மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 4 ஏப்ரல், 2016

பரவசப்படுத்தும் 'சார்லி'

பார்க்காமலே காதல்... சொல்லாமலே காதல்... இப்படி வித்தியாசமான கதைக்களங்களில் நாம் நிறையப் படங்களைப் பார்த்திருக்கிறோம். நாம் இப்பவும் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும் போது இந்த மலையாளிகள் மட்டும் எப்படி இப்படியான கதைகளை எடுக்கிறார்கள் என்பது புரியாத புதிராக இருக்கிறது. நாம் மட்டுமா அவர்களும்தான் காதல் அது இதுன்னு படமெடுக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். அப்படியே இருந்தாலும் அதிலும் வித்தியாசமான கதைக்களம், வித்தியாசமான திரைக்கதை அமைப்பு என கலக்கி விடுகிறார்கள். அப்படியான வித்தியாசமான ஒரு கதைக்களத்தில் மிகவும் வித்தியாசனமான திரைக்கதையில் வந்திருக்கும் படம் தான் 'சார்லி'.


அண்ணனின் நிச்சயதார்த்தத்திற்கு பெங்களூரில் இருந்து வீட்டிற்கு வரும் டெசாவிடம்(பார்வதி) அம்மாவும் அண்ணனும் பெண் கொடுத்து பெண் எடுப்பது குறித்து முன்னமே பேசி வைத்தபடி திருமண ஏற்பாடு செய்ய வேண்டுமெனச் சொல்ல, தனக்கு அந்த மாப்பிள்ளையை பிடிக்கவில்லை என்று எதிர்க்கிறாள். இதனால் அவர்களுடன் மோதல் ஏற்படுகிறது... பாட்டியின் ஆதரவோடு வீட்டை விட்டு வெளியேறி தன் தோழியைத் தேடிச்சென்று அவளின் உதவியோடு ஒரு இடத்திற்குப் போய் வாடகைக்கு வீடெடுக்கிறாள்.

டெசா வாடகைக்கு பிடிக்கும் வீட்டில் ஏகப்பட்ட சாமான்கள் இருக்கின்றன... கேட்டால் முன்னர் குடியிருந்தவரின் பொருட்கள் அவை... மூப்பர் எப்ப வருவாருன்னு தெரியாது... வரும்போது எடுத்துப்பார்... அதுவரை நீ பயன்படுத்திக்கலாம் என்று பதில் கிடைக்கிறது. வீடெங்கும் இறைந்து கிடந்தாலும் அதில் ஒரு அழகியல் இருக்கிறது... அங்கு தங்கியிருந்தவரின் போட்டோ ஒன்றும் இருக்கிறது. அதை எடுத்து வைக்கிறாள். பின்னர் வீட்டின் உரிமையாளரிடம் சுத்தம் பண்ணித் தரச்சொல்லிக் கேட்க, அவர் செய்வதாகச் சொல்லி நாளை நகர்த்துகிறார். ஒரு கட்டத்தில் டெசா தானே சுத்தம் செய்ய ஆரம்பிக்கிறாள்.  அப்படி சுத்தம் பண்ணும் போது ஒரு நோட்டில் சித்திரமாக வரையப்பட்ட கதை ஒன்றினை படிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அதில் கொஞ்சம்தான் இருக்கு... ஆவலைத் தூண்டும் விதமாக அதன் பின்னான பக்கங்கள் வெள்ளைத் தாளாய் சிரிக்கின்றன. அந்த மனிதர் அவளுள் தாக்கத்தை ஏற்படுத்த அவரைப் பற்றி அறியும் ஆவலில் அங்கு தங்கி விசாரிக்க ஆரம்பிக்கிறாள்.

டெசா அந்தக் கதை நாயகனைக் குறித்து அறியும் விதமாக அதன் பின்னே பயணிக்க மெல்ல மெல்ல நம்மை சுவராஸ்யத்துக்குள் இழுத்துக் கொண்டு நகர ஆரம்பிக்கிறான் சார்லி. அவன் யார்...? எங்கிருக்கிறான்...? எப்படிப்பட்டவன்..? என்பதை எல்லாம் அறியாமல் கிடைக்கும் தகவல்களின் சுவராஸ்யத்தை வைத்து  அவன் சந்தித்த நபர்களை அவ்வப்போது சந்தித்து விசாரணையைத் தொடர்கிறாள். ஒவ்வொருவரும் அவனை ஒருமுறைதான் சந்தித்தோம் என்பதையும் அந்தச் சந்திப்பில் தங்களுக்கு அவன் சந்தோஷத்தை அள்ளிக் கொடுத்துச் சென்றான் என்பதையும் சொல்ல, அவனைத் தேடுவதைத் தீவிரமாக்குகிறாள்... மனசுக்குள் அவன் மீது காதல் மெல்ல மெல்ல இறங்க ஆரம்பிக்கிறது. அவளின் தேடலின் அவன் குறித்த செய்திகள் ஒவ்வொருவரிடம் இருந்தும் கிடைக்கும் போது அதில் ஒரு சுவராஸ்யமிருக்கிறது.  அந்த சுவராஸ்யம் அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. 

தன்னை ஒரு பெண் தீவிரமாகத் தேடுகிறாள் என்று அறியும் சார்லி (துல்கர்) அவள் முன் வர வாய்ப்பிருந்தும் அவளை அலைய விட்டு தண்ணி காட்டுகிறான். அவன் குறித்தான தேடலில் எயிட்ஸ் நோயாளி மரியம் (கல்பனா), தற்கொலை செய்து கொள்ளப் போகும் டாக்டர் கனி (அபர்ணா கோபிநாத்), ஹோட்டலில் இருந்து காப்பற்றபடும் தன்யா (மரியத்தின் மகள்), உடல் நலமில்லாத குழந்தை என ஒவ்வொரு கதைகளும் அவளுக்கு அவன் மீதான மதிப்பைக் கூட்டிக் கொண்டே செல்ல, அவர் காப்பாற்றிய டாக்டர் பெண்ணைத் தேடி வருவது போல் அவன் தமிழ்நாட்டில் நடத்தும் ஒரு இல்லத்துக்கு வருகிறாள்.


அங்கு அவன் நடத்தும் இல்லத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல தரப்பட்டவர்கள் மிகவும் சந்தோஷமாக இருப்பதைக் காண்கிறாள். அவர்களோடு தங்கியிருக்கும் வேளையில் தோழி மற்றும் பாட்டியின் மூலமாக அவள் இருக்கும் இடம் அறிந்து அம்மாவும் அண்ணனும் வந்து கூட்டிச் செல்கிறார்கள். அவள் சென்ற சில நாட்களில் அங்கு வரும் சார்லி, எப்பவும் போல் ஜாலியாக இருக்க, டாக்டர் பெண் அவனிடம் டெசா குறித்தும் அவளின் காதல் குறித்தும் பேசுகிறாள். முதலில் என்னோட வாழ்க்கையில் யாருக்கும் இடமில்லை என்று சொல்பவன், அவளை எதற்காக அலைய விடுகிறாய் என்று அவள் சற்று கோபமாகப் பேச ஆரம்பித்ததும் அவளை எனக்குத் தெரியும் என்பதோடு எனக்கு மற்றவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து அதன் மூலம் அவர்களை  சந்தோஷப்படுத்தி, அந்த நேரத்தில் அவர்களோட முகத்தில் இருக்கும் சந்தோஷத்தை ரசிப்பது ரொம்ப பிடிக்கிறது அதை நான் தொடர்ந்து செய்ய எனக்கு தடையாய் எதுவும் வரக்கூடாது என்று சொல்லி என்னோட வாழ்வில் அவள் தேவையில்லை என்று சொல்லி விடுகிறான். பின்னர் அங்கிருந்து கிளம்பும் போது தன்னை பேருந்து நிறுத்தத்தில் கொண்டு வந்து விடும் டாக்டர் கனியிடம் இனி அவளிடம் விளையாடவில்லை பூரம் திருவிழாவில் கூட்டத்தோடு கூட்டமாய் நானிருப்பேன்... அங்கு வந்து என்னை கண்டுபிடிக்க முடிந்தால் கண்டுபிடிக்கச் சொல்லு என்று சொல்லிச் செல்கிறான்.

கனி போன் மூலம் டெசாவுக்குச் சொல்ல எப்படியும் அவனைக் கண்டுபிடிப்பேன் என பூரம் திருவிழாவிற்கு வருகிறாள். மக்கள் வெள்ளத்தில் பரபரப்பான இறுதிக்காட்சி, அலைமோதும் கூட்டம்...  அந்த மக்கள் வெள்ளத்தில் இருவரும் சந்தித்தார்களா... ஒன்று சேர்ந்தார்களா... என்பதே கதை... 

ஆரம்பம் முதல் அழகாய் நகரும் கதையில் பார்வதி தேடிச் செல்லும் நபர்கள் ஒவ்வொருவரும் துல்கர் குறித்து அவிழ்க்கும் முடிச்சு அனைத்தும் சுவராஸ்யமானவை. பிறருக்கு உதவி செய்யும் இளைஞன்... எப்பவும் ஜாலியாக சுற்றுபவன்... தன்னாலான நல்லதை செய்பவன்... அம்மா இல்லாமல் வளர்ந்தவன் என்றாலும் அப்பாவும் மகனும் தோழர்கள் போல் இருப்பவர்கள்... என வித்தியாசமான இளைஞனாக காட்டியிருக்கிறார்கள். இந்த வித்தியாசம்... நல்ல மனம் கொண்ட பிறருக்கு உதவும் கதாபாத்திரம் பார்த்து கேரளாவில் சில கல்லூரி இளைஞர்கள் சேவை மனப்பான்மையுடன் ஒரு சில நல்ல செயல்களில் இறங்கியிருப்பதாக சில நாட்களுக்கு முன்னர் செய்தியில் பார்த்தேன். ஒரு சினிமா நல்ல விஷயத்தை சொல்லிக் கொடுக்கும் போது பாராட்டலாம்தானே... நாங்க கட்டிடம் கட்ட நீங்க பணம் கொடுங்கன்னு மனசாட்சியே இல்லாமல் கேட்கும் நம்மவர்களை... விஜயகாந்த் பாணியில் ...த்தூ...ன்னுதான் சொல்லத் தோணுது.

நம்ம சினிமாவில் பெரும்பாலும் நாயகன் ஊர் சுற்றுவான்... காதலிப்பான்... டூயட் பாடுவான்... குடிப்பான்... குத்தாட்டம் போடுவான்... அப்பாவை வாடான்னு செல்லமாக அழைப்பான்... ஆனால் மலையாளத்தில் பெரும்பாலும் அப்பாவை.... பெரியவர்களை மரியாதை குறைவாக பேசும் காட்சிகள் இருப்பதில்லை... சார்லியில் கூட அடுத்தவரை சந்தோஷப்படுத்தி பார்க்கும் கதாபாத்திரம்தான்... ஆரம்பக் காட்சியில் தண்ணி அடிப்பது போல காட்டினாலும் ரொம்ப நல்லவனாக இருக்கிறான். காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரைதான் இருப்பேன் ஒரு நாளைக்கு ஒரு லட்சம்... அதன் பின்னான படங்களில் மணிக்கணக்கில் மீட்டர்... என்றெல்லாம் சொல்லி நடித்த வடிவேலு சன்டிவி சினிமா நிகழ்ச்சியில் 'உங்களை நம்பித்தான் நாங்க இருக்கோம்... நட்சத்திர கிரிக்கெட்டுக்கு முழு ஆதரவு கொடுங்கன்னு சொல்றார்... சம்பாதித்த கோடிகள் எல்லாம் சொத்தாகிப் போக, தெருக்கோடியில் இருப்பவனிடம் கெஞ்சுகிறார்கள்... வெட்கமாக இல்லை... இவர்கள் நாளைக்கே 'டேய் அப்பா... அட நாதாரி அப்பான்னு...' பேசி நடிப்பாங்க... நாம சிரிப்போம்... ஒன்றிரண்டு பேர் தவிர மற்றவர்கள் எல்லாமே தமிழனைக் கெடுக்கும் சினிமாதான் எடுக்கிறார்கள்.

சின்ன வயதில் தெரேசா என்னும் பெண்ணை மனசுக்குள் காதலித்து, காதலைச் சொல்லும் முன்னே அவளின் குடிசை மழையில் இழுத்துச் செல்லப்பட, அதன் பின்னான வாழ்வில் திருமணமே செய்யாமல் வாழும் அவரின் முன்னே சின்ன வயதில் காதலித்தவளை வயதான கன்னியாஸ்திரியாக சார்லி கொண்டு வந்து நிறுத்தும் போது அவர்கள் இருவரும் நடந்து கொள்ளும்  விதம், அதன் பின்னர் தனக்கு கொஞ்ச நேரம் தனிமை வேண்டுமெனச் சொல்லி அறைக்குள் அடைந்து கிடந்தவர் சந்தோஷமாய் வெளியில் வந்து 'அவருக்கு கொஞ்சம் காபி பொடியும் தேயிலையும் கொடுத்து விட்டிருக்கலாம்' என்று சொல்லும் போது அந்தக் காதல்... அந்தக் காத்திருப்பின் சுகம் எல்லாம் மிக அருமையாக காட்டப்படுகிறது... வயதான மனிதராக நெடுமுடி வேணு... மனிதர் கலக்கியிருக்கிறார்.


துல்கர்... துடிப்பான நடிப்பு... கலந்து கட்டி கலக்கும் பாத்திரம் என்பதால் ஆரம்பத்தில் பார்வதியிடம் போனில் பேசுவது முதல்... திருடனுடன் தண்ணி அடித்துவிட்டு திருடப் போவது... தற்கொலை பண்ணிக் கொள்ள இருக்கும் பெண்ணைக் காப்பாற்ற அவள் பின்னே பயணிப்பது... போலீஸில் காதலர்கள் என்று சொல்வது... கல்பனாவின் ஆசைப்படி கடலுக்குள் கூட்டிச் செல்வது... அவள் இறந்ததும் தவிப்பது... ஹோட்டலில் மனித மிருகத்திடமிருந்தும் பெற்ற தகப்பனிடம் இருந்தும் தன்யாவை காப்பாற்றி அழைத்துச் செல்வது... பார்வதி தன்னைத் தேடுகிறாள் என்று தெரிந்தும் அவளை அலைய விடுவது என ரொம்ப ஜாலியாகச் செய்திருக்கிறார். கலக்கலான சுந்தரிப் பெண்ணே பாடலை அருமையாகப் பாடியிருக்கிறார். குரலும் ரொம்ப நல்லாவே இருக்கு... அவரின் உடையும் மிக வித்தியாசமாய்.... துல்கர் ஜெயிக்க ஆரம்பிச்சிட்டார்.

பார்வதி... சொல்லவே வேண்டாம்... நடிப்பு ராட்சஸி... அவருக்கு தீனி போடும் கதை என்றால் இன்னும் தீனி கேட்கும் நடிகை... எப்படிப்பட்ட கதாபாத்திரம் என்றாலும் அதோடு ஒன்றிப் பயணிப்பதில் சில நடிகைகளை மட்டுமே அடையாளம் காண முடியும். அப்படிப்பட்ட நடிகைகளில் ஒருத்தி... மூக்கில் மாடர்னாக பெரிய மூக்குத்தி, சோடாப்புட்டி கண்ணாடி, வித்தியாசமான செருப்பு என தன்னை அழகியாகக் காட்டாமல்... ஆரம்பம் முதலே நடிப்பில் கவர்கிறார். சுவராஸ்யமான ஒருவனைத் தேடி... தேடல் காதலாகி... அவனைக் காண அலைவது கலக்கல்... இறுதிக் காட்சியில் 'நான் ஸ்ருதி... ஸ்ருதி ராம்... நீங்க வேற யாரையோ எதிர் பார்க்கிறீங்களா..?' என்று கேட்டு துல்கரை மட்டுமல்ல நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார்.

படத்தோட பிளஸ்ஸே சார்லிங்கிற பெயரை கடைசி வரை சொல்லாமல் 'மூப்பர்... மூப்பர்...' என்று சொல்லி இறுதிக் காட்சியில் சொல்லியிருப்பதுதான்...

படம் ஆரம்பித்து... பார்வதியின் தேடல் ஆரம்பிக்கும் போது... துல்கர் கண்ணாம்பூச்சி ஆட... நமக்குள் இருவரும் சேர வேண்டும் என்ற தவிப்பு மெல்ல மெல்ல மேலெழும்பி இறுதிக் காட்சியில் சேர்ந்துடணும் என்று ஏங்க வைக்கிறது... அதுதான் திரைக்கதையின் ஆளுமை.

படத்தின் பின்னணி இசை அருமை... இசை கோபி சுந்தர்.

பூரம் காட்சிகள்... துல்கர் நடத்தும் இல்லம் இருக்கும் அழகிய இடம்... வித்தியாசமாய் பயணிக்கும் திரைக்கதை... என படம் ரொம்ப அழகு... இயக்குநர் மார்ட்டின் பரக்கத் மிகச் சிறப்பாக செய்திருக்கிறார். 

(சுந்தரிப் பெண்ணே...)

படத்தை எதிர்ப்பார்ப்போடு பார்க்க ஆரம்பிக்காமல் எப்பவும் போல் பார்த்தோமேயானால் சார்லி நம்மை கொள்ளை கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை.
-'பரிவை' சே.குமார்.

23 எண்ணங்கள்:

UmayalGayathri சொன்னது…

அழகாய் ரசித்து ரசித்து விமர்சித்து இருக்கிறீர்கள். படத்தை பார்க்கும் ஆவல் வந்து விட்டது. பார்க்கலாம்.
அருமை சகோ
த2

S.P.SENTHIL KUMAR சொன்னது…

இந்தப் படம் ஏற்படுத்திய அதிர்வலைகளைப் பற்றி ஏற்கனவே கேள்விப் பட்டிருக்கிறேன். தங்கள் விமர்சனம் மூலம் படத்தின் கதை தெரிந்து கொண்டேன். பார்க்கும் ஆவல் ஏற்பட்டுள்ளது. நேரம் கிடைக்கும்போது பார்த்துவிடுவேன். அருமையான விமர்சனத்திற்கும் ஒரு நல்ல படத்தை அறிமுகப்படுத்தியதற்கும் நன்றி!
த ம 4

Anuprem சொன்னது…

அருமை ....பார்க்கும் ஆவலை தூண்டுகிறது உங்கள் விமர்சனம் ....

துரை செல்வராஜூ சொன்னது…

மிக நன்றான விமரிசனம்..
நமக்கெல்லாம் இந்த மாதிரி கலை நுணுக்கம் வராது..

திரைப்படத்தில் மனம் ஒன்றிய காலமெல்லாம் மலையேறி விட்டது..

வாழ்க நலம்..

Menaga Sathia சொன்னது…

உங்கள் விமர்சனம் படம் பார்க்கும் ஆவலை தூண்டுகிறது,லிங்க் மெசேஜ் பண்ணுங்களேன்..

கோமதி அரசு சொன்னது…

அருமையான விமர்சனம்.
தியேட்டர் போய் படங்கள் பார்த்து பல வருடம் ஆகி விட்டது.
பார்க்க ஆவலை ஏற்படுத்திய விமர்சனம்.

Yarlpavanan சொன்னது…

சிறப்பாக அலசி எழுதியுள்ளீர்கள்
பாராட்டுகள்

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

மிக மிக ரசித்துச் சொல்லியிருக்கிறீர்கள் குமார்! நீங்கள் தமிழ்ப்படங்களைக் குறித்து எழுதியிருக்கும் ஆதங்கம் மிகவும் சரிதான். மலையாளப்படங்கள் வித்தியாசமான கதைகள், கதை பழசாய் இருந்தாலும் அதையும் கொடுக்கும் வித்தியாசமான கதைக்களம், திரைக்கதை அமைப்பு யதார்த்தம் இவைதான் அவர்களை முன்னுக்கு இழுத்துச் செல்கின்றன. நமக்கும் பார்க்கத் தோன்றுகின்றது. நம் பக்கத்து மாநிலம்தான் இங்கும் நல்ல இயக்குநர்கள் இருக்கின்றார்கள். ஆனால் ஏனோ யாரும் அது போன்ற மனதைக் கவரும் படங்கள் எடுப்பதில்லை...

துளசி: படம் பார்த்துவிட்டேன் அருமையான படம். நீங்கள் இப்போதுதான் பார்க்கிறீர்கள் இல்லையா...

கீதா: பார்க்கவில்லை. துளசியும் பாராட்டினார். நீங்களும் பாராட்டி எழுதியிருக்கிறீர்கள்..பார்த்துவிடவேண்டும்..

KILLERGEE Devakottai சொன்னது…

விமர்சனம் நன்று நண்பரே.... பார்க்கலாம்....

Angel சொன்னது…

அருமையான விமர்சனம் சகோ ..எனக்கு படம் பார்க்க மிக ஆவலா இருக்கு ..மலையாளபடங்கள் எப்பவும் கதையை மட்டுமே எடுக்கப்படுபவை அவை ரசிகர்கள் நெஞ்சில் நீங்காமல் இடம்பிடிக்கும் .
இந்த கதை தமிழ் இயக்குனர்கல் கையில் கண்ணில் படகூடாதின்னு வேண்டிக்கறேன் :)

Angel சொன்னது…

பார்த்தாச்சு சகோ ..அதுவும் மகளுக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது ..ரசிச்சி பார்த்தா செம படம் சகோ .

இதே மாதிரி வேற படங்கள் இருந்தா சொல்லுங்க இப்போ ஈஸ்டர் விடுமுறை பார்க்கிறோம் .

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கு நன்றி...
கண்டிப்பாக பாருங்கள்... உங்களைக் கவரும்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க செந்தில் சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கு நன்றி...
நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக பாருங்கள்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கு நன்றி...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கு நன்றி...
எனக்கு நல்ல படங்கள் என்றாலும் விரும்பிப் பார்க்கப் பிடிக்கும்.
ரொம்ப நல்லாயிருக்கு என்று எல்லாரும் சொன்னால் அதை நான் பார்ப்பதில்லை... அது ஏன்னு எனக்குத் தெரியவில்லை.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கு நன்றி...
கண்டிப்பாக பாருங்கள்... முகநூலில் டவுன்லோட் இணைப்பு தருகிறேன்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அம்மா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கு நன்றி...
நானும் இங்கு தியேட்டர் செல்வதில்லை... இணையம்தான்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கு நன்றி...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துளசி சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கு நன்றி...
நீண்ட கருத்து... உண்மையைச் சொல்லியிருக்கீங்க...

கீதா மேடம்... கண்டிப்பாக பாருங்கள்... ரசிப்பீர்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கு நன்றி...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா...

தமிழில் எடுப்பதற்கான பேச்சு வார்த்தை இருக்காம்... கெடுத்துடுவாங்க...

பார்த்தாச்சா...

ஆஹா....
குழந்தைகள் என்றால் பாஸ்கர் தி ராஸ்கல் பார்க்கச் சொல்லுங்க...

இல்லையேல் என்னு நிண்டே மொய்தீன்... அனார்கலி... இப்படியாக பாருங்கள்....

எல்லாத்துக்கும் விமர்சனம் இங்கு இருக்கு....

நன்றி.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தவிர்க்க இயலாத காரணத்தால், கடந்த ஒரு வார காலமாக, வலையின் பக்கமே வர இயலாத நிலை. அதனால் தங்களின் சில பதிவுகளைப் பார்க்காமல் விட்டிருப்பேன் இனி தொடர்வேன் நண்பரே

நிஷா சொன்னது…

உங்க பதிவு நிரம்ப படிக்காமல் இருக்குப்பா!

இப்ப இந்த விமர்சனம் படித்தேன். அருமை என சொல்லவா வேண்டும், படம் பார்க்காதவர்களையும் இழுத்து கொண்டு போய் சினிமா முன் உட்கார வைத்து விடும் படி எழுத படத்தயாரிப்பாளர் ஏதேனும் கிஸ்மிஸ் தருவாரோ குமார்!

நல்லா இருக்கு விமர்சனம்,