மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 17 மே, 2019மனசின் பக்கம் : இப்தார் விருந்தும் இனிய கலந்துரையாடலும்


த்தாண்டு கால அமீரக வாழ்க்கையில் நண்பர்களுடன் இப்தார் விருந்து சாப்பிட்டது நேற்றுத்தான். ஆசிப் அண்ணனின் இல்லத்தில் அமீரக எழுத்தாளர் குழுமத்தின் நண்பர்கள் கிட்டத்தட்ட நாற்பது பேருடன் கொண்டாட்டமான இப்தார் நாளாக / இரவாக நேற்றைய தினம் அமைந்தது.

நோன்பு திறப்புக்குப் பின் மனம் திறந்த உரையாடல்கள் எப்போதும் போலில்லாமல் சற்றே வித்தியாசமாய்... அதிக நேரம் எடுத்துக் கொள்ளாவிட்டாலும் எல்லாருமே பேசினார்கள். ஒரு வருடத்துக்கும் மேலான நட்பு வட்டத்தில் நான் கூட நேற்று ரெண்டு நிமிடம் பேசியிருக்கிறேன்.

சிலர் ரம்ஜான் குறித்துப் பேசினார்கள்... சிலர் பொதுவாகப் பேசினார்கள். இரண்டு மணி நேரத்துக்கு இந்தப் பேச்சு கேலியும் கிண்டலுமாய் நகர்ந்தது.

சிறப்பு விருந்தினராய்க் கலந்து கொண்ட இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் காப்பியக்கோ ஜின்னா ஷர்புத்தீன் ஐயா அவர்களைப் பற்றிய அறிமுகத்தில் இதுவரை பதினோரு காப்பியங்கள் எழுதியிருப்பதாகச் சொன்னார்கள். 

அவர் பேசும் போது நியூசிலாந்தில் இருக்கும் மகன் வீட்டுக்குப் போனபோது நாலு சுவற்றுக்குள் இருக்க வேண்டிய சூழலில் வலைத்தளத்தில் தேடி ரவிவர்மாவின் ஓவியம் ஒன்றை எடுத்து அதுக்கு விமர்சனத்தை கவிதை வடிவில் யாப்பிலக்கணத்தில் எழுதி முகனூலில் பகிர்ந்தபோது பெரிய வரவேற்ப்பு இருந்ததாகவும் அதன் பின் அந்த ஓவியங்களுக்கு நிறைய எழுதி வைத்திருப்பதாகவும் சொன்னார்.

யாப்பு குறித்த வகுப்பை நான் எடுக்கிறேன்... நீங்க ஏற்பாடு செய்யுங்கள்... எனக்குப் பணமெல்லாம் தர வேண்டாம்... என்னை இந்த நிலைக்குக் கொண்டு வந்தது தமிழ்... அதை நாலு பேருக்குச் சொல்லிக் கொடுத்துச் செல்வதில்தான் எனக்கு மகிழ்ச்சியே என்றார்.

அவரிடம் ஆசிப் அண்ணன் சில புத்தகங்களை நினைவுப் பரிசாக கொடுத்தபோது... எனது மனைவி தீவிர வாசிப்பாளர்... இரவில் வாசித்துவிட்டுப் படுக்க அதிக நேரமாகும்... பெரும்பாலான நாட்களில் புத்தகத்தையும் கண்ணாடியையும் எடுத்து வைப்பது நானாகத்தான் இருக்கும் என்றார். இந்த வயதில் வாசிப்பின் மீதான அவர்களின் நேசிப்பு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

எப்போது எங்களின் வாசிப்புக்காக நிறைய புத்தகங்களை எடுத்துச் செல்வோம். அடிக்கடி இங்கு வருபவன் என்றாலும் தற்போதைய இலங்கைச் சூழலில் புத்தகங்களைக் கொண்டு வந்து அதில் ஏதேனும் சின்னதாய் வித்தியாசம் தெரிந்தால் அதிக பிரச்சினையைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால் எதுவும் கொண்டு வரவில்லை... இந்தப் புத்தகங்கள் என் மனைவிக்கு வாசிக்கக் கிடைத்ததில் மகிழ்ச்சி என்றார்.

இலங்கையில் தமிழ்ச் சங்கத்தில் முப்பது ஆண்டுக்கு மேல் பொறுப்பில் இருப்பதாகவும் அதில் இருக்கும் ஒரே ஒரு முஸ்லீம் நாந்தான் என்றும் சொன்னவர், நாலைந்து தமிழ்ப் புரபஸர்கள் இருப்பதாகவும் அவர்களுக்கு எல்லாம் யாப்பு குறித்துச் சொன்னதாகவும்  சொன்னார்.

அவரின் பேராசிரியர் ஹோட்டலில் சாப்பிட்டுக் கை துடைக்க கொடுக்கப்படும் தினசரி கட்டிங் பேப்பரை கை துடைக்கும் முன் வாசித்துப் பார் என்று சொன்னதை இன்று கடைபிடிப்பதாகவும், தன் மனைவி புத்தகம் இல்லாததால் தமிழ் பேப்பரை வாங்கிக் கொடுங்கள் என வாங்கி வாசிப்பதாகவும் சொன்னார். 

இங்கு நிறையப் பேர் எழுத்தாளர்களாய் இருக்கிறீர்கள்... எழுத்தாளனுக்கு முக்கியம் வாசிப்பு... அதிகமாக வாசியுங்கள் என்று சொன்னார்.

ஆசிப் அண்ணன் எழுதிய ஒரு சிறுகதைக்கு தான் ரசிகன் என்றும் அவர் சிறுகதைகள் நிறைய எழுத வேண்டும் என்றும் சொன்னார். 

சும்மா வார்த்தைகளை மடக்கிப் போட்டு எழுதுதல் என்பது கவிதை இல்லை.... யாப்புத் தெரியாமல் கவிதை எழுத முடியாது என சுரேஷ் அண்ணன் சொன்னதை காப்பியக்கோ அவர்களும் சொன்னார்கள். கண்டிப்பாக யாப்புத் தெரிந்திருக்க வேண்டும் என்று சொன்னார்.

தற்போது கம்பராமாயணத்தைப் பற்றி எழுத ஆரம்பித்திருப்பதாகச் சொன்னார்.  குறிப்பாக தமிழ் மீது இலங்கைத் தமிழர்களுக்கு எப்போதும் கூடுதல் மரியாதை உண்டு... தமிழ் மீதான காதல் அவரின் பேச்சில் வழிந்தோடியது. இலங்கைத் தமிழ் கேட்க அழகாக இருக்கும் என்பதும் சிறப்பு.

இலங்கையின் இன்றைய நிலை குறித்த பேச்சு வரும்போது அது குறித்து ஏதோ பேச வந்தவர், கண்கலங்கினார்... என்னால் பேச இயலாது என்று சொல்லிவிட்டார்.

இலங்கை மக்களுக்காய் இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலியுடன் நிகழ்வு முடிந்தது.

பிரியாணியை ஒரு கட்டுக் கட்டி விட்டு... வீட்டுக்கும் கட்டிக் கொண்டு நடையைக் கட்டினோம்.

அடுத்தது எப்பவும் போல் கீழே வந்து டீச்சாப்பிட்டபடி ஒரு மணி நேரத்துக்கும் மேல் பேச்சு சிரிப்பும் கோபமும் நகர்ந்தது.

அமீரக வாழ்க்கையில் வேலை, அறை. வாசிப்பு, வலைப்பூவில் கிறுக்கல் என நகர்ந்து கொண்டிருந்த காலத்தை அமீரக எழுத்தாளர்  குழுமத்துக்குள் இணைந்த பின்தான் சற்றே வெளியிடத்தில் நகர்த்திச் செல்ல முடிகிறது. மாதத்தில் இரண்டு முறையேனும் சந்திப்பு என்றாகிவிட்டிருக்கிறது.

வேலையின் சுமை, குடும்பப் பிரச்சினைகள் என எல்லாவற்றையும் சுமக்கும் விடுமுறை தினங்கள் இப்போது கொஞ்சமேனும் ஆசுவாசப்படுத்திக் கொள்ளும், அந்த வலிகளில் இருந்து சிறிது விலகி இருக்கச் செய்யும் நாட்களாய் மாறியிருக்கிறது.

இந்தக் குழுமத்துக்குள்ளும் பிரச்சினைகள் இல்லாமல் இல்லை... அடித்துக் கொள்வதும் அணைத்துக் கொள்வதும் இங்கும் இருக்கு... நேரில் பார்க்கும் போது பாசமாய் கட்டியணைப்பதில் கரைந்து விடுகிறது அதுவரை அடித்து ஆடிய  அத்தனை பிரச்சினைகளும்...  அதுதானே வேண்டும்.

இந்தப் பிரியம் சாதி, மதம் பார்த்து வருவதில்லை... அதற்கும் மேலானது...  இந்த நட்பைத் தவிர, நேசத்தைத் தவிர வேறென்னதைச் சுமந்து செல்லப் போகிறோம்... எனக்கெல்லாம் எப்போது நட்பு அதிகம்... இப்போதும் ஊருக்குப் போனால் உறவுகளைப் பார்ப்பதைவிட நட்புக்களைப் பார்ப்பதுதான் அதிகம்...

இருக்கும் வரை அன்போடு இருப்போம் என்பதை ஒவ்வொருமுறையும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறது அமீரக எழுத்தாளர் குழுமத்தின் நண்பர்களின் நேசம்.

எங்களை எல்லாம் இடங்களுக்குத் தேடி வந்து அழைத்துச் செல்லும் பால்கரசு எப்போதும் நன்றிக்குரியவர். அவர் இல்லையென்றால் துபாய்/ ஷார்ஜா என்று சென்று வருதல் என்பது கடினமே. இரவு ரெண்டு மணிக்கு அபுதாபியில் கொண்டு வந்து விட்டுவிட்டு அவர் முஸாபா செல்லுதல் என்பது நேசத்தின் அடையாளமே ஒழிய வெறொன்றும் இல்லை.

தொடரட்டும் இந்த நட்பும் பாசமும்.
-'பரிவை' சே.குமார்.

4 கருத்துகள்:

 1. மகிழ்ச்சியான நிகழ்வுகள் தொடரட்டும்...

  பதிலளிநீக்கு
 2. வேலையின் சுமைகளையும், மற்ற கவலைகளையும் இது மாதிரி கூடுதல்களும், சந்திப்புகளும், கலந்துரையாடல்களும் மறக்க வைத்து உற்சாகம் கொள்ள வைக்கும்.

  பதிலளிநீக்கு
 3. இருக்கும் வரை அன்புடன் இருப்போம்//

  ஆம் குமார் இந்த அன்புதான் மகிழ்ச்சி தரும் ஒன்று. பல நட்புகளையும் உறவுகளையும் பெற்றுத் தரும் ஒன்று.
  பல வருத்தங்கள், பணிச் சுமைகளுக்கிடையில் டென்ஷனையும், கவலைகளையும் புறம் தள்ளிட இப்படியான சந்திப்புகள் நிச்சயமாக நல்ல மாற்றம் தரும் உதவிடும். மகிழ்வான சந்திப்புகள் நிகழ்வுகள் தொடர வேண்டும்.

  கீதா

  பதிலளிநீக்கு
 4. நல்ல மகிழ்வான நிகழ்வுகள். இப்படியான நிகழ்வுகள் நம் அன்றாட சுமைகளுக்கு நல்லதொரு மாற்றமாக இருக்கும் தான். தொடரட்டும்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...