மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 8 ஏப்ரல், 2020

மனசு பேசுகிறது : கொரோனாவும் கதைகளும் ஒரு உதவியும்

லகெங்கும் தலைவிரித்தாடும் கொரோனா வைரஸால் அடுத்து என்னாகுமோ என்ற பயம் மனசுக்குள் எப்போதும் மையம் கொண்டிருக்கிறது... வேலை இழப்பு, சம்பளக் குறைப்பு என்பதெல்லாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் தற்போதைய சூழலில்... ஆனால் கொரோனா சுத்தமாக அழிகிறதோ அல்லது அழிக்கப்படுகிறதோ அல்லது மனித இனம் படும் பாட்டைப் பார்த்து அதுவாகவே தொலைந்து போகிறதோ... எது எப்படியோ இந்தப் பீதியிலிருந்து நாமெல்லாம் இறையருளால் மீண்டு வரும் போது மிகப்பெரிய பொருளாதாரச் சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்... எகிறும் விலைவாசி, வேலை இன்மை, பசி, பஞ்சம், பட்டினி என மிகப்பெரிய சுழலில் மாட்ட வேண்டியிருக்கும்... அப்போதுதான் உண்மையான உயிர்ப் பிரச்சினை மேலோங்கும்... அதை நினைக்கும் போதுதான் இன்னும் மனசுக்குள் வருத்தமும் அழுத்தமும் பயமும் கூடுகிறது.

வரப்போவதையும் வந்திருப்பதையும் நினைத்து வருந்துவதைவிட பொழுது போக்கும் விதமாக நண்பர்கள் போடும் நல்ல மீம்ஸ்களை ரசித்திருப்போம்... நல்ல சினிமாவைப் பார்ப்போம்... பாடல்களைக் கேட்போம்... நல்ல புத்தகங்களைப் படிப்போம்... குடும்பத்தைப் பிரிந்து வெளியூர்களில், வெளிநாடுகளில் இருக்கும் என்னைப் போன்றோரைத் தவிர மற்றவர்கள் கிடைத்த இந்த நாட்களில் குடும்பத்துடன், குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழியுங்கள்... முகநூலும் டுவிட்டரும் வாட்ஸப்பும் எப்போதும் உயிர்ப்புடன்தான் இருக்கும்... மகிழ்வாய்க் கழிக்கக் கிடைத்த இந்நாட்கள் திரும்பக் கிடைக்காது என்பதை உணர்ந்து செல்போனுக்கு விடுமுறை கொடுத்து உறவுகளுக்கு முன்னுரிமை கொடுங்க.

சரி... கொரோனா... கொரோனான்னு பேசிக்கிட்டு இருக்கதை விட ஊரிலிருந்து வந்த பின் சகோதரர் இராஜாராமுடன் பேசிய போது அண்ணே... பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும்... எழுத ஆரம்பிங்க... கவலைகள் மறந்து போகும் என்றார்... அதன் பின் இரண்டு கதைகள் எழுதிப் பார்த்தேன்... கடன், கவலை, வருத்தமென எல்லாமுமாய் கதையில் ஒன்ற விடவில்லை... மூன்றாம் முறை திருத்துதல் என்பது எப்போதும் என்னிடம் இருப்பதில்லை... ஒரு முறை எழுதிவிட்டால் அவ்வளவுதான். எங்காவது அனுப்ப வேண்டுமென்றால் மட்டுமே எடுத்துச் சரி பார்ப்பேன்... அப்போதும் அதிகமாய்த் திருத்தம் செய்யமாட்டேன். இந்த இரண்டு கதைகளைப் பொறுத்தவரை மூன்று முறை திருத்தம் செய்து இன்னும் திருப்தி வரவில்லை... ஒருவேளை மீண்டும் திருத்தம் செய்ய வேண்டியிருக்கலாம்.

அந்தக் கதைகளில் இருந்து சில வரிகள்...

முதல் கதை :

அந்த இடத்தில் அவளைக் காணவில்லை.

கடந்த இரண்டு மாதங்களுக்கு மேல் அவள் இங்குதான் இருந்தாள். நேற்றுக் கூடப் பார்த்தேன்... இன்று அந்த இடம் வெறுமையைச் சுமந்திருந்தது. அவள் அங்கு இருந்ததற்கான அடையாளங்களே இல்லை. 

எங்கே போயிப்பாள்..?

யாரைக் கேட்பது...?

அப்படியே கேட்டாலும் நீ ஏன் அவளைத் தேடுகிறாய் என்பது போன்ற ஏளனப் பார்வைதானே கிடைக்கும்.

அவள் இருந்த இடத்துக்கு நேர் எதிரே இருந்த டீக்கடைக்குப் போய் ஒரு டீ வாங்கிக் கொண்டு 'அண்ணே... எதிர்ப்பக்கம் ஒரு பொம்பள உக்காந்திருக்குமே எங்கே காணோம்..?' என்றேன் மெல்ல.

இரண்டாம் கதை:

'என்னவாம்... பெரிசு பரபரப்பாத் திரியுது...' மனைவி வந்தனாவிடம் கேட்டான் ராஜா.

'ம்... அவுக பிரண்டு வர்றாராம்... அதான் இம்புட்டுப் பரபரப்பு...'

'பிரண்டா... யாரது...?'

'ஏதோ ராகவனோ ராதாகிருஷ்ணனோ அமெரிக்காவுல இருந்து வர்றாகன்னு சொன்னாக... இந்தாங்க காபி... சும்மா என்னையத் துருவித் துருவிக் கேக்காக உங்கப்பாக்கிட்ட போயிக் கேளுங்க...'

'அவருக்கிட்ட... நானு... சரித்தான்... சண்டையிலதான் முடியும்... அது ராகவனுமில்ல... ராதாகிருஷ்ணனுமில்ல... சபாபதி மாமா...' என்றபடி காபியை உறிஞ்சினான்.

'ஓ... ஆமாமா.... சபா வர்றான்னுதான் சொன்னாக... அதானே... நாம எப்பப் பாசமாப் பேசியிருக்கோம்..?'

'அப்பவுல இருந்தே அப்படியே வளந்துட்டேன்... விடு... ஆமா சாப்பிட்டாரா...? இல்லையா...?'

அதன் பின் பவா செல்லத்துரை அவர்கள் சொன்ன வேல ராமமூர்த்தியின் இருளப்பசாமியும் இருபத்தியோரு கிடாயும் என்ற கதை கேட்ட பின் அதில் அவர்கள் அமர்ந்து பேசுவதைப் போல் நாமும் ஒரு கதை எழுதலாமென எழுதியதுதான் கீழிருக்கும் மூன்றாவது கதை  வேலாவின் கதை ஆடு திருடுதலை அவ்வளவு அழகாய்ப் பேசியிருக்கும்... இது திருட்டுக் கதை அல்ல.

இப்போதெல்லாம் எல்லாரும் ஒரே நேரத்தில் ஊருக்கு வருவதென்பது அரிதாகிவிட்டது... நல்லது கெட்டதுக்கு என்றாலும் எப்படியும் ரெண்டு மூணு வருவதில்லை... இந்த வருடம்தான் பொங்கலுக்கு எல்லாரும் வந்திருக்கிறார்கள் ஆச்சர்யமாய்... இனி மறுபடியும் எல்லாரும் கூடுவது எப்போதென்பது கண்மாய்க்குள் நிற்கும் முனியய்யாவுக்குக் கூட தெரிய வாய்ப்பில்லை.

சின்ன வயதில் இந்தப் பத்துப் பேர் கூட்டணி எப்பவும் ஒன்றாகத்தான் திரியும்... விடுமுறை தினங்களில் பெரும்பாலான நேரங்களை மடையில்தான் களிப்பார்கள்... பேச்சு... பேச்சு... பேச்சு... அதைத் தவிர ஒண்ணும் இருக்காது.... அந்தப் பேச்சில் முக்கியமானது என்று எதுவும் இருக்காது... பெரும்பாலும் கண்டதேவித் தேர், வண்டிப் பந்தயம், வள்ளி திருமணம் நாடகம், கரகாட்டம், சினிமா, பாட்டு என இவைதான் சீசனுக்குத் தகுந்தவாறு ஓடும். இடையிடையே ஏற்படும் சின்னச் சண்டையில் லதாவோ ராதாவோ வந்து போவார்கள்.

எல்லாரிடம் குத்தாலம் துண்டு இருக்கும்... அது கழுத்தைச் சுற்றியோ அல்லது இடுப்பிலோ இடம் பிடித்திருக்கும். அதன் பயன்பாடு என்பது மடையிலோ, மரத்தடியிலோ, பாலத்திலோ இல்லை கம்மாய்க்கரையிலோ விரித்துப் படுக்கவோ... கண்மாய்த் தண்ணீரில் நீந்தி விளையாடவோதான் என்றாலும் யாராவது ஒருவரைத் திடீரென துண்டால் மூடி எல்லாருமாய்ச் சேர்ந்து போட்டு மொத்துவதற்கும் பயன்படுத்துவார்கள். 

குமுதம் கொன்றை சங்க இலக்கியச் சிறுகதைப் போட்டிக்கு என ஒரு கதை அவசரமாய் எழுதி அனுப்பினேன் இறுதி நாளில்... அந்தக் கதை போட்டிக்கென எழுதியதால் இங்கு பகிரவில்லை. ஆக மொத்தம் நாலு சிறுகதை எழுதியிருக்கிறேன்... இந்தக் கதைகளில் வீராப்பு, இணை, சாமியாடியைப் போல் அப்படி ஒரு பிடிப்பு இருப்பது போல் எனக்குத் தெரியவில்லை... ஒருவேளை மீண்டும் எடுத்துப் பார்க்கும் போது நிறைய மாறுதல் செய்ய வேண்டியிருக்கலாம்.

அடுத்ததாய் ஒரு நாவல் எழுதலாம் என... கலையாத கனவுகள், வேரும் விழுதுகள், நெருஞ்சியும் குறிஞ்சியும் வரிசையில் சற்றே கள்ளழகரின் சித்திரைத் திருவிழாவையும் சேர்த்து எழுதலாம் என்ற எண்ணம். இதற்கு விதை போட்டது கலக்கல் ட்ரீம்ஸ் தசரதனும் மருத்துவர் மற்றும் எழுத்தாளர் சில்வியா பிளாத்தும்... எதிர்சேவைக்கென அவர்களைச் சந்தித்தபோது எதிர்சேவையையே நாவலாக்குங்கள் என்றார்கள். அதன் அடிப்படியை வைத்தே எழுதலாமென ஆரம்பித்து ஒரு அத்தியாயம் முடித்தேன்... கொரோனா மனச்சங்கடங்கள் வந்த பின் ஒரு மாதத்துக்கு மேலாக கிடப்பில் கிடக்கு... அதை எப்போது தூசு தட்டுவேன் எனத் தெரியாது. எழுத முடிந்தால் முடித்து விடுவேன். பார்க்கலாம்... அந்தக் கதையை இப்படி ஆரம்பித்திருக்கிறேன்...

விடிந்தும் விடியாமலும் இருந்த காலைப் பொழுதில் மேலுரில் வேன் நிறுத்தப்பட்டது.

'காப்பி டீக் குடிச்சிட்டு தேங்காபழம் பூமாலயெல்லாம் வாங்கிட்டுப் போயிடலாம்ப்பா...' என்றபடி முன்பக்க இருக்கையில் இருந்து இறங்கினார் அழகர்சாமி. இளவயதில் ஆஜானுபாகுவாக இருந்திருப்பார் என்பதை அவரின் உயரமும் உடலும் காட்டியது... இப்போது வயசு அவரது உடலில் பல மாற்றத்தைச் செய்திருந்தது... தும்பைப்பூப் போல தலைமுடி வெள்ளைவெளேர் என இருந்தது. வெள்ளை மீசை சற்றே பெரிதாய்... 

வேனிலிருந்து அவரது மனைவி பவானி, மகன்கள் ராஜு, கருப்பு மருமகள்கள் சத்யா, சுந்தரி, மருமகன் அழகப்பன், மகள் கனகவல்லி, பேரன் பேத்திகள் என எல்லாரும் இறங்கினார்கள். இறங்கியதும் சொல்லி வைத்தார் போல் எல்லாரும் கிட்டத்தட்ட 80 மைல் பயணம் கொடுத்த அயர்ச்சியைப் போக்கும் விதமாக உடம்பை முறுக்கி நெட்டி எடுத்தனர்.

'ஏம்ப்பா செலுவம்... நீயும் வா டீ சாப்பிட்டு வரலாம்...'

'இந்தா வாரேம்ப்பா...' என்றபடி டிரைவர் இருக்கையில் இருந்து இறங்கினான் செல்வம். அவருக்கு ஒரு வகையில் உறவுக்காரன்தான்... வீட்டுல நல்லது கெட்டது எதுனாலும் செல்வத்தோட வண்டியைத்தான் கூப்பிடுவார். மத்தவனுங்க மாதிரி இம்புட்டுக் கொடுன்னு கறாரா நிக்கமாட்டான்... ஒருவேளை நேரமானால் வண்டியை கண்மண் தெரியாமல் ஓட்டமாட்டான்... எல்லாத்துக்கும் மேலாக முகத்தில் இறுக்கதைத் தேக்கி வைத்திருக்கமாட்டான். எப்பவும் சிரித்த முகத்தோடு எல்லோருடனும் நல்லாப் பேசியபடி வருவான் என்பதால் அவனை மட்டுமே கூப்பிடுவார். 

டீக்கடையில் சூடாக வடை போட்டுக் கொண்டிருந்தார்கள்.

யாருக்கு வடை வேண்டுமெனக் கேட்டு வாங்கிக் கொடுத்தவர் தானும் ஒன்றைப் பிய்த்துப் போட்டுக் கொண்டார். செல்வத்தையும் எடுத்துக் கொள்ளச் சொன்னார். அவன் இப்ப வேண்டாமென மறுத்துவிட்டான்.

"நம்ம ஊர்லயே தேங்காபழம் வாங்கிட்டு வந்திருக்கலாம்... இங்க யான வெல சொல்லுவானுங்க..." என்றான் நடுவுலான் ராஜூ... அவனின் முகத்தில் சிரிப்பில்லை.

"ஆமா... நம்மூருல பூவுக்கு ஒரு வெல சொல்லுவான்... இங்க நூறு ரூபாய்க்கு வாங்குற மால அங்க நூத்தியெம்பதாயிருக்கும்... கூட்டிக் கழிச்சிப் பார்த்தா இங்க வாங்குறதுதான் ஒரு வகையில லாபம்..." என்றார்.

இதெல்லாம் இந்த வருட ஆரம்பத்தில் எழுதியவைதான்... அதன் பிறகு கதை எழுதத் தோன்றவில்லை... எதாவது எழுதலாம் என்றால் இப்படி ஏதேனும் ஒன்றைக் கிறுக்க வைத்துவிடுகிறது. வண்ணதாசனின் ஒரு சிறு இசை பற்றி எழுதலாமென அமர்ந்தவன் அப்படியே இங்கு வந்துவிட்டேன்.

சென்ற ஆண்டு எழுதிய கதை ஒன்றை படைப்பு சிறுகதைப் போட்டிக்கு அனுப்பியிருக்கிறேன். கதை நல்லாயிருக்கோ நல்லாயில்லையோ அங்க ஒரு எட்டு போயி வாசித்து உங்க மனதில்பட்டதைச் சொல்லுங்க...


எனது கணிப்பொறியில் கருத்து இடுவதில் பிரச்சினை என்ற போது எப்பவும் போல் திண்டுக்கல் தனபாலன் அண்ணன் கூப்பிட்டுப் பேசி, பிரச்சினையைத் தீர்த்து வைத்தார். அதற்கும் அவருக்கு நன்றி.  until jump பயன்படுத்தி எழுதச் சொன்னார். இன்னும் அவர் சொன்ன தளம் சென்று வாசிக்காததால் அடுத்த பதிவில் முயற்சிக்கலாம் என்ற எண்ணம்.

-'பரிவை' சே.குமார்.

4 எண்ணங்கள்:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நிறைய எழுதுங்கள் குமார். பிரச்சனைகளை மறந்து இந்த கட்டாய விடுமுறை நாட்களை நல்ல விதமாக பயன்படுத்துவோம்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நன்றி குமார்... அனைத்தும் சரியாக இருந்தது... ஆனால் கருத்துரைப்பெட்டி பிரச்சனை மட்டும் சரியாகவில்லை... புது பிரச்சனை... புதிதாக ஒன்றை கற்றுக் கொண்டதும் உண்மை... சிறிது அரண்டு போனதும் உண்மை...!

கிராமத்து மனத்தோடு நீங்கள் எழுதுவதெல்லாம், மனதிற்கு தரும் மகிழ்ச்சி வேறு... எதையும் சிந்திக்காமல் தொடர்ந்து எழுத முயற்சி செய்யவும்...

நானும் அவ்வாறே... புதிதாக எதையும் சிந்திக்க முடியாத போது தான், நானும் எழுதி வைத்ததை வேறு விதமாக பகிர்ந்து கொண்டுள்ளேன்... இன்னும் நிறைய பக்கங்கள் உள்ளன... அதை சுருக்கி எழுதிக் கொண்டு உள்ளேன்... இந்த நேரத்தில் அது தான் செய்ய முடிகிறது...

Until Jump break எல்லாம் பெரிய விசயம் அல்ல... நான் கொடுத்த இணைப்பை பாருங்கள்... "அட அவ்வளவு தானா...?" என்பீர்கள்...

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

விரைவில் உலகம் நல்லபடியா இயல்பு நிலைக்குத் திரும்பணும். ஆமாம் குமார் பொருளாதாரம் மிக மிக சரிந்த நிலை இப்பவே. கொஞ்சம் கவலைதான். அதுவும் நல்லபடியாகும் நு நம்புவோம்.

உங்கள் கதைகள் நீங்க கொடுத்திருக்கும் சாம்பிள் வரிகள் நல்லாத்தான் இருக்கு. திருப்தி இல்லைனா கொஞ்சம் கிடப்புல போட்டுட்டு மீண்டும் எடுத்தீங்கனா உங்களுக்கே தோணுமே குமார்..பரவால்லா குமார் நீங்கல்லாம் அழகா ஒரு தடவை எழுதிட்டீங்கனா அப்புறம் அதைப் ப்பதில்லைனு.எங்காவது அனுப்பணும்னா தான் திருத்துவேன்ன்னு..நல்ல திறமை குமார் வாழ்த்துகள்.

நான் எல்லாம் ஒரு கதை எழுதவே பல மாசம் ஆகும். எழுதி பாதில நிக்கும். அப்புறம் கொஞ்சம் நாள் கழிச்சு மீண்டும் எடுத்து எழுதுவேன் கொஞ்சம் அப்புறம் இப்படி எடிட் செய்து கட் செய்து திருத்தி டயலாக் மாத்தி வேறுஎ எழுதின்னு...போயிட்டே இருக்கும். முடிக்க நாள் எடுக்கும்..

சுட்டி போய் வாசிக்கிறேன் குமார் வாழ்த்துகள்

கீதா

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

உங்களின் விடாமுயற்சி வியக்கவைக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள். நண்பர் திரு திண்டுக்கல் தனபாலன் நமக்காகவே இருக்கிறார், உதவுவார்.