மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 18 ஏப்ரல், 2020

மனசு பேசுகிறது : ஆடும் தீபம்

டும் தீபம்...

ஒரு பெண்... அதுவும் ஆதரவற்ற பெண்... இந்தச் சமூகத்தில் மிஞ்சி மிஞ்சிப் போனால் எது மாதிரியான பிரச்சினையைச் சந்திக்கப் போகிறாள் என்பது நாம் அறிந்தது... பார்த்ததுதானே... இங்கே எல்லாப் பெண்களுக்கும் ஒரே பிரச்சினைதான்... ஆம் அது காமக் கழுகுகளின் கோரப் பிடிக்குள் சிக்குதல். அதிலிருந்து மீண்டு வெளியேறும் ஒரு பெண் சந்திக்கும் பிரச்சினையே இந்நாவல்.
ஆடும் தீபம் (11 எழுத்தாளர்கள்) : Free ...

என்னய்யா இது..? எப்பவும் நடக்கும் நிகழ்வைச் சொல்லும் நாவலில் என்ன சுவராஸ்யம் இருக்கப் போகிறது என்ற யோசனை எழலாம்... இதில் எழுத்துத்தான் சுவராஸ்யம்... ஆம் எழுத்து மட்டுமே... அப்படியென்ன புதுமையாய்ச் சொல்லியிருக்கிறார்(கள்). 

அதென்ன அடைப்புக் குறிக்குள் 'கள்'... அப்படியென்றால்..?

ஆம் பதினோரு எழுத்தாளர்கள்... என்னது பதினோரு பேரா..?

அட வலைப்பூவில் நாமெல்லாம் தொடர்பதிவுகள் எழுதவில்லையா... அப்படித்தான் இதுவும். படிக்கும் போது நாங்கள் கூட நாலு பேர் ஒரு கதையை எழுதிப் பார்த்திருக்கிறோம்... அது ஒரு புது முயற்சி அவ்வளவே.

ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொருவரின் எழுத்து நடையில்... ஒரு நாவலை ஒருவர் எழுதினால்தான் ஆரம்பத்தில் இடும் முடிச்சுக்களை ஒவ்வொன்றாய் அவிழ்த்து இறுதியில் முடிவைச் சுபமாகவோ அல்லது சோகமாகவோ சொல்ல முடியும்... இதில் பதினோரு பேர் என்றால்...? ஆம் ஒவ்வொருவரும் தங்கள் எண்ணப்படி கதையின் போக்கை மாற்றி, மாற்றி எழுதிச் செல்ல... கதை இறுதியில் சுபமாகவே முடிகிறது.

1967-ல் காரைக்குடி செல்வி பதிப்பகத்தின் பொறுப்பாசியர் பூவை எஸ். ஆறுமுகம் அவர்கள் இதன் முதற்பதிப்பை வெளியிட்டிருக்கிறார். காரைக்குடியில் செல்வி என்ற பதிப்பகம் இருந்தது என்பதே எனக்கெல்லாம் அறியாத புதிய செய்திதான்... தேவகோட்டையில் செல்வி புத்தக நிலையம் இருந்தது... எல்லா வகையான புத்தகங்களையும் விற்பார்கள். அதற்கும் இதற்கும் தொடர்பு இருக்க வாய்ப்பில்லை என்றாலும் அதே பெயரில் ஒரு பதிப்பகம் இருந்திருக்கிறதே.

நாவலின் முதல் அத்தியாயத்தை வாசவன் ஆரம்பிக்க... அப்படியே வல்லிக்கண்ணன், ஸரோஜா ராமமூர்த்தி, கிருஷ்ணா, ஸி.ஆர்.ராஜம்மா, நெடுமாறன், எல்லார்வி, ஏ.எம்.மீரான், சி.சு.செல்லப்பா, பி.வி.ஆர். என நூல்பிடித்து நகர்த்திச் செல்ல, பூவை எஸ்.ஆறுமுகம் முடித்து வைத்துள்ளார்.

அல்லி...

அல்லி அழகான மலர்தானே... இந்த முறை ஊருக்குச் சென்ற போது எங்கள் பகுதியில் இருக்கும் ஊரணி, கண்மாய்களில் எல்லாம் தாமரையும் அல்லியும் மலர்ந்து சிரித்தன... இது எப்படி கண்மாய்க்குள் வந்தது என்று கேட்டபோது கிடைத்த பதில் பூக்கடைக்காரர்கள் விதை தூவி வைத்திருக்கிறார்கள் என்பதே... சில இடங்களில் அந்த மலர்கள் பறிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படுவதையும் பார்த்தேன்... ஒருவேளை விதை தூவியது உண்மையாக இருக்கலாம்.

கண்மாயில் ஆடிய அல்லியை விடுத்து பூவையின் ஆடும் தீபத்து அல்லிக்கு வருவோம்...

அழகான அல்லி... பாதுகாப்பான வேலி இல்லை... வேலி இல்லாத பயிரை தெருவில் போகும் கால்நடைகள் மேயத்தானே பார்க்கும்... அப்படித்தான் சாத்தையா, இன்னாசி என இரண்டு மிருகங்கள் அவளை அடையத் துடிக்க, ஒரு திருக்கார்த்திகை தினத்தில் அவர்களிடமிருந்து தப்பித்துச் சென்னைக்கு இரயில் ஏறுகிறாள். ஊரைப் பொறுத்தவரை அவள் ஓடிப்போனவள்தான் என்றாலும் உயிர் காக்க அவள் ஓடவில்லை... மானம் காத்துக் கொள்ளவே ஓடுகிறாள்.

அவள் இரயிலில் சந்திக்கும் அருணாசலத்திடம் கண்டதும் காதல்... அவன் மூலமாக நடன ஆசிரியர் இராஜநாயகம் பழக்கமாக, அவரிடம் தன் அக்காள் மகளெனச் சொல்லித் தங்க வைக்கிறான். அவருக்கும் இவள் மீது சபலம்... அதற்கான காய் நகர்த்தலில் அவரைத் திருத்துகிறாள்... இறந்த தன் மகளே திரும்பி வந்ததாய் நினைத்து அவளைத் தன்னுடைய மகளாகப் பாவித்து நாட்டியம் கற்றுக் கொடுப்பதுடன் தன் வீட்டிலேயே வைத்துக் கொள்கிறார்.

அருணாசலம் அவளைச் சினிமாவில் நடிக்க வைக்க முயற்சித்து வெற்றியும் பெறுகிறான். இராஜநாயகம் அருணாசலத்தை அறிந்தவர் என்பதால் அவன் எங்கே அவளை ஏமாற்றிவிடுவானோ எனப் பயந்து திருமணம் என்றால் உன் வீட்டுச் சம்மதத்துடன்தான் நடக்க வேண்டும் என்று சொல்ல, அதன்படி திருமணமும் நிச்சயமாகிறது.

கிராமங்களுக்குப் படம் வர வருடங்கள் கூட ஆகும் அல்லவா..? அப்படி ஒரு முறை பட்டுக்கோட்டைக்கு வரும் அவளின் சினிமாவைத் தியேட்டரில் பார்த்துவிட்டு சென்னைக்கு வருகிறார்கள் பரம எதிரிகளாய் அவளுக்காக மாறி மாறிக் குத்துப்பட்டு பிழைத்தெழுந்த இன்னாசியும் சாத்தையாவும்...

அவர்களால் அவளுக்கு நேரும் தீங்கு என்ன...? 

அருணாசலம், இன்னாசி, சாத்தையா மூவருக்குமான தொடர்பு என்ன..? 

அல்லியின் திருமணம் நடந்ததா..? 

என்பதையெல்லாம் பதினோரு அத்தியாயங்களில் விரியும் கதையை முழுவதும் வாசிக்கும் போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

இங்கே அல்லியை... எந்த ஒரு எழுத்தாளரும் பேதைப் பெண்ணாக வலம் வர வைக்க விரும்பவில்லை... பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக ஒவ்வொரு அத்தியாத்திலும் மாற்றிக் கொண்டே வருகிறார்கள்... ஒரு அத்தியாயத்தின் முடிவில் அவளுக்கு என்னாகுமோ என்று யோசித்தபடி அடுத்த அத்தியாயம் போனால் அவளைக் காப்பாற்றி நகர்த்திச் சென்றிருப்பார் அதை எழுதிய எழுத்தாளர்.

கதையின் போக்கு ஒவ்வொரு அத்தியாயத்திலும் மாறி மாறிச் செல்லும்... அதற்குக் காரணம் வெவ்வேறு எழுத்தாளர்கள் என்பதே... ஒரே எழுத்தாளர் எழுதியிருந்தால் அல்லியின் கதாபாத்திரம் இப்படியாக கண்டிப்பாக நகர்த்தப்பட்டிருக்காது என்பது மட்டும் உண்மை. அதேபோல் கதையின் போக்கும் முற்றிலும் மாறுபட்டதாக இருந்திருக்கும்.

இது 'உமா' என்னும் பத்திரிக்கையில் பதினோரு மாதங்கள் தொடராய் வந்த கதைதான் புத்தகமாக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு அத்தியாத்தை ஆரம்பிக்கும் முன்னும் அதை எழுதியிருக்கும் ஆசிரியர் ஒரு சிறு முன்னுரை எழுதி, அல்லியை நான் இப்படியான பெண்ணாக கொண்டு செல்லப் போகிறேன்... அவள் ஏன் பாதிக்கப்பட வேண்டும், நாம் ஏன் இப்படி மாற்றி யோசிக்கக் கூடாதெனச் சொல்லி தங்கள் கதையை எழுதியிருக்கிறார்கள்.

'நாங்கள் சேதுவில் பாலம் அமைக்கிறோம்... எங்கள் ஒவ்வொருவருடைய முயற்சியும் அணில் முயற்சிதான்... பாலம் ஒழுங்காக அமைந்து விட்டால் அணிலைப் பாராட்டாதீர்கள்; அமைப்பைப் பாராட்டுங்கள்' எனச் சொல்லித்தான் வாசவன் முதல் அத்தியாயத்தை ஆரம்பித்திருக்கிறார்.

வெவ்வேறு எழுத்தாளர்கள் என்பதால் கதையின் போக்கு மாறி மாறிப் பயணிப்பது, முன் பின்னாய் நகர்வது என்பதெல்லாம் குறையே என்றாலும் ஒரு அபலைப் பெண்ணின் வாழ்க்கையை ஆண்கள் பார்க்கும் பார்வையை மிக அழகாக எழுதியிருக்கிறார்கள். அதற்காகவேணும் இம் முயற்சியைப் பாராட்டலாம்.

'ஆடும் தீபம்' - நிச்சயமாக ஒரு வித்தியாசமான புத்தகத்தை வாசித்த அனுபவத்தைப் கொடுக்கும்.

புத்தகம் இப்போது எங்கே கிடைக்கிறது என்பது தெரியவில்லை... நல்லாயிருக்கு வாசிக்கலாம் எனச் சகோதரர் இராஜாராம் அவர்கள் அனுப்பிக் கொடுத்த பிடிஎப்பில்தான் வாசித்தேன்.

ஆடும் தீபம்
பதிப்பாசிரியர் பூவை எஸ்.ஆறுமுகம்
செல்வி பதிப்பகம், காரைக்குடி
முதற்பதிப்பு : மார்ச் -1967
இரண்டாம் பதிப்பு : மே - 1983
அச்சும் அமைப்பும் : அகரம், சிவகங்கை
விலை ரூ.10
-'பரிவை' சே.குமார்.

5 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இது புதிதாக இருக்கிறது குமார்...

விசு சொன்னது…

முதல் பதிப்பு 1967? அந்நாட்களிலேயே இந்த தலைப்பில்! வித்தியாசமாய் இருக்கும் என்று தான் நினைக்கின்றேன். படிக்க தூண்டும் விமர்சனம்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

குமார் வாசிக்கத் தொடங்கியிருக்கிறேன். நீங்க க்ரூப்ல அனுப்பியிருந்தீங்கல்ல...அதை கம்ப்யூட்டர்ல எடுத்து வைச்சுட்டேன்..

கீதா

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் சொன்னது…

வித்தியாசமான கதை...படிக்க ஆவல் மேலிடுகிறது. நன்றி சகோ

Unknown சொன்னது…

ஏ.எம்.மீரான் அவர்களின் நாவல்கள் சிறுகதைகள் கிடைக்கும் இடங்களை கூறுங்கள்