மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 18 ஏப்ரல், 2016நட்புக்காக... அகல் ஒரு பார்வை

வார, மாத இதழ்களுக்கு நிகராக மின்னிதழ்களும் மிகச் சிறப்பாக இணையத்தில் வலம் வருகின்றன.  அப்படி வரும் மின்னிதழ்கள் புதியவர்களை ஊக்குவிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் நண்பர் சத்யா.GP நடத்தும் அகல் மின்னிதழ் புதியவர்களுக்கான களமாக அமைந்துள்ளது. நண்பரும் மின்னிதழை மிகுந்த சிரத்தையோடு மிகச் சிறப்பாக நடத்தி வருகிறார்.


அகல்  மின்னிதழுக்கு நான் சென்றது ஒரு சிறுகதைப் போட்டிக்காக... வழக்கம் போல் கதை அனுப்பினேன்... பரிசும் பெற்றது... பின்னர் அந்தப் பக்கம் போகவில்லை... ஒருநாள் புத்தகங்கள் அனுப்ப முகவரி கேட்டார். அன்று முதல் எங்களுக்குள்ளான நட்பு இணைய வழி விரிந்தது.  பிறகு அடிக்கடி முகநூல் அரட்டையில் பேச ஆரம்பித்தோம். இலக்கியம் எங்களை நெருக்கமாக்கியது. முகம் பார்க்க நட்பில் மனதறிந்து பழகும் கூட்டத்தில் ஒருவராய் அவர் என்னோடு இணைந்து கொண்டார்.

அதன் பின் எனது பரிசு பெற்ற கதை, வெளிநாட்டு வாழ்க்கை குறித்த கட்டுரை என எனக்கு அகலில் இடமளித்தார். ஏப்ரல் மாத இதழுக்காக காளையார் கோவில் குறித்து எழுதச் சொல்லி, தயங்கிய போது நீங்க எழுதுங்க நல்லா வரும் என்று சொல்லி எழுத வைத்து அதற்கென எட்டுப் பக்கங்களை ஒதுக்கியிருந்தார். உண்மையிலேயே இது மிகப் பெரிய விஷயம். நம்மேல் உள்ள நம்பிக்கையில் எழுத வைத்து அதை தனது மின்னிதழில் கொஞ்சம் கூட நீளத்தைக் குறைக்காமல் அப்படியே எட்டுப் பக்கங்கள் பகிர்வது என்பது மிகப் பெரிய விஷயம். அப்படிப்பட்ட... எழுதுபவர்களை ஊற்சாகப்படுத்தும் நண்பர் சத்யா அவர்கள் பதிப்புத் துறையிலும் கால் பதித்து திரு. ம. தொல்காப்பியன் அவர்களின் திறனாய்வுப் பார்வையில் ரஜினிகாந்த், திரு. மதுமதி அவர்களின் பொன் வாத்துப் பருக்கள் என்ற இரண்டு புத்தகங்களை அகல் மூலமாக வெளியிட இருக்கிறார். 

சரி இதெல்லாம் இங்க எதற்கு என்று நினைக்கிறீர்களா? அகல் மின்னிதழ் குறித்து சில கருத்துக்களை அவருடன் பகிர்ந்து கொள்வதுண்டு. இந்த சித்திரைச் சிறப்பிதழைக் குறித்து அவருடன் பகிர்ந்து கொள்வதைவிட ஒரு பதிவாக ஆக்கினால் நட்புக்குச் செய்யும் மரியாதையாக இருக்கும் அல்லவா... அதனால் இதழ் குறித்தான பார்வையை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

81 பக்கங்கள் கொண்ட அகல் தமிழ்ப் புத்தாண்டு இதழ் மிகச் சிறப்பான கட்டுரைகள், சிறுகதைகள், தொடர்கள், கவிதைகளைத் தாங்கி கலக்கலாய் வந்திருக்கிறது. இதழை மிகச் சிறப்பாக கொண்டு வந்த திரு. GP.சத்யா அவர்களுக்கும் அவருக்கு வடிவமைத்துக் கொடுக்கும் அவரின் நட்பு வட்டத்துக்கும் இதழினை தங்கள் தளத்திலும் பகிர்ந்து கொள்ளும் பிரதிலிபி நட்புக்களுக்கும் வாழ்த்துக்கள். 

இனி ONE by ONE - ஆக என் பார்வையில்...


* வழக்கம் போல் சத்யா அவர்களின் முதல் பக்கம் புதிதாய் இணைந்த எழுத்தாளர்களை வரவேற்றும் அகல் வெளியிட்டிருக்கும் இரண்டு புத்தகங்கள் குறித்தும் பேசியிருக்கிறது. இன்னும் நிறைய பேசலாம்...

* கவி ரசிகன் அவர்களின் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக் கவிதை மிக அருமை. கவிஞருக்கு வாழ்த்துக்கள். 

* கார்த்திக் குமார் அவர்களின் திருக்குறள் கதைகள் இரண்டும் நன்று. நல்லதொரு முயற்சி... தொடரட்டும். இன்னும் வித்தியாசமாய் பயணப்படலாம் என்று நினைக்கிறேன். அடுத்தடுத்த கதைகளில் அதைச் செய்வார் என்று நம்பலாம்.

* கவிதைப் பக்கத்தை அலங்கரித்த அமுதா சுரேஷ், அகராதி, நிர்மலா கணேஷ், சக்தி கிரி, வேதா பிச்சாண்டி, வேத நாயக், ஷிவ சுப்ரமண்யம் ஆகியோரின் கவிதைகள் அருமை. இதில் அதிகம் கவர்ந்தவை சுயமி, விவசாயி. அதற்காக மற்ற கவிதைகள் சரியில்லையோ என்று நினைக்காதீர்கள். எல்லாக் கவிதைகளும் அருமை... என்னை மேலே சொன்ன கவிதைகள் கவர்ந்தது போல் மற்ற கவிதைகள் உங்களைக் கவரலாம்.

பரிசு பெற்ற சிறுகதையான கூடை ரொம்ப அருமையாக எழுதப்பட்டிருக்கிறது. எழுதிய ஹரிஷ் கணபதிக்கு வாழ்த்துக்கள். கதையில் ஒரு பெட்டியில் இருந்து கூடையை எடுத்துக் கொண்டு அடுத்த பெட்டிக்குச் செல்வதாக வரும்போது அந்தப் பெட்டியிலும் இருவர் பேசும் முதல் பெட்டியில் பேசியதன் தொடர்ச்சியாக வசனம் வருவது எப்படி என்று மனசுக்குள் கேள்வி எழுந்தது. அந்த இடத்தை கதையாசிரியர் கவனிக்கவில்லையா... இல்லை நான்தான் சரிவர புரிந்து கொள்ளவில்லையா என்று தெரியவில்லை இருப்பினும் கூடை ரொம்ப எதார்த்தமாய் வந்திருக்கு.

* Dr. நளினி அருண் அவர்களின் சுதந்திரமா... அடிமைகளா...  கட்டுரை இன்றைய நிலையை மிகத் தெளிவாகப் பேசியிருக்கிறது.

* கமலி ஆனந்த் அவர்களின் சித்திரலேகா புதிய தொடர்கதை ஆரம்பம் நல்லாயிருக்கு... போகப்போக வித்தியாசமாய் பயணிக்கும் என்றே உணர்கிறேன்.

* ஈஸ்வரி ரகு அவர்களின் உணவு(ம்) மருந்து கட்டுரை கீழாநெல்லி, நாயுருவி போன்ற நம் வயல்காட்டில் இருக்கும் மருத்துவ குணம் கொண்ட செடிகள் குறித்துப் பேசியது. சித்தர் பாடலும் அதற்கான விளக்கமும் அருமை. ஒவ்வொரு மாதமும் பயனுள்ள கட்டுரையை பகிரும் எழுத்தாளர் ஈஸ்வரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

* நிரோஷ் எழுதிய வாழ்வுதான் என் நோய் கதை வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டுகிறது. கதையின் கருவை தலைப்பில் சொல்லிவிட்டதால் இதுதான் நோய் எனத் தெரிந்து விடுகிறது. தலைப்பை மாற்றியிருந்தால் இன்னும் சுவராஸ்யமாய் இருந்திருக்கும்.

மதுரம் பிரபாகர் அவர்களின் MP'S கிச்சன் நன்று.


* எஸ்.கே.மகேஸ்வரன் அவர்களின் தொடர்கதையான ஜமீன் ஸ்வர்ணம் எப்பவும் போல் கலக்கலாய்...

* பிரியா ராஜூ அவர்களின் மாறுபட்ட புதிய தொடரான கடிதம் மிக வித்தியாசமாய்.... இனி வரும் மாதங்களில் தொடர்ந்து கலக்குவார் என்ற நம்பிக்கையை கொடுத்தது.

* திரு. ரிஷபன் அவர்களின் மனிதம் சிறுகதைத் தொகுப்பு குறித்த சாயா சுந்தரம் அவர்களின் வாசிப்பு அனுபவம் நன்று.

* வெட்கங் கெட்ட நிலாவை ராஜா முகமது ரொம்ப சோகமாக முடித்து விட்டார்... முடிவு எதிர் பார்த்ததுதான் என்றாலும் சந்தேகப் பேயை விரட்டி பாஸிட்டிவ்வாக முடித்திருக்கலாமோ என்று என்ன வைத்தது.

* ஹைக்கூ கார்னரை இன்னும் பட்டை தீட்டலாம் என்று தோன்றியது. ஹைக்கூ எழுதும் நண்பர்கள் எழுதி அனுப்புங்கள்... நிறைய... நிறைவாய் வெளியிடலாம்.

* கார்த்திக் ஸ்ரீனிவாசன் அவர்களின் பகலொளி சேமிப்பு நேரம் குறித்த அறிவியல் விசித்திரங்கள் அறியாத விபரங்களை அறியத் தந்தது.

* ஸஃபார் அகமது அவர்களின் அன்புள்ள அப்பா என்ற ஒரு நிமிட சிறுகதை ஓகே ரகம். இன்னும் நிறைய எழுதுங்கள் ஆசிரியரே...

திரு. தமிழ்ச்செல்வன் அவர்களின் செல்வராஜ் அண்ணன் சிறுகதை வாழ்க்கையைப் பேசியது. அகல் ஏப்ரல் இதழில் மனம் கவர்ந்த கதை இது. வாழ்த்துக்கள் தமிழ்ச்செல்வன் சார்.

* சரத் பாபு அவர்களின் கொரியாவுட் என்ற கட்டுரை 'I SAW THE DEVIL' என்ற படத்தைப் பற்றிய விமர்சனப் பார்வை படத்தை பார்க்கும் ஆவலைத் தூண்டியிருக்கிறது. படம் பார்க்க வேண்டும்.

பிரகாஷ் ராம்ஸ்வாமி அவர்களின் நம்பினால் நம்புங்கள்... படப்படப்போடு நகர்ந்தது.... இந்தக் கதையை ஒட்டி மலையாளத்தில் நிவின் பாலி நடித்த ஒரு வடக்கன் செல்பி என்ற சினிமா பார்த்த ஞாபகம். அதிலும் இது போல் இறந்தவனின் மெயில் ஐடி பயன்படுத்தி சாட்டிங் நடக்கும். அதை யார் செய்தார்... அந்தப் பெண் என்ன ஆனார்... என விரியும் கதை கேரளாவில் இருந்து தமிழகத்துக்குள் விரியும்...  ஆனால் அதற்கும் இதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. நம்பினால் நம்புங்கள் அருமை.

* சிறகு ரவிச்சந்திரன் அவர்களின் சொக்கட்டான் ஆட்டம் தேர்தல் குறித்துப் பேசியது. அவரின் பார்வையில் ஜெ.. ஜெ... போட்டிருக்கிறார். ஆனாலும் இந்த முறை மக்கள் சிறப்பான முடிவை எடுப்பார்கள் என்றே தோன்றுகிறது.

* ஷாரா சித்தாரா அவர்களின் சோளக்கருது சிறுகதை நாம் வாசித்த கதைகளின் களத்தில்தான் பயணிக்கிறது... புதிதாகத் தெரியவில்லை. சென்ற இதழில் மிகச் சிறப்பாக எழுதியிருந்தார் என்று ஞாபகம். இன்னும் சிறப்பான கதைகளை எழுதலாம்.

* சிவக்குமார் அசோகன் எழுதும் ஜலசாவின் டைரியிலிருந்து எப்பவும் போல் சிறப்பு. நல்லாயிருக்கு... பல நியாபகங்களை கிளறிச் செல்லும்...

* நண்பர் சத்யாவின் சமூக (வலை) தளம் சிறுகதை மிகவும் வித்தியாசமான சிந்தனை... இவர் பெரும்பாலும் அஞ்சலிக் கவிதைகள்... ஐய்யய்யோ இருங்க தப்பா நினைச்சிடாதீங்க... நடிகை அஞ்சலி படம் போட்டு கவிதைகள் எழுதுவார். நிகழ்வுகளை எதார்த்தமாய்ப் பதிவார். இப்பல்லாம் குட்டிக் குட்டியாய் நிறைய கதைகள் எழுத ஆரம்பித்திருக்கிறார். இந்தக் கதை கூட பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸப், சாட்டிங், போன் என கலக்கலாய் நகர்கிறது. வாழ்த்துக்கள் (ஆன்மீக) எழுத்தாளர் சத்யா.

மொத்தத்தில் இந்த அகல் மின்னிதழ் எல்லாம் கலந்து பரிமாறப்பட்டிருக்கிறது. செல்வராஜ் அண்ணன் போன்ற வித்தியாசமான கதைகளுக்கும் தேர்ந்தெடுத்து பதியப்படும் ஹைக்கூக்களுக்கும் முன்னுரிமை கொடுக்கலாம். மற்றபடி கட்டுரைகள்... கவிதைகள்...எப்பவும் போல் சிறப்பாகவே பயணிக்கின்றன. வாசகர் கேள்விப் பதில் இந்த இதழில் ஆரம்பிப்பதாகச் சொல்லியிருந்தார்கள். ஆனால் இந்த இதழில் வரவில்லை... அடுத்த இதழில் வரும் என்று நினைக்கிறேன். இங்கு சொல்லியிருக்கும் கருத்துக்கள் என் மனதில்பட்டவைதான்... இன்னும் எழுதியிருக்கலாம்... பட்டை தீட்டலாம்... என்று சொல்லியிருப்பதை எல்லாம் தவறாக நினைக்க வேண்டாம்... மனதில்பட்டதை எழுதும்போது சிலவற்றை மறைத்து சிலாகிக்கப் பிடிப்பதில்லை... மற்றபடி எல்லா எழுத்தாளர்களுக்கும் கலக்கலாகத்தான் எழுதியிருக்கிங்க... வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

என்னடா இவன் இப்பத்தான் எழுதுறான்னு நினைக்காதீங்க அகல் நட்புக்களே... நேரமின்மை காரணமாகவே எழுத முடியவில்லை.

***
அகலை இணையத்தில் வாசிக்க... அகல் ஏப்ரல்-2016

PDF பைலை தரவிறக்கம் செய்து வாசிக்க...  அகல்

அகலுக்கு எழுத... : agal.emagazine@gmail.com

-'பரிவை' சே.குமார்.

7 கருத்துகள்:

 1. நல்லதொரு அறிமுகம்... நல்லதொரு பகிர்வு.

  பதிலளிநீக்கு
 2. நல்லதொரு இதழினை அறிமுகம் செய்தமைக்கு நன்றி நண்பரே
  தம +1

  பதிலளிநீக்கு
 3. இதழ் அறிமுகம் நன்று தியாகியைப் பற்றிய திறனாய்வு படிக்க முயல்கிறேன் வந்தாரை வாழ வைக்கட்டும் நாம் மட்டும் இப்படியே..................................................................................

  பதிலளிநீக்கு
 4. உங்க ப்ளாக் மூலம் மிகப் பெரியதொரு அறிமுகத்தைத் தந்துருக்கீங்க... மிக்க நன்றி ஜி

  பதிலளிநீக்கு
 5. அருமையான பதிவு
  தொடருங்கள்

  http://tebooks.friendhood.net/

  பதிலளிநீக்கு
 6. சிறந்த அறிமுகம் குமார். அருமையான மின்னிதழை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...