர்யப்படுகிறது. எத்தனை வக்கிரம் இவர்களுக்குள்... எதையும் புரிந்து கொள்ளாமல் எல்லாத்தையும் தூக்கிப் பிடித்தல் என்பது எந்த வகையில் நியாயம்..? எங்கு நடந்தாலும் அது தப்புத்தான் என்று பேசவேயில்லை அவர்கள்... பிடிக்கிறது... பிடிக்கவில்லை என்பது இரண்டாம்பட்சம்... எப்படி இவர்களால் சொல்லாதையெல்லாம் திரித்து எழுதவும்... பிறந்த நாட்டைக் கேலி செய்யவும் முடிகிறது. பல நண்பர்களை... இதில் மதமெல்லாம் பார்த்துச் செய்யவில்லை... பலரை கொரோனா போகும் வரை வெளியில் நிறுத்தி வைத்திருக்கிறேன்... படித்தவன்... அங்காளி பங்காளியாய் பழகியவன்.... எல்லாரும் ஒண்ணுதான் சகோதரா என்றெல்லாம் சொன்னவனுக்குள் மதம் எவ்வளவு தீவிரமாய் இருந்திருக்கிறது... அப்படியென்றால் பழகியதெல்லாம்... உதட்டளவில்தான் போல.

இவர்களை விட மோசமானவர்கள் நேரில் பேசும் போது ஒரு மாதிரியும் முகநூலில் எழுதும் போது அதற்கு மாறாகவும் எழுதும் நண்பர்கள்... அப்படியான நண்பர்களின் பதிவுகளை மெல்லக் கடந்து வருகிறேன்... அப்படிக் கடக்கிற பதிவுகள் நிறைய... அதுவும் நெருங்கிய நண்பர்கள்.. இவர்கள் யாரிடம் நல்ல பேர் வாங்க பொதுவெளியில் தங்கள் எண்ணத்தை மாற்றி எழுதுகிறார்கள் என்பதுதான் விளங்கவில்லை... மதம், சாதி இதையெல்லாம் கடந்து பழகுபவன்தான் நான் என்றாலும் நாம் வழிவழியாய்ப் பின்பற்றி வரும் சிலவற்றை பிறருக்காக கேவலமாய் எழுதுபவர்களைப் பார்க்கும் போது கோபம்தான் வருகிறது, எப்போதும் கேலி செய்து எழுதும் நண்பர்களைச் சொல்லவில்லை. அவர்கள் யாருக்காகவும் தன்னை மாற்றிக் கொள்வதில்லை... அது எனக்குப் பிடிக்கும்... பிறர் பாராட்ட வேண்டுமெனத் தன்னைத் தன்னில் மறைத்துக் கொண்டு மூகமூடியுடன் பேசுபவர்களைத்தான் சொல்கிறேன்... அவர்களின் பதிவுகளுக்கு விருப்பமோ... சிரிப்பானியோ... அழுகையோ... கோபமோ... அன்போ போடாமல் நகர்ந்து செல்வதே நல்லதென முடிவு செய்திருக்கிறேன். கொரோனா முடியும் வரை முகநூலுக்கு ஊரடங்கு போடுதல் நலமெனத் தோன்றுகிறது.

இப்போது நிறையப் படங்கள் பார்க்க முடிகிறது... வேறென்ன செய்ய எழுதும் எண்ணம் எழவே மாட்டேங்கிறது... பழைய படங்களெல்லாம் பார்க்கிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்... மலையாளத்தில் சிறப்பான சில படங்களைப் பார்த்தேன்... தெலுங்கில் ஹிட் என்றொரு படம்... செம. அதேபோல் தமிழில் செம என்ற படங்களை எப்போதும் அதிகம் விரும்பிப் பார்க்கமாட்டேன். யாருமே பார்க்காத, திரையரங்குகள் அறியாத படங்கள் என்றால் உட்கார்ந்து பார்த்து முடிப்பேன்... அதில்தான் நிறைய எதார்த்தம் இருக்கும். அப்படிப் பார்த்த சில படங்களை இங்கு விமர்சனமாய் இல்லாமல் சில வரிகள் சொல்லிச் செல்லலாம் என்று நினைக்கிறேன்... முடிந்தவர்கள் பாருங்கள்.

மீண்டும் ஒரு மரியாதை - விமர்சனம் {1.5/5 ...

பாரதிராஜாவின் 'மீண்டும் ஒரு மரியாதை'... தியேட்டருக்கு வந்துச்சா தெரியாது... தமிழ் ரசிகனில் படங்களைத் தேடும் போது பாரதிராஜா போட்டோ பார்த்து என்ன படமெனப் பார்க்க ஆரம்பித்தேன்... கிராமத்துக் காதலன் வெளிநாட்டில்... வித்தியாசமான கதைக்களம்... மெல்லத்தான் நகரும்... தற்கொலை செய்ய நினைக்கும் பெண்ணைக் காப்பாற்றி, தன்னுடன் கூட்டிக் கொண்டு நாடோடியாய் செய்ய வேண்டிய கடமைக்காக நடக்கிறார்... முடிவு என்னாகிறது என்பதே படம்.... பாரதிராஜா கலைஞன்யா... அதை யாராலும் மறுக்க முடியாது... அந்தக் கதாபாத்திரத்துக்கு அவர்தான் பொருத்தம்... என்ன நடிப்பு... மனுசன் தமிழ்ச் சினிமாவில் சாதித்தவன் என்பதை எத்தனை பெருமையாகச் சொல்ல முடியுமோ அப்படிச் சொல்லலாம்... அருமையான... நேர்த்தியான திரைக்கதை.

'செத்தும் ஆயிரம் பொன்' அப்படின்னு ஒரு படம் கிடக்கு... நல்லாயிருக்கு நல்லாயில்லைன்னு என்னால சொல்ல முடியாது... ஆனா படம் பார்க்க நல்லாயிருக்கு என்றார் நண்பர்... அதையும் எடுத்துப் பார்த்தேன்... சில பகுதிகளில் இறந்தவருக்கு அழ ஒரு குழு இருக்கும்... அவர்கள் பாட்டுப்பாடி அழுவார்கள்... எங்க பக்கமெல்லாம் மாரடிக்கிறதுன்னு (மாரில் அடித்து அழுதல்) சொல்லுவாங்க... எல்லா இடத்திலும் வைப்பதில்லை... சில இடத்தில் வைப்பார்கள்... எங்களில் அது இல்லை. அப்படி ஒரு கிழவி, பாட்டுச் சொல்லி அழும் குழுவின் தலைவி... இறந்தவருக்குச் சந்தனம் பூச ஒருத்தன், அவனுடன் இருவர்... கிழவியைப் பார்க்க மனசளவில் வெறுப்போடு ஊருக்கு வரும்ன்சினிமாவில் ஒப்பனைக் கலைஞராக வேலை செய்யும் ஒரு பெண் என கதை சொல்லியிருக்கிறார்கள். சொல்ல வந்ததைமிக அழகாகச் சொல்லியிருக்கிறார்கள். மதுரை அலங்காநல்லூர் பக்கத்துப் பேச்சு வழக்கு என்பதால் பல இடங்களில் வசனம் அப்பட்டமாய் வரும்... குழந்தைகளுடன் பார்ப்பதைத் தவிர்க்கலாம்... மற்றபடி அருமையான படம்...

அப்புறம் திரௌபதி, மலையாளத்தில் ட்ரான்ஸ், டிரைவிங் லைசென்ஸ் எல்லாம் பார்த்தாச்சு... இவற்றைக் குறித்து விரிவாகப் பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.
-'பரிவை' சே.குமார்.

10 எண்ணங்கள்:

Angel சொன்னது…

நீங்கள் அங்கே நலமுடன் இருக்க பிரார்த்திக்கிறேன் .மனசை ரிலாக்ஸ்சா வைங்க .முகநூல் பற்றி பேச விருப்பமில்லை .அங்கிருந்து 2017 துவக்கத்தில் வெளியேறியது .நீங்க தாமதமா புரிஞ்சிட்டிருக்கிங்க .பலர் யாரையோ சமாதானப்படுத்த நல்லோர் மனசையும் புண்படுத்தறாங்க . கொரோனா சாதி மத இனம் பார்த்தெல்லாம் வரலை யார் செஞ்சாலும் தவறு தவறுதான் .நீங்க சொன்னதுபோல் முகமூடிகள் பேராபத்தான கேரக்டர்ஸ் . பாரதிராஜா படத்தை தேடிப்பார்க்கிறேன் 

Avargal Unmaigal சொன்னது…


பல பதிவர்கள் வேஷம் போடுகிறார்கள் ரெட்டை வேடம்

Avargal Unmaigal சொன்னது…

அப்படிபட்ட பதிவர்களை இடித்துரைக்கவே இன்று சங்கிகள் பற்றிய ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறேன் அப்பவாவது சுரணை அவர்களுக்கு வருகிறதா என்று பார்ப்போம்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

பலருடைய உண்மையான முகம் மறைத்தே வைக்கப்பட்டிருப்பது குமார். இந்த மாதிரி சமயங்களில் தான் அது வெளிப்படுகிறது. முக நூலில் அதிகம் உலவுவதே இல்லை. என் பதிவுக்கான சுட்டி தருவதோடு சரி.

மீண்டும் ஒரு மரியாதை - இணையத்தில் கிடைக்கிறதா என தேடுகிறேன்.

எல்லா பிரச்சனைகளும் விரைவில் முடியட்டும்... நலமே விளையட்டும்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

பாரதிராஜாவின் புதிய படம். பார்க்கவில்லை. பார்க்கும் ஆசையைத் தூண்டிவிட்டீர்கள்.
கரோனாவைத் துரத்துவோம்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வலைப்பூ தான் எனக்கு முதன்மை... நேரம் போவதற்கு மட்டும் முகநூல்... அதன் பின்னே தான் புலனம்...

முகநூல் அனைத்தையும்... அனைவரின் உண்மையான முகத்தை வெளியே கொண்டு வந்து கொண்டே இருக்கிறது என்பதும் உண்மை...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

// அலுவலக கணிப்பொறியில் செய்ய முடியும் கருத்துப் பதிவு எனது கணிப்பொறியில் செய்ய முடிவதில்லை //

உங்கள் வலைப்பூவில் நுழைந்த பின்பு தானே கணினியில் வாசிப்பை ஆரம்பிக்கிறீர்கள்...?

கருத்துரைப்பெட்டி வருகிறதா...?

Angel சொன்னது…

படத்தை பார்த்துட்டேன் சகோ.சூப்பரா இருந்தது இயக்குனர் இமயம் இமயம்தான் அவருடன் சில நேரமே வந்தாலும் மௌனிகா ..அட்டகாசமான ஆக்டிங் 

'பரிவை' சே.குமார் சொன்னது…

கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

குமார் மீண்டும் மரியாதை குறித்த்க் கொண்டேன் பார்க்கிறேன். அது போல ஹிட் க்ரைம் திரில்லர்னு கேள்விப்பட்டேன். அப்ப கண்டிப்பா பார்க்கணும் எனக்கு க்ரைம் திர்ல்லர் மிகவும் பிடிக்கும்.

ட்ரான்ஸ் நல்லாருக்குனு சொன்னாங்க. நீங்கள் சொல்லியிருக்கும் படம் எல்லாம் நோட்டட் குமார்.

முகநூல் பற்றி மீக்கு நோ ஐடியா. ஆனால் அங்கு நிறைய சண்டைகள் காழ்ப்பு உண்டு என்று கேள்விப்பட்டதுண்டு.

நீங்க பேசாம எழுத்தில் கவனம் செலுத்துங்க.

பிரச்சனைகள் உங்கள் பிரச்சனைகள் உட்பட விரைவில் முடிந்து நல்லது நடக்கட்டும்.

கீதா