மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 3 டிசம்பர், 2014

எதார்த்த உண்மைகள்

குண்டுங்குழியுமாக இருந்த மண் சாலையில் ஆட்டோ ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. டிரைவர் மெதுவாக பேச்சை ஆரம்பித்தார்.

"சார்... ஊருக்கு புதுசுங்களா... நம்ம பக்கத்து ஆளு மாதிரி தெரியலையே... எந்த ஊரு சார்?"

"மதுரையில இருந்து வாறேன்... இதுதான் நா பொறந்த மண்ணு..."

"அப்படிங்களா? முத்து நாட்டுக்குப் போறீங்களே அதுதான் சொந்த ஊரா... எனக்கு பக்கத்துல கிளியூருங்க..."

"அப்படியா... சந்தோஷம்... எங்க பூர்வீகம் கல்லல் பக்கம்... ஆமா ராத்திரிக்கு ஊருக்குப் போயிருவியளோ..?"

"இல்லங்க... இந்த தொழிலுக்கு வந்ததும் டவுனுக்குள்ள குடும்பத்தைக் கொண்டாந்து வச்சிக்கிட்டேன்... ராத்திரியில அர்ஜெண்ட்டு ஆபத்துன்னு வாடிக்கையாளருங்க கூப்பிட்டா ஊருல இருந்து இந்த மாதிரி ரோட்டுல வர முடியுங்களா... அதுபோக இங்க இருந்து அம்புட்டுத்தூரம் போறதுக்குள்ள அவங்க வேற வண்டி வரச்சொல்லி போயிருவாக... அதான் கம்மியான வாடகையில சிட்டிக்குள்ள வீடு புடிச்சிட்டேன். புள்ளைக படிப்புக்கும் வசதியா இருக்குல்ல... நாமெல்லாம் படிக்கும் போது மழ பேஞ்சா ரோடெல்லாம் தண்ணி நிக்கும்... அன்னைக்கு பள்ளிக்கூடம் போமாட்டோம்... ஆனா இன்னைக்கு வசதிக்கு மீறி பணங்கட்டி படிக்க வைக்கிறோம்... மழ அது இதுன்னு வீட்டுல கெடந்தா சரியா வருமா?" என ஆட்டோக்காரர் பேசிக் கொண்டே போக இவர் சிரித்துக் கொண்டார்.

"என்ன சார் சிரிக்கிறீக... இதுதானே இன்னக்கி நடப்பு... இல்லையா...?"

"ஆமா.. ஆமா... இப்ப யாரு கவர்மெண்ட் பள்ளிக்கூடத்துல படிக்க வைக்கிறா... எல்லாருமே கான்வெண்டுக்குத்தானே போறோம்... கவர்மெண்ட் பள்ளி எல்லாம் காத்து வாங்குதுல்ல... நாலஞ்சு கிராமத்துக்கு ஒண்ணுன்னு அஞ்சாவது வரைக்கும் பள்ளிக்கூடம் இருக்கும். அதுல ரெண்டு டீச்சருங்க இருப்பாங்க... அவங்க ரெண்டு பேரும் அஞ்சு கிளாசுக்கும் வகுப்பெடுப்பாங்க... மத்தியான நேரத்துல புள்ளைக டீச்சருக்கு பேன் பாக்குங்க... அப்படித்தானே அப்ப ஓடுச்சு... இல்லையா?"

"ஆமா சார்... நீங்க சொல்றது கரெக்கிட்டுத்தான்... நாங்க படிக்கும் போதெல்லாம் எங்ககூட படிச்ச பொண்ணுங்க டீச்சருக்கு காபி போட்டுக் கொடுக்குங்க... அதுக்காக வயலுப்பக்கம் போயி சில்லாமடை, பட்டமுள்ளெல்லாம் பொறக்கிக்கிட்டு வருங்க சார்... இப்பவும் அந்த மாதிரி கிராமத்துப் பள்ளிக்கூடங்க இருக்கத்தான் செய்யுது சார்..."

"ம்..."

"ரெண்டு மாசத்துக்கு முன்னால சார்... புளியாலுக்குப் பக்கத்துல ஒரு ஊருக்கு பாடம் நடத்த கம்பூட்டரு தூக்கிக்கிட்டுப் போனோம்... கம்பூட்டரை இறக்கி வைக்க நல்ல ரூமில்லை சார் அங்க. எட்மாஸ்டருக்கிட்ட கேட்டா அவரு ரூமுல இருந்த காட்ரசு பீரோலுக்குள்ள வைக்கச் சொன்னாரு... அப்புறம் என்ன பண்ணுறது அதுக்குள்ளதான் வச்சோம்... அதுக்கப்புறம் ரேவதின்னோ என்னவோ கூப்பிட ஒரு சின்னப் பொண்ணு... நாலாப்பு அஞ்சாப்புத்தான் படிக்கும்... என்னங்க சாருன்னு கேட்டு எந்திரிச்சி வந்துச்சு... சாருக்கெல்லாம் காபி போடும்மான்னு சொன்னோடனே நாலஞ்சு புள்ளைங்க பின்னாடி இருந்த வயக்காட்டுக்குள்ள ஓடி சுப்பி பொறக்கிட்டு வர அந்தப் புள்ள எரியாத அடுப்பை ஊதுஊதுன்னு ஊதி பொகவாசத்தோடு ஒரு காபி கொண்டு வந்து கொடுத்துச்சு... நல்லா காபி போடும்ன்னு வாத்தியாரு சொன்னதும் அந்தப்புள்ளக்கி அம்புட்டுச் சந்தோஷம்... எங்களுக்குத்தான் கஷ்டமாத் தெரிஞ்சிச்சி..."

"ம்... நல்லாப் படிக்கும்ன்னு சொல்ல வேண்டிய வாயி காபி போடுமின்னு சொல்லியிருக்கு..."

"ஆமா சார்... இப்படி படிக்கிற புள்ளக சிட்டி பள்ளிக்கொடம் போகும்போது ஒண்ணுமே தெரியிறதில்லை... ரெண்டு மூணு வருசம் கோட்டடிக்கவும் பெத்தவனுங்க படிச்சது போதுமின்னு ஆடு மாடு மேய்க்க விட்டுடுவானுங்க... அதோட படிப்பு அம்புட்டுத்தான்..."

"நகரத்தை ஒட்டியிருக்க பள்ளிக்கூடங்கள்ல கூட இது மாதிரி இருக்கத்தான் செய்யுது...  நாங்க மதுரைக்கும் மேலூருக்கும் இடையில ஒத்தக்கடைக்கு இருக்கோம்... எங்க ஏரியாவுல ஒரு டீச்சரு வீட்டுக்கு வாரவாரம் படிக்கிற பிள்ளைங்க வந்து வீட்டைக் கிளீன் பண்ணிக் கொடுத்துட்டு மத்த வேலை எல்லாம் பாத்துட்டுத்தான் போகுதுங்க... அந்த டீச்சருக்கு புள்ளக வந்து பாத்துக் கொடுத்துட்டுப் போறதுல அம்புட்டுச் சந்தோஷம்..."

"இருக்கு சார்... இங்க கிராமத்துலயும் கூட நல்ல வாத்தியாருங்க... டீச்சரம்மாக்க இருக்கத்தான் செய்யுறாங்க... நாங்க படிக்கும் போது முத்துநாட்டுல வேலுன்னு ஒரு வாத்தியாரு இருந்தாரு... மனுசன்னா மனுசன் அப்புடி ஒரு மனுசன்... பசங்கள படிக்க வைக்கிறதுக்காகவே அம்புட்டுச் செரமப்பட்டாரு... ஆனா என்னய மாதிரி ஆளுகளுக்குத்தான் படிப்பு ஏறலை... அவரு ஆசைப்படி படிச்சிருந்தா இன்னைக்கி இந்த ஆட்டோவக் கட்டிக்கிட்டு அழுவாம ஏதாவது ஒரு ஆபீசுல பெஞ்சத் தேச்சிக்கிட்டு இருப்பேன்..."

"எல்லாருக்கும் எல்லாமும் அமைஞ்சிடாதுய்யா... நீங்க உங்க பத்துல இருந்து பாத்து அந்தப் பக்கம் நல்லாயிருக்குன்னு சொல்றீங்க... அங்கிட்டு இருக்க ஆளுக இங்கிட்டுப் நல்லாயிருக்குன்னு சொல்லுவாங்க... இதைத்தான் இக்கரைக்கு அக்கரைப் பச்சையின்னு சொல்லுவோம்..." எனச் சொல்லி சிரித்தார்.

"ஆமா... ஆமா..."

"படிப்புங்கிறது எனக்கு வரும்... உனக்கு வராதுன்னு இல்லை... எல்லாருக்குமே வரும்... ஆரம்பத்துல நம்மளைச் செதுக்குற ஆசிரியரை  வச்சித்தான் பின்னால நம்மோட படிப்பு அமையுது... பெரிய கிளாஸ் வாத்தியாருகளை விடச் சிறந்தவங்க நமக்கு ஒண்ணாப்பு ரெண்டாப்புல வகுப்பெடுக்கிற ஆசிரியர்கள்தான்... அம்மாக்கிட்டயே இருந்து பிரிஞ்சி வர்ற பிள்ளைய அம்மா அரவணைச்சி அதுக்கு சொல்லிக்கொடுத்து படிப்புல நாட்டம் கொண்டு வர்றது அவங்கதான்... வடிவேலு சொல்ற மாதிரி பில்டிங்க் ஸ்ட்ராங்க் பேஸ்மெண்ட் வீக்குன்னு இல்லாம பேஸ்மெண்ட் ஸ்ட்ராங்கா இருந்தா பில்டிங்கும் ஸ்ட்ராங்கா ஆயிடும்..."

"ஆமாங்க சார்... அது உண்மைதான்... எந்தத் தொழிலையும் செஞ்சா மனநிறைவோட செஞ்சம்ன்னா நமக்கும் சந்தோஷம்... அதால பயனடையிறவனுக்கும் சந்தோஷம்..."

"சரியாச் சொன்னீங்க... எந்த வேலையையும் ஆத்மார்த்தமாச் செஞ்சா அதால கிடைக்கிற பலன் சந்தோஷத்தைக் கொடுக்கும்... ரொம்ப சந்தோசமான ஒரு அனுபவம் உங்க ஆட்டோ பயணம்... வண்டியில ஏறுன உடனே அதுவரைக்கும் பாட்டே கேக்காத மாதிரி குத்துப் பாட்டைப் போட்டுக்கிட்டு குண்டு குழியெல்லாம் விட்டு ஓட்டுற ஆட்டோவுல பயணிச்ச எனக்கு இது ஒரு நல்ல பயணம்... ஆமா இவ்வளவு பேசுறீங்க... உங்க பேரைச் சொல்லுங்க..."

"காமராசு..."

"நல்ல பேரு... உங்க வண்டிதான் போன் நம்பரைச் சொல்லுங்க... குறிச்சிக்கிறேன்... எனக்கு இனி நீங்க அதிகமா தேவைப்படுவீங்க.... பயணத்துல நிறைய விஷயங்களைப் பேசலாமில்லையா?"

"சந்தோஷம் சார்... இம்புட்டுத்தூரம் பேசுறோம்... உங்க பிள்ளைங்க எல்லாம் கவருமெண்ட் பள்ளிக்கொடத்துலதான் படிச்சாங்களா?" எதார்த்தமாய்க் கேட்க, "எனக்கு ஆசைதான்... எங்க வீட்டுல மதுரை ஆட்சிதான்... அதுல அவங்க வீட்டு ஆளுங்களோட ஆளுமை அதிகம்... என்னால ஜெயிக்க முடியலை... நீங்க இப்ப கேட்ட கேள்விக்கு ஆமாங்கன்னு நெஞ்சை நிமித்தி சொல்ல முடியலை... எல்லாருமே கான்வெண்ட்லதான்... இதுல இன்னொரு வெட்கக்கேடு என்னன்னா... தமிழ்ல பேசுறதே அவங்களுக்கு அவமானமாத் தெரியுது..." தலை குனிந்து சொன்னார்.

"விடுங்க சார்... நானுந்தான் விரலுக்கேத்த வீக்கம் வேணுமின்னு பாத்தேன்... எங்க வீட்டுல டபுள் மதுரை... இப்ப பசங்க கான்வெண்ட்லதான்... என்ன செய்ய... ராப்பகலா ஆட்டோ ஓட்டுறேன்... என்னைய மாதிரி ஆளுகளுக்கெல்லாம் வசதிக்கு தகுந்த ஆசை வேணும்... இருந்தாலும் இன்னைக்கு உலகத்துப் பின்னால ஓட வேண்டியிருக்கே... ஆமா வண்டியில ஏறுன உடனே கல்லல் பக்கமுன்னு சொன்னீங்க... அப்புறம் அப்படியே பேச்சு மாறிடுச்சு... உங்க பேரைக்கூட கேக்கலை பாருங்க... "

"எம்பேரு சேசுராசு... நா முத்து நாட்டு ஸ்கூலுக்கு வாத்தியாரா அப்பாயிண்ட் ஆயிருக்கேன்... இன்னும் மூணு வருசத்துல ரிட்டையர்மெண்ட்... எனக்கு சொந்த ஊருப்பக்கம் வேலை பாக்க ஆசை... அதான் இங்கிட்டு கேட்டப்போ இங்க கிடச்சது... ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு... தலைமை ஆசிரியர் பணி... இதுவரைக்கும் மனநிறைவான பணி... இங்கேயும் அதே போல தொடர ஆசை... அடுத்த மாசம் பள்ளிக்கூடம் திறக்கிறாங்க.. அதுக்கு முன்னால வேலை பாக்கப்போற ஸ்கூலைப் பாத்துட்டுப் போகலாம்ன்னு வந்தேன்... இன்னொரு ஆசிரியருக்கிட்ட பேசிட்டேன்... உள்ளூருக்காரர்தான் போல... வாங்க சார்... நா அங்கே இருக்கேன்னார்..." என்று சொன்னார்.

அதன் பிறகு ஆட்டோ ரொம்ப அமைதியாகச் செல்ல, கவர்மெண்ட்டு வாத்தியார்க்கிட்ட எல்லாத்தையும் பேசிட்டோமே என்ன நினைப்பாரோ தெரியலை என்ற சிந்தனையுடன் பேசாமல் ரோட்டில் கவனம் செலுத்த "என்ன கர்மவீரரே... பேச்சைக் காணோம்... நீங்க சொன்ன வேலு வாத்தியாரு மாதிரித்தான் நானும்... கவலைப்படாதீங்க... பத்துப் பிள்ளைக வந்தாலும் முத்துப் பிள்ளையா ஆக்கவேன்ய்யா..." என்று சொன்னதும் காமராசு சந்தோஷமாகச் சிரித்தார்.
-'பரிவை' சே.குமார்.

11 எண்ணங்கள்:

KILLERGEE Devakottai சொன்னது…


யதார்த்தமான நடைமுறை வழக்கு வார்த்தைகள் அருமை நண்பரே...
த.ம.2

Kasthuri Rengan சொன்னது…

மனம் தொட்ட பதிவு தோழர்
த ம மூன்று

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அவர்தான் முத்துப் பிள்ளை...!

UmayalGayathri சொன்னது…

இன்னுமெத்தனையோ..வேலுவாத்தியார்கள் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள்..

துரை செல்வராஜூ சொன்னது…

பொழுதுக்கும் நாம் காணும் மனிதர்களாக - கண் முன்னே உலவுகின்றார்கள்..

இனிய நடை.. அருமை!..

தினேஷ்குமார் சொன்னது…

எங்க சம்மந்தம் வாத்தியார் போல எங்கள படிக்க வைக்க எவ்வளவு சித்து வேலையெல்லாம் பண்ணுவார் ... அதே சமயம் வேலை வாங்குற ஆசிரியர்களும் இருக்காங்க இப்ப அதிகமா இருக்காங்களான்னு தான் தெரியலண்ணே...

ஸ்ரீராம். சொன்னது…

ரசித்தேன்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

வேலு வாத்தியார்க்ள் தோன்றிக் கொண்டேதான் இருப்பார்கள்

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

tha ma 5

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அருமையான சிறுகதை குமார்.... மனதைத் தொட்டது.

வாழ்த்துகள்.

த.ம. 6

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அருமையான கதை நண்பரே! மனம் நெகிழ்ந்தது! ரசித்தோம்.