மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 12 அக்டோபர், 2013

தொடர்கதை : கலையாத கனவுகள் - 21

முந்தைய பதிவுகளைப் படிக்க...



-----------------------------------------------------------------------

21. சொல்லிட்டாளே அவ காதலை...

முன்கதைச் சுருக்கம்: 

கிராமத்து ஏழைக்குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான்.  அக்காவுக்கு விருப்பமில்லாத மாப்பிள்ளையை பேசி வைத்திருக்கும் அம்மாவுடன் மல்லுக்கு நிற்கிறான். கல்லூரியில் வைரவனைத் தாக்க வந்தவர்களுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக கெட்டபெயர் ஏற்படுகிறது. அவனுடன் தனியாகப் பேச ஐயா வீட்டுக்கு வரச் சொல்லும் புவனா அங்கும் பேச முடியாமல் போகவே சோகமாக கிளம்புகிறாள்.

இனி...


"ராம் ஒரு நிமிடம்" என புவனா அழைத்ததும் நின்று திரும்பிப் பார்த்தான்.

"சாரி"

"எதுக்கு?"

"இல்ல உங்ககிட்ட நிறைய பேசணுமின்னு நினைச்சுத்தான் இங்க வரச்சொன்னேன்... ஆனா பேசத்தான் இல்ல... அதுக்குத்தான்..."

"இதுக்கு எதுக்கு சாரி... இன்னைக்குப் பேசாட்டி இன்னொரு நாள் பேசினாப் போகுது... தினமும் பார்க்கிறோம்... அப்ப பேசிக்கலாம்... இதுக்காக முகத்தை சோகமா வச்சிக்கிட்டு சாரி எல்லாம் சொல்லிக்கிட்டு என்னாச்சுங்க உங்களுக்கு"

"ஒண்ணுமில்ல... சாரி சொல்லணுமின்னு தோணுச்சு... அதான் சொன்னேன்..."

"அதுக்காக இவ்வளவு சோகமா...? சும்மாவே சகிக்காது... சோகமா இருந்தா முடியலைடா சாமி..."

"என்ன சொன்னீங்க... சகிக்கலையா... கொழுப்பா..?" அடிக்கக் கையை ஓங்கினாள்.

"இதுக்குத்தான் சொன்னேன்... உங்களுக்கெல்லாம் சோகம் செட்டாகாது... இப்படி இருந்தா ஒகே..."

புவனா கையைத் தூக்குவதைப் பார்த்தபடி வந்த ஐயாவின் மனைவி "என்ன ரெண்டு பேரும் இன்னும் சண்டையை விடலையா?" என்றார்.

"இல்லம்மா... சும்மாதான்... கிளம்புறோம்மா..." என்றாள் புவனா.

"வர்றேம்மா... சரி புவனா வாறேன்..." என்றபடி சைக்கிளை எடுத்தான். எதுவும் பேசாமல் நின்று கொண்டிருந்தாள். அவன் கிளம்பிச் சென்ற சிறிது நேரத்தில் தனது சைக்கிளைத் தள்ளியபடி காம்பவுண்டை விட்டு வெளியே வந்தவள் அங்கே ராம்கி நின்று கொண்டிருப்பதைப் பார்த்ததும் பிரகாசம் ஆனாள். அதைக் காட்டிக் கொள்ளாமல் "என்ன போகலையா?" என்றாள்.

"இல்லை..."

"என்னாச்சு... சைக்கிள் பஞ்சரா...?"

"இல்ல உங்க முகமே சரியில்லை... அதான் என்னமோ மனசு கேட்கலை..."

"ஆத்தாடி... எனக்காக வருத்தப்படுறீங்க... ஆச்சர்யமா இருக்கு... கிளம்புங்க... ரோட்ல நாம பேசிக்கிட்டு நின்னா யாராவது பாத்துட்டு எங்க அண்ணன்கிட்ட சொல்லிட்டா பிரச்சினையாயிடும்... கிளம்புங்க..."

"பிரண்டோட பேச எதுக்குப் பயப்படணும்..? நான் பேசுறது விருப்பமில்லைன்னா கிளம்புறேன்..." என்றபடி பெடலை மிதித்தான்.

"அலோ... சொன்னதும் கிளம்புறீங்க... நீங்கதானே பேசப் பயப்படுவீங்க..."

"இப்ப பயப்படலையில்ல..."

"இப்ப ரவுடியில்ல... அதான் தைரியம் வந்திருச்சு..."

"சரி... ரவுடிக்கிட்ட என்ன பேச்சு.... நீங்க கிளம்புங்க..."

"ஸ்... அப்பா... கோபத்தை மூக்கு மேல வச்சிருப்பீங்களோ...? சரி வாங்க... பேசிக்கிட்டே போகலாம்..."

"சரி சொல்லுங்க... என்ன பேசணும்?"

"இதுக்குத்தான் நின்னீங்களா..?"

"ஆமா... உங்க முகமே சரியில்லை... அப்படியே விட்டுட்டுப் போக மனசு வரலை... என்னமோ தெரியலை நீங்க சோகமானதும் எனக்கு மனசு சரியில்லை... அதான்..."

"அய்யோடா... எப்பவுல இருந்து இப்படி... பரவாயில்லையே... நான் என்னமோ நெனச்சேன்..."

"எங்களுக்கும் மனசு இருக்கு... சொல்லுங்க..."

"ம்... சரி... வாங்க பேசிக்கிட்டே போகலாம்... ஆமா என்னப்பத்தி என்ன நினைக்கிறீங்க..?"

"உங்களப்பத்தியா... ம்... கல்லூரியின் பிரபல ரவுடியின் தங்கையாக இருந்தாலும் தவறு என்றால் முதல் ஆளாக தட்டிக் கேட்பவர், நல்ல படிப்பாளி, சிறந்த எழுத்தாளர்... எல்லாத்தையும்விட ரொம்ப துணிச்சலான பொண்ணு...."

"அம்புட்டுத்தானா... வேற..."

"வேற... ம்... இதுக்கு மேல ஒண்ணுமிருக்க மாதிரி தெரியலை..."

"உண்மையிலேயே அவ்வளவுதானா..?"

"என்னங்க நீங்க திரும்பத் திரும்ப கேட்கிறீங்க... பாத்தீங்களா இதை சொல்ல மறந்துட்டேன்... நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.... அதுவும் அந்த மஞ்சள் சுடியில தேவதை மாதிரி இருப்பீங்க..."

இதைக் கேட்டதும் சிரித்தாள். அதானே பார்த்தேன்... எந்தப் பொண்ணுதான் தான் அழகின்னு சொல்லலைன்னு வருத்தப்படமாட்டாங்க... இதுக்குத்தானே அம்புட்டுத்தானா... அம்புட்டுத்தானான்னு கேட்டீங்க... இப்ப சந்தோஷமா..."

"உதைக்கப் போறேன்..." என்று கையை ஓங்கினாள். இவர்கள் இருவரும் பேசிக் கொண்டு போவதை போவோர் வருவோர் எல்லாம் ஒரு மாதிரி பார்த்துக் கொண்டு போக "என்னங்க எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறாங்க..." மெதுவாகச் சொன்னான் ராம்கி.

"பாக்கட்டும்... அதுக்கென்ன... இப்போத்தானே பயப்படமாட்டேன்னு சொன்னீங்க..."

"இல்ல சொன்னேன்... என்ன பேசணுமின்னு சொல்லவேயில்லை..."

"சொல்றேன்... என்னைப் பற்றி வேற ஒண்ணுமே நினைக்கலையா... இல்ல மறைக்கிறீங்களா?"

"...."

"என்ன பதில் வரலை... என்னாச்சு..?"

"உண்மையைச் சொல்லப் போனா மனசுக்குள்ள நிறைய இருக்கு... ஆனா குடும்பம் வாழ்க்கையின்னு போகும் போது நாம நினைப்பைவிட அதுதான் முக்கியமாப்படுது... எதுக்கு விடுங்க..."

"என்னன்னு சொல்லலாமே...?"

"ஒண்ணுமில்ல.. லேடீஸ் பர்ஸ்ட்... நீங்க என்ன பேசணும்... சொல்லுங்க..."

"அடேயப்பா... என்னமா பேச்சை மாத்துறீங்க... ம்.... சரி ராம்... எனக்குள்ள ஒரு மாற்றம்... என்னமோ தெரியலை நீங்க எங்கூடவே இருக்கணுமின்னு தோணுது..." பேச்சை நிறுத்தி அவனைப் பார்த்தாள்.

எதுவும் பேசாமல் வந்து கொண்டிருந்தான். "என்னாச்சு... நேரடியாவே கேட்கிறேன்... என்னை உங்களுக்குப் பிடிக்கலையா?... ப்ளீஸ் சொல்லுங்க..."

"அப்படியெல்லாம் இல்லைங்க..."

"அப்புறம் என்ன... நான் உங்களை விரும்புறேன்... உங்க மனசுல உள்ளதை சொல்லலாமுல்ல..."

"அது... எங்க குடும்பம் என்னை ரொம்ப நம்புது.... நாந்தான் குடும்பக் கஷ்டத்தைப் போக்கப் போறவன்னு அம்மா நினைச்சிக்கிட்டு இருக்காங்க... அது போக நீங்க வேற சாதி, நான் வேற சாதி, உங்க அண்ணனுக்குத் தெரிஞ்சா பெரிய பிரச்சினை வரும்... அது போக காலேசு படிக்கும் போது சுத்திட்டு அப்புறம் குடும்பச் சூழல் அது இதுன்னு விலகிப் போறது கஷ்டமா இருக்கும் இல்லையா..?"

"இங்க பாருங்க... நான் கடைசி வரைக்கும் நீங்க எங்கூட இருக்கணுமின்னு நினைக்கிறேன்... உங்களோட வளர்ச்சிக்கு நான் உறுதுணையா இருப்பேன். சாதி, மதம் பார்த்து லவ் வந்தா அதுக்குப் பேரு லவ் இல்லைங்க... அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கச்சி எல்லாரும் வேணுந்தான்... அதே மாதிரி நம்மளோட வாழ்க்கையை நாமளே தீர்மானிக்கணுங்கிறது என்னோட எண்ணம். அப்புறம் நாம் பேச்சிலர் டிகிரி முடிச்சிட்டு மாஸ்டர் டிகிரி பண்ணி வெளியாக இன்னும் வருசமிருக்கு... அதுக்கு அப்புறம் என்னால எப்படியும் போராடியாவது உங்களை அடைய முடியும்ன்னு நம்பிக்கை இருக்கு... உங்களுக்கு எப்படி..?"

"என்னாலயும் முடியும்... இருந்தாலும் யோசனையா இருக்கு.... இது சரிப்படுமா தெரியலை..." அவள் மீதான காதலைச் சொல்லத் தவித்த மனசை அடக்கி குடும்பச்சூழலே அவனுக்குள் எழுந்து நின்றது. இருந்தாலும் ஒரு பொண்ணே தைரியமா சொல்லும் போது இப்படி கோழையா நிக்கிறேனேன்னு அவன் மீது அவனுக்கே கோபம் வந்தது. 

"அப்ப யோசிச்சு சொல்லுங்க... ஆனா நல்ல முடிவா இருக்கட்டும்... நான் கிளம்புறேன்..."

"பு... புவனா..." என்றான்.

என்ன என்பது போல் அவனை ஏறிட்டாள். அவளைப் பார்த்தபடி " எத்தனை எதிர்ப்பு வந்தாலும் நான் உன்கூட இருப்பேன்" என்றான்.

"ஓ.... தாங்க்ஸ் காட்..." என்று கத்தினாள். மற்றவர்கள் திரும்பிப் பார்ப்பதைப் பற்றி கவலைப் படாமல் சைக்கிளை நிறுத்தி அவனருகில் வந்து அவனது கையைப் பிடித்து "ஐ லவ் யூ ராம்" என்றாள். அவளின் ஸ்பரிசம் அவனுள் மின்சாரமாய் பாய... "புவனா... நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன்..." என்றவன் " புவனா... இது நமக்குள்ள இருக்கட்டும்... இப்போதைக்கு யாருக்கும் தெரியாம இருக்கது நல்லதுன்னு நினைக்கிறேன்... என்ன சொல்றீங்க..."

அவன் கையை விடாது "ம்... எனக்கு அம்புட்டு சந்தோஷமா இருக்கு... எப்படிச் சொல்றதுன்னு தவிச்சேன்... அப்புறம் இதை ஏத்துக்காம நம்ம பிரண்ட்ஷிப்பையே கட் பண்ணிட்டீங்கன்னா என்ன பண்றதுன்னு தவிச்சேன்.... இன்னைக்கு ஐயா வீட்ல சொல்ல முடியலையேன்னு தவிச்சேன்... நீங்க கிளம்பியதும் இன்னும் கொஞ்ச நேரம் பேசி எப்படியாவது கேட்டிருக்கலாமோன்னு தவிச்சேன்... இதுவரைக்கும் தவிச்ச தவிப்புக்கு இப்போ சந்தோஷமா இருக்கேன்... தாங்க்ஸ் ராம்... ஐ ஆம் வெரி ஹாப்பி..." முகமெல்லாம் சந்தோஷமாகச் சொன்னவள் "இன்னும் எதுக்கு வாங்க போங்கன்னு.. வா போன்னு சொல்லுங்க.. இல்லைன்னா புவனான்னு கூப்பிடுங்க..."

"ம்... இன்னைக்கு ரொம்ப சந்தோஷமான நாள்... சரி நீ கிளம்பு... நல்லா இருட்டிருச்சு... நாளைக்கு காலேசுல பார்ப்போம்..."

"சரி... பை ராம்... சுவீட் ட்ரீம்ஸ்..."

"டேக் கேர் புவி... பை...."  என்றபடி அவன் கிளம்ப, அவன் புவி என்று அழைத்தது அவளுக்குள் சந்தோஷச் சாரலைத் தூவிச் செல்ல மகிழ்வுடன் சைக்கிளை மிதித்தாள்.

ராம்கி வீட்டிற்குச் சென்றதும்....

"என்னடா... எங்குட்டுப் போயி சுத்திட்டு வாறே... இம்புட்டு நேரமா?"

"ஐயா வீட்டுக்குப் போனேம்மா... கொஞ்சம் லேட்டாயிருச்சு..."

"அங்க அப்புடி என்னதான் இருக்கோ... எப்பப்பாரு ஐயா வூடு... ஐயா வூடுன்னு... பொம்பளப்புள்ளைங்களும் வருதுகளோ..?"

"அம்மா..." கத்தினான்.

"எதுக்குக் கத்துறே... எந்த வேலை கிடந்தாலும் ஐயா வூடு ஐயா வூடுன்னு கெளம்பிடுறியே அதான் கேட்டே..."

"போங்கம்மா... சும்மா நீங்க வேற... படிக்கிறதுக்குதான் போறோம்..."

"படிச்சாச் செரி... அண்ணன் லட்டரு போட்டிருக்கான்... உத்தரத்து மேல இருக்கு பாரு..."

"என்ன எழுதியிருக்கு?"

"பொங்கலுக்கு அடுத்த செவ்வாக்கெழம வருறானாம்... ஒன்னய பஸ்சு டேண்டுல வந்து நிக்கச் சொல்லியிருக்கான்..."

"பொங்கல் வந்துருச்சில்ல... ம்... அதெல்லாம் அவரு எப்பவும் வாற டயத்துக்கு கரெக்டா போயி  நின்னுடுவேன்" என்றபடி கடிதத்தைப் படித்தான். 

அதே நேரம் புவனா வீட்டில்...

"இப்ப கை எப்புடிடா இருக்கு? " என்றபடி வைரவனுக்கு அருகில் வந்து அமர்ந்தாள் புவனா.

"இப்ப பரவாயில்லைடி... ஐயா வீடு போனியோ... இம்புட்டு லேட்டா வந்திருக்கே..?"

"ஆமா"

"ராம்கி வந்திருந்தானா?"

"என்ன திடீர்ன்னு அவனைப் பத்திக் கேட்கிறே..?"

"சாயந்தரமான அங்கதான் இருப்பானாம் அதான் கேட்டேன்..."

"வந்திருந்தான்... ஐயாக்கிட்ட பேசிக்கிட்டு இருந்தான்.... அதுக்கென்ன..." படக்கென்று கேட்டாள்.

"இப்ப எதுக்கு கோபப்படுறே... வந்தானான்னுதானே கேட்டேன்... சாயந்தரம் ஆஸ்பத்ரி போறேன்னான்... கட்டை அவிழ்த்துட்டாங்களான்னு கேட்க கேட்டா இம்புட்டு கோபம் வருது..."

"இல்ல கட்டுப் போட்டிருந்தான்... நான் எதுவும் கேட்டுக்கலை..."

"சரி... அவனோட ரொம்ப பிரண்ட்லியா இருக்காதே... நாளைக்கு பசங்க வேற மாதிரி பேச ஆரம்பிச்சிடுவாங்க..."

"அட்வைஸா... அது சரி... நீ முதல்ல இந்த ரவுடித்தனத்தை விட்டுட்டு கிடக்க அரியர்சை முடிக்கப் பாரு..." என்றபடி எழுந்தவள் 'பேசக்கூடாதா இப்ப அவன் என்னோட ஆளு..." என்று நினைத்து சத்தமாகச் சிரிக்க அவளின் சிரிப்புக்கு அர்த்தம் புரியாமல் வைரவன் அவளை ஒரு மாதிரிப் பார்த்தான்.

-(புதன் கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 11 அக்டோபர், 2013

மனசு பேசுகிறது : சச்சின் என்னும் சகாப்தம்


கிரிக்கெட்டில் கடவுளாகப் பார்க்கப்படுபவர் சச்சின். எத்தனை சாதனைகள்... அத்தனை சாதனைகளும் முறியடிக்கஆப்படும் என்று சொல்லமுடியாத அளவுக்கு சாதனைகளை அடுக்கி வைத்திருக்கிறார்.

எத்தனை போட்டிகளில் எதிர் அணியினரை ஆட்டம் காணச் செய்திருக்கிறார். அடித்து ஆடினாலும் ரன் அடிக்காமலே வெளியேறினாலும் எதையும் வெளிக்காட்டாத அந்த முகம்... இப்போதெல்லாம் ஒரு போட்டியில் விளையாடினாலே ஆஸ்திரேலிய வீரர்கள் போல் மைதானத்துக்குள் சண்டையிடும் இளம் வீரர்கள் மத்தியில் அனைத்து வீரர்களுக்கும் பிடித்த வீரராக இருக்கும் ஒரே வீரர் சச்சின்.

ஆரம்பத்தில் பதினேழு என்பது அவருக்கு அபாயகரமான நம்பர் அதைக் கடக்காமல் அவுட்டான போட்டிகள் அதிகம். பின்னாளில் தொன்னூறு முதல் தொன்னூற்றி ஒன்பதுக்குள் அதே போல் ஆட்டம் கண்டார். இருந்தாலும் அவர் விளையாடும் நேர்த்தி அனைவரையும் கவரும் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

ஒருமுறை ஷார்ஜாவில் நடந்த போட்டியில் ஷேன் வார்னேயின் பந்துக்களை சிதறடித்த போது மைதானம் மட்டுமல்ல உலகமே சச்சினின் அதிரடியைக் கண்டு வியந்தது. இந்தப் போட்டியின் முடிவில் தனது பனியனைக் கழட்டி கையெழுத்து வாங்கிய ஷேன் வார்ன், சில நாட்களுக்குப் பிறகு தனது பேட்டியில் படுத்தால் கனவில் சச்சின் எனது பந்துக்களை சிக்சருக்குத் விரட்டுவதுபோல் வருகிறது என்று சொல்லியிருந்தார்.

சச்சின் சதமடித்தால் இந்தியா ஜெயிக்காது என்பவர்கள் அவர் எத்தனை போட்டிகளில் மோசமாக தவித்த அணியை தூக்கி நிறுத்தியிருக்கிறார் என்பதை மட்டும் சொல்வதேயில்லை. எத்தனை சதங்கள்... எத்தனை அரைச் சதங்கள்... எத்தனை போட்டிகளில் சிறந்த ஆட்டக்காரர்... என சாதித்திருக்கிறார். சச்சின் களத்தில் நிற்கிறார் என்றால் கிரிக்கெட் பார்க்காதவர்கூட சச்சினுக்காக பார்க்க ஆரம்பித்துவிடுவார்.

தன்னைப் பற்றி எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் அதற்குப் பதில் சொல்லிக் கொண்டிருப்பதில்லை. எல்லா விமர்சனங்களுக்கும் தனது மட்டையால் பதில் சொல்லி விடுவார். 

நம்மைப் பொறுத்தவரை ஒரு மனிதன் உச்சியில் இருக்கும் போது அவனைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவோம். அவனுக்கு ஒரு சறுக்கல் வரும்போது தூக்கிப் போடுவதோடு மட்டுமில்லாமல் இறங்கி ஓடு என்று ஆளாளுக்குப் பேச ஆரம்பித்துவிடுவோம்.

உலகமே மாஸ்டர் பிளாஸ்டர், லிட்டில் மாஸ்டர் என்று புகழ்ந்தாலும் நாம் சாதனைகளை வைத்துக் கொண்டு இன்னும் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கிறாய் என ஆளாளுக்குப் பேச ஆரம்பித்து விட்டோம். இதோ இன்னும் இரண்டு டெஸ்ட் போட்டிகளுடன் கிரிக்கெட்டின் சாதனை நாயகன் தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க இருக்கிறார்.

ஆம் சர்வதேச ஒருதினப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற சச்சின் ஆரம்பம் முதலே சர்வதேச டுவெண்டி20 போட்டிகளில் விளையாட விரும்பவில்ல.  ஐ,பி.எல் போட்டிகளில் விளையாடி வந்தவர் அதிலிருந்தும் சமீபத்தில் நடந்த சாம்பியன்ஷிப் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். டெஸ்டில் இருந்து எப்போது போவார் என்று எல்லோரும் காத்திருக்க, 200வது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார்.

சச்சினை பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் இந்தியாவிற்கே பெருமை சேர்த்த அந்த மனிதரை வேதனைப் படுத்தாமல் வாழ்த்துவோம். சாதனைகளின் நாயகனுக்கு மலர் தூவி மரியாதை செய்யாவிட்டாலும் அவமரியாதை செய்யாமல் இருப்போம்.

கிரிக்கெட் விளையாடாத வாழ்க்கையை  நினைத்துப் பார்க்க முடியவில்லை என்று சொல்லும் அந்த மனிதரின் ஓய்வு காலம் சந்தோஷத்தையும் மன அமைதியையும் கொடுக்கட்டும்...

கிரிக்கெட் இருக்கும் வரை சச்சின் என்ற சகாப்தத்தின் பெயர் இருக்கும்.


மற்றுமொரு தலைப்பில் மனசு பேசும்...
-'பரிவை' சே.குமார்.

வியாழன், 10 அக்டோபர், 2013

வீடியோ : அமரர் முரளி படங்களில் இருந்து சில பாடல்கள்...

மறைந்த நடிகர் முரளி கல்லூரி நாயகனாகவும் சோகம் சுமந்த இளைஞனாகவும் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.  எமனையும் கவர்ந்துவிட்டார் போல சீக்கிரமே கூட்டிக் கொண்டு விட்டான். அவர் மறைந்தாலும் அவரின் பாடல்கள் இன்னும் எல்லோராலும் சுவாசிக்கப்படுகின்றன. அவரின் பாடல்கள் சில இன்றைய வீடியோப் பகிர்வில்...


படம் : கீதாஞ்சலி
பாடல் : ஒரு ஜீவன் அழைத்தது...




படம்: பகல் நிலவு
பாடல்: பூ மாலையே...




படம்: இதயம்
பாடல்: இதயமே இதயமே...




படம் : தங்க மனசுக்காரன்
பாடல் : மணிக்குயில் இசைக்குதடி




படம் : வெற்றிக் கொடி கட்டு
பாடல் : கருப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு...




படம் : பூ விலங்கு
பாடல்: ஆத்தாடி பாவாடை காத்தாட...



பாடல்களை ரசித்திருப்பீர்கள்... மீண்டும் அடுத்த பாடல் பகிர்வில் சந்திப்போம்...

-'பரிவை' சே.குமார்.

புதன், 9 அக்டோபர், 2013

தொடர்கதை : கலையாத கனவுகள் - 20

முந்தைய பதிவுகளைப் படிக்க...



-----------------------------------------------------------------------

20. காதலைச் சொன்னாளா?

முன்கதைச் சுருக்கம்: 

கிராமத்து ஏழைக்குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான்.  அக்காவுக்கு விருப்பமில்லாத மாப்பிள்ளையை பேசி வைத்திருக்கும் அம்மாவுடன் மல்லுக்கு நிற்கிறான். கல்லூரியில் வைரவனைத் தாக்க வந்தவர்களுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக கெட்டபெயர் ஏற்படுகிறது. அவனைப் பார்க்க வரும் புவனா, அவனுடன் மல்லிகா இருக்கவும் கோபமாகிறாள். அவனுடன் தனியாகப் பேச ஐயா வீட்டிற்கு வரச் சொல்கிறாள்.

இனி...

ஐயா கிளம்பிச் செல்லவும் ராம்கிக்கு அருகில் சேரை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தவள் அருகில் கிடந்த கவிஞர் மீராவின் கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள் கவிதைப் புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தாள். ராம்கி அன்றைய தினமணியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.அவனை ஏறிட்டுப் பார்த்தவள், தன்னைக் கவனிக்காமல் காலைப் பேப்பரை மேய்ந்து கொண்டிருப்பவனைப் பார்த்ததும் எரிச்சல் வர, மீண்டும் புத்தகத்தை படிக்கலானாள்.

"என்ன ரெண்டு பேரும் எப்பவும் கலகலப்பா பேசிக்கிட்டு இருப்பீங்க... இன்னைக்கு என்னாச்சு? மொரப்பாட்டுக்காரங்க மாதிரி ஆளுக்கு ஒரு பக்கம் படிச்சிக்கிட்டு இருக்கீங்க..?" என்றபடி காபியைக் கொடுத்தார் அம்மா.

"இல்லம்மா... அதெல்லாம் இல்ல... சும்மாதான் உக்காந்திருந்தோம்..." என்று ராம்கி மழுப்ப அவள் ஒற்றைப் புன்னகையை பதிலாக்கினாள்.

"என்ன புவனா... இன்னைக்கு உன்னோட பிரண்டையெல்லாம் காணோம்... நீ மட்டும் வந்திருக்கே..?"

"இல்லம்மா... முக்கியமான வேலையா ஒருத்தரைப் பாக்க வேண்டியிருந்தது. அதுக்காக வந்தேன்... அப்படியே ஐயாவைப் பாத்துட்டுப் போகலாம்ன்னு வந்தேன்... இன்னைக்குன்னு ஐயாவுக்கு வேலை வந்திருச்சு... என்னம்மா... எப்பவும் சாயந்தரம் ஆச்சின்னா நிறையப் பேர் வருவாங்க... யாரையும் காணோம்..." என்றபடி ஓரக்கண்ணால் அவனைப் பார்த்தாள்.

"என்னமோ தெரியலை இன்னைக்கு யாரும் வரலை... ஒருவேளை முத்தையா ஐயா வீட்ல மீட்டிங்கா இருக்குமோ என்னவோ... காபி ஆறப் போகுது குடிங்க..." என்றபடி உள்ளே சென்றார்.

மீண்டும் அந்த இடத்தை அமைதி சூழ்ந்தது. இருவருக்கும் இடையில் இருந்த மௌனம் மெல்ல மெல்ல நேரத்தை விழுங்கிக் கொண்டிருந்தது. அந்த மௌனத்தைக் கலைக்கும் விதமாக 'க்க்கும்' என்று மெதுவாக செருமினாள்.

ஏறிட்டுப் பார்த்தவன் மீண்டும் பேப்பரைப் பார்க்க, புவனாவுக்கு கோபம் வந்தது. பேப்பரைப் பிடித்து இழுத்தாள். என்ன என்பது போல் பார்த்தான்.

"இங்க ஒருத்தி வந்து உக்காந்திருக்கேன். அப்படி என்ன பேப்பர்ல இருக்கு?" மூக்குச் சிவக்க கேட்டாள்.

"ம்... வந்தீங்க... கவிதைப் புக்கை எடுத்தீங்க... பேசாம உக்காந்தீங்க... அப்புறம் எங்கிட்ட கோபப்படுறீங்க...?" மெதுவாகக் கேட்டான்.

"ஓஹோ.... நாங்க பேசினாத்தான் ஐயா பேசுவீங்களோ?"

"ஆமா நீங்கதானே பேசணுமின்னு சொன்னீங்க... அப்ப நீங்கதானே பேசணும்..."

"அது சரி... இப்பல்லாம் எங்கூட பேசப்பிடிக்கலை உங்களுக்கு... என்னைய ஒதுக்கிட்டுப் போகத்தான் நினைக்கிறீங்க... அப்படித்தானே...?"

"அப்படியெல்லாம் இல்லைங்க... நான் எப்பவும் போலத்தான் பேசுறேன்... நீங்கதான் அப்படி நினைக்கிறீங்க...."

"இப்பல்லாம் அவகூட பேசத்தான் உங்களுக்குப் பிடிக்குது..."

"எவ கூட...?" என்றவன் நாக்கைக் கடித்துக் கொண்டு "யார் கூட..?" என்று கேட்டான்.

"அதான் ஜாசுமினு... " வாயை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு சொன்னாள்.

"ஜாசுமினா.... ஓ... மல்லிகாவா.... அதுசரி அவங்க எங்க கிளாஸ்.... என்னோட நல்ல பிரண்ட்... உங்க கூட நான் பழகுறது பேசுறது எல்லாமே அவங்களுக்குத் தெரியும். ஏன் நேத்து உங்ககிட்ட கோபமாப் பேசினதுக்கு கூட அவங்க என்னைய சத்தம் போட்டாங்க... நீங்க நினைக்கிற மாதிரி இல்லை...."

"சரி... நம்பிட்டேன்..." என்றபடி அவன் கையிலிருந்த பேப்பரை மீண்டும் பறித்தாள். அவன் படக்கென்று இழுத்துக் கொள்ள, எழுந்து இழுக்க, உள்ளிருந்து வெளிய வந்த அம்மா "என்ன ரெண்டு பேருக்குள்ளயும் எதாவது சண்டையா? புவனா முகம் சரியில்லையே..."

"அப்படியெல்லாம் இல்லைம்மா... பேப்பரைக் கேட்டா தரமாட்டேங்கிறார்... அதான் இழுத்தேன்...."

"சரி... இருங்க நான் பக்கத்துல பொயிட்டு வந்துடுறேன்... "

"நானும் கிளம்புறேம்மா... " என்று எழுந்தாள்.

"அட ராமு கூட பேசிக்கிட்டு இரு.... இப்ப வந்திருவேன்... " என்றபடி கிளம்பினார்.

அம்மா போனதும் "ஏதோ பேசணுமின்னு சொல்லிட்டு என்னைய வரச்சொல்லிட்டு இப்போ கிளம்பினா என்னங்க அர்த்தம்?" என்றபடி அவளது சேருக்கு அருகில் நெருங்கி அமர்ந்தான்.

"ம்... என்ன பேசுறது? என்னைய தவிர்க்க நினைக்கிறீங்க... இனி அப்படியே இருக்கலாம்... ஒண்ணும் பேசுறதுக்கு இல்லை..." முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

"எதுக்கெடுத்தாலும் கோபம்...? அப்பா இந்தப் பொண்ணுங்களை புரிஞ்சிக்கிறது ரொம்ப கஷ்டம் போல..." மெதுவாக முனங்கினான்.

"ஆமா... இவுக மட்டும் அப்படியே திறந்த புத்தகம்..." படக்கென்று சொன்னாள்.

"சரி... சாரி..."

"எதுக்கு இப்ப சாரி..."

"எல்லாத்துக்கும் தான்..."

"எல்லாத்துக்கும்ன்னா?"

"கோபமா பேசினதுக்கு....  இப்ப சொன்னதுக்கு.... அப்புறம் அம்மான்னு ஒருத்தவங்களைக் கூட்டியாந்ததுக்கு... எல்லாத்துக்குந்தான்..."

"சரி மன்னித்தோம்... என்ன ஒரு தைரியம்... அம்மான்னு எங்க ஊர்ல கல்லறுக்கிற பொம்பளைய கூட்டியாந்திருக்கீங்க... உங்களுக்கு அவ்வளவு தைரியம் இருக்காது... எல்லாம் எங்க அண்ணன் வேலையாத்தான் இருக்கும்..."

"தெரிஞ்சிக்கிட்டா சரி... எங்கம்மாவுக்கு தெரிஞ்சா வருத்தப்படுவாங்க... நான் படிச்சித்தான் எங்க குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டு வரணுமின்னு நினைச்சிக்கிட்டு இருக்காங்க... அதான்... வைரவண்ணன்கிட்டயே கேட்டேன்... அவருதான் இவங்களை கூட்டியாந்தாரு..."

"அது சரி ரவுடிக்கு ரவுடி உதவி..."

"என்னது...?"

"சரி... சரி... சொன்னதை வாபஸ் வாங்கிக்கிறேன்..."

"அது..."

"இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்... உங்ககூட இம்புட்டு நேரம் பேசியிருக்கேனே அதான்..."

"ஏன் இதுக்கு  முன்னால பேசினதே இல்லையாக்கும்... பஸ்ல வரும்போது பேசலையா என்ன..."

"ஆமா பயந்து பயந்துகிட்டு... ஒவ்வொரு வார்த்தை வாங்குறதுக்கும் நான் படாதபாடுபட்டது எனக்குத்தானே தெரியும்..."

"அட இங்க பார்றா..." என்றான் வேகமாக

"என்ன இங்க பாருடா... ரவுடி..."

"இனி ரவுடின்னு சொன்னா நான் எந்திரிச்சிப் போயிருவேன்..."

"அதானே எங்க இன்னும் கோவத்தைக் காணோமுன்னு பார்த்தேன்...இந்தா வந்திருச்சில்ல..."

"சரி... என்னவோ பேசணுமின்னீங்க.. என்னன்னு சொல்லுங்க..."

"அதான் பேசிக்கிட்டு இருக்கோமுல்ல..."

"இப்படி மொக்கை போடுறதுக்குத்தான் ஐயா வீட்டுக்கு வரச்சொனனீங்களா?"

"நான் பேசுறது மொக்கையா உங்களுக்கு... அப்ப அவ...." எதோ சொல்லவந்தவள் நாக்கைக் கடித்துக் கொண்டாள். "சாரி ராம்... சும்மா சொல்ல வந்தேன்... " என்றாள்.

"அவங்க என்னோட பிரண்ட்.... நான் பல தடவை சொல்லிட்டேன்... நீங்க நம்பமாட்டேங்கிறீங்க..."

"அப்ப நான்...?"

"நீங்க...?"

"சொல்லுங்க நான் யார்?"

"ம்... புவனா..."

"உதை விழும்.... அவ பிரண்ட்டுன்னா நான் யார்ன்னு சொல்லுங்க"

"நீங்க... நீங்க... என்னோட பெஸ்ட் பிரண்ட்...."

"ம்... அம்புட்டுத்தானா..." சுவராஸ்யமில்லாமல் கேட்டாள். ராம்கி எதோ சொல்வதற்குள் ஐயாவின் சைக்கிள் வாசலில் வந்து நிற்க அவசரமாக தள்ளி அமர்ந்தான்.

"என்ன காரசாரமா பேசிக்கிட்டு இருந்தீங்க போல.." என்றபடி ஐயா உள்ளே வரவும் 'சை... எப்படியும் அவனைச் சொல்ல வச்சிடலாம்ன்னு பார்த்தா இப்படி ஆயிருச்சே' என்று நினைத்த புவனாவின் முகம் சப்பென்று ஆகிவிட்டது.

"இல்லய்யா... சும்மா அரட்டை அடிச்சிக்கிட்டு இருந்தோம்... அம்மா வெளிய போனாங்க அதான் உக்காந்திருந்தோம்... அப்ப நான் கிளம்புறேன்யா... வாறேங்க..." என்று ராம்கி எந்திரிக்க, நானும் கிளம்புறேன் என்றபடி அவன் பின்னே வந்தவள் சைக்கிளை எடுக்கும் முன் "ராம் ஒரு நிமிடம்" என்றாள்.

(சனிக்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 8 அக்டோபர், 2013

விலைமாது

மங்கிய விளக்கொளியில்
மங்கலாய் ஒரு உருவம்..!
ஆடைகளைப் பற்றிய
கவலையின்றி
பொறுக்கினாள்...
விலகிச் சென்றவன்
விட்டுச் சென்ற
சில்லறைகளை..!

உடம்புக்கு ஓய்வு
தேவைப்பட்ட போதும்
அடுத்தவனின் பசி தீர்க்க
தயாரானாள் தவிப்போடு...

வந்தவன் புதியவனா...
அறிமுகமானவானா...
யாராக இருந்தால் என்ன..?
பணமே பிரதானம்...

யோசிக்க மனமின்றி
பூஜைக்கு ரெடியானாள்...

(மீள் பதிவு)
-'பரிவை' சே. குமார்

திங்கள், 7 அக்டோபர், 2013

மனசின் பக்கம் : குளிரில் பாடுவோர் சங்கம்

இங்கு குளிர்காலம் ஆரம்பிக்கப் போவதற்கான அறிகுறிகள் கடந்த சில நாட்களாக தெரிய ஆரம்பித்துள்ளது. காலை மாலை வேளைகளில் குளிர்ந்த காற்று வீசுகிறது. ஏழு மணியானாலும் போக மறுத்த சூரியன் ஆறு மணிக்கெல்லாம் காணாமல் போய்விடுகிறது. இன்று ஆறரை மணிக்கு பணி முடித்து திரும்பும் போது நீண்ட நாட்களுக்குப் பிறகு அழகிய பிறை நிலாவைப் பார்த்தேன். இனி சில மாதங்களுக்கு குளிரை அனுபவிக்கப் போகிறோம்... சுட்டெரிக்கும் வெயிலுக்கு விடுமுறை விடப்போகிறது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்.

விஜய் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் போட்டியில் என்னைக் கவர்ந்த இருவர் வெளியேறியது மனசுக்கு வருத்தமே. இந்த இருவரில் ஒருவருக்கு இறுதிப் போட்டிக்குச் செல்ல மீண்டும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இன்னொருவருக்கு அதுவும் இல்லை. முதலாமவர் அறுபது வயதுக்கு மேல் ஆனாலும் இளைஞர்களுக்குப் போட்டியாக பாடி அசத்திய திரு. அழகேசன். இந்தப் அழகிய பெயரைத்தான் தொகுப்பாளர்கள் 'அல்கேட்ஸ்... அல்கேட்ஸ்'ன்னு நாயை கூப்பிடுற மாதிரி கூப்பிட்டார்கள். இவரது பாடல்களில் நிறைய இடங்களில் தவறு வருவது உண்டு. சைலஜா அம்மா இவருக்கு நல்ல ஆதரவு கொடுத்தார். அவருக்குப் பிறகு மற்றவர்களும் இவரை மதித்தார்கள் என்றாலும் போட்டி என்று வரும்போது இவர் வெளியாக வேண்டிய சூழல் வந்துவிட்டது. இருந்தாலும் இவருக்கு பைனலுக்கு செல்வதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். அதில் தனது திறமையை நிரூபிக்கும் பட்சத்தில் இறுதிச் சுற்றுக்கான மேடையில் பாடலாம். அழகேசன் என்ற இளைஞர் மீண்டும் பந்தயக் களத்துக்குள் நுழைகிறாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.



அந்த இரண்டாவது நபர் மாற்றுத் திறனாளி... இப்படிச் சொல்லக்கூடாதுதான் தன்னம்பிக்கையின் சிகரம் திரு.ரிஸ்வான் பாய் அவர்கள். வீல் சேரில் அமர்ந்து கொண்டு அந்த மனிதர் பாடிய பாடல்கள் அனைத்தும் அத்தனை அருமை. அவர்  வெளியேறிய அன்று கூட அவருக்குக் கொடுத்த இரண்டு நிமிட நேரத்தில் எந்தவித பதட்டமும் இன்றி 'நிலா... நீ வானம் காற்று...' பாடலை அருமையாகப் பாடினார். சொல்லப் போனால் அவருடன் பாடிய மற்ற இருவரில் ஒருவர் சொதப்பலாகத்தான் பாடினார். ஆனால் நடுவர்களின் கண்கள் ரிஸ்வான் பாய் மீதுதான் இருந்தது என்பது அவர்க்ள் சொன்ன முடிவில் அப்பட்டமாகத் தெரிந்தது. தான் வெளியாகிறோம் என்றதும் அழுது ஆர்ப்பாட்டம் செய்து எல்லாரையும் கட்டியழுது என்றெல்லாம் எதுவும் செய்யாமல் தன்னை வீல் சேரோடு தூக்கி உதவி செய்தவர்களும்... தான் பாடியபோது இசையமைத்தவர்களுக்கும் நடுவர்களுக்கும் சகபோட்டியாளர்களுக்கும் நன்றி சொன்ன அந்த நல் இதயம் கடைசியில் செய்ததுதான் எல்லாரையும் ஆச்சர்யப்பட வைத்தது. தனது வீல் சேரை அங்கே விட்டுவிட்டுப் போவதாகவும் அடுத்த சூப்பர் சிங்கரில் தன்னைப் போல் ஒருவர் வந்து பாடவேண்டும் என்று சொல்லி அதில் இருந்து இறங்கி... தவழ்ந்து போய் காரில் ஏறினார்.... ரிஸ்வான் பாய்... உங்கள் எண்ணம் கண்டிப்பாக நிறைவேறும்...  என்ன சொல்றது.... யூ ஆர் ரியலி கிரேட் சார்... வாழ்த்துக்கள். உங்களது வெட்டி வேரு வாசம் எங்களுக்குள் என்றும் வாசமாய் இருக்கும்.



சூப்பர் சிங்கரில் தமிழைக் கொல்லும் சுஜாதா அவர்கள் பேசும் போது நம்மால கேட்க முடியலை... மற்றவர்கள் ஓகே... இருந்தாலும் குறிப்பிட்ட பெண்கள் பாடினால் ஆஹா... ஓஹோ... என்று புகழ்வதை சூப்பர் சிங்கர் ஆரம்பத்தில் இருந்து கலந்து கொண்ட எல்லா நடுவர்களும் பாரபட்சம் இன்றி செய்து வருகிறார்கள். அதற்கு இவர்களும் விதி விலக்கல்ல...

இப்போ பதினான்கு பேர் இருக்கிறார்கள்... இவர்களில் வெளியாகப் போகிறவர்கள் பெரும்பாலும் ஆண்களாகத்தான் இருக்கும். இறுதிப் போட்டிக்கான விழா மேடையில் இந்த முறையாவது சென்ற முறை நடந்த அவலங்கள் நடக்காமல் இருந்தால் நல்லது. பார்க்கலாம்... இந்த முறை பார்வதிக்கு எப்படியும் பரிசு கிடைக்க வாய்ப்பிருக்கிறது... ஆனால் அவர்களின் முடிவில் யார் இருக்கிறார்கள் என்பது விஜய்க்கே... நான் விஜய் தொலைக்காட்சியைச் சொன்னேன்....



வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை மீண்டும் ஒரு முறை பார்த்தேன். கொய்யால மாப்பிள்ளையை மாத்திப்புட்டாய்ங்கய்யா.... பேனர்ல லதாபாண்டிக்கு மாப்பிள்ளை ரவிக்குமார்ன்னு போட்டிருந்தாய்ங்க... ஆனா பாருங்க கல்யாண மேடையில சகாதேவனை உக்கார வச்சிட்டாய்ங்க... ரெண்டு செகண்ட் வர்ற கல்யாண மேடையை எவன் பாக்கப் போறான்னு நினைச்சி மாப்பிள்ளையை மாத்திட்டாரய்யா இயக்குநரு... நாங்கல்லாம் கண்ணுக்குள்ள வெளக்கெண்ணையை ஊத்திக்கிட்டு திரியிறவங்க... எங்ககிட்டேவா.... சு - என்ற எழுத்தை ஒரு இடத்தில் மட்டும சூன்னு அழுத்திப் பாடினதையே கண்டுபிடிச்சவங்க இதை விட்டுடுவோமா... இன்னும் என்னென்ன இருக்கோ பேசாம வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை திறனாய்வு பண்ணிடலாமோ...
மீண்டும் மனசு பேசும்...

-'பரிவை' சே.குமார்.