மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 27 ஜூன், 2013வெள்ளாமை

ன்னையனுக்கு இப்போதெல்லாம் கண் சரிவரத் தெரியவில்லை என்பது நன்றாக புலப்பட்டது. வரப்பில் நடந்து செல்லும்போது தூரத்தில் வருபவர்களைக்கூட துல்லியமாக அடையாளம் கண்டுகொள்ளும் அவரால் தற்போது அப்படி கண்டு கொள்ள முடியவில்லை. 

மனைவி பஞ்சவர்ணத்திடம் சொன்னபோது 'வயசாயிடுச்சுல்ல இனி எல்லாம் வரும். இந்த அறுப்பு முடிஞ்சதும் கண் ஆபரேசன் பண்ணலாம்' என்றாள்.

அவள் சொல்லுவதிலும் அர்த்தம் இருந்தது. ஆபரேசன்னு போன கண்டிப்பா காசு வேணும். அறுப்பு முடிஞ்சா கைல நெல்லைப் பில்ல போட்ட காசு இருக்கும். இன்னும் ரெண்டு மாசம்தானே ஓட்டிரலாம் என்று முடிவு செய்து வயல் வேலையில் கவனம் செலுத்தினார்.

உதவி செய்ய ஆள் இருந்தாலும் இப்போதே செய்யலாம். அந்த கொடுப்பினைதான் இல்லாமப் போச்சே... மனசு வருந்துவது அவரது முகச்சுருக்கத்தில் தெரிந்தது.

இரண்டு மகள்களுடன் ஆஸ்திக்கு ஒரு மகனைப் பெற்ற அவருக்கு கண்ணை உடனே சரிபண்ண முடியாமல் போனது தூரதிஷ்டமே. 

மகள்கள் இருவரும் திருமணத்திற்குப்பின் கணவன்மார்கள் வேலை செய்யும் ஊர்களுக்கு சென்று விட்டதால் எப்போதாவதுதான் பிறந்தகம் வருவார்கள். 

மகனை கஷ்டப்பட்டு படிக்கவைத்து கடன் வாங்கி வெளிநாட்டுக்கு அனுப்பினார். திருமணம் வரை அப்பா அம்மாவை சுற்றியவன் இன்று பொண்டாட்டி சுற்றத்தை சுற்றுகிறான். போன் பண்ணிக்கூட பேசுவதில்லை. தொப்புள்கொடி உறவு அறுந்து போனதாகவே அவருக்குப்பட்டது.

மகள்களிடம் பணம் கேட்டால் கிடைக்கும். ஆனால் தன்மானம் அவரைத் தடுத்தது. பெரியவள் என்னோடு வந்து விடுங்கள் என்று பலமுறை அழைத்தும், உங்களைப் படிக்கவைக்க கல்யாணம் பண்ணிக்கொடுக்க என எல்லாவற்றிக்கும் உதவியது இந்த நிலம் தான் அதை விட்டுட்டு எப்படிம்மா. அதுபோக சம்மந்தி மனசு வருந்துறமாதிரி ஆகக்கூடாது இல்லியா, அதனால அவங்கள நல்லாப் பாரு அது போதும் என்று தட்டிக்களித்தார். 

நாளாக நாளாக கண் மங்கலாவது அதிகரிக்க, நாளெல்லாம் வயலில் உழைத்து விட்டு வரும் அவரால் கண்ணுக்குப் பார்க்க டவுனுக்குப்போக உடம்பு இடம் தரவில்லை. அறுப்பு முடியட்டும் என மனசை தேற்றிக் கொண்டார். 

உறவினர் ஒருவரின் சாவுக்கு சென்றபோது மகனின் மாமனாரை சந்திக்கும்படி ஆகிவிட்டது. பேசாமல் போகக்கூடாது என்பதால் 'என்ன சம்பந்தி சௌக்கியமா..?' என்று ஒரு வார்த்தை கேட்டார். 

'சௌக்கியம் சம்பந்தி, என்ன வீட்டுப்பக்கமே வர மாட்டேங்கிறிங்க..?' என கேட்க, 'வயல் வேலையே சரியாய் இருக்கு. அறுப்பு முடிஞ்சிட்ட வரலாம். வயசு வேற ஆயிட்டதா கண்ணு வேற சரியாய் தெரியலை. அதான் தூரத்துல எங்கயும் போறதில்ல. அதுபோக வயல் வேலைக்கு முன்ன மாதிரி ஆள் கிடைக்கிறது குதிரைக்கொம்பா இருக்கு. நாமளும் சேந்து வேலை பார்த்தாதானே வேலை நடக்குது அதான்...' என்றபடி பெருமூச்சு ஒன்றை விட்டார்.

'ம்ம்ம்... நேத்துக்கூட மாப்பிள்ளை பேசினார். உங்களை விசாரித்தார். நான் என்ன சொல்லமுடியும் எனக்கு பல வேலை, நாம பக்கத்து ஊராய் இருந்தாலும் சந்திக்க முடியிதா... இல்லையே. எப்பவாச்சும் இப்படி பார்த்தால்தான் உண்டு. என்னைய வரச் சொல்லி மாப்பிள்ளையும், மகளும் ஒரே தொந்தரவு. அடுத்த மாசம் போகலாமுன்னு பார்க்கிறேன்... ' என்றவர் அலைபேசி ஒலிக்கவே, 'ஹலோ' என்று ஆரம்பித்தவர் சம்பந்தியை மறந்து வண்டியில் ஏறினார்.

சற்று நேரம் நின்றவர், 'ம்... நான் வயக்காட்டுல கஷ்டப்பட்டு படிக்கவைத்து கடனை வாங்கி வெளிநாட்டுக்கு அனுப்பினா மாமனார் குடும்பத்துக்கு உழைக்கிறான். ம்ம்ம்.. நல்லா இருக்கட்டும்.' என்று முணுமுணுத்தபடி நடக்கலானார். 

இதை பஞ்சவர்ணத்திடம் சொன்னால் அவ்வளவுதான் கத்தி ஊரைக் கூட்டிருவா. அவளுக்கு தெரிய வேண்டாம் என்று நினைத்துக்கொண்டார். 

'ஏங்க பக்கத்துலதானே தம்பி மாமனார் வீடு ஒரு எட்டு போயி போன் நம்பரை வாங்கியாந்திருந்தால் உங்க கண்ணு ஆபரேசனுக்கு பணம் அனுப்ப சொல்லி இருக்கலாமே. ' என்றவளிடம்,

'அட எதுக்கு அவனை தொந்தரவு பண்ணச் சொல்லுறே. வெளிநாட்டுல குடும்பம் வச்சு இருக்கிறதுன்னா எவ்வளவு கஷ்டம். நம்ம கஷ்டம் நம்மளோட, அவன வேற சங்கடப்படுத்தனுமா... அறுப்பு முடியட்டும் நெல்லைப் போட்டுட்டு ஆபரேசன் பண்ணலாம்.' என்று மனைவியின் 
பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தவர்,

'பிள்ளைகளை நல்ல நிலைமைக்கு கொண்டுவர எவ்வளவோ இழந்துட்டோம். கண் பார்வை போச்சேன்னு வருத்தப்பட்டு என்ன ஆகப்போகுது. பார்த்துப்பார்த்து நீர் பாய்ச்சியும் பொய்த்துப் போற விவசாயம் மாதிரியில்ல ஆயிருச்சு பையனுக்கு செஞ்ச வெள்ளாமை... ம்ம்ம்.. என்ன செய்ய விதியோட விளையாட்டுக்கு யார இருந்த என்ன..' என்று நினைத்தவரின் மனசுக்குள் எதோ அழுத்துவது போல இருக்க ஒளியிழந்து வரும் கண்ணுக்குள் இருந்து தெறித்து விழுந்தது கண்ணீர்.

(தினத்தந்தி குடும்பமலரில் வெளியாகி சிறுகதைகள் தளத்தில் பதிந்தது)

-மீள்பதிவு

-'பரிவை' சே.குமார்

7 கருத்துகள்:

 1. நல்ல கதை தம்பி..ம்ம் உணரப்படவேண்டிய கருத்து. தொடர்ந்து நிறைய எழுது..வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 2. நல்ல கதை தம்பி..ம்ம் உணரப்படவேண்டிய கருத்து. தொடர்ந்து நிறைய எழுது..வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 3. பிள்ளைகளை நல்ல நிலைமைக்கு கொண்டுவர எவ்வளவோ இழந்துட்டோம். கண் பார்வை போச்சேன்னு வருத்தப்பட்டு என்ன ஆகப்போகுது. பார்த்துப்பார்த்து நீர் பாய்ச்சியும் பொய்த்துப் போற விவசாயம் மாதிரியில்ல ஆயிருச்சு பையனுக்கு செஞ்ச வெள்ளாமை... ம்ம்ம்.. என்ன செய்ய விதியோட விளையாட்டுக்கு யார இருந்த என்ன..' என்று நினைத்தவரின் மனசுக்குள் எதோ அழுத்துவது போல இருக்க ஒளியிழந்து வரும் கண்ணுக்குள் இருந்து தெறித்து விழுந்தது கண்ணீர்.//
  கதை கண்களில் நீரை வரவழைத்து விட்டது. விவசாயி கணக்கு பார்த்தா கை காலும் தான் மிச்சம் என்பது போல அவர் நன்கு குழந்தையை வளர்த்தும் வருத்தம்தான் மிச்சம். என்ன கொடுமை இது.

  பதிலளிநீக்கு
 4. அருமையான நடையில் அழகிய கதை...

  பதிலளிநீக்கு
 5. வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சாதீர்கள்.
  வாழ்க வளமுடன்
  கொச்சின் தேவதாஸ்

  பதிலளிநீக்கு
 6. நல்ல கதை. சமீபத்தில் வந்திருக்கும் - நீங்கள் விமர்சனம் போட்டிருக்கும் - மம்மூட்டி படக் கதை இதே சோகத்தைத்தான் சொல்லிச் செல்கிறது போலும். அதனால்தான் உகளுக்கும் அந்தப்படம் மிகப் பிடித்திருக்க வேண்டும். ரசித்தேன்.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...