மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 26 ஜூன், 2013எனக்குத் தமிழும் தெரியும், நடிக்கவும் தெரியும்: பிரியா ஆனந்த்

பிரியா ஆனந்திடம் இப்போது வெற்றியின் புன்னகை. கிருத்திகா உதயநிதி இயக்கும் "வணக்கம் சென்னை', ஐஸ்வர்யா தனுஷின் "வை ராஜா வை', விக்ரம் பிரபு ஜோடியாக ஒரு படம் என அடுத்த உயரத்துக்கு ரெடியாகி விட்டார்.


ஒவ்வொரு படத்துக்கும் கவனம் எடுத்துக் கொள்வீர்கள்... கதை விஷயத்திலும் சாய்ஸ் சரியாக இருக்கும்... ஆனால் இப்போது கிளாமர் முகமும் காட்ட ஆரம்பித்து விட்டீர்களே.... என்ன பிளான்..?

கரெக்ட். யாருமே கவனிக்கலையேன்னு யோசித்துக் கொண்டு இருந்தேன். நீங்கள் இப்போது வம்புக்கு வந்து விட்டீர்களே..? சினிமா என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எந்த சட்டமும் கிடையாது. கிடைக்கிற வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றுதான் எல்லோரும் நினைப்பார்கள். அதைத்தான் நானும் செய்துக் கொண்டு இருக்கிறேன். சினிமா நடிகை எல்லா தளங்களிலும் இயங்க வேண்டும். 

நான் செய்யும் கேரக்டர்களுக்கு போதுமான அளவுக்கு பாராட்டுகள் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது. இனி அதை தாண்ட வேண்டும். அதை மட்டும்தான் ஞாபகத்தில் வைத்திருக்கிறேன். இந்தப் பொண்ணு என்னமா நடிக்குதுன்னு நாலு பேர் சொன்னாலே போதும். கல்யாணம் முடித்து எங்கேயாவது நான் வாழும்போதும் என்னை பற்றி மீடியாக்கள் எழுத வேண்டும். இதுதான் என் ஆசை. நான் கிளாமருக்கு வந்து விட்டேன் என்பதில் யாருக்கும் கவலை வேண்டாம். 

நான் வேண்டாம் என்று ஒதுக்கிய கதைகள் நிறைய இருக்கிறது. பிடித்ததில் மட்டுமே நடிக்கிறேன். இவர் ஹீரோ, அவர் ஹீரோவென எந்த வித்தியாசமும் பார்க்கவில்லை. முன்னணி இயக்குநர்கள் படத்தில்தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்கவில்லை. கதைக்கு என்ன தேவையோ அதைத் தர தயாராக இருக்கிறேன். நல்ல கதை தந்தால் உங்களுடன் கூட ஜோடியாக நடிக்க தயாராக இருக்கிறேன். இது மாதிரி எந்த நடிகையாவது பேசுவாங்களா? சின்ன சின்ன விஷயங்களை பெரிதாக பார்க்காதீங்க!

சில பேர் கமர்ஷியல் பக்கம் மட்டுமே இருப்பாங்க. சிலர் எதார்த்தப் படங்களுக்கும் வருவாங்க. "எதிர்நீச்சல்' கமர்ஷியல் வெற்றி... இது உங்களை எந்த இடத்தில் வைக்கும்...?

ஓ.கே. நான் பாயிண்டுக்கு வருகிறேன். "இங்கிலீஷ் விங்கிலீஷ்' மாதிரியான படங்கள் மட்டுமே எனக்கு போதுமா? அதே மாதிரி நடித்தால் இந்த கேள்வியை "என்னங்க ஒரே மாதிரியான படங்களிலேயே நடிக்கிறீங்க?''ன்னு மாற்றி கேட்பீங்க. எனக்கு எல்லாமும் வேண்டும். "வாமனன்' படத்தைப் பற்றி நிறைய பேர் இப்போதுதான் பேசுகிறார்கள். "180'-ல் மாடர்னா வந்த போது நிறைய பேர் ரசித்தார்கள். 

இப்படி எல்லாப் படங்களுக்குமே வெவ்வேறு கலர் இருக்கும். மேக்-அப் இல்லாமல் அப்பாவித்தனமாக வந்து போக நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனால் அதை மட்டுமே வைத்து சினிமா கேரியரை நகர்த்த முடியாது. இதுவரை பார்க்காத பிரியாவை நீங்கள் பார்க்க வேண்டும். அதைத்தான் நீங்க கேட்குறீங்க. அதற்கான படங்களைத்தான் நானும் தேர்வு செய்து கொண்டு இருக்கிறேன். 

"என்னை இந்த கேரக்டர்களுக்கு மட்டுமே கூப்பிடுங்க...''ன்னு விளம்பரம் கொடுத்து சினிமாவுக்கு வரவில்லை. பிடித்து வந்தேன். பிடித்ததில் நடிக்கிறேன். நீங்கள் கவலைப்படுகிற அளவுக்கு தவறான படங்கள் எதுவும் என்னிடம் இல்லை. எல்லாவற்றிலுமே என்னை ரசிக்கலாம்.

இருந்தாலும் "எதிர்நீச்சல்'தானே பட்டி தொட்டியெங்கும் கொண்டு போய் சேர்த்திருக்கிறது...?

நான் மறுக்கவில்லையே? மற்ற நடிகைக்கு கிடைக்காத வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்றுதான் எல்லோருமே எதிர்பார்ப்பார்கள். எனக்கு அப்படி கிடைத்த வாய்ப்புதான் "எதிர்நீச்சல்'. மிகப் பெரிய வசூல் படம் என்கிறார்கள். அப்படியான படத்தில் நான் இருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி. எதார்த்தப் படத்தை உருவாக்குவதை விட, நல்ல கமர்ஷியல் படத்தை உருவாக்குவதில்தான் சிரமம் இருக்கிறது. சிவ கார்த்திகேயன், நந்திதா, இயக்குநர் துரை செந்தில்குமார், அனிருத் இவர்களையெல்லாம் ஒருங்கிணைத்த தனுஷ் எல்லோருக்கும் இந்த வெற்றியில் பங்கு இருக்கிறது. நிச்சயம் "எதிர்நீச்சல்' எனக்கு நல்ல அடையாளத்தை கொடுத்திருக்கிறது.


"வணக்கம் சென்னை', "வை ராஜா வை' இதுவெல்லாம் எப்படிப்பட்ட படங்கள்...?

இரண்டிலும் லைஃப் இருக்கிறது. காதலை மட்டும் பேசுகிற படமாக இல்லாமல் இவை வேறு மாதிரியாக இருக்கும். "வணக்கம் சென்னை' கதை சொல்லி கிருத்திகா நடிக்க கேட்டார்... அவர் சினிமாவுக்கு புதுசு. ஆனால் எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்கிறார். நிச்சயம் நல்ல சினிமா கொடுப்பார் என்ற நம்பிக்கையில் வந்து விட்டேன். ஒவ்வொரு விஷயத்தையும் அவ்வளவு நேர்த்தியாக செய்து கொண்டிருக்கிறார். நிச்சயம் நல்ல படம் காத்திருக்கிறது. எனக்கு ஐஸ்வர்யாவின் "3' படம் ரொம்பவே பிடிக்கும். சில விஷயங்கள் அதில் தவறியிருக்கலாம். ஆனால் அதைத் தாண்டி ஒரு ஃபீல் இருந்தது. அதில் தவற விட்டதை, இதில் கொண்டு வர ரொம்பவே மெனக்கெடுகிறார். "வை ராஜா வை' என்கிற தலைப்பை பார்த்தால் காமெடி படம் மாதிரி தெரியும். ஆனால் இது சீரியஸ்.

தெலுங்கு, ஹிந்தியென நிறைய வாய்ப்புகள் வந்தும் தமிழில் மட்டுமே நடிக்கிறீர்களே.... எதாவது ஸ்பெஷல் காரணமா...?

நான் தமிழ் பொண்ணு. அதை விட என்ன காரணம் வேண்டும்? தென்னிந்தியாவில் எல்லா மொழி சினிமாக்களிலும் வாய்ப்புகள் வந்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் எனக்கு தமிழ் சினிமாதான் பிடித்திருக்கிறது. எனக்கு இங்கே நல்ல பெயர் இருக்கிறது. நல்லா நடிப்பேன்னு எல்லோருக்கும் தெரியும். அதை கடைசி வரைக்கும் விட்டு விடக் கூடாது. மற்ற சினிமாக்களில் நடித்து விட்டு, இங்கே வந்து நடிக்கலாம். அங்கே என் நடிப்பும், வாழ்க்கையும் மாறலாம். நான் அங்கே அப்படியெல்லாம் நடிக்கவில்லையென உங்களிடம் பொய் சொல்லலாம். அந்த மாதிரி சூழல் எனக்கு வேண்டாம். கதையை கூட நான்தான் கேட்கிறேன். கதை கேட்க ஒரு ஆள். கால்ஷீட் கொடுக்க ஒரு ஆள்ன்னு நான் வைத்துக் கொள்ளவில்லை. முக்கியமாக எனக்கு தமிழ் தெரிகிறது. நடிக்கவும் தெரிகிறது. ஸோ... தமிழில் நடித்தால் பிரச்னை இல்லை.

ஹிந்தி சினிமாதானே எல்லோருக்கும் கனவு... அங்கேகூட நடிக்க மாட்டீர்களா...?

அதற்கு நான் இன்னும் தயார் ஆகவில்லை. கன்னடம், தெலுங்கு என சில சினிமாக்கள் நடித்திருக்கிறேன். ஹிந்தியில் என் படங்களுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கிறது. சொல்லப் போனல் எனக்கு எல்லா கலாசாரமும் தெரியும். பிறந்து வளர்ந்தெல்லாம் நம்ம மயிலாடுதுறை பக்கம் என்றாலும், படித்ததெல்லாம் வெளிநாடுகள். கன்னடத்தில் நல்ல சினிமாக்களில் மட்டுமே நடிக்கிறேன். ஹிந்தியிலும் என் கேரியர் நல்லாவே இருக்கிறது. தமிழில் கை நிறைய படங்கள் இருப்பதால், மற்ற சினிமாக்களை பற்றி யோசிக்கவில்லை.

காதல் கல்யாணத்தில் நம்பிக்கை உண்டா...?

காதல் திருமணத்தில் ஆசை இருக்கிறது. ஆனால் அதற்கு டைம் இல்லை. எனக்கு பிடித்த ஆள் எந்த துறையில் இருந்தாலும் காதலிப்பேன். அந்த காதலுக்காக காத்திருக்கிறேன். ஆனால் அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. சினிமாவில் இருந்ததற்காக ஒரு நேஷனல் அவார்டு என் வீட்டில் இருக்க வேண்டும். அது வந்த பின் காதல், கல்யாணம் பற்றி யோசிப்பேன். நம்பிக்கை பற்றியெல்லாம் பேச நான் பெரிய ஆள் இல்லை.

நன்றி : தமிழ் பத்திரிக்கை.
-'பரிவை' சே.குமார்

1 கருத்து:

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...