மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 22 டிசம்பர், 2013

பாரதி நட்புக்காக : லியோனியின் சொல்லரங்கம் - 'பகுதி : அ'

பாரதி நட்புக்காக அமைப்பு தங்களது ஆண்டு விழாவினை அபுதாபி இண்டியன் பள்ளிக் கலையரங்கில் நேற்று மாலை மிகச் சிறப்பாக நடத்தியது. விழாவின் முக்கிய நிகழ்வாக திண்டுக்கல் ஐ. லியோனி அவர்கள் தலைமையில் சுழலும் சொல்லரங்கம் நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு விழா தொடங்கும் என்று அழைப்பிதழில் போட்டிருந்தார்கள். இந்த முறை அரங்கத்திற்கு 5 மணிக்கே சென்று விட்டோம். நல்ல பாடல்களை ஒளிபரப்பினார்கள். ஆனால் சப்தம் சரி செய்கிறோம் என கூட்டிக் குறைத்து... இசையைக் கூட்டிக் குறைத்து... வைத்தாலும் பழைய பாடல்களை ரசிக்க முடிந்தது. .கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக விழா அரங்கை நிறைத்தது. விழா எப்பவும் போல் தாமதமாகத்தான் தொடங்கியது. சரியான நேரத்தில் தொடங்குதல் என்பது இந்தியர்களுக்கு அழகல்ல இல்லையா... எனவே அது இங்கும் கடைபிடிக்கப்பட்டது. அதனாலேயே சொல்லரங்கம் கடைசியில் வேகப்படுத்தப்பட்டது.

விழா தொடங்கும் முன்னர் பாரதி நட்புக்காக அமைப்பின் 10 ஆண்டு கால நிகழ்வுகளைத் தொகுப்பாக்கி மேடைக்கு அருகே இருந்த திரையில் ஓளிபரப்பினார்கள்... சிங்கத்தில் இருந்து மீசைக் கவிஞன் பாரதி வந்தது அருமையாக இருந்தது. ஆனால் அவசர அவசரமாகத் தொகுத்தது போல் விரைவாக முடிந்துவிட்டது. திருமதி. சங்கீதா அவர்கள் வரவேற்பு உரை நிகழ்த்தினார்கள். நமது கலாச்சார மரபுப்படி மேடையில் ஐந்து பெண்கள் குத்து விளக்கை ஏற்றினார்கள். சங்கீதா அவர்கள் ஒவ்வொருவரின் பெயராகச் சொல்ல திருமதி. சித்ரா அவர்களின் கையில் இருந்த மெழுகுவர்த்தியை வாங்கி ஒவ்வொரு முகமாக ஏற்றினார்கள். பின்னர் அழகிய குரலில் ஒருவர் 'நீராரும் கடலுடுத்த...' பாட அரங்கமே எழுந்து நின்றது.

மேடையில் தோன்றிய பாரதி நட்புக்காக அமைப்பின் தலைவர் திரு.இராமகிருஷ்ணன் அவர்களும் செயலாளர் திரு.கலீல் ரஹ்மான் அவர்களும் முக்கியப் புள்ளிகள் இருவருக்கு (பெயர் தெரியவில்லை) மரியாதை செய்தார்கள். அதற்குப் பின்னர் எப்பவும் போல் குழந்தைகளின் நடனம்... இந்த முறையும் மூன்று பாடல்கள்... 'ரசிக்கும் சீமானே...' பாடலுக்கு ஆடிய அந்த பாப்பாவுக்கு ஒரு பூங்கொத்து... மற்ற இரு பாடல்களும் கடந்த முறைகளோடு ஒப்பிடும் போது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. அந்தப் பாடலுக்கு ஆடிய குழந்தைகளுக்கு பாராட்டுக்கள். நடனம் அமைத்த ஆஷா நாயர் எப்பவும் நூற்றுக்கு இருநூறு வாங்கும் அளவுக்கு தயார் செய்திருப்பார். இந்த முறை சற்றே சறுக்கியிருக்கிறார். மேடையில் அவருக்கும் நினைவுப் பரிசு வழங்கினார்கள். எங்க போனான் சென்ற முறை பட்டையை கிளப்பிய அந்தச் சிறுவன்?

(நடனமாடிய குழந்தைகள்)

சொல்லரங்கம் ஆரம்பிக்கும் முன்னர் கவிஞர் திரு. சங்கர் அவர்கள் தனது கவிதையால் அரங்கை நனைத்தார். சொல்லரங்கத்திற்கு வந்திருந்தவர்களை கவிதையால் அறிமுகம் செய்தார். எப்பவும் மீசைக்கவிஞனைப் போல் ஆர்ப்பரிக்கும் சங்கர் அவர்கள் இந்த முறை சற்றே தடுமாறினார். இயக்குநரே என பேச வந்த விஜயகுமாரை சரியாக அறிமுகம் செய்து விட்டு தப்பாகச் சொல்லியதாக நினைத்து மன்னிப்புக் கேட்டு மீண்டும் அறிமுகம் செய்ய எனக்கு முன்னே இருந்தவர்கள் சரியாச் சொன்னதுக்கு எதுக்கு மன்னிப்பு என்றார்கள். ஒருவேளை அவருக்கு விளக்கின் ஒளி சரியாக இல்லையோ என்னவோ. மற்றபடி எப்பவும் அவரது கவிதைகள் துள்ளல் கவிதைகள்தான். வாழ்த்துக்கள் சங்கர் அண்ணா.

சொல்லரங்கத்திற்கு அரங்கம் தயாரானது. இன்றைய தமிழ் திரைப்படங்களின் வெற்றிக்குக் காரணம் இசையே என திருமதி. அமுதா லியோனி, இயக்குநர்களே என சென்னை முகப்பேர் வேலம்மாள் பள்ளியின் தமிழாசிரியரும் துணை முதல்வருமான திரு.விஜயகுமார். கதையே என குமரி ஆதவன் மற்றும் நடிகர்களே என கவிஞர் இனியவன் சொற்போர் நடத்த காத்திருக்க தலைவராக நகைச்சுவைத் தென்றல் திண்டுக்கல் ஐ.லியோனி அவர்கள் தனது உரையை ஆரம்பித்தார். 'மனதில் உறுதி வேண்டும்..." என்ற பாரதியின் பாடலுடன் ஆரம்பித்தார். திரைப்படங்களைப் பற்றியும் பாடல்களைப் பற்றியும் பேசுவதென்றால் திரு.லியோனி அவர்களுக்கு சொல்லவா வேண்டும். எப்பவும் போல நகைச்சுவையாய் பேச ஆரம்பித்தார். 'தென்பாண்டிச் சீமையில... தேரோடும் வீதியிலே....' பாடலை கச்சேரி செய்யும் பாகவதர், நாட்டுப்புறப் பாடகர், சிங், கிறிஸ்தவ பாதிரியார் என பலவாறு பாடி அரங்கை களை கட்ட வைத்தார். 

மேடை அலங்காரத்திற்காகச் சொல்லும் 'இங்குதான் இவ்வளவு கூட்டம்', 'உங்களை நினைத்துப் பெருமைப்படுகிறேன்' என்ற வார்த்தைகளை மறக்காமல் சொன்னார். ஒரு முறை ஒரு ஊருக்குப் போனோம். அங்க ரெண்டு பக்கமும் டாஸ்மாக், நடுவுல மேடை அமைத்திருந்தார்கள். என்னோட நிலமை எப்படியிருந்திருக்கும் நினைத்துப் பாருங்கள். ஒருவன் புல்லாப் போட்டுட்டு முன்னாடி வந்து நான் என்ன சொன்னாலும் திரும்பிச் சொல்றான்... அவனை வச்சிக்கிட்டே நான் பேசிட்டு வந்தேன் என்றார். 

லியோனி என்ற தனது பெயரைப் பள்ளியில் வாத்தியார்கள் அவர்களுக்குத் தோன்றியவாறு எழுதியதால் அவரது அப்பா மீது அவருக்கு ரொம்ப கோபமாம்.  ஆனால் இன்று திண்டுக்கல்லில் இவர் ஒருவர் மட்டுமே லியோனியாம். தபாலில் லியோனி திண்டுக்கல் என்று போட்டாலே சரியாக கொண்டு வந்து கொடுத்துவிடுவார்கள். இப்போது அவரது அப்பாவை நினைத்துப் பெருமைப்படுகிறேன் என்றார். 

(மேடையில் லியோனி - மனைவியின் பேச்சில் லயித்த பார்வை)

இதுவரைக்கும் நாங்கள்தான் தலைப்பைச் சொல்லுவோம். ஆனால் பாரதி நட்புக்காக அமைப்பினர் அவர்களே தலைப்பைச் சொல்லிவிட்டார்கள். எப்படி தலைப்புக் கொடுத்திருக்காங்க பார்த்தீங்களா... எந்த தலைப்பில் தவறாகப் பேசினாலும் கேக்கிறவங்க கண்டுக்கமாட்டாங்க... திருக்குறள் சொல்லதிகாரத்தில் அப்படின்னு சொல்லி ஒரு குரலைச் சொன்னால் என்ன தப்பாச் சொல்றாரே சரி குழம்பிட்டாரு போலன்னு சொல்லிட்டுப் போயிடுவாங்க. ஆனா சினிமா பத்தி தப்பாச் சொன்னா சின்னப் பையன் கூட யோவ் தப்பாச் சொல்லாதேன்னு சொல்லிடுவான் என்றார்.

வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்கள் வைத்திருக்கும் அமைப்புக்களில் அபுதாபியில்தான் 'பாரதி... நட்புக்காக' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். எந்த ஒரு அமைப்பை எடுத்துக்கிட்டாலும் தலைவர், துணைத்தலைவர். செயலர், துணைச் செயலர், இணைச் செயலர்... இப்படி நிறையச் சொல்லி சொல்லிக்கிட்டே போய் முடிக்கிறதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிடும். இதைவிட என்னன்னா ஒரு ஆயிரத்தி ஓரு பேரை எழுதி வச்சி மேடையில வாசிப்பானுங்க... கைதட்டல் பலமா இருக்கும்... காரணம் என்னன்னா அந்த ஆயிரத்தியோரு பேரும் முன்னால இருப்பான் ஒவ்வொருத்தன் பேரும் வாசிச்சதும் எந்திரிச்சிப் போயிருவானுங்க... ஆனா இங்க தலைவர் அப்படியிப்படின்னு எல்லாம் இல்லாமல் நட்புக்காக குழுவினர்ன்னுதான் அவங்க பேரைப் போட்டிருக்காங்க... அதுவே பெருமையான விஷயம்... பாரதி நட்புக்காக பற்றி எங்கு போனாலும் பேசுவோம், இப்போ ஒரு நாட்டுல தமிழ் அமைப்புக்கு வள்ளுவன்... அன்புக்காகன்னு வச்சிருக்காங்கன்னு சொன்னார்.

பின்னர் பேச வந்தவர்களை அறிமுகம் செய்து வைத்தார். அவர்கள் அனைவருமே அவருடன் கலைஞர் தொலைக்காட்சியில் பேசுபவர்கள் என்று சொன்னார். சொல்லரங்கத்தில் சொல்லாட்சி நடத்திட முதலில் இசையே என்று பேச வந்திருந்த திருமதி.லியோனியை அழைத்தார். அவர் வெளிநாடுகளில் மட்டும்தான் பேசுவார் என்று பெருமையாகச் சொன்னார். கடந்த இருபத்தைந்து நாட்களாக இதற்கான குறிப்புக்களை எடுத்து தயாராகியிருக்கிறார், இவருக்காக நானும் பல புத்தகங்களைப் படித்தேன். என்னோட எம்.எஸ்.ஸிக்குக்கூட நான் இப்படி படிக்கலை. பையன் பத்தாவது படிச்சா அவனோட அப்பா பரிட்சைக்கு பத்து நாளைக்கு முன்னால இருந்து தூங்காம காபி போட்டுக் கொடுத்துக்கிட்டு இருப்பார். அதுமாதிரித்தான் நானும் இருந்தேன். மிகச் சிறந்த பேச்சாளர் என்று தனது மனைவியை பெருமிதமாக அறிமுகம் செய்தார். 

(அரங்கில் கடலெனக் கூடியிருந்த தமிழர்கள்)

திருமதி. அமுதா தனது உரையை ஆரம்பித்தார். கணவரின் இத்தனை பில்டப்புக்களையும் அம்மணி நிறைவேற்றினாரா... இல்லை புஸ்வானமாக்கி பார்வையாளர்களை ஏமாற்றினாரா என்பதை அடுத்த பகிர்வில் பார்ப்போம். மேலும் திரு. லியோனி பேச்சாளர்களின் பேச்சுக்களுக்கு இடையே அடித்த நகைச்சுவைகளை முடிந்தளவு பகிரப் பார்க்கிறேன். ஏனென்றால் எதுவும் எழுத்தில் இல்லை...எல்லாமே மனதில் பதிந்திருப்பவைதான்... எனவே எப்போது சொன்னார் என்பது சற்று பிரச்சினையாகலாம்.. அதனால் முடியாவிட்டால் கடைசியில் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறேன்.

படங்கள் கொடுத்த எனது அண்ணன் திரு.சுபஹான் அவர்களுக்கு நன்றி.

(நாளை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

9 எண்ணங்கள்:

Unknown சொன்னது…

லியோனி என்றால் உலகத்தில் ஒருவரே ,சன்னி லியோன் மாதிரி !
த.ம 2

பெயரில்லா சொன்னது…

வணக்கம்
குமார் (அண்ணா)

நினைக்கும் போது பெருமையாக உள்ளது... வாழத்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

/ சினிமா பத்தி தப்பாச் சொன்னா சின்னப் பையன் கூட "யோவ் தப்பாச் சொல்லாதே"ன்னு சொல்லிடுவான்... / உண்மை... குறள் மீது ஆர்வம் இல்லை...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை நண்பரே
தொடருங்கள் தொடர்கிறேன்

ஸ்ரீராம். சொன்னது…

சுவாரஸ்யம்தான். நகைச்சுவைகளைச் சொல்லுங்கள்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

tha.ma.4

அம்பாளடியாள் சொன்னது…

மிகவும் அலசி ஆராய்ந்து இட்ட சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்களும்
வாழ்த்துக்களும் சகோதரா .

Unknown சொன்னது…

லியோனி பேரை கேட்டாலே சிரிப்பு தான்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சுவாரஸ்யம்.....

தொடர்கிறேன்.