மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 12 மே, 2019

நான் ஏன் எழுதுகிறேன்? (பிரதிலிபிக்கு எழுதியது)

ழுத்து எல்லாருக்குள்ளும் இருக்கக் கூடியதுதான்... என்னால் எழுத முடியும்... உன்னால் எழுத முடியாது... என்பதெல்லாம் உண்மையில்லை, எல்லாராலும் எழுத முடியும்... நாம் முயற்சிப்பதில்லை... அவ்வளவே.

நானெல்லாம் பிறவி எழுத்தாளன் கிடையாது... பள்ளிப்படிப்பு முடிக்கும் வரை எழுதவும் இல்லை... பள்ளிப் பருவத்தில் பலர் கவிதைகள் எழுதித் தள்ளுவார்கள்... சிலர் கதைகளைக் கண் முன்னே விரிப்பார்கள்... நமக்கு அதெல்லாம் வராதென ஒதுங்கியிருந்தவன் நான். ஐந்தாவதில் அழகாய் கவிதை எழுதியவனையும் பார்த்திருக்கிறேன்.

கல்லூரியில் படிக்கும் போது என் நண்பன் முருகன் அருமையாகக் கதை எழுதுவான்... கல்லூரிகளுக்கு இடையிலான போட்டிகள், துறைவாரியான போட்டிகளில் கதைகளுக்குப் பரிசும் பேராசிரியர்களிடம் பாராட்டும் பெறுவான். இரண்டாம் ஆண்டு படிக்கும்போது ஒரு மாலை நேரம் எங்கள் பேராசான் மு.பழனி இராகுலதாசனுடன் எப்பவும் போல் சைக்கிளை உருட்டிக் கொண்டு பேசிக் கொண்டு சென்றோம். இது தினமும் நடக்கும் செயல்தான்.

அப்போது என்னய்யா முருகன் கதையெல்லாம் எழுது பரிசுகளைக் குவிக்கிறாரு... ரொம்பச் சிறப்பா எழுதுறார்... நீங்களும் எழுதலாமே எனக் கேட்க, நானா எனச் சிரித்தபோது, எல்லாரும் எழுதலாம் இதில் நானா என்ற கேள்வி எதற்கு... நீங்க கதை எழுதுறீங்க என்றார்.

அதன் பின் நான் எழுதிக் கொண்டு போய்க் கொடுத்த காதல் கதை அபத்தம் என்று தெரிந்தும் நல்லாயிருக்கு இன்னும் எழுதுங்க என்றார். அவர் போட்ட விதைதான் அதன் பின் தொடர்ந்து எழுத வைத்தது. 

முதல் கவிதை தாமரையில் வந்தது. கதைகள் பத்திரிக்கைகளில் வர ஆரம்பித்தன... அதற்குச் சன்மானமாக 50 ரூபாய் கிடைப்பது பெரும் மகிழ்வைக் கொடுத்தது. எனது சிறுகதை பத்திரிக்கையில் வந்தால் அந்த மாத கலையிலக்கிய மன்றக் கூட்டத்தில் வாசிக்க வைப்பார். எது எழுதினாலும் திருத்திக் கொடுப்பார். அடிக்கடி மேடையேற்ற ஆசைப்படுவார். நான்தான் வெட்கத்தில் ஒதுங்கி நிற்பேன்.

வீட்டில் இருக்கும் போது கதை எழுதுகிறேன் என உட்கார்ந்தால் வயல்ல வேலை கிடக்கு, தம்பி இப்பத்தான் கதை எழுதுறேன்னு உக்காந்திருக்கு... இதுதானே நாளக்கி சோறு போடப்போகுது என அப்பா சத்தம் போடுவார். திட்டுக்கள்தான் அதிகம் வரும்... கதை பத்திரிக்கையில் வரும்போது மற்றவரிடம் சொல்லி மகிழ்வார். என்னை எழுத்தாளனாய் ஆக்கியதில் பெற்றோரைவிட என் கல்வித்தந்தைக்கே பெரும்பங்கு உண்டு.

கல்லூரிக்கால எழுத்தாளன் வாழ்க்கை அத்துடன் முடிவுக்கு வந்தது... எழுதும் எண்ணமில்லாமல் வாழ்க்கை நகர, திருமணத்துக்குப் பின் சென்னை வாழ்க்கை மீண்டும் எழுதும் எண்ணத்தை மனசுக்குள் மலர வைத்தது. அப்பப்ப கதைகள் எழுத ஆரம்பித்தேன்... பத்திரிக்கையில் வந்தது. நீண்ட கவிதைகள் எழுதிவதில் நாட்டம் குறைந்து ஹைக்கூ கவிதையில் நாட்டம் கூடியது.

வெளிநாட்டு வாழ்க்கையின் ஆரம்ப காலங்கள் வீட்டு நினைவுகளுடன் வெறுமையைச் சுமந்தன... எழுத்திலெல்லாம் நாட்டமில்லை... எதையோ இழந்தது போலான வாழ்க்கை... மகிழ்ச்சியில்லாத வாழ்க்கை... வெறுமையை வெறுக்க எதாவது செய்ய வேண்டும் என்ற சூழலில் படங்களாய் பார்த்துக் கழித்தவனுக்கு அதை விடுத்து வேறு பக்கமாக மனதைத் திருப்ப மீண்டும் எழுத ஆரம்பித்தேன்... ஒன்றுக்கு நான்கு வலைப்பக்கம் ஆரம்பித்து தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன். கதைகள், கவிதைகள், கட்டுரைகள், சினிமா என வெவ்வேறு விதமான களங்களில் எழுத ஆரம்பித்தேன்.

சிறுகதைப் போட்டிகளில் பரிசுகள்... மின்னிதழில் கதைகள், கவிதைகள் என என் களம் விரிந்தது. எனது கதைகளுக்கு என வாசிப்பவர்கள் தனியே இருந்தார்கள்... இருக்கிறார்கள் என்பது மகிழ்வைக் கொடுத்தது. எழுத்து என் வலியை, வேதனையை, வெறுமையைக் குறைத்தது. மனசுக்கு மகிழ்வைக் கொடுக்க ஆரம்பித்தது. எனது கதை, கட்டுரை என மின்னிதழ் நட்புக்கள் கேட்டு வாங்கிப் போடும் அளவுக்கு என் எழுத்து என்னை வளர்த்தது.

நிறைய எழுதினேன்... எழுதுகிறேன்... இப்போதெல்லாம் எழுதுவதென்பது அலுப்பாகத் தெரிவதில்லை... அது ஆனந்த அனுபவத்தையே கொடுக்கிறது. கதைக்கான கருவையோ... கதையின் போக்கையோ தீர்மானித்து எப்போதும் நான் எழுதுவதில்லை... என் எழுத்துத்தான் கதையின் போக்கையும் அதன் முடிவை தீர்மானிக்கிறது. எழுத வேண்டுமென அமர்ந்தால் எத்தனை பக்கம் என்றாலும் எழுதிவிட்டுத்தான் எழுவேன் என்பதைப் பெருமைக்காக அல்ல எழுத்து என்னை ஈர்த்து வைத்திருக்கிறது என்பதற்காகச் சொல்கிறேன்.

என் மகன் ஐந்தாவது படிக்கிறான்... சில நாள்கள் கதை எழுதினேன் என எதாவது எழுதி என்னிடம் வாசித்துக் காட்டுவான்... பெரும்பாலும் ஆங்கிலக் கதைகள்.. அது எப்படியான எழுத்தோ... அவனையும் கெடுங்க என அவனின் அம்மா திட்டினாலும் 'அருமை', 'செம' எனப் பாராட்டுவேன். சென்ற வாரத்தில் பள்ளியில் கொடுக்கப்பட்ட தலைப்புக்கு கதை எழுதி மூன்றாம் பரிசு பெற்றவன், அப்பாவுக்கு நான்தான் போட்டி என்று என் மகளிடம் சொல்லியிருக்கிறான். அதை நான் வரவேற்கிறேன்.

எனது எழுத்தை நல்லாயிருக்கு எனச் சொல்லி என்னை எழுத்தாளனாக்கிய எனது பேராசானும் தந்தையுமாகிய பேராசிரியர் பழனியைப் போல யாரேனும் உங்களுக்கு உரமாக, தூண்டுகோலாக இருக்கலாம். வெட்கமோ பயமோ இன்றி எழுதுங்கள்... ஒருநாள் உங்கள் எழுத்தும் பேசப்படும்.

நான் ஆரம்பத்தில் சொன்னது போல் எழுத்து என்பது எல்லாருக்குமானது... எல்லாராலும் எழுத முடியும்... ஆரம்பத்தில் ஒரு சில கதையோ... கட்டுரையோ... கவிதையோ... என்னடா எழுத்து இது என யோசிக்க வைக்கலாம். எழுத எழுத எழுத்து பட்டை தீட்டிய வைரமாகும். 

நீங்கள் நினைத்ததை எல்லாம் எழுத்தில் கொண்டு வரலாம். 

எழுத்து உங்களை கொண்டாட்ட மனநிலைக்கு கொண்டு செல்லும்... 

அது உங்களை மற்றவர்களால் கொண்டாடவும் வைக்கும்.

நான் எழுத ஆரம்பித்ததில் இருந்து தொடர்ந்து எழுதவில்லை என்றாலும் இப்போது தனிமை வாழ்க்கைக்கு மருந்தாக, வலி, வேதனை, வெறுமை, ஏக்கம், கவலை என எல்லாம் மறக்கடிக்கும் மருந்தாக இந்த எழுத்து இருக்கிறது என்பதே உண்மை. 

இன்றைய நிலையில் பலருக்கும் தெரிந்த எழுத்தாளனாய் என்னை ஆக்கி வைத்திருக்கிறது இந்த எழுத்து.

நன்றி.
-'பரிவை' சே.குமார்.

0 எண்ணங்கள்: